Published:Updated:

பாலுவும் பூதமும் !

ராம்கி

பாலுவும் பூதமும் !

ராம்கி

Published:Updated:

பாலு, அன்று பள்ளிக்கு வரவில்லை. நண்பர்கள் சபிதா, சுரேஷ், மனோஜ் மூவரும் பாலுவைக் காண வீட்டுக்குச் சென்றார்கள். பாலு, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தான்.

பாலு படு சுட்டிதான். ஆனால், பேய், பிசாசு, கரப்பான்பூச்சி, பல்லி, நாய் என்றால் மிகவும் பயம். வீட்டுக்கு வந்த பாலுவின் நண்பர்களுக்கு லெமன் ஜூஸ், சிப்ஸைக் கொடுத்தார் பாலுவின் அம்மா.

சுரேஷ், பாலுவைப் பார்த்து, ''எப்படி உனக்கு காய்ச்சல் வந்தது?'' என்று கேட்டான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நேற்று இரவு ஒரு பேய்ப் படம் பார்த்தேன். பயந்துபோய்...'' என்று இழுத்தான் பாலு.

''உனக்குத்தான் பயம் இருக்கே. அப்புறம் பார்த்தே? நாளைக்கு மேத்ஸ் டெஸ்ட் இருக்கு. நல்லாப் படிச்சுட்டு வா'' என்றாள் சபிதா.

நண்பர்கள் சென்றதும், பாலு கணக்குப் புத்தகத்தை எடுத்தான். அவனுக்கு தூக்கம் வந்ததே தவிர, மேக்ஸ் வரவில்லை. தூங்கியபடி மேஜையின் மீது விழுந்தான்.

பாலுவும் பூதமும் !

அப்போது, அலமாரியில் இருந்து ஒரு புத்தகம் கீழே விழுந்தது. எடுத்துப் பார்த்தான்.

'பாலுவும் பூதமும்’ என்றிருந்தது. 'இது எங்கிருந்து வந்தது?’ என்று எண்ணி, தன் பெயர் இருப்பதைக் கண்டு, படிக்கும் ஆவலில், புத்தகத்தைத் திறந்தான்.

என்ன ஆச்சரியம்? அவன் பேய்ப் படம் பார்த்தது, காய்ச்சலில் படுத்துக்கிடந்தது, நண்பர்கள் வந்தது என எல்லாமே அதில் இருந்தது. வியப்புடன் மேலும் படிக்கத் தொடங்கினான்.

அதில், பாலு மைதானத்தில் இருந்து வீடு திரும்பும்போது ஒரு பூதத்தைச் சந்திப்பதாகவும், தனது நண்பனாக பூதம் மாறுவதாகவும் இருந்தது. அந்தப் பூதத்தை, நள்ளிரவில் தன் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துகிறான். பயந்தோடிய நண்பர்கள்... ''இனிமேல், இவன்கூட சேரக் கூடாது'' என்கிறார்கள். பாலு, நண்பர்கள் இல்லாமல் தவிக்கிறான்.

பாலு புத்தகத்தை மூடினான். 'இதெல்லாம் நடக்குமா?’ என்ற சந்தேகம் அவன் மனதில் எழுந்தது. மறுநாள், வேண்டுமென்றே மைதானத்துக்குச் சென்றான்.

பாலுவும் பூதமும் !

பாதையில் ஒரு கல் இருந்தது. புத்தகத்தில் வருவது போன்ற கல். அந்தக் கல் ஓரளவுக்குப் பெரியதாக இருந்தது. அதைச் சிரமப்பட்டு விலக்கியதும் அந்தப் பூதம் வெளியே வந்தது. பாலு சற்றே மூர்ச்சையாகி மீண்டான். இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

பூதத்தை, 'செல்லக்குட்டி... ஜு பூதம்’ என்று அழைத்தால் போதும். அவன் முன்னே வந்து, ''என்ன வேண்டும்?'' என்று கேட்கும். பாலுவும் பரீட்சையில் நூற்றுக்கு 100 வாங்கணும், ஐஸ்க்ரீம் வேணும்... இப்படி தனது ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வான்.

ஒருநாள், மைதானத்தில் பூதத்துடன் பேசிக்கொண்டிருக்கும்போது, அவனைப் பின்தொடர்ந்து வந்த நண்பர்கள் சூழ்ந்துகொண்டார்கள்.

''உனக்கு என்னடா ஆச்சு? இப்போ எல்லாம் சரியா விளையாடவே வர்றதில்லை. இங்கே தனியா உட்கார்ந்து பேசிட்டிருக்கே'' என்று கேட்டான் மனோஜ்.

'பூதம் அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை’ என்று புரிந்தது. அதை, நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் நாள் இது என்பதும் புரிந்தது. பூதத்தை எல்லோருக்கும் தெரியும்படி வரவைத்து, அறிமுகம்செய்தான். புத்தகத்தில் படித்தபடியே நண்பர்கள் ஓட்டம் பிடித்தனர்.

பாலுவும் பூதமும் !

நண்பர்கள் இல்லாமல் பாலு தவித்த தவிப்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது. என்னதான் பூதம் அவனோடு விளையாடினாலும் நண்பர்கள் போல இல்லை.

பூதமும் பாலுவை உலகின் பல இடங்களுக்கும் அழைத்துச்சென்றது. சஹாரா பாலைவனம், பசிஃபிக் பெருங்கடல், அமெரிக்கா என ஒரு ரவுண்டு அடித்துப் பார்த்தது. ஆனாலும் அவனுடைய நண்பர்களின் ஏக்கம் போகவில்லை.

அப்போது பூதம், ''பாலு, ஒருவனுக்கு எவ்வளவுதான் வசதியும் நினைத்ததைச் செய்யும் திறமையும் இருந்தாலும், 'நண்பர்கள் இல்லாவிட்டால் மகிழ்ச்சி இருக்காது’ என்பது புரிந்தது. நான் உன்னுடன் இருந்தால், அவர்கள் வர மாட்டார்கள். எனவே, நான் சென்றுவிடுகிறேன். உன்னை மறக்கவே மாட்டேன்'' என்று சொல்லிவிட்டு மறைந்தது.

பூதம் இருந்த இடத்தில், இப்போது ஒரு பொம்மை இருந்தது. பாலு, அதைச் சிறிது நேரம் அமைதியாகப் பார்த்தான். அதை அலமாரியில் வைக்கும்போது, அந்தப் புத்தகம் கண்ணில் பட்டது.

அந்தப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தைப் படிக்காதது நினைவுக்கு வந்தது. எடுத்துத் திறந்தான். பூதம், பொம்மையாக மாறுவதும் அப்போது, வாசலில் நண்பர்களின் குரல் கேட்பது போலவும் அதில் இருந்தது.

''பாலு...'' என்று வாசலில் குரல் வர, உற்சாகமாக ஓடினான் நண்பர்களை நோக்கி.