Published:Updated:

துர்கா !

துர்கா !

நடிப்பு : ஐஸ்வர்யா
கலை : ஸ்யாம்
ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன்
கதை, திரைக்கதை : தேவிபாலா
இயக்கம் : நீங்களேதான்

துர்கா !

வெளிநாட்டு வேலை துர்காவுக்குக் கிடைத்துவிட்டது! 'இதுல ஒரு பெரிய சிக்கல் இருக்கும்மா!’ என்றார் சேர்மன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'என்ன சிக்கல் அது?' என்று கடந்த எபிசோட் முடிந்திருந்தது. வழக்கம் போலவே விதம்விதமாக யோசித்து கலக்கியிருக்கிறார்கள் வாசகிகள்.

திருப்பூர் - கவிதா, சென்னை - மீனாட்சி, மும்பை - சுஜாதா... இந்த மூன்று பேரும் லட்சங்களில் செக்யூரிட்டி டெபாஸிட் கட்டும் நிர்ப்பந்தத்தை துர்காவுக்குக் கொண்டு வருகிறார்கள்!

சென்னை - திலகவதி, பெங்களூரூ - சௌமித்ரி... இந்த இரு வாசகிகளும்... 'துர்கா, வேலையை பாதியில் விட நேர்ந்தால் 3 மாத சம்பளம் 15 லட்சத்தை திரும்பக் கட்ட வேண்டும்' என்று திடுக்கிட வைக்கிறார்கள்!

'ஏதாவது சொத்துக்களை ஜாமீனாக சமர்ப்பிக்க வேண்டும்' - சட்டபூர்வமான சிந்தனை செய்திருக்கிறார் பெரம்பூர் - கீதா!

கோவை - அகிலா, அன்வர் மூலம் துர்காவுக்கு மன பலத்தைத் தரும் சென்டிமென்ட் 'டச்’ தருகிறார்! பாராட்டுக்கள்!

சரி! முக்கியமான பகுதிக்கு வருவோம்...

மும்பை - சீதா, பெங்களூரூ - பாமதி... இந்த முறை, இந்த இரு வாசகிகளும் ஆடுகளத்துக்கு வந்துவிட்டார்கள்!

ஏறத்தாழ ஒரே கருத்து! ஆனால், 'ஃபைன் டியூனிங்' (திவீஸீமீ ஜிuஸீவீஸீரீ) என்கிற இறுதிக் கட்ட பரிசீலனையில் ஒரு யதார்த்த பாயின்ட்டை சொல்லி, அடுத்த எபிசோட் இயக்குநர் நாற்காலியைப் பிடித்துவிட்டார் தோழி பாமதி.

##~##

ஜோரா கை தட்டுங்க பார்க்கலாம்!

'துர்கா தனியாகத்தான் போகவேண்டும். குடும்பத்தை கண்டிப்பாக அழைத்துச் செல்லமுடியாது. மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் இடையில் லீவு எதுவும் எடுக்க அனுமதி இல்லை.'

இதெல்லாம் மற்றவர்களும் சொன்னதுதான்!

ஆனால்... 'இன்டர்வியூவுக்காக இரண்டு நாட்கள் மும்பை போகவே பிரச்னை! இந்த நிலையில் 3 வருடங்கள் வெளிநாட்டுக்கு போவது என்பது சாத்தியமா... போக முடியுமா... இங்குள்ள பிரச்னைகளை வைத்துக் கொண்டு?' என்று சொன்னவிதம்தான் பாமதிக்கு இயக்குநர் வாய்ப்பைக் கொடுத்துள்ளது!

வாழ்த்துக்கள்!

''நீ மட்டும்தான் போக முடியும். உன் வீட்டுக்காரரோ, குழந்தையோ கூட வர முடியாது. மூணு வருஷத்துல நீ லீவும் எடுக்க முடியாது. அப்படி எடுத்தா... சம்பாதிச்ச பணத்தை திருப்பிக் கட்ட வேண்டிய சட்டச் சிக்கல்கூட வரலாம். நம்ம கம்பெனிக்கும் கெட்ட பேரு வந்துடும்'' என்று சேர்மன் சொன்னதைக் கேட்டு கலக்கத்துடன் நிமிர்ந்தாள் துர்கா.

''என்னம்மா?''

''வேண்டாம் சார். நான் போகல. மூணு வருஷம் குடும்பத்தை, குழந்தையைப் பிரிஞ்சு எப்படி இருக்க முடியும்? நடுவுல லீவும் முடியாது. விட்டுடுங்க. வேற யாருக்காவது இந்த வாய்ப்பைக் குடுங்க.''

''அதை நான் முடிவெடுக்க முடியாதும்மா. நாளைக்கு மும்பையில இருந்து அதிகாரிகள் வர்றாங்க - உன்னைப் பார்க்கத்தான் வர்றாங்க. பேசிட்டு ஒரு முடிவை எடும்மா.''

''எப்படி சார்?''

''துர்கா... உன் நிலைமை எனக்குத் தெரியும். உன்னைச் சுற்றி எத்தனை பணச் சிக்கல்... நீ நாலு மாசம் சம்பாதிச்சா, அத்தனை பிரச்னைகளையும் தூக்கி வீசிடலாம். மூணு வருஷ வருமானம்னா எத்தனை? கிட்டத்தட்ட ரெண்டு கோடி ரூபாய்! உன் செலவுகள் போக, கையில ஒன்றரை கோடி நிக்கும். அதோட நீ இந்தியா திரும்பினா, உன்னால எத்தனை பேர் பயனடைவாங்க? இங்கே ஆயுள் முழுக்க சம்பாதிச்சாக்கூட இந்தப் பணத்தை நீ பார்க்க முடியாதேம்மா. அவசரப்பட்டு வேண்டாம்னு சொல்லிடாதே. நல்லா யோசி!''

சேர்மன் அறையைவிட்டு வெளியே வந்த துர்காவை கை பற்றிக் குலுக்கினாள் லட்சுமி.

''என்னால சந்தோஷப்பட முடியலக்கா.''

''என்ன உளர்றே? ரெண்டு பெண் குழந்தைகளை வெச்சுக்கிட்டு, ஒருத்தியை வாழ வைக்க முடியாம நான் தவிக்கறேன் பாரு. உன் குழந்தை அஞ்சுவை நெனச்சுப் பாரு துர்கா.''

அரை நாள் லீவு போட்டு துர்கா வெளியே வர, அன்வர் காத்திருந்தான். அந்த ஏ.சி உணவகத்தில் இருவரும் நுழைய, அன்வர் ஆர்டர் செய்தான். துர்கா விவரம் சொன்னாள்.

''எப்படி அன்வர் நான் போக முடியும்?''

துர்கா !

''அக்கா... ஆனந்த் சாரை.... குறிப்பா, குழந்தை அஞ்சுவை விட்டு மூணு வருஷம் நீ பிரியறது கஷ்டம்தான். ஆனா, உன் முன்னால இருக்கிற பிரச்னைகளைப் பாரு. உங்க ரெண்டு பேர் சம்பளம் தற்சமயமே போதல. சுதா கல்யாணம் இருக்கு. வராகன் அண்ணனுக்கு கட்டின 3 லட்ச ரூபாய் கடன். அக்காவுக்காக ஆஸ்பத்திரிச் செலவு - எத்தனை லட்சங்களோ? மல்லிகா குடும்பம் உன்னை நம்பி இருக்கு. முடியுமாக்கா? நான் உன்கூட இருக்கேன். ஆனாலும் இப்ப சம்பாதிக்கற பணத்தை வெச்சு இத்தனை பிரச்னைகளை எப்படி சமாளிப்பே?''

- துர்கா பேசவில்லை!

''ஆனந்த் சார்கிட்ட பேசு. அங்கிள்கிட்ட பேசு. கலந்து ஒரு முடிவுக்கு வா.''

''அன்வர்... ஆனந்த் ஆபீஸுக்குப் போகணும். அஞ்சுவை ராப்பகலா அவரால பராமரிக்க முடியுமா? அந்த வீட்டுப் பெண்கள் நிச்சயமா உதவ மாட்டாங்க. மாமாவோ... வயசானவர். 'ஒரு பெண் குழந்தையை விட்டுட்டு, தாய்க்கு அப்படி என்ன பணத்தாசை?’னு இந்தச் சமூகம் கேக்காதா அன்வர்?''

''நீ உல்லாசப் பயணம் போகலையேக்கா?''

''ஆனாலும் ஒரு மனைவி, தாய் இதுமாதிரியான கடமைகள புறக்கணிச்சிட்டு போலாமா? ஒரு புருஷன் அஞ்சு வருஷ ஒப்பந்தத்துலகூட போகலாம். 'மனைவி, மக்களை வாழ வைக்கப் போறான்'னு உலகம் பாராட்டும். அதையே ஒரு மனைவி செஞ்சா, 'பொம்ளையா இவ... போட்டது போட்டபடி போறா பாரு’னு சொல்லுவாங்க. இந்தச் சமூகத்துல ஆணுக்கும், பெண்ணுக்குமான தார்மிக கண்ணோட்டங்கள்ல இருக்கற ஏற்றத் தாழ்வுகள் இன்னும் மாறல அன்வர்.''

''அக்கா... நீ சொல்ற காலம் வேற. இப்ப வெளிநாட்டுக்குப் பெண்கள் வேலைக்குப் போறதில்லையா?''

''ஆனா... இந்த மாதிரி குடும்பத்தைப் பிரிந்து, ஒரு நீண்ட இடைவெளியில ஒரு பெண் - கல்யாணமானவள்...  போறது சாத்தியம்தானா?''

''நீ தன்னிச்சையா எந்த ஒரு முடிவையும் எடுக்கல. ஆனந்த் சார் உன் புருஷன். அத்தனை பிரச்னைகளும் அவருக்கும் புரியும். அவர் சொல்லட்டுமே. அவரோட குடும்ப பாரத்தைத்தானே நீ சுமக்கறே?''

''தப்பு அன்வர். அவரோட பந்தங்கள் எல்லாமே என் பந்தங்கள். ஒரு மனைவி புகுந்த வீட்டுக்காக உழைக்கிற உழைப்போ, செயலோ... தியாகம் இல்லை. அது கடமை அன்வர்!''

ஒருவித சிலிர்ப்புடன் பார்த்தான் துர்காவை.

துர்கா !

''சீதை, மகாலஷ்மியோட அவதாரம்தான். ஆனா, கிழிச்ச கோட்டை அவ தாண்டிட்ட காரணமா, எத்தனை வேதனைப்பட்டா?''

''ஆனந்த் சார் கோடு கிழிப்பார்னு நினைக்கிறியா?''

''தெரியாது. ஆனா, இந்தச் சமூகம் பெண்களுக்குனு ஒரு கோடு போட்டுத்தானே வெச்சுருக்கு? அதைத் தாண்டலாமா, வேண்டாமானு ஒரு தயக்கம் வருதே அன்வர்? நான் சம்பாதிக்கற அத்தனை பணமும் நல்ல காரியங்களுக்காக செலவிடப்பட்டாலும், நாளைக்கு என்ன கேள்வி வரும்? 'புருஷன், புள்ளையைத் தவிக்க விட்டுப் போனவதானே'னு விரல்கள் எனக்கு நேரா நீட்டப்பட்டா, எங்கிட்ட பதில் இருக்கா? நியாயமான பதிலே இருந்தாலும், அவங்கள அது சமாதானப்படுத்துமா?''

அன்வர் பேசவில்லை!

''எல்லாரும் நல்லா இருக்கணும்னா, நான் போகணும். போயிட்டு வந்த பிறகு, நான் நல்லா இருக்கணுமே அன்வர்?''

அந்த வாக்கியம் அன்வரை உலுக்கி விட்டது!

''அக்கா!''

''நான் நிறைய யோசிக்கணும் அன்வர். ஆஸ்பத்திரிக்குப் புறப்படறேன்!''

''ஆனந்த் சார்கிட்ட இப்பவே பேசப் போறியா?''

''பேசித்தான் ஆகணும்.''

புறப்பட்டு நேராக ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டாள். ஆனந்துடன்... நடேசன் இருந்தார். அவர் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தது அஞ்சு. அதன் கேசத்தை மெள்ள தடவிக் கொடுத்தாள். 'உன்னை விட்டு நான் பிரிய முடியுமா? அதுவும் மூணு வருஷ காலங்கள்?’ - கேள்வி உள்ளே புறப்பட்டதும் நெஞ்சுக்குள் ஒரு வலி மின்னலாகச் சீறியது.

''துர்கா... ஏன்மா ஒரு மாதிரி இருக்கே?''

- நடேசன் கேட்டார்.

''இல்லை மாமா.''

''பொய் சொல்லாதே துர்கா. அப்பா கேக்கலைனா, நான் கேட்டிருப்பேன். சொல்லு...''

- ஆனந்த் முந்திக்கொள்ள, துர்கா இருவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, மெதுவாக ஆரம்பித்து நிதானமாக சகலமும் சொல்லி முடித்தாள். இருவர் முகத்திலும் சந்தோஷத்தைவிட, கலக்கம்தான் அதிகமாக இருந்தது.

''நீ என்ன சொன்னே துர்கா?''

''அதிகாரிகள் நாளைக்குத்தான் வர்றாங்க. நான் சேர்மன்கிட்ட எதுவும் பேசல.''

''நீ பேசறது இருக்கட்டும் துர்கா. உன் மனசுல என்ன செய்யலாம்னு தோணுது?''

''மாமா... பணத் தேவைகள் பல லட்சங்களுக்கு இருக்கு. அதை இங்கே இருந்தபடி அத்தனை சுலபமா சரிகட்ட முடியாது. ஆனா, குடும்பத்தை, குழந்தையை மூணு வருஷ காலம் பிரிஞ்சிருக்கிறதை நெனச்சுக்கூடப் பார்க்க முடியல. பாசத்துக்கும், பணத்துக்கும் மத்தியில இப்ப நான் மாட்டிக்கிட்டி இருக்கேன் மாமா.''

''ஆனந்த்... நீ என்ன சொல்றே?''

''பல லட்சங்களை சம்பாதிக்கற படிப்போ, திறமையோ சத்தியமா எனக்கில்லைப்பா. துர்காவை பிரிஞ்சு வாழற தெம்பும் என் மனசுக்கு இல்ல!''

- சொல்லும்போது குரல் இடறி, கண்கள் ஈரமாக, துர்கா பதறி விட்டாள்.

''ஆனந்த்... அப்படியெல்லாம் அவசரப்பட்டு நான் எந்த ஒரு முடிவையும் எடுத்துட மாட்டேன்.''

''எனக்குத் தெரியும் துர்கா!''

''நாளைக்கே சேர்மனைப் பார்த்து நான் வேண்டாம்னு எழுதிக் கொடுத்துடறேன்.''

''இரு துர்கா. உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற எந்த ஒரு முடிவும் நல்லதல்ல!''

''மாமா!''

''ஒரு பெண் - தன் அறிவால, திறமையால மாசம் அஞ்சு லட்சம் வரைக்கும் வெளிநாட்டுல போய் சம்பாதிக்கிறது சாதாரண சங்கதியில்ல. புத்திக்குக் கிடைச்ச அங்கீகாரத்தை அலட்சியப்படுத்தறது அந்த ஆண்டவனையே அவமானப்படுத்தற மாதிரி. புரியுதா?''

''மாமா!''

''குடும்பமும் முக்கியம்தான். நீ உன் புகுந்த வீட்டை விட முடியாது. ஆனா, பிறந்த வீடும் ஒரு பொண்ணுக்கு முக்கியம்தான் துர்கா. உங்கக்காவுக்கும் செய்ய நீ கடமைப்பட்டிருக்கே. உன்னை நம்பின சில பேருக்கு உதவணும். எல்லாருக்கும் உதவ கடவுள் சில பேரைத்தான் படைப்பார். அப்படிப்பட்ட படைப்பு உன்னதமானது. தெய்வத்துக்கு தன் படைப்பிலே பிடிச்ச ஜீவன்கள் அவங்களாத்தான் இருப்பாங்க. உனக்கு அந்த குடுப்பினை இருக்கு!''

''அப்பா... துர்கா இல்லாம இங்கே சமாளிக்க முடியுமா?''

''முடியணும் ஆனந்த். அவ தனக்காக, தன் சந்தோஷத்துக்காகவா வெளிநாடு போறா?''

''அதில்லைப்பா... பெரியவங்கள விடுங்க... குழந்தை அஞ்சு?''

''இந்தக் கேள்விக்கு இப்ப எனக்கு பதில் தெரியலை. துர்கா... கொஞ்சம் ஆழமா பேசிக்கலாம்...''

''மாமா... மும்பைக்கு ஒரு இன்டர்வியூவுக்கு ரெண்டே நாள் நான் போயிட்டு வந்ததுக்கே வீடு அமளிதுமளிப்பட்டது. ஆயிரம் நாட்களுக்கு என்னாகும்?''

''பழகினா, பத்தாயிரம் நாட்கள்கூட பெரிசில்லைம்மா. பேசலாம்...''

டாக்டர் வந்தார்.

''டாக்டர்... எப்ப நான் வீட்டுக்குப் போகலாம்?''

''இந்த வாரக் கடைசியில கட்டுப் பிரிச்சுடலாம். அப்புறமா சின்னச் சின்ன பயிற்சிகள எடுத்துட்டு வீட்ல ஒரு வாரம் ஓய்வெடுத்துட்டா சரியாயிடும்!''

''சரிம்மா... அஞ்சுவைக் கூட்டிட்டு நான் வீட்டுக்குப் போறேன்.''

''மாமா... வீட்டுல இந்த விவரத்தைச் சொல்ல வேண்டாமா?''

''ம்! நாளைக்கு உன் அதிகாரிகளை நீ சந்திச்சுப் பேசின பிறகு உடைக்கலாம்.''

ஆனந்தின் ஃபேக்டரியிலிருந்து ஃபோர்மன் பார்க்க வந்தார்.

''வாங்க சார்... அக்கா நல்லா இருக்காங்களா..?'' என்று வாஞ்சையோடு விசாரித்தபடி வரவேற்றாள் துர்கா.

கொஞ்ச நேர விசாரிப்புகளுக்குப் பிறகு, ''ஆனந்த்... உங்களுக்கு லீவு இல்லாததால... சம்பளம் வராது. அதுமட்டும் இல்லாம... ஃபேக்டரியில ஸ்டிரைக் வேற வரப்போகுது. சம்பள உயர்வு, போனஸ் கேட்டு தொழிலாளிகள் போராடப் போறாங்க.''

ஆனந்த் நிமிர்ந்து உட்கார,

''நிர்வாகம் எதையும் தர்றதா இல்லை. ரொம்பப் பிடிவாதமா இருக்காங்க.''

''என்னாகும் சார்?''

''லாக் அவுட்டுதான்!''

''ஐயோ!''

''உங்களுக்காவது சம்சாரம் சம்பாதிக்கிறாங்க. பல பேர் குடும்பத்துல அதுவும் இல்லையே? அந்த வகையில சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.''

அவர் புறப்பட்டுப் போக, ஆனந்த் வெளிறிப் போயிருந்தான்.

''என்ன துர்கா இது..? லாக் அவுட்னா... பல மாசங்களுக்கு நீடிக்கும். எனக்கு இப்ப உள்ள உடம்புல வேலையும் தேட முடியாது. பெரிசா படிப்பும் இல்லை. எனக்கு வேற என்ன வேலை கிடைக்கும்?''

''எதுக்கு ஆனந்த் இப்போ பதற்றப்படறீங்க?''

''சரி... இனிமே நான் வீட்லதானே இருக்கப் போறேன். அஞ்சுவை எல்லாம் பார்த்துக்கலாம். நீ வெளிநாட்டுக்குத் தாராளமா போகலாம்!''

- விரக்தியின் உச்சியில் வார்த்தைகள் சிதறின.

''அடடா... என்ன நீங்க?''

''துர்கா... வேலையும் இல்லாம, பக்கத்துல நீயும் இல்லாம வாழ்ந்தா, நான் செத்துடுவேன்!''

படக்கென அவன் வாயை மூடினாள்.

துர்கா !

''என்ன பேத்தல் இது?''

''இல்லை துர்கா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. என் எதிர்காலம் இத்தனை இருட்டா இருக்கே?''

''நாம கண்ணை மூடிக்கிட்டு இருட்டா இருக்குனு புலம்பினா என்ன அர்த்தம் ஆனந்த்? நம்பிக்கை வேணும். என்ன ஆயிடுச்சு... எதுக்கு இந்தப் பதற்றம்?''

''நான் உன்னைத் தடுக்கலை துர்கா. நீ நிறைய சம்பாதிச்சாத்தான் குடும்பம் நடக்கும். நீ வர்றதா சம்மதம் சொல்லிடு!''

''நீங்க இப்ப எதுவும் பேசாதீங்க. நான் விமானத்துல ஏறவும் இல்லை, உங்க கம்பெனிக் கதவுகள் மூடவும் இல்லை. எதுக்கு இத்தனைப் படபடப்பு?''

''எனக்கு தலை சுத்துது துர்கா... என்னவோ பண்ணுது...''

துர்கா பதறி சிஸ்டரை அழைக்கச் செல்ல, சில நொடிகளில் டாக்டரே வந்து விட்டார். பரிசோதித்தார்.

''ரத்த அழுத்தம் கணிசமா ஏறியிருக்கேம்மா... புதுசா ஏதாவது டென்ஷனா?''

துர்கா எதுவும் சொல்லவில்லை.

''சரி, மாத்திரை குடுக்கறேன். ஒரு இன்ஜெக்ஷனும் போடச் சொல்றேன்.''

இரண்டும் வேலை செய்ய, பத்தே நிமிடங்களில் கண்கள் செருகி, ஆனந்த் மெள்ள உறங்கத் தொடங்கிவிட்டான். துர்கா போர்வையை கழுத்து வரை சரி செய்த பின், ஒரு ஓரமாக வந்து உட்கார்ந்தாள். வராகன் அனுமதி பெற்று உள்ளே வர, அன்வரும் பின்தொடர்ந்து வந்தான்.

''அன்வர் எல்லாம் சொன்னார்மா!''

''சார்கிட்ட விவரத்தை சொல்லியாச்சா அக்கா?''

''சொல்லிட்டேன் அன்வர்!''

ஆனந்தின் பதற்றமும், உறக்கமும் ஏன் என்றும் துர்கா சொன்னாள்.

''பாவம்க்கா. ஒரே நேரத்துல வேலைக்குப் பிரச்னை, உங்களைப் பிரிய நேரிடுமோங்கற பயம், இப்ப ஒடம்புல உள்ள கோளாறு. டென்ஷன் நியாயம்தானேக்கா?''

''ஏற்கெனவே மச்சான் அதிகமாவே உணர்ச்சிவசப்படுவார்...'' - வராகன்!

''இவருக்கும் நாளைக்கு வேலையில்லைனா, அந்த சம்பளமும் கட் ஆகும். ஏற்கெனவே வெளிய பல பிரச்னைகள். நான் எப்படி சமாளிக்கப் போறேன்?''

''துர்கா... நாங்கள்லாம் வாழணும்னு நீ படாதபாடு படறே. இப்ப உன் வாழ்க்கை கேள்விக்குறி ஆகியிருக்கு. எங்களால எத்தனை பிரச்னைகள்?!''

''அப்படியெல்லாம் சொல்லாதீங்க அண்ணா. எல்லாரும் சேர்ந்ததுதான் குடும்பம். தனி மரம் தோப்பாக முடியுமா?''

''சரிம்மா... நீ, ஆனந்த், குழந்தைனு மட்டும் இருந்தா, உன் ஒருத்தி வருமானம்கூடப் போதுமே?''

''இல்லண்ணா... அவரைப் பெத்தவங்க, சகோதரிகளை அவர் விட்டுட முடியுமா? ஆரம்ப உறவுகளை அலட்சியப்படுத்தின யாருமே ஆனந்தமா வாழ முடியாதண்ணா!''

''அக்கா... நீ எங்கே இருந்தாலும் நல்லாருப்பே. இப்ப இருக்கிற பணப் பிரச்னைக்கு, குடும்ப சூழலுக்கு நீ வெளிநாட்டுக்குப் போறதுதான் நல்லது. உன் கதவை அதிர்ஷ்ட தேவதை தட்டியாச்சு. நீ திறக்கலைனு வை... அவ கோவப்பட மாட்டாளா? அவளை வாசல்ல நீ நிக்க வெச்சா, அப்புறமா உன்கிட்ட அவ வருவாளா..?''

வராகன் ஆச்சர்யமாகப் பார்த்தார்.

''அன்வரா இப்பிடி பேசுறது?''

''அண்ணே! மதங்களைவிட மனங்கள்தான் எனக்குப் பெரிசு. அல்லாவும், ஆதிபராசக்தியும் வேற வேறனு நான் நினைக்கவே இல்லைண்ணே!''

''துர்கா... ராத்திரி ஆனந்த்கூட நான் இருக்கேன். நீ வீட்டுக்குப் போ. இதைத் தள்ளிப்போடாம பேசணும். அங்கேயுள்ள மூணு பொம்பளைங்களும் உனக்கு எதிரா போர்க்கொடிதான் தூக்கும். அதைப்பத்தி நீ கவலைப்படாதே.''

''அண்ணே... அவங்கள விடுங்க. ஆனந்த் சாரை எப்படி அக்கா கன்வின்ஸ பண்ணப் போறாங்க? குழந்தைக்கு எப்படி புரிய வைக்கப் போறாங்க?''

''ஏம்மா துர்கா... ஆனந்த், அஞ்சுவை உன் சொந்தச் செலவுல கூட்டிட்டுப் போகக் கூடாதா? அங்கே உள்ளவங்க குடும்பத்தோட வாழலையா?''

''இல்லைண்ணா... குடியுரிமைப் பிரச்னைகள் இருக்கு. விசா கிடைக்கறது சுலபமில்ல. கம்பெனியும் ஒப்புக்காது. பெத்தவங்கள விட்டு இவரைப் பிரிக்கறதும் சரியில்ல. இங்கேயும் கடமைகள் இருக்கே? இவர் ஒரே பிள்ளையில்லையா? அஞ்சுவையும் அனுமதிக்க மாட்டாங்க. அங்கே போனா, அவளை நான் யார்கிட்ட விடுவேன்? பதில் இல்லாத கேள்விகள் நிறைய இருக்கு அண்ணா!''

அன்வர் எழுந்தான்.

''யோசிக்கலாம்க்கா. அண்ணன் இங்கே இருக்கட்டும். நான் உன்னை டிராப் பண்றேன்... வா!''

''சரி அன்வர்!''

துர்கா புறப்பட்டு பைக்கில் ஏறினாள். அன்வர் ஸ்டார்ட் செய்ததும், வராகன் ஓடி வந்தார்.

''ஆனந்த் கூப்பிடறார்மா!''

துர்கா வேகமாக உள்ளே வந்தாள்.

''என்ன ஆனந்த்?''

ஆனந்த் அவள் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

''நீ போகாதே. என்கூட இரு துர்கா. ப்ளீஸ்!''

துர்கா தவித்துப் போனாள்!

''சரி ஆனந்த்!''

ஒரு நாள் பிரிவுக்கே தவிக்கும் ஆனந்த், ஆயிரம் நாட்களுக்கு மேல் துர்காவை பிரிய சம்மதிப்பானா? பணமும் தேவை, பாசம் அதைவிட முக்கியம். துர்கா என்ன முடிவெடுக்கலாம்..? துர்காவின் இடத்தில் நீங்கள் இருந்தால், என்ன செய்வீர்கள்?

- தொடருங்கள் தோழிகளே...
ஆடைகள் உதவி:
பி.எம். சில்க்ஸ், மயிலாப்பூர்,
சென்னை.
 

பிரஷர் குக்கர் பரிசு!

துர்கா !

பெங்களூரு - பாமதி நாராயணன்... 70 வயது சூப்பர் சீனியர் சிட்டிஸனிடம், ''இந்த எபிசோட் இயக்குநர் நீங்கதான்'’ என்று சொன்னதும், ஏழு வயது குழந்தையின் சிரிப்பும் சந்தோஷமும் அவர் பேச்சில் துள்ளிக் குதித்தது. ''பெங்களூருல கிட்டதட்ட பதினாலு வருஷமா இருக்கேன். இங்க என் கூடவே, என் பொண்ணு மாதிரி இருக்கறது... அவள் விகடன்தான். புக் வந்ததும் அட்டை டு அட்டை படிச்சாத்தான் நிம்மதியா, திருப்தியா இருக்கும். என் எழுத்து 'அவள் விகடன்'ல அப்ப வந்துட்டுதான் இருக்கும். சிறுகதைகளும் எழுதியிருக்கேன். இப்ப ஒரு மெகா தொடரோட எபிசோட் டைரக்டர்னா... நம்பவே முடியல'' என்றவர்,

''ரொம்ப சந்தோஷம்னு எனக்கு சொல்லத் தெரியல்லை.. ஜஸ்ட் ஃபீல் இட்’' என்றார் நெகிழ்ந்தபடியே!

ஹார்ட்டி கங்கிராட்ஸ்ம்மா!

இவருக்கு பிரஷர் குக்கர் அன்புப் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

வாசகிகளுக்கு சூப்பர் பரிசுப் போட்டி

இந்தஅத்தியாயத்தைப் படித்து முடித்ததுமே... அடுத்த அத்தியாயம் எப்படி என்பதை தீர்மானியுங்கள். அதை அப்படியே மனதில் வடித்துக் கொண்டாலும் சரி, எழுதி வைத்துக் கொண்டாலும் சரி... 044-42890014 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் பெயர், ஊரை முதலில் சொல்லி விட்டு உங்கள் குரலிலேயே கதை திருப்பத்தை பதிவு செய்யுங்கள். மிகச்சிறந்ததாக தேர்ந்தெடுக்கும் கதைத் திருப்பத்தை வைத்து அடுத்த அத்தியாயத்தை நகர்த்துவார் தேவிபாலா. அத்தகைய எபிசோடை சூப்பராக சமைக்கும் வாசகிக்கு பிரஷர் குக்கர் பரிசு!

முக்கிய குறிப்பு: செவ்வாய் விட்டு செவ்வாய் 'அவள் விகடன்' கடைக்கு வருவது உங்களுக்குத் தெரிந்ததுதான். இதழ் வெளிவரும் வாரத்தின் சனிக்கிழமை அன்று மாலைக்குள் 044-42890014 எண்ணைத் தொடர்பு கொண்டு கதைத் திருப்பத்தை பதிவு செய்ய மறக்காதீர்கள்!