Published:Updated:

சின்ன சின்ன கதைகள் !

ஓவியர்

சின்ன சின்ன கதைகள் !

தவளைக் கச்சேரி

தவளை ஏன் 'க்லபக் க்லபக்’ என்று கத்துகிறது தெரியுமா?

ஒருமுறை, காட்டில் வனவிலங்குத் திருவிழா நடக்க இருந்தது. அதில் நடனம், நாடகம், விளையாட்டு எனப் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் விஷயம் ஒதுக்கப்பட்டது. அதில், இசைக் கச்சேரிக்கான பொறுப்பை, தவளைத் தலைவனிடம் ஒப்படைத்தது சிங்க ராஜா.

தவளைத் தலைவனும் மகிழ்ச்சியுடன் தனது இனத்தைக் கூட்டி, ''வன விழாவில் நாம் அசத்த, இப்போது முதலே ஒத்திகையை ஆரம்பிப்போம். எங்கே எல்லோரும் பாடுங்கள் பார்க்கலாம்'' என்றது.

தவளைகள் எல்லாம், 'க்லபக் க்லபக்’ என்று கத்தின. சற்று நேரத்தில் ஒரு தவளை, ''இன்னும் எவ்வளவு நேரம் ஒத்திகை பார்க்க வேண்டும்'' என்று கேட்டது.

சின்ன சின்ன கதைகள் !

தவளைத் தலைவனுக்கு வந்ததே கோபம். ''வன விழாவில் பாடுவது என்றால் சும்மாவா? நான் சொல்லும் வரை குறுக்கே பேசாமல் ஒத்திகையைத் தொடருங்கள். இதோ வந்துவிடுகிறேன்'' என்று  சொல்லிவிட்டுச் சென்றது.

அப்போது, மழை பெய்யத் தொடங்கியது. வேகமாகச் சென்ற தவளைத் தலைவன், அங்கிருந்த குழியைக் கவனிக்காமல் தவறி விழுந்தது. மண் சரிந்து குழியை மூடிவிட்டது.

தங்கள் தலைவன் வருவான். இசைக் கச்சேரிக்குச் செல்வோம் என்று தவளைகள் தலைமுறை தலைமுறையாக ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கின்றன.

- எஸ்.சுசி-(VII), அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
புதுச்சேரி.

மானும் மீனும் !

ஒரு காட்டில், மான் ஒன்று மிகவும் தாகத்துடன் இருந்தது. அப்போது, தூரத்தில் ஒரு குளம் தெரிந்தது. அந்த மான் வேகமாக  தண்ணீரை அருந்தச் சென்றது. அப்போது, அந்தக் குளத்தில் இருந்த மீன் ஒன்று, ''இங்கு தண்ணீர் அருந்தாதே. வெயிலால் தண்ணீர் கொஞ்சமாக இருக்கிறது. நீ இங்கு தண்ணீர் அருந்தினால், நாங்கள் அனைவரும் இறந்துவிடுவோம்'' என்றது.

சின்ன சின்ன கதைகள் !

''எனக்கும் தாகம் உயிர் போவது போல உள்ளது. ஆனால், என்னால் வேறு இடம் சென்று தாகம் தணித்துக்கொள்ள முடியும். உங்களால் செல்ல முடியாது. நான் வேறு  இடம் பார்த்துக்கொள்கிறேன்'' என்று கூறிவிட்டு,  சென்றது மான்.

இரண்டு நாட்கள் கழித்து, காட்டில் மழை பெய்ந்தது. மான் திரும்பவும் தண்ணீர் அருந்த வந்தது. அப்போது கரையில் எட்டிப் பார்த்த மீன், ''அருகே வராதே'' என்றது. அதற்கு அந்த மான், ''ஏன்? தண்ணீர்தான் நிறைய இருக்கிறதே'' என்று கேட்டது. ''மழை அதிகம் பெய்ததால், குளத்தில் முதலை வந்துள்ளது. நீ அருகே வந்தால், பிடித்துக்கொள்ளும்'' என்றது மீன்.

''உன் எச்சரிக்கைக்கு நன்றி'' என்று சொல்லிவிட்டுத் தப்பித்தது மான்.

- ஏ.எம்.மதீஹா-(IV), இஸ்லாமிக் மெட்ரிக் பள்ளி, கீழக்கரை.

எல்லோரும் சமம்

 அது ஒரு பெரிய ஜென் பள்ளி. பல துறவிகள் அங்கே முறைப்படி பயிற்சி பெற்றுத் தேர்ந்திருந்தார்கள். அந்த ஜென் பள்ளி தொடங்கி, கால் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாட, ஒரு விழா நடத்தப்பட்டது.

விழாவில்... கொடையாளர்கள், ஆசிரியர்கள், பிரமுகர்கள் எல்லோருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. கடைசியாக, சமையல்காரர், அவருக்கு உதவி செய்யும் ஊழியர்கள், துப்புறவுத் தொழிலாளர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களுக்கும் தன் கையால் பதக்கங்களை வழங்கினார், தலைமைக் குருநாதர்.

சின்ன சின்ன கதைகள் !

இதைப் பார்த்த சில துறவிகள், ''அவர்களுக்கும் ஒரே மாதிரியான பதக்கமா? நாங்களும் அவர்களும் சமமா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு குருநாதர், ''சமம்தான். நீங்கள் அறிவுக்கு உணவு அளித்தீர்கள். மனத் தூய்மைக்கு உதவினீர்கள். அந்த அறிவைப் பயன்படுத்தி பல்வேறு பணிகளைச் செய்வற்கான உடல் ஆற்றலுக்கு இவர் உணவு அளித்தார். இவர் புறத்தூய்மைக்கு உதவினார். உணவும், புறத் தூய்மை இல்லாதிருந்தால், நீங்கள் இத்தனை வருடங்கள் இருந்திருப்பீர்களா?'' என்று கேட்டார்.

''மன்னியுங்கள். எங்களுக்கு அகத் தூய்மையும் இப்போதுதான் ஏற்பட்டது'' என்றார்கள் சீடர்கள்.

சின்ன சின்ன கதைகள் !
அடுத்த கட்டுரைக்கு