ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

ராஜா - இளவரசன் கதைகள் !

ராம்கி

ராஜா - இளவரசன் கதைகள் !

அந்த நாட்டின் அரசர் மிகச் சிறந்த வீரர். எதிரிகளுக்கு சிங்கம் போன்றவர். அதனால், அண்டை நாட்டு மன்னர்கள் அவரிடம் எப்போதும் வால் ஆட்டுவது இல்லை. நாட்டு மக்களுக்கு எல்லா நல்ல விஷயங்களையும் செய்து, மிகச் சிறந்த அரசர் என்ற பெயரையும் பெற்றவர்.

அவருக்கு ஒரே மகன். அவன் அழகான முகம் உடையவன். ஆனால், அவனது முதுகோ கூன்.  எப்போதும் குனிந்தே நடந்து திரிந்தான். அவனை நினைத்து அரசருக்கு மிகுந்த கவலை. 'வருங்காலத்தில் நாட்டை ஆளப்போகும் தன் ஒரே மகன் இப்படி இருக்கிறானே’ என்று வருந்தினார்.

புகழ்பெற்ற பல மருத்துவர்களை வரவழைத்து, இளவரசனுக்கு சிகிச்சை செய்தார். ஆனால், எந்தப் பயனும் இல்லை. இறுதியாக, வயதான ஒரு மருத்துவர் பற்றி கேள்விப்பட்ட அரசர், அவரை வரவைத்து ஆலோசனை கேட்டார்.

ராஜா - இளவரசன் கதைகள் !

''உங்கள் மகனுக்கு மருந்து அவரிடமே இருக்கிறது. இளவரசன் கம்பீரமாக நிமிர்ந்து நடந்து செல்வதுபோல ஓவியம் ஒன்றை வரைவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அந்த ஓவியத்தை இளவரசனின் அறையில் வையுங்கள். அந்த ஓவியம், அடிக்கடி அவர் கண்களில் தென்படட்டும்'' என்றார் மருத்துவர்.

அதன்படி இளவரசனின் ஆளுயர ஓவியம் வரையப்பட்டது. அதைப் பார்த்தபடியே வளர்ந்தான் இளவரசன். சில ஆண்டுகளில் அவனது கூன் முதுகு கொஞ்சம் கொஞ்சமாகச் சரியானது. மிக நன்றாக நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

மன்னருக்கு மகிழ்ச்சி. அந்த மருத்துவரை அழைத்து, பொற்காசுகளை அள்ளிக்கொடுத்தார்.

''மன்னா, முன்பே சொன்னதுபோல உங்கள் மகனுக்கான மருந்து அவரிடமே இருந்தது. நான் எதுவும் செய்யவில்லை. ஓவியத்தை தினமும் பார்த்த இளவரசன், அதில் உள்ளபடியே தானும் மாறி விட முடியும் என்ற எண்ணத்தை ஆழ் மனதில் வளர்த்துக்கொண்டார். அந்த நம்பிகைதான் அவரை நிமிர்த்தியது'' என்றார் மருத்துவர்.

மகேந்திரபுரி நாட்டை மகேந்திரன் ஆண்டுவந்தார். அவருக்கு பூரணி என்ற மகள் இருந்தாள். அழகிலும் அறிவிலும் சிறந்த தன் மகளுக்கு, சிறந்த கணவனைத் தேர்வுசெய்ய விரும்பினார்.

மற்ற நாட்டு இளவரசர்களுக்கு சுயம்வரம் அழைப்பு விடுத்தார். அதில் தாராபுரம் இளவரசர் செண்பகராமனும் கலந்துகொண்டான்.

சுயம்வரப் போட்டிகள் மொத்தம் இரண்டு. முதல் போட்டியாக, ஒரு தட்டில் கடுகும் கறுப்பு எள்ளும் கலந்துவைக்கப்பட்டது. அதனைத் தொடாமல் பிரித்து, ஏதேனும் ஒன்றை எடுத்து வர வேண்டும்.

இதைக் கேட்ட பலரும் பின்வாங்கினர். செண்பகராமன் மட்டுமே முன்வந்தான். அரங்கத்துக்கு வெளியே எறும்புப் புற்றின் அருகே எள்ளும் கடுகும் கலந்த தட்டை வைத்தான். எறும்புகள் எள்ளை மட்டும் எடுத்துக்கொண்டன. மீதி இருந்த கடுகைக் காண்பித்து வெற்றி பெற்றான்.

ராஜா - இளவரசன் கதைகள் !

இரண்டாவது போட்டி ஒரு கேள்வி. ''இங்குள்ள அனைவரையும் எவ்வாறு திருப்தியடையச் செய்வாய்?'' என்று கேட்டார் மன்னர்.

பலரும் பலவிதமான பதில்களைச் சொன்னார்கள். செண்பகராமன் சிறிது யோசித்தான். ''அனைவருக்கும் சுவையான, தரமான உணவுகளைத் தயார்செய்து அளிப்பேன்'' என்றான்.

''நீ கூறிய பதில் மிகச் சரியானது. உணவு விஷயத்தில் மட்டுமே மனிதன் போதும் எனத் திருப்தி அடைவான். விருந்து என்பது பசியைப் போக்குவதுடன் நட்பையும் வளர்க்கும். ஓர் அரசன் குடிமக்களின் பசியைப் போக்கவும் அண்டை நாட்டுடன் நட்பாக இருக்கவும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்'' என்றார் மன்னர்.

செண்பகராமன் சுயம்வரத்தில் வெற்றி பெற்றான். இளவரசி பூரணிக்கும் செண்பகராமனுக்கும் திருமணம் நடைபெற்றது.