Published:Updated:

துக்கம் இல்லாத தூக்கம் !

மகேஸ் ஓவியம் : கீர்த்தி

துக்கம் இல்லாத தூக்கம் !

மகேஸ் ஓவியம் : கீர்த்தி

Published:Updated:

காட்டில் சில நாட்களாக ஒரு விஷயம் பரபரப்பாக இருந்தது. சிங்க ராஜாவுக்கு சரியாக தூக்கம் வருவது இல்லை. தூக்கம் வராத சிங்கம், தன் சிடுசிடுப்பை அமைச்சர் யானையிடம் காட்டியது. யானைக்கு அது பெரிய தலைவலியாக இருந்தது.

பலமுறை யோசித்து இறுதியில் அனைத்து விலங்குகளையும் அழைத்து, ''ராஜாவை உறங்கவைத்தால் பரிசு கிடைக்கும்'' என்றது.

''சிங்க ராஜாவை நான் உறங்கவைக்கிறேன்'' என்று முன்வந்தது காட்டெருமை. அதோடு, சில விலங்குகளும்  சேர்ந்து, சிங்க ராஜாவின் குகைக்குள் சென்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ராஜா, இந்தப் பாலைக் குடியுங்கள். தூக்கம் கண்ணைச் சுழற்றிக்கொண்டு வரும்!'' என்றபடி, ஒரு குவளை நிறைய சூடான பாலைக் கொடுத்தது காட்டெருமை.

சிங்கமும் குடித்தது. எந்தப் பலனும் இல்லை. சிங்கத்துக்குக் கொஞ்சமும் தூக்கம் வரவில்லை.

அடுத்த நாள் குரங்கு, ''சிங்க ராஜா, இந்தத் தைலத்தை உடலில் நன்றாகத் தேய்த்து, வெந்நீரில் குளியுங்கள். நன்றாகத் தூக்கம் வரும்'' என்று புட்டி நிறையத் தைலத்தைக் கொடுத்தது.

துக்கம் இல்லாத தூக்கம் !

அந்தத் தைலத்தை சிங்கத்தி உடலில் நன்றாகத் தேய்த்துவிட்டது யானை. சுகமான குளியல் போட்டுவிட்டு, கட்டிலில் படுத்தது சிங்கம். உடலுக்குப் புத்துணர்ச்சி வந்ததுபோல் இருந்ததே தவிர, உறக்கம் வரவில்லை.

அடுத்த நாள், மயில் தன் தோகையால் மிருதுவான விசிறி ஒன்றைச் செய்து சிங்கத்திடம் கொடுத்து, ''ராஜா, இதை விசிறிக்கொள்ளுங்கள். நன்றாகத் தூக்கம் வரும்'' என்றது. தோகையால் விசிறிப் பார்த்தது சிங்கம். அதுவும் பலன் அளிக்கவில்லை.

ஒவ்வொரு விலங்கும் ஒரு மருத்துவத்தைச் சொல்லிப் பார்த்தன. எதுவும் பலிக்கவில்லை. ''உங்கள் ஒருவராலும் என் பிரச்னையைத் தீர்க்க முடியவில்லை. இனி, வைத்தியம் என்று என் முன்னே வந்தால், அடித்தே கொன்றுவிடுவேன்'' என்று கோபத்தோடு கர்ஜித்துவிட்டுக் குகைக்குள் சென்று படுத்துவிட்டது சிங்கம்.

வெளியூர் சென்றிருந்த நரி, அன்றுதான் திரும்பியது.  ''நான் ராஜாவின் பிரச்னையைத் தீர்க்கிறேன்'' என்றது.

நேராக சிங்கத்தின் குகைக்குச் சென்றது. ''நீ எதற்காக வந்தாய்?'' என்று கர்ஜித்தது சிங்கம்.

''ராஜா, தங்கள் பிரச்னையைத் தீர்க்கவே வந்திருக்கிறேன்'' என்று பணிவாகச் சொன்னது நரி.

''நீ சொல்லும் வைத்தியமும் வேலை செய்யவில்லை என்றால், என் கையால்தான் உனக்கு மரணம். நினைவில் வைத்துக்கொள்'' என்றது சிங்கம்.

''ராஜா, என் தாத்தா ஒருவர், அருகில் உள்ள மலையில் வசிக்கிறார். அவர் சிறந்த மருத்துவர். எந்த நோயையும் குணமாக்குவார். அவரிடம் அழைத்துச் செல்கிறேன். ஆனால், நீங்கள் தனியாக வர வேண்டும்'' என்றது நரி.

'எப்படியோ தூக்கம் வந்தால் போதும்’ என்று நினைத்த சிங்கம், சம்மதித்தது.

துக்கம் இல்லாத தூக்கம் !

மறுநாள் காலையில், சிங்கமும் நரியும் நடந்தே மலைமீது ஏறின. சிங்கம் மிகவும் சிரமப்பட்டது. நரியோ, ஏற்கெனவே பழக்கப்பட்டதால், எளிதாக ஏறிச் சென்றது. ஒரு வழியாக இரண்டும் மலை உச்சியை அடைந்தன.

அங்கே ஒரு மரத்தடிக்குச் சென்ற நரி, திடீரென்று ''ராஜா, கோபித்துக்கொள்ளாதீர்கள். இன்று என் தாத்தா அயலூருக்குச் செல்லும் நாள் என்பதை மறந்துவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டும். நாம் நாளை வந்து மருந்து வாங்கலாமா?'' என்றது.

சிங்கத்துக்குக் கடுமையான கோபம். நரியைத் திட்டித் தீர்த்தது. ''உனக்கு நாளை இருக்கிறது விசேஷம்'' என்றபடி, மலையில் இருந்து இறங்கியது சிங்கம். நரி அமைதியாகப் பின்தொடர்ந்தது.

மறுநாள் பொழுது புலர்ந்தபோது. சிங்க ராஜாவைத் தேடி நரி வந்தது. அது சிங்கத்திடம், ''ராஜா, இரவு தூங்கி இருப்பீர்களே'' என்றது.

அதைக் கேட்ட சிங்கம், ''ஆமாம்! நேற்று இரவு என்னை அறியாமலேயே நன்றாக உறங்கினேன். காலையில்தான் விழிப்பு வந்தது. அது எப்படி?'' என்று கேட்டது.

''ராஜாவே, எனக்கு தாத்தா யாரும் இல்லை. நான் தங்களிடம் பொய் சொல்லித்தான் அழைத்துப்போனேன். நீங்கள் ராஜாவாக இருப்பதால், உடல் களைக்க எந்த வேலையும் செய்வது இல்லை. சாப்பிட்டுவிட்டு சும்மா உட்கார்ந்து இருந்தால், இரவில் எப்படித் தூக்கம் வரும்? பகலில் நன்றாக உழைத்தால், தானாக உறக்கம் வரும். அதுதான் நான் செய்த மருத்துவம்'' என்று பணிவோடு சொன்னது நரி.

''நரியாரே, என் சோம்பலுக்கு மருத்துவம் சொன்ன உனக்கு நன்றி. இனி எல்லோரையும்போல நானும் உழைப்பேன்'' என்ற சிங்கம், நரிக்குப் பரிசு  கொடுத்து வாழ்த்தியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism