Published:Updated:

கவிதை

பழநிபாரதி, ஓவியம்: ம.செ

##~##

 சப்தத் தீவு

மான்கள் நீரருந்தும்
ஹார்மோனிய நதிக்கரையில்
வயலின் வாசிக்கும் மூலிகைக் காற்று

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நீருக்கு மேல் மிதக்கும்
புல்லாங்குழல் பாலத்தில்
உன்னைக்
கைப்பிடித்து அழைத்துச் செல்கிறேன்

கிதாரின் செல்லத் தீண்டல்களில்
கீச்சுக்குருவிகள் சிறகுகள் சிலிர்க்கின்றன

சிறகிசை மழை
வான் பார்த்த உன் முகத்தில்
பட்டுத் தெறிக்கிறது

தபேலாவின் விரல்களால்
மொட்டுகளை சுதி கூட்டும் காற்று
உன் கண்களின் வழியாக
என் தோளைத் தொடுகிறது

தாய் தந்தை மறந்து
ஊர் உறவு துறந்து
இடம் காலம் கடந்து
இந்தச் சப்தத் தீவில்
என்னோடு நீ
உன்னோடு நான்
நம்மோடு இளையராஜா!

கவிதை

நீ வெளிப்பட்டபொழுது...

வெகு உயரத்தில்
நனைந்த அந்த மலைக்குன்றிலிருந்து
நான் ஏன்
உன்னை
அவ்வளவு அமைதியாக
கவனித்துக்கொண்டிருந்தேன்?

மழை உன் முகத்தில் தெறித்தபொழுது
மலர்கள் உடலில் உதிர்ந்தபொழுது
மரங்களின் உரையாடலை
நீ உற்றுக் கவனித்தபொழுது
காற்றின் விரல்கள்
சுதந்திரமாக
உன் மீது படர்ந்தபொழுது
உன்னை மூடிய மேகத்திலிருந்து
நீ வெளிப்பட்டபொழுது

நான் உன்னைக்
கவனித்துக்கொண்டே இருந்தேன்
அமைதியாக
மிக அமைதியாக
பேரமைதியாக

நீ ஒரு பள்ளத்தாக்காய் இறங்கி
மறையும் வரை!

காமத்தின் பனிப்பாறையிலிருந்து...

நான் உன்னைக்
காதலித்துக்கொண்டே இருப்பேன்
காதல்
உன்னை உனக்கு உணர்த்தும் வரை

நீ பருவத்தின் திருவிழாக்களை
அறியாதவள்
வேட்கையின் பயணங்களை
மேற்கொள்ளாதவள்

வெட்டுப்புலித் தீப்பெட்டிக்குள்
பொன்வண்டுகளோடு
மூச்சடைத்துவிட்டன
உன் வயதுகளின் சிறகுகளும்

ஆளுயுறக் கண்ணாடியின் முன்
உன் உடல் குறுகுகிறது
உன்னுடலை
உன்னுடலே மறைக்கிறது
ஆடைகளின் பேய்
உன்னை ஆட்கொண்டிருக்கிறது

மலைக்குன்றுகளைக்
குழையவிடும் காற்றுக்கு
நீ உன்னை
ஒப்புக்கொடுக்கத் தயங்குகிறாய்

பெண்மையின் நிலவறையிலிருந்து
உடலின் தூண்டிலிலிருந்து
காமத்தின் பனிப்பாறையிலிருந்து
கூச்சத்தின் மௌனத்திலிருந்து
வெட்கத்தின் பின்னலிலிருந்து
ஒவ்வொரு கதவாகத் திறந்து
உன்னை அழைத்துவருவேன்

நீ எனக்குள்
அவ்வளவு நிரம்பியிருக்கிறாய்!