Published:Updated:

கனம் நீதிபதி அவர்களே....

கீர்த்தி ஓவியர்

கனம் நீதிபதி அவர்களே....

கீர்த்தி ஓவியர்

Published:Updated:
##~##

அந்தக் காட்டின் ராஜாவாகப் பதவியேற்ற சிங்கம்,  அதிகாரிகளை நியமிக்க கூட்டம் நடத்தியது.

''நல்வாழ்வுத் துறை அதிகாரியாக சிறுத்தையை நியமிக்கிறேன்!'' என்றதும் கூடியிருந்த விலங்குகள், கைதட்டி தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''யானையைப் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கிறேன்!'' என்றதும் மீண்டும் கைதட்டல். இப்படியே புலி, மான், குதிரை என ஒவ்வொருவரையும் ஒவ்வொரு துறைக்கு அதிகாரியாக நியமித்தது.

கூட்டத்தில் இருந்த குரங்கு, 'தனக்கு எப்படியும் ஒரு பதவி கிடைக்கும்’ என்று நினைத்தது. சிங்கம், ''இறுதியாக, நீதிபதியாக ஆமையை நியமிக்கிறேன்'' என்று முடித்தது.

'போயும் போயும் ஆமைக்கு நீதிபதி பதவியா?’ என்று குரங்கின் மனம் குமுறியது. 'பிள்ளைக்குப் பேர் வைக்க வரச் சொன்னா, அந்தப் பிள்ளையின் கல்யாணத்துக்குதான் வந்து சேருவே!’ என்று ஆமையைக் குரங்கு அடிக்கடி கிண்டலடிக்கும்.

''அதிகாரிகள் நியமனத்தில் எல்லோருக்கும் திருப்திதானே?'' என்று சிங்கம் கேட்டதும், மற்ற விலங்குகள் தலையசைத்தன.

அப்போது குரங்கு, 'ராஜா, மற்ற அதிகாரிகளைப் பற்றி குறை சொல்வதற்கு இல்லை. ஆனால், ஆமைக்கு நீதிபதி பதவியா?'' என்று தன் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

கனம் நீதிபதி அவர்களே....

புன்னகைத்த சிங்கம், ''சில மாதங்களுக்கு ஆமையின் செயல்பாட்டைப் பார்ப்போம். பிறகு, மாற்றம் குறித்து யோசிப்போம்!'' என்றது.

குரங்கு ஆமையிடம் வந்து, ''ஆமையாரே! உமக்கெல்லாம் நீதிபதி பதவி கிடைத்ததை 'கலிகாலம்’ என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல!'' என்று வயிற்றெரிச்சலைக் காட்டியது. ஆமையோ, பதில் ஏதும் சொல்லாமல் கிளம்பியது.

சில நாட்கள் சென்றன. திடீரென்று கரடி ஒரு வழக்கைக் கொண்டுவந்தது. ''கனம் நீதிபதியாரே! நான் மலைப் பகுதிக்குச் சென்று, சிரமப்பட்டு தேன் கொண்டுவந்து, என் குகையில் வைத்திருந்தேன். நேற்று, நான் இல்லாத நேரத்தில் யாரோ தேனைத் திருடி இருக்கிறார்கள்'' என்றது.

''உனக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?'' என்று ஆமை கேட்டது.

''நீதிபதியாரே! எனக்கு குரங்கு மீது சந்தேகம். நான்,  தேன் வைத்திருந்த மண்பானை, குரங்கு குடியிருக்கும் மரத்தின் அடியில் கிடந்தது!'' என்றது கரடி.

குரங்கு திடுக்கிட்டது. 'இது என்ன வம்பு. நான் எந்தத் தேனையும் திருடவில்லையே!’ என்று மனதில் கலங்கியது.

''சரி கரடியாரே! ஒரு வாரம் கழித்து தீர்ப்பைச் சொல்கிறேன்'' என்றது ஆமை நீதிபதி.

ஏற்கெனவே ஆமையைக் கிண்டலடித்து வந்த குரங்கு, 'ஆமை தன்னைப் பழிவாங்க என்ன தண்டனை தருமோ?’ என்று நினைத்தது. கவலையோடு கிளம்பியது.

கனம் நீதிபதி அவர்களே....

அடுத்த வாரம் நீதிமன்றம் கூடியது. ''கரடியாரே! உன் தேனைத் திருடியவரைக் கண்டுபிடித்தாகிவிட்டது!'' என்றது ஆமை.

''குரங்குதானே தேனைத் திருடியவன்?'' என்று கேட்டது கரடி.

''இல்லை! உன் தேனைத் திருடியது நரி. தேனைத் திருடிக் குடித்துவிட்டு, பானையை உடைத்து, குரங்கு குடியிருக்கும் மரத்தின் அடியில் போட்டிருக்கிறது. நான் அங்கே போய் பார்த்தபோது, அந்த மரத்தின் அடியில் இருந்து எறும்புகள் சற்றுத் தொலைவில் உள்ள பொந்துக்குள் செல்வதைப் பார்த்தேன். அது நரியின் இடம். நரியைக் கண்காணித்துக் கண்டுபிடித்தேன். திருட்டுக் குற்றம் புரிந்த நரி, ஒரு வாரத்துக்குள் ஒரு பானைத் தேனை, கரடிக்குச் செலுத்த வேண்டும்'' என்றது ஆமை.

ஆமையின் தீர்ப்பைக் கேட்ட குரங்கின் மனம் நிம்மதி அடைந்தது. அப்போது சிங்கம், ''என்ன குரங்காரே! ஆமையை எதற்காக நீதிபதியாக நியமித்தேன் என்று இப்போது புரிகிறதா? விலங்குகளின் துன்பத்தை விரைவாகத் தீர்க்க, சிறுத்தையை நல்வாழ்வுத் துறை அதிகாரியாக நியமித்தேன். பலம் மிகுந்த யானையைப் பாதுகாப்புத் துறை அதிகாரியாக நியமித்தேன்.  நீதித் துறைக்கு பொறுமை அவசியம். அவசரத் தீர்ப்பளித்து, ஒரு நிரபராதி தண்டனை பெற்றுவிடக் கூடாது. ஆராய்ந்துதான் தீர்ப்புச் சொல்ல வேண்டும். நீதிபதிக்கான தகுதி, ஆமைக்கு இருக்கிறதல்லவா?'' என்று கேட்டது.

''நிச்சயமாக! நான்தான் தவறாகப் புரிந்துகொண்டேன். என்னை மன்னியுங்கள்!'' என்ற குரங்கு, ஆமைக்கு நன்றியும் வாழ்த்தும் சொல்லி விடைபெற்றது.