தமிழுரை - அறிவுமதி, எழிலுரை - டிராட்ஸ்கி மருது
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து
அவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்து...
- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர், நெடுநல்வாடை: 39-41

பூம்புகார்.
கண்ணகிக்கும் கோவலனுக்கும்
இல்லறம் தொடங்க
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடம்,
நான்காவது மாடி.
என்னங்க... நெடுநல்வாடைனு போட்டுட்டு
சிலப்பதிகாரத்துக்குப் போறீங்க?
நான் மட்டுமா போறேன்?
உங்களையும்
கூட்டிட்டுத்தானே போறேன்.
இந்த ஏழு மாடி அரண்மனைகள்ல
எப்ப ஏறிப் பாத்திருக்கீங்க?
தஞ்சாவூர்... கங்கைகொண்டசோழபுரம்...
இப்படி இருக்கிற கோயில்களில் வேண்டுமானால்
நீங்கள் அப்படிப் பார்த்திருக்கலாம்.
மன்னர்கள் வாழ்ந்த, வணிகர்கள் வாழ்ந்த
மக்களுக்கான மாடமாளிகைகளை
தமிழ்நாட்டில்
எங்கே பார்த்திருக்கிறீர்கள்?
பேசாம என்னோட வாங்க...
இலக்கியத்திலாவது பார்க்கலாம்.
இளவேனிற்கால மாடத்தை புகாரிலும்
குளிர்கால மாடத்தை மதுரையிலும்
பார்த்துவிட்டு வரலாம்.
சரியா?
சரிங்க.
தரைத் தளத்தில்...
அனைத்து வகைப் பூக்களிலும் தேனுண்ட பிறகும்
தீராதப் பசியோடு தவிக்கும் வண்டுகளையும்
கூட்டிக்கொண்டு
தென்றல், சாளரம் சாளரமாய்த் தேடித் தேடி
மாடிகள்தோறும்
நுழையத் தொடங்கிவிட்டது.
வண்டுகளோடு வந்த தென்றலையும்
அழைத்துக்கொண்டு
ஏழாவது மாடிக்கு வந்துவிட்டார்கள்
கண்ணகியும் கோவலனும்
நிலா குடிக்க.
இது
இளவேனிற்கால மாடமாளிகை.
இங்கு
சிறுசிறு பொழுதுகளையும்கூட
கோழி சொல்லிவிடும்; குயில் சொல்லிவிடும்;
நிழல் சொல்லிவிடும்; நிலா சொல்லிவிடும்.
ஆனால்...
இடியோடும் மின்னலோடும்
கரும்பிசினாய் இறங்கி வந்து
கொட்டோகொட்டென்று
பத்துப் பதினைந்து நாள்களுக்கு
விடாமல் பெய்கிற அடைமழையில்
சாளரங்கள் இறுக மூடப்பட்ட
இருட்டு மாடியில் இருந்துகொண்டு
எப்படிப் பொழுதை அறிந்துகொள்ள..?
இன்றைக்குப் போல்
அன்றைக்கு பொழுது சொல்ல
காலச்சுட்டி கண்டுபிடிக்கப்படவில்லையே
என்றுதானே நினைக்கிறீர்கள்?

அதோ... அங்கே உற்றுப் பாருங்கள்.
ஒரு பெண் கீழேயிருந்து
காம்புகளோடு பறித்து வந்த
பிச்சி அரும்புகளை
ஒரு தட்டில் வைத்திருக்கிறாள்.
இதழ்கள் அவிழ்ந்து
பிச்சிப் பூக்கள் மணம் வீசும் பொழுது
மாலைப் பொழுது என்பதை
குளிர் இருட்டில் இருக்கிற அவர்கள்
உணர்ந்துகொள்கிறார்கள்.
இனி
விளக்கேற்றுவார்கள்.
வெளிச்சத்தில் நாம்
யார் யாரெனத் தெரிவதற்குள்
வெளியேறிவிடலாம்.
பாவம்.
அவள், அவனுக்காக
அந்தக் குளிரையே போர்வையாய்ப்
போர்த்திக்கொண்டு காத்திருக்கிறாள்.
வரட்டும்...
வந்ததும்,
அவனை அவள் விழுங்கட்டும்
ஒரு ஞாயிறாய்.
இனி எதற்கு இந்தப் பொழுது?
அந்தப் பொழுது?
பிரிந்திருக்கும் அத்தனை பேருக்கும்
பிடித்தமான அந்த நீண்ட இருள்
அவளால் வாய்க்கட்டுமே!
- தமிழ் வளரும்...