Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

Published:Updated:

மாதக் கடைசியில் நிகழ்கிற மாமியாரின் வருகை

சொல்வனம்

மனைவியை நன்றாக வைத்திருப்பதாகக்
காட்ட வேண்டுமே என்கிற தவிப்பும்
வந்து போகிற வறுமையின்
வாசனை தெரிந்துவிடக் கூடாதே
என்கிற பதற்றமுமாக
கௌரவம் காப்பாற்ற அலைகிற
அந்தச் சமயங்களிலேதான்
அரிசி தீர்ந்துவிடுவதும்
எண்ணெய் காலியாகிவிடுவதுமாக
பற்றாக்குறைகளால் நிறைகிறது வீடு.

இருந்தாற்போல இருமுகிற மகளுக்கெனவும்
விருந்தினர் வருகையூட்டிய தைரியத்தில்
எதையாவது கேட்டழுகிற
மகனுக்கெனவும்
கையிருப்பும் கரைந்துபோக...
வந்திருப்பவர்கள் எதையாவது கேட்டு
வெறுங்கைச் சிரிப்பு
வெளிப்பட்டுவிடக் கூடாதே
என்கிற பதற்றம்
மனைவியாகிவிட்ட மகளுக்கே அதிகமிருக்கிறது.
எப்படியாகிலும் புறப்பட்டுப் போகிறபோது
தந்துவிட்டுப்போன இரண்டாயிரம் ரூபாய்
அறிந்துகொண்டதன் அடையாளமாக
இருக்கலாமெனவும் தோன்றுகிறது!

- பி.ஜி.கதிரவன்

போதி

சொல்வனம்

தவம் கலைந்தது மரம்
கலைத்துப் போனது
புத்தன்!

- கவிஜி

மீசை முறுக்கிய காடு

சில காலமாக
நிலவரங்களைத் தேடி
அலையும் அந்தக் காடு.
அமைதியின் மூர்க்கத்தை அடக்கி
பிடரி மயிரை இழுத்து
பின்னங்கால் தெறிக்கச்
சுற்றுகின்றன
அவசரத்தின் படபடப்புகள்
நெஞ்சின் தீராத பக்கமெங்கும்
தேடித் தேடியே கனக்கிறது
சந்தன லாரிகளும்
காக்கி சாக்ஸுகளும் இளைப்பாற
நிலவரங்களைத் தேடி

சொல்வனம்

அலையும் அந்தக் காடு.
சோகத்தின் அனலை
வீசியபடியே
பேசிக்கொண்டிருக்கும்
காட்டின் எண்ணம் எதுவாக இருக்கும்?
வெடிச் சத்தம் கேட்டு
வெலவெலத்துப்போன வன தேவதை
வாய்தாவில்கூட
வெளியே வர முடியாது.
மிருக மனிதர்களின்
துப்பாக்கி ஏந்திய பார்வையோடு
நீள்கிறது
சில காலம்
மீசை முறுக்கிய
அந்தக் காடு!

- வாலிதாசன்

சொல்வனம்

ஏமாற்றம்

ஏமாற்றிவிட்டது
நேற்றிரவு தெருக் கோடியில் அழுத நாய்
நம்பிக்கையோடு
காத்திருந்தவர்களைப் பார்த்து
சிரித்துக்கொண்டு இருக்கிறார்
தாத்தா!

- திருமாளம்.எஸ்.பழனிவேல்