Published:Updated:

அமுக்குக் கூடை !

சூர்யா

அமுக்குக் கூடை !

சூர்யா

Published:Updated:

''வழியை விடுங்க! வழியில நிக்கிறீயே...''

''பொறுங்க! ஒவ்வொருத்தரா போங்க. ஏன் இவ்வளவு அவசரம்?''

பேருந்தில் அவசரமாக ஏறும் கூட்டம். ஆனால், பாதி இருக்கைகள் காலி. இந்த உலகில் எதுவும் அவசரம்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேருந்தில் முதலாவதாக ஏறி, ஜன்னல் ஓரமாக ஓர் இடத்தைப் பிடித்தான் மாதவன். கல்லூரியில் படிக்கும் இளைஞன். அனைவரும் அமர்ந்தனர். வண்டி கிளம்ப 15 நிமிடங்கள் இருந்தன. பேருந்தில் இன்னும் சில இருக்கைகள் காலியாக இருந்தன.

தன் அருகில் யாரும் அமரவில்லை என்ற சந்தோஷத்தில், மாதவன் நன்றாக அமர்ந்துகொண்டான். அந்த நேரம், மூங்கில் கூடை நிறைய காய்கள், கீரைகள் வழிய, கசங்கிய ஆடையில் அந்தச் சிறுவன் பேருந்தில் ஏறினான். அவன், நேராக மாதவனின் அருகே வந்தான்.

'அடக் கடவுளே... இவன் என் பக்கத்தில் உட்காரக் கூடாது’ என்று மாதவன் எண்ணினான்.

ஆனால், அந்தச் சிறுவன் மாதவனின் அருகே வந்து,  கூடையை இருக்கையில் வைத்துவிட்டு, ''அண்ணா! கூடையக் கொஞ்சம் பார்த்துக்கிறீங்களா... தண்ணி பாக்கெட் வாங்கிட்டு வந்துடுறேன்'' என்றான்.

மாதவனுக்கு எரிச்சலாக இருந்தது. முகச் சுளிப்புடன், ''சரி... கூடையைக் கீழே வெச்சுட்டுப் போ'' என்றான்.

அந்தச் சிறுவன், மாதவனின் முகச் சுளிப்பையும் அவன் சொற்களின் கடுமையையும் உணர்ந்தானா என்று தெரியவில்லை. கூடையை எடுத்து, இருக்கைக்குக் கீழே வைத்துவிட்டுச் சென்றான்.

அமுக்குக் கூடை !

மாதவன் அந்த மூங்கில் கூடையைக் கவனித்தான். அழுக்காக ஆங்காங்கே பொத்தல்களோடு இருந்தது. வெங்காயச் சருகுகள் கூடைக்கு வெளிப்பக்கமும் ஒட்டிக்கொண்டிருந்தன. நகரத்தின் மார்க்கெட்டில் மொத்தமாக வாங்கிச்சென்று விற்பவன் போல. கூடை சற்றே சாய்ந்து மாதவனின் கால்மீது பட்டது. அதைக் கால்களாலே மெதுவாகத் தள்ளிவிட்டான்.

திடீரென, ''ஏய்... வழிவிடு!'' ''சீக்கிரம் இறங்கு! சீக்கிரம்...'' என்ற குரல்கள். பேருந்தில் இருந்த அனைவரும் திபு திபு என இறங்கினார்கள்.

'என்ன நடக்கிறது... வண்டியில் வெடிகுண்டு வைத்திருக்கிறார்களா என்ன?’ என்று நினைத்தவாறு திரும்பிப் பார்த்தான் மாதவன்.

அப்போது அந்தச் சிறுவன், ஜன்னல் வழியாக மாதவனிடம், ''அண்ணா! அந்தக் கூடையக் கொஞ்சம் எடுத்துத் தாங்க'' என்றான்.

மாதவன், வெறுப்புடன் அந்தக் கூடையை எடுத்துக் கொடுத்தவாறு... ''என்ன பிரச்னை?'' என்று கேட்டான்.

அந்தச் சிறுவன், ''பிரச்னை ஒண்ணும் இல்லை. வேற ஒரு வண்டி வந்திருக்கு. அதைத்தான் முதல்ல எடுக்கப்போறாங்க. உங்களுக்கும் சீட்டு போட்டு வைக்கவா அண்ணா?'' என்று அன்போடு கேட்டான்.

''வேணாம். நான் இந்த பஸ்லயே வர்றேன்'' என்றான்.

''இந்த பஸ்ஸை எடுக்க ரொம்ப நேரம் ஆகும் போல'' என்றான் சிறுவன்.

மாதவன் பதில் எதுவும் சொல்லவில்லை. சிறுவன் சில நொடிகள் மாதவனைப் பார்த்துவிட்டு, இனியும் பதில் வராது என முடிவுசெய்து, கூடையுடன் இன்னொரு பேருந்தை நோக்கி ஓடினான்.

இந்தப் பேருந்தில் ஒன்றிரண்டு பேரைத் தவிர எல்லோருமே இறங்கிவிட்டிருந்தார்கள். 'இவர்களுக்கு எந்த அவசரமும் இருக்காது. ஆனால், கல்லூரி ஆரம்பிக்கும் முன்பு நான் போக வேண்டும். எதற்கு வீம்பாக இதில் இருக்க வேண்டும்’ என நினைத்தான்.

அமுக்குக் கூடை !

பின்னால் வந்த அந்தப் பேருந்து, கிளம்பவும் தயாராகிவிட்டது. மாதவன் சட்டென எழுந்துகொண்டான். வேக நடையில் இறங்கி, நகர ஆரம்பித்த பேருந்தில் ஏறினான்.

பேருந்தில் இருக்கைகள் நிறைந்தது போக ஓரிருவர் நின்றிருந்தனர். ''அண்ணா... இங்கே வாங்க'' என்று உற்சாகக் குரல் கேட்டு, பார்வையைத் திருப்பினான் மாதவன். அந்தச் சிறுவன்தான். ''நீங்க வந்தாலும் வருவீங்கனுதான் ஒரு சீட் புடிச்சு வெச்சேன். அதோ அங்கே இருக்கு'' என்றான்.

மூன்று இருக்கைகள் தள்ளி அந்தக் கூடை ஜம்மென அமர்ந்திருந்தது. ''கூடையை எடுத்துக் குடுத்துட்டு, உட்காருங்க!'' என்றான்.

அவன் கூறியது, மாதவனின் மனதை உலுக்கியது. 'சிறுவனின் பக்கத்து சீட்டைப் பிடிக்காமல், மூன்று சீட்டு தள்ளி இடம் பிடித்தது ஏன்? நான் நடந்துகொண்ட விதத்தில் தன் அருகே அமர விரும்ப மாட்டான் என்பதைப் புரிந்துகொண்டானா?’

மாதவன் புன்னகைத்தான். சிறுவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம், ''சார் நீங்க அங்கே உட்கார்ந்துக்கிறீங்களா? நான் தம்பி பக்கத்தில் உட்காரணும்'' என்றான்.

அவர் சம்மதிக்க, கூடையுடன் அங்கே வந்து சிறுவனின் பக்கத்தில் அமர்ந்தான். சிறுவனும் மாதவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.

''உன் பேரு என்ன?''

''அன்பரசன்''

''ரொம்பப் பொருத்தமான பெயர்'' என்றான் மாதவன்.

அந்தப் பயணம் மாதவனுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.

- பா.தெ.சித்தார்த்தன்-(X),
எஸ்.பி.ஓ.ஏ.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
கோயம்புத்தூர்.

அமுக்குக் கூடை !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism