Published:Updated:

தேன்... தேன்...சுவைத்தேன் !

எஸ்.சௌமியா ஓவியர்

பிரீமியம் ஸ்டோரி

அந்த ஆண் கரடி, காட்டில் அலைந்துதிரிந்து ஒரு குடுவையில் தேன் சேகரித்து, தன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தது. உணவு எதுவும் கிடைக்காமல் களைப்படைந்திருந்த நரி ஒன்று, ''மிகவும் பசியாக இருக்கிறது... கொஞ்சம் தேன் கொடுங்களேன்'' எனக் கேட்டது.

தேன்... தேன்...சுவைத்தேன் !

 ''எனது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் போதுமான அளவுதான் இருக்கிறது. ஆனாலும் பசி என்று சொல்லிவிட்டாய்'' என்ற கரடி, ஒரு இலையைக் கிண்ணம்போல செய்து, தேனை ஊற்றி, நரிக்குக் கொடுத்தது.

''நன்றி கரடியாரே'' என்று நரி சொல்ல, கரடி தலையாட்டிவிட்டுச் சென்றது.

தேன் ருசிபார்த்த நரிக்கு, இன்னும் குடிக்க ஆசை. கரடிக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தது.

தன் வீட்டை அடைந்ததும் பெண் கரடியிடம் குடுவையைக் கொடுத்த ஆண் கரடி, ''நம் குழந்தைகளுக்குக் கொடுத்து, நீயும் குடி. ஆற்றில் மீன் சிக்கினால் பிடித்துக் கொண்டுவருகிறேன்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பியது.

பெண் கரடி, குடுவையில் இருந்த தேனில் கொஞ்சம் குடித்துவிட்டு, விளையாடச் சென்ற குட்டிகளைத் தேடிக் கிளம்பியது.

அனைத்தையும் மறைவாக நின்று நோட்டம் விட்ட நரி, உள்ளே பாய்ந்தது. குடுவையை எடுத்து,   அவ்வளவு தேனையும் 'லபக்’ என வாயில் கவிழ்த்திக்கொண்டு, ஓடிவிட்டது.

தேன்... தேன்...சுவைத்தேன் !

குட்டிக் கரடிகளுடன் வந்த தாய்க் கரடி, திடுக்கிட்டது. ''என்னம்மா... தேன் இருக்குனு  கூப்பிட்டுவந்துட்டு, வெறும் குடுவையைக் காட்டுற?'' என்று குட்டிகள் சிணுங்கின.

மீன்களுடன் வீட்டுக்கு வந்த ஆண் கரடியிடம் நடந்ததைக் கூறியது பெண் கரடி. ''அளவு தெரியாமல் நீயே குடிச்சிட்டு இருப்பே. இந்த மீன்களைக் கொடு'' என்று சமாதானப்படுத்தியது.

மறுநாள், அதிகமாகத் தேன் சேகரித்துக்கொண்டு வரும்போது, அதே நரி எதிர்ப்பட்டது. ''கரடி அண்ணே... நேற்று மாதிரியே கொஞ்சம் தேன் கொடுங்களேன்'' என்று கேட்டது.

''நேற்று என் பசங்க தேன் குடிக்கவே இல்லை'' என்ற கரடி, விஷயத்தைச் சொல்லிக்கொண்டே நேற்றைவிட, கொஞ்சம் அதிகமாகவே நரிக்குத் தேனை ஊற்றிக்கொடுத்தது.

அதை வக்கனையாகக் குடித்த நரி, ''அடடா... இவ்வளவு ருசியான தேனைக் குடிக்கிற பாக்கியம், உங்க குட்டிங்களுக்கு இல்லாமப்போயிருச்சே. இன்றைக்காவது உங்க மனைவியிடம் தேனை குட்டிகளுக்குக் கொடுக்கச் சொல்லுங்க'' என்றது.

திருட்டுத் தேனை சுவைபார்த்த நரி, சும்மா இருக்குமா? கரடியை, நமுட்டுச் சிரிப்புடன் பின் தொடர்ந்தது. நேற்றுப்போலவே இன்றும் பெண் கரடியிடம் குடுவையைக் கொடுத்துவிட்டு, மீன் வேட்டைக்குச் சென்றது ஆண் கரடி.

பெண் கரடி குடுவையைத் தொடவே இல்லை. 'குட்டிகள் சாப்பிட்டு மிச்சம் இருந்தால், குடிக்கலாம்’ என நினைத்துக்கொண்டு, குட்டிகளை அழைத்துவரச் சென்றது. காத்திருந்த நரி, எல்லாத் தேனையும் வாயில் கவிழ்த்துக்கொண்டு, ஓட்டம்பிடித்தது.

மீன்களைப் பிடித்துக்கொண்டு வந்த ஆண் கரடியிடம், ''இன்றும் தேனைக் காணவில்லை'' எனக் கூறி அழுதது பெண் கரடி.

தேன்... தேன்...சுவைத்தேன் !

யோசித்த ஆண் கரடிக்கு, நரியின் நினைவு வந்தது. 'இது, அவன் வேலையாகத்தான் இருக்கும். பாவம் எனப் பசிக்குக் கொடுத்த என்னிடமே வேலையைக் காட்டிவிட்டானே’ என்று நினைத்துக்கொண்டது.

அடுத்த நாள், தேன் குடுவையுடன் வரும்போது எதிரே வந்த நரி, ''அண்ணே...'' என்று அசடு வழிந்தது.

''மன்னிச்சிரு தம்பி. இன்னிக்கு, கொஞ்சம்தான் கிடைச்சது. ரெண்டு நாளாக என் குட்டிகள் குடிக்கவே இல்லை'' என்றது ஆண் கரடி.

''ஏன்? நேற்றும் உங்க மனைவியே குடிச்சுட்டாங்களா?'' என்று அப்பாவியாகக் கேட்டது நரி.

''ஆமா... அதனாலதான் அவளை விரட்டிட்டேன். சரி, நான் கிளம்புறேன் தம்பி'' என்றபடி புறப்பட்டது ஆண் கரடி.

'ஆகா... வீட்டில் பெண் கரடியும் இருக்காது. இன்றைக்கு நிதானமாக் குடிச்சுட்டு வரலாம்’ என்று பின்தொடர்ந்தது நரி.

வீட்டுக்கு வந்த ஆண் கரடி, குடுவையை வைத்துவிட்டு, ''இந்தக் குட்டிங்க வீட்டிலேயே இருக்க மாட்டேங்கிறாங்களே...'' என்றபடி வெளியே சென்றது.

குஷியாக உள்ளே நுழைந்த நரி, குடுவை மூடியைத் திறந்து, வாயில் கவிழ்த்துக்கொண்டது. அடுத்த நொடி... குடுவைக்குள் அடைபட்டிருந்த தேனீக்கள், நரியின் முகத்தைப் பதம்பார்த்தன.

அப்போது, மறைவாக இருந்த ஆண் கரடியும் பெண் கரடியும் உள்ளே நுழைந்தன. ''என்ன தம்பி, நேற்றைவிட இன்றைக்கு ருசியா இருக்கா? கொல்லிமலை வரைக்கும் போய்க் கொண்டுவந்தேன். என்ன ஒண்ணு, தேனுக்குப் பதிலாக, தேனீக்களையே கொண்டுவந்துட்டேன்'' என்றது ஆண் கரடி.

''அண்ணே, என்னை மன்னிச்சுடுங்க. இனிமே தேன் பற்றி நினைச்சுக்கூட பார்க்க மாட்டேன்'' என்றபடி ஓட்டம்பிடித்தது நரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு