Published:Updated:

கௌபாய் கார்த்திக்

மா.பிரபாகரன் ஓவியம் : சூர்யா

கௌபாய் கார்த்திக்

மா.பிரபாகரன் ஓவியம் : சூர்யா

Published:Updated:
##~##

உங்களுக்கு கார்த்திக்கைத் தெரியுமா?

கையில் பொம்மைத் துப்பாக்கியுடன் எப்போது பார்த்தாலும் 'டுஜ்கால்... டுஜ்கால்’ என்று சுடுவது போல அங்கும் இங்கும் துறுதுறுவென ஓடிக்கொண்டிருப்பானே? அவனேதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருநாள் அவனை, 'கௌபாய் கார்த்திக்’ என்று கூப்பிட்டுப் பாருங்கள். அவன் முகத்தில் தோன்றும் மலர்ச்சி உங்களையும் தொற்றிக்கொள்ளும். கார்த்திக்கு கௌபாய் படங்கள் என்றால், கொள்ளைப் பிரியம். தாத்தா காலத்து ஆங்கிலப் படங்களில் ஆரம்பித்து, 'இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம்’ வரை பார்த்துவிட்டான். தனது 13-வது பிறந்தநாளுக்கு கௌபாய் டிரெஸ்தான் வேண்டும் என்று அடம்பிடித்தான். அவனது அப்பா, பிரபலமான ஷோரூமில், நாலாயிரத்துச் சொச்சம் ரூபாய்க்கு வாங்கித்தந்தார்.

முரட்டுத் துணியாலான டிரவுசர், கரடுமுரடான காட்டன் ஷர்ட், முழங்கால் வரை ஜிப் வைத்த லெதர்பூட், பட்டையான இடுப்பு பெல்ட், அதில் பொம்மைத் துப்பாக்கிக்கென பவுச், பெரிய தொப்பி என ரொம்ப ஸ்டைலாகத்தான் இருந்தது.

கௌபாய் கார்த்திக்

நினைத்தபோது அந்த டிரெஸ்ஸைப் போட்டுக்கொண்டு, துப்பாக்கிகளைக் கையில் பிடித்தபடி 'டமால், டுமீல்’ என சோஃபாவுக்கும் கட்டிலுக்கும் தாவிக் குதித்தான். தனது நண்பர்களிடம், ''பெரியவன் ஆனதும் குதிரையில் சென்று புதையல் எடுப்பேன்'' என்றான். இவன் அப்படி நகர்ந்ததும், ''சரியான காமெடி பீஸ்'' என்று சிரித்தார்கள்.

ஒருநாள் அப்பாவிடம்,'' 'மெக்கனஸ் கோல்ட்’ படத்துல வர்ற கதாநாயகன் மாதிரி நீங்களும் புதையல் தேடிப் போயிருக்கணும். 40 வருஷங்களை வேஸ்ட் பண்ணிட்டீங்க'' என்றான்.

அப்பா அதிர்ந்தார். ''இதோ பார் கார்த்திக்! நம் ஊரில் மாடு மேய்க்கிற மாதிரி, வெள்ளைக்காரன் பெரிய பண்ணைகளில் கூட்டம் கூட்டமா மேய்ச்சான். மந்தைகளைக் கட்டுப்படுத்தக் குதிரையும் பாதுகாப்புக்குத் துப்பாக்கியும் தேவைப்பட்டுச்சு. கரடுமுரடான சமவெளிப் பகுதிகளுக்குத் தாக்குப்பிடிக்கிற மாதிரி டிரெஸ் போட்டுக்கிட்டான். இந்தக் கலாசாரத்தை மையமா வெச்சு, புதையல் அது இதுனு ஜிகினா செய்து ஹாலிவுட்ல படமா எடுத்துட்டாங்க. அவ்வளவுதான். அதையெல்லாம் உண்மைனு நம்பாதே'' என்றார்.

''கௌபாய் படத்தின் டிவிடிகளை அள்ளிட்டுவந்து, அப்பாவும் பிள்ளையுமாச் சேர்ந்து பார்த்துட்டு, இப்போ புத்திமதியா?'' என்றார் கார்த்திக்கின் அம்மா.

கார்த்திக்கின் புதையல் கனவு, நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர, அப்பா சொன்னது புரிந்ததாகத் தெரியவில்லை.

ஒருநாள், ஊரில் இருந்து சித்தப்பா வந்தார். அவரிடமும் தனது கௌபாய் சாகசத்தைக் காட்டினான் கார்த்திக். ''என் தொழில் சம்பந்தமா சோதிடரைப் பார்க்கப்போறேன், நீயும் வா'' என்றார் சித்தப்பா.

கௌபாய் கார்த்திக்

சோதிடர், அந்த ஏரியாவில் பிரசித்தம். சித்தப்பா தனக்குச் சோதிடம் பார்த்த பின்னர், ''கார்த்திக்கின் எதிர்காலம் எப்படி இருக்கும்?'' என்று கேட்டார்.

அவன் ஜாதகத்தைப் பார்த்த சோதிடரின் முகம் பிரகாசமானது. ''கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டு கொடுக்கும்னு சொல்லுவாங்க. தம்பிக்கு, பூமியில இருந்து கிடைக்கப்போகுது. வீட்டுக்குப் பின்னாடி ஒரு வேப்பமரம் இருக்கணுமே... அங்கே ஒரு புதையல் இருக்கு'' என்றார் சோதிடர்.

கார்த்திக், வியப்பின் எல்லைக்கே போய்விட்டான். வீட்டுக்கு வந்ததும் அப்பாவை நச்சரிக்க ஆரம்பித்தான். ''கார்த்திக், சோதிடம் என்பது நம்ம வேலையை உற்சாகமாகச் செய்ய, கை தட்டுற மாதிரி நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் மட்டுமே. அதையே முழுசா நம்பக் கூடாது'' என்றார்.

ஆனால், கார்த்திக் விடுவதாக இல்லை. ''தோண்டித்தான் பார்த்துடுவோமே'' என்றான்.

வீட்டுக் கொல்லையின் வேப்பமரத்தடியில் இரண்டு மூன்று இடங்களில் தோண்டினார்கள். நான்காவதாகத் தோண்டியபோது, பழங்காலத்து இரும்புப் பெட்டி ஒன்று கிடைத்தது. கார்த்திக் பரபரப்பாகிவிட்டான்.

'கௌபாய் படங்களில் வரும் வீரர்கள், கிளைமாக்ஸ் வரை போராடி, கஷ்டப்பட்டுப் புதையல் எடுப்பார்கள். நமக்கோ, இருந்த இடத்திலேயே கிடைத்துவிட்டது’ என நினைத்தவாறு பெட்டியைத் திறந்தான்.

'பாளம் பாளமாகத் தங்கக்கட்டிகள் இருக்குமோ? அல்லது வைரம், வைடூர்யம் இருக்குமோ’ என்று ஓடிய அவனது கற்பனைக் குதிரை, எதிரியால் காலில் சுடப்பட்டு குப்புற விழுந்தது.

உள்ளே ஒரு திருக்குறள் புத்தகமும் கடிதமும் இருந்தன. கார்த்திக்கின் அப்பா அதை எடுத்து,  ''முட்டாளே! பொன்னும் பொருளும்தான் புதையல் என்று நினைத்தாயா?

கௌபாய் கார்த்திக்

'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை’ என்று சொல்லியதை மறந்துவிட்டாயா? எதற்காக இந்தக் குறுக்கு வழி? இப்படிக்கு வள்ளுவன்'' என்று வாசித்தார்.

''கார்த்திக்... திருவள்ளுவரே உனக்கு லெட்டர் எழுதியிருக்காருடா. நீ கொடுத்து வெச்சவன்தான்!'' என்றார், கார்த்திக்கின் அம்மா.

கார்த்திக் அமைதியாக இருந்தான். சித்தப்பா வந்தது, சோதிடம், வேப்பமரத்தடிப் புதையல் இதெல்லாம் தனக்காகத் தயாரிக்கப்பட்ட செட்டப் என்பது புரிந்தது. தான் எந்த அளவுக்கு மிதமிஞ்சிய கற்பனையில் இருந்திருந்தால், இப்படி ஒரு நாடகத்தை உருவாக்கியிருப்பார்கள் என்பதும் புரிந்தது.

''வள்ளுவரை விடு கார்த்திக். கௌபாய் பற்றி அந்த மனிதருக்கு என்ன தெரியும். நீ உன் நம்பிக்கையை, முயற்சியை விட்டுடாதே. அடுத்த பிறந்தநாளைக்கு ஒரு குதிரை வாங்கித்தர்றேன். புதையல் தேடிப்போறதுக்கு வசதியா இருக்கும்'' என்றார் அப்பா.

''அப்பா, கிண்டல் போதும். எனக்குப் புரிஞ்சுபோச்சு. இனிமே, சாகசப் படங்களைப் பார்க்கிறதோடு நிறுத்திக்கிறேன்'' என்று சொல்லிக்கொண்டே, தோண்டிய குழிக்குள் துப்பாக்கியைப் போட்டுவிட்டு நடந்தான் கார்த்திக்.