Published:Updated:

சொல்வனம்

ஓவியம்: எஸ்.சிவபாலன்

சொல்வனம்

ஓவியம்: எஸ்.சிவபாலன்

Published:Updated:
##~##

பொம்மைகள் விற்பவன்

வரிசைக்கு நான்காய்
ஐந்து வரிசை.
மேல் வரிசையில்
கொஞ்சம் பெரிதாய் மூன்று.
அதற்கு மேல்
இன்னும் பெரிதாய் இரண்டு.
அலுவலகம் செல்லும்
காலை நேர அவசரத்திலும்
பார்த்துச் சிரிக்கும்
சாலையோர டெடிபியர்களை
எண்ணத் தவறவில்லை
மாலை வீடு திரும்பும்போதும்
எண்ணிக்கை குறையவில்லை
ஒன்றையொன்று பிரியாத
சந்தோஷத்தில் டெடிபியர்கள்
புன்சிரிப்பு மாறாமல்.
பொம்மைகள் விற்பவன்
முகத்தில் மட்டும்
நீளப்போகும் இரவைக்
காலியான வயிற்றுடன்
தாண்டப்போகும் கவலை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

                           - இர.இளையபெருமாள்

ஞானம்

கழுமரம் குடியிருந்தும்
கவலையின்றி
வாழ்வை
கைதட்டியபடியே
கழிக்கிறது
பம்பாய் மிட்டாய்க்காரனின்
பொம்மை.

                         - மகா

சொல்வனம்

நிலவை ஏந்தியவள்...

இரவு பகலை அருந்தத் தொடங்கியிருந்த
நேரம்.
காற்று அகற்றிய இலையெனப் பணியிடப்
படியிறங்கினாள்.
எப்போதுமான இறுக்கமான முகத்தோடு
அழைத்துச் செல்ல வந்திருந்தான்.
விரல்களின் முறுக்கலில் சீறியது வாகனம்.
பின்னிருக்கை மிகுந்த வசதி
முகம் பார்க்க வேண்டியதில்லை.

வழியெங்கும் வேடிக்கை வேடிக்கைதான்
பசி ஆவலோடு சாலையோரம் கையேந்தி
உணவள்ளி விழுங்கியவன் தலை வருடி
நீரருந்தக் கொடுத்தாள்.
கையசைத்த அழுக்குக் குழந்தைக்கு
சத்தமாக ஒரு முத்தம் தந்தாள்.
ஆடை விலகிச் சிரித்துக்கொண்டிருந்த
பைத்தியப் பெண்ணுக்குப் போர்த்திவிட்டாள்.
கண்ணாடித் திரைக்குள் பொம்மை
அணிந்திருந்த
நீல நிற சேலையை அணிந்து
அழகு பார்த்தாள்.
வழக்கம்போல் பாலத்தின் உச்சியில்
போகும்போது
தலையுயர்த்தி வானம் பார்த்தாள்.
கிளம்பும்போது இவள் குடும்பத்தைத்
திட்ட ஆரம்பித்தவன்
வீட்டின் கடைசித் திருப்பத்தில்,
இவள் ஊழியன் வரை திட்டி முடித்திருந்தான்.

வசவு, வழியெங்கும் இறைந்திருந்தாலும்
எவற்றையும்
அந்த நிலவைப்போல மிதிக்காமல்
கடந்திருந்தாள்.

வீட்டை நெருங்கியதும் மேலே பார்த்து
கம்பீரமாகக் கண்களைச் சொடுக்கினாள்.
அவ்வளவு நேரமாய் வளைந்த கீழுதடாய்ப்
புன்னகைத்திருந்த பிறை நிலவு
மிருதுவான தர்பூசணிக் கீற்றென
அவள் கைகளில் விழுந்தது.
நெஞ்சோடு அணைத்தவண்ணம்
கதவைத் திறக்கிறாள்
இருண்டிருந்த வீட்டினுள்
மெள்ள வெளிச்சம் படர்கிறது.

                           - கனிமொழி. ஜி

ஒரு வாத்தியத்தின் கதை

மலையும் மலை சார்ந்ததுமான
எம் குறிஞ்சி நிலத்தின்
கௌரவ வாத்தியமாய் அது திகழ்ந்தது.
கரவொலி எழுப்பும்
கால்சட்டைச் சிறுவர்களையும்
விதவிதமானப் பிராதுகளை
வேடிக்கை பார்க்கக் குழுமியிருக்கும்
இளவட்டங்களையும்,
ஆலமரத்தடிப் பஞ்சாயத்துக்காகவே
ஊர் மந்தையில் காத்திருக்கும்
பெரியாம்பிளைகளையும்,
புறணிக்காகவே காத்திருக்கும்
புண்ணியவதிகளையும்
தனது ஆகச்சிறந்த
ரசிகர், ரசிகைகளாக
அது கொண்டிருந்தது.
அய்யனாரின் ஆடிக் கொடையையும்
ஆத்தாளின் பங்குனித் திருவிழாவையும்
அது முன்நின்று தொடங்கிவைத்தது.
காதுகுத்து, கல்யாணம்
தண்டல்வரி வசூலையெல்லாம்
வீதி வீதியாய் சென்று முழங்கி வந்தது.
வெயில் - மழை
அந்தி - சந்தி பாராது
ஊர் இழவையெல்லாம்
ஊர் ஊராய்ப் போயது தாக்கல் சொல்லிற்று.
திரும்பிய திசையெங்கும்
ஆனந்தமாய் அதிரப் புன்னகைத்த அது
தன்னைச் சுமந்து திரிந்த காக்கிச்
சட்டைக்காரன்
கடன் தொல்லையின் பொருட்டு
விஷம் அருந்தி விக்கிச் செத்துப்போன
ஒரு நிறைந்த வெள்ளியின் அகாலத்தில்
யாருமற்ற வனாந்தரத்தில்
அநாதியாய் அழுதிருந்தது
எத்திசையும் சென்று
எவ்விடமும் நின்று
எவருக்கும் தாக்கல் சொல்ல இயலாது!

                                    - ஸ்ரீதர்பாரதி

ங்கள்  கவிதைகளை,  'சொல்வனம்’,  ஆனந்த விகடன்,  757,  அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு, அல்லது  solvanam@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு  எண்ணுடன் அனுப்புங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism