Published:Updated:

தங்கத் தமிழ் - 16

தமிழுரை - அறிவுமதி, எழிலுரை - டிராட்ஸ்கி மருது

தங்கத் தமிழ் - 16

தமிழுரை - அறிவுமதி, எழிலுரை - டிராட்ஸ்கி மருது

Published:Updated:

திண்கால் உறியன், பானையன், அதளன் 

நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்பத்

தண்டுகால் ஊன்றிய தனிநிலை இடையன்,

மடிவிடு வீளை கடிதுசென்று இசைப்பத்

தெறிமறி பார்க்கும் குறுநரி வெரீஇ

முள்ளுடைக் குறுந்தூறு இரியப் போகும்

                                       -இடைக்காடனார், அகநானூறு -274, திணை-முல்லை.

தங்கத் தமிழ் - 16

நாகரிகத்தைக்

கண்டெடுத்துக் கொடுத்த நாமே

கண்டபடி பேசலாமா?

என்ன பேசினாங்க?

என்ன பேசினாங்களா..?

என்னென்னவோ பேசுறாங்க.

போடா...

கூழு குடிச்ச பயலே!

போடா...

குந்தக் குடிசையில்லாத பயலே!

போடா...

பொறம்போக்கு!

நீயெல்லாம்

ஆடு மேய்க்கத்தா லாயக்கு;

மாடு மேய்க்கத்தா லாயக்கு.

யார, யார் பேசுறது?

தன்னோடு பிறந்த தன் இனத்தை

தன் இனமே பேசுறது!

கூழ்... மட்டமான உணவா?

'ஆறாம்திணை’யை

ஆறு முறை படிச்சிட்டு

அப்புறமா சொல்லுங்க.

குந்தக்கூடக் குடிசையில்லாம

நம்ம இனம் நம்ம மண்ணுல

இலவச மனைப் பட்டா கேட்டு

இன்னும் அலையுதேங்கிற

தவிப்பு நெருப்ப

இன்னும்... இங்க பத்தவைக்க முடியலன்னா

அப்புறம் எதுக்குங்க இந்த அரசியல்?

ஆடு, மாடு மேய்ச்சவங்களோட அந்த

அனுபவங்கள்லதாங்க

பண்பாடு பதப்பட்டது;

வாழ்க்கை அழகானது.

அவங்க

அதிகமாப் பயன்படுத்தின

அழகான

ஒரு தூய மொழியை

நாம எவ்வளவு எளிமையா

கொச்சை செய்துட்டோம்.

எப்படி?

எப்படியா..?

'விசிலடிச்சான் குஞ்சுகள்’னு.

அந்த ஒலி ஒண்ணும்

அர்த்தமற்ற இரைச்சலுக்கானது இல்லைங்க.

அது...

குறிஞ்சியிலும் முல்லையிலும்

தாங்கள் எங்கெங்கே இருக்கிறோம்

எங்கே வந்துகொண்டிருக்கிறோம் என்பதை,

தூரங்களை மீறி

காட்டு அடம்புகளை மீறி

தெரிவித்துக்கொள்கிற

குறியீட்டு மொழி.

அடையப்போட்ட ஆடுகளில்

ஒன்று எழுந்து

ஒழுங்கீனம் செய்ய முற்பட்டால்

இந்த மொழிதான் போய்,

மொத்த ஆட்டுக் கூட்டத்தையும்

முறை செய்யும்.

நள்ளிரவு. இடி மின்னலுடன் மழைத்தூறல்.

உறி, பானை, தோற்படுக்கை இவற்றோடு

ஒற்றைக்காலில் ஒரு காலை தண்டில் ஊன்றி

நனைந்தபடி நிற்கும் அந்த இடையர்,

ஒலிக்குறிப்புகளாலேயே

தம் பட்டி ஆடுகளுக்கு வர இருக்கிற

ஆபத்தினை அறிந்து

சீழ்க்கையொலி இசைக்கிறார்.

அந்த ஒலி விரைவாகப் போய்

குட்டி ஆடுகளைத் தூக்கிப்போக வந்திருக்கும்

குறு நரியைத் திடுக்கிடவைத்து

முள் நிறைந்த புதருக்குள்

விரட்டிவிட்டுத் திரும்புகிறது.

உயிர் காத்த அந்தச் சீழ்க்கை,

வீளை என்ற மொழியை

இனி... தவறான பொதுக் கருத்தில்

கொச்சை செய்துவிடாதீர்கள்.

அது, அந்த மொழியைக் கண்டெடுத்து

நமக்குத் தந்த குறிஞ்சி, முல்லை மூத்தோரை

அவமதிப்பதாக ஆகிவிடும்!

தமிழ் வளரும்...