Published:Updated:

அயல் தேசக் கதைகள்

தமிழண்ணா படங்கள் : ஷெயசூர்யா

அயல் தேசக் கதைகள்

தமிழண்ணா படங்கள் : ஷெயசூர்யா

Published:Updated:

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு, பூமியில் பகல் மட்டுமே இருந்தது. இரவே கிடையாது. சூரியன் மட்டுமே தெரியும். யாரும் நிலாவைப் பார்த்ததே இல்லை. நட்சத்திரங்களும் கிடையாது. அந்திவானம் என்ற சொல் இல்லை. இரவுச் சங்கீதம் பாடும் பறவைகள் இல்லை. மின்னல் கீற்றுகள் கிடையாது.

அந்த நேரத்தில் ஒருநாள், கடல் ராஜாவின் மகள், கடலின் ஆழத்தில் இருந்து மேற்பரப்புக்கு வந்து, நீந்தி விளையாடினாள். பிறகு, ஒரு பாறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாள்.

அப்போது, அந்த வழியாக வந்த வாலிபனைப் பார்த்து வியந்தாள். அவளது கடல் உலகில், அழகான தோற்றம்கொண்ட யாரையும் பார்த்தது இல்லை. எனவே, அந்த வாலிபனிடம் பேச்சுக்கொடுத்தாள். ''என்னுடன் கடல் உலகத்துக்கு வருகிறாயா?'' என்று கேட்டாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அயல் தேசக் கதைகள்

வாலிபன் சம்மதித்தான். கடல் இளவரசி, அவனை அழைத்துக்கொண்டு கடலுக்குள் சென்றாள். கடல் ராஜாவான தன் தந்தையிடம் அறிமுகப்படுத்தினாள். அந்த வாலிபனையே திருமணம் செய்துகொண்டாள்.

கொஞ்ச காலம் கடலில் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். வாலிபனுக்கு கடல் வாழ்க்கை அலுத்துப் போனது. ''நான் மீண்டும் மண்ணுலகம் செல்ல நினைக்கிறேன். அங்கே நாம் இன்னும் மகிழ்ச்சியாக வாழலாம்'' என்றான்.

கடல் இளவரசிக்கும் மண்ணுலகம் சென்று வாழ ஆசை. அவர்கள், கடல் ராஜாவிடம் விடைபெற்றுக்கொண்டு  மேலே வந்தார்கள். வாலிபனின் அரண்மனை வீட்டை அடைந்தார்கள்.

அங்கே எல்லா வசதிகளும் இருந்தன. ஆனால், எப்போதும் சூரியன் இருக்கும் நிலப் பகுதியின் வெப்பத்தை கடல் இளவரசியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மிக விரைவிலேயே அவளது கண்கள் ஒளி இழந்தன. உடல் நிறம் மங்கியது.

அயல் தேசக் கதைகள்

வெளியே சென்றிருந்த கணவன் வந்தான். அவள் துவண்டுபோய் படுக்கையில் கிடந்தாள். ''இங்கு இரவே வராதா?'' என்று கேட்டாள்.

அங்கே இருந்தவர்கள், ''இரவு என்றால் என்ன? அது எப்படி இருக்கும்?'' என்று புரியாமல் கேட்டார்கள்.

''கடலுக்கு அடியில் சென்றிருந்தபோது பார்த்து, உணர்ந்து இருக்கிறேன். அது, குளிர்ச்சியாக இருக்கும். வெளிச்சம் இல்லாமல் கருநிழல் எங்கும் பரந்து விரிந்திருக்கும். அதுதான் இரவு'' என்றான் வாலிபன்.

''அது வந்தால்தான் நாங்களால் உறங்கச் செல்வோம்'' என்றாள் கடல் இளவரசி.

''கவலைப்படாதே, அந்த இரவை இப்போதே வாங்கிவரச் சொல்கிறேன்'' என்றான் வாலிபன்.

தனது அடிமைகள் மூவரை அழைத்தான். ''நீங்கள் உடனடியாக கடலுக்கு அடியில் சென்று, கடல் ராஜாவிடம் கொஞ்சம் இரவை வாங்கி வாருங்கள்'' என்றான்.

மூன்று அடிமைகளும் மிகுந்த சிரமப்பட்டு, பல ஆபத்துகளைக் கடந்து, கடலுக்கு அடியில் சென்றனர். கடல் ராஜாவைச் சந்தித்து வணங்கினர். ''பூமியில் முழு நேரமும் பகலாக இருப்பதால், இளவரசி உடல்நலம் இல்லாமல் இருக்கிறார். எனவே, பகலை மறைக்கும் நிழல் இரவு வேண்டும்'' என்றார்கள்.

அதைக் கேட்டதும் கடல் ராஜா தன் மகளை நினைத்து வருத்தப்பட்டார். உடனடியாக  பெரிய பை நிறைய இரவை நிறைத்து, இறுகக் கட்டி அவர்களிடம் கொடுத்தார். ''இந்தப் பையை என் மகள், மருமகன் முன்னிலையில்தான் திறக்க வேண்டும். இடையில் எங்கும் திறக்காதீர்கள்'' என்றார்.

''அப்படியே செய்கிறோம் ராஜா'' என்று அடிமைகள் விடைபெற்றுப் புறப்பட்டனர்.

கடலைவிட்டு வெளியே வந்தார்கள். அந்தப் பையிலிருந்து வினோதமான சத்தம் கேட்டது. அவர்கள், அதுபோன்ற சத்தத்தைக் கேட்டதே இல்லை. எனவே, அவர்களுக்கு பயம் உண்டானது.

அயல் தேசக் கதைகள்

''நாம் ஆபத்தில் மாட்டிக்கொண்டோம் என நினைக்கிறேன். இந்தப் பையை கீழே போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடுவோம்'' என்றான் ஒருவன்.

இன்னொருவனோ, ''உள்ளே ஏதோ பூதம் இருக்கிறது. அது நம்மை விடாது. கீழே போட்டாலும் கையில் இருந்தாலும் நாம் அழியப்போகிறோம்'' என்று அழுதான்.

''நான் இந்தப் பையைத் திறக்கப்போகிறேன். அப்படி என்னதான் இதில் இருக்கும்? இந்த வினோத ஒலி என்ன என்று பார்க்கப்போகிறேன்'' என்ற மூன்றாவது ஆள், அந்தப் பையைத் திறந்தான்.

அவ்வளவுதான். பையிலிருந்து திமுதிமு என இரவுப் பறவைகள், இரவு விலங்குகள், மின்மினிப்பூச்சிகள்  வெளியேறின. இறுதியில் எல்லாம் இருட்டு மேகங்கள் கரும்புகை போல வெளியேறின. மூவரும் பயந்து, தலைதெறிக்க ஓடினர்.

கடல் இளவரசி, ஓர் உயரமான பனைமரத்தின் அடியில் நின்றுகொண்டிருந்தாள். 'வெப்பம் தாங்காமல் இறந்துவிடுவோமோ’ என்று அஞ்சிக்கொண்டிருந்தாள். அந்த‌ நேரத்தில்தான் இந்தக் காட்சியைக் கண்டாள்.

அன்று இரவு பூமியைவிட்டு வேறு கிரகத்துக்குச் செல்லும் முன் மடக்கிப் பிடித்தாள். 'இரவு வந்துவிட்டது’ என்று மகிழ்ச்சியில் துள்ளினாள்.

வெளிச்சம் மங்கி, இரவுப் போர்வை பூமியை மூடத் தொடங்கியது. இரவுப் பறவைகளின் இனிய கீதம் ஒலித்தன. நட்சத்திரங்கள் கண் சிமிட்டத் தொடங்கின. தொடுவானம் வரை இருள் சூழ்ந்தது.

அந்த இருள், இளவரசியைத் தழுவியதும் கண்கள் தானாக உறக்கம் கொண்டது. தனது அறைக்குத் திரும்பிவந்து உறங்கினாள். அவள் தூங்கி விழித்தபோது, புது உற்சாகம் நிறைந்தவளாக இருந்தாள். மகிழ்ச்சியாக வெளியே வந்தாள்.

அந்த அதிகாலை வேளையில், வானத்தில் ஒற்றை நட்சத்திரத்தைப் பார்த்தாள். ''ஓ... ஒளி பொருந்திய விடியல் நட்சத்திரமே... இனிமேல் நீ, விடிவெள்ளி என்று அழைக்கப்படுவாய்... வான் மண்டலத்தை அரசாளும் அரசியாக இருப்பாய்'' என்றாள்.

அவளருகே ஒரு சேவல் வந்தது. அதைப் பார்த்து, ''இன்று முதல் இரவு முடிந்து, 'மாத்ருகதா’ (விடியல்) வரப்போவதை கணீர் குரலில், மக்களுக்கு அறிவிப்பாய். மாத்ருகதாவை அறிவித்ததும் உறக்கத்தில் இருக்கும் பறவைகள் இனிய குரலில் பாடிக்கொண்டு கிளம்பும். வானத்தில், விடிவெள்ளி அரசி பவனி வருவாள். பிறகு, சூரியன் வரும்'' என்றாள் இளவரசி.

இரவில் காட்டுக்குள் ஓடி ஒளிந்திருந்த அடிமைகள், அச்சத்தோடு தன் எஜமான் வாலிபனிடம் வந்தார்கள். ''நம்பிக்கையற்ற அடிமைகளே, கடல் ராஜா சொன்னது போல ஏன் செய்யவில்லை? கீழ்ப்படிதல் இல்லாத நீங்கள், குரங்குகளாக மாறி, காட்டில் திரியுங்கள்'' என்று சபித்தான்.

அந்த மூவரும் குரங்குகளாக மாறி, காட்டுக்குள் சென்றுவிட்டனர்.

உலகில், அன்றிலிருந்துதான் இரவு தோன்றியதாக பிரேசில் நாட்டில் நம்பிக்கை நிலவுகிறது. இன்றைக்கும் அதிகாலைப் பொழுதை, 'மாத்ருகதா வந்துவிட்டது’ என்று பிரேசில் நாட்டில் சொல்கிறார்கள்.