Published:Updated:

நிறைந்த மனசு !

கமலவேலன் ஓவியங்கள் : மகேஸ்

நிறைந்த மனசு !

கமலவேலன் ஓவியங்கள் : மகேஸ்

Published:Updated:

சங்கரன்கோயிலில் இருந்து கோவில்பட்டி செல்லும் பேருந்தில் அப்பா, அம்மாவுடன் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்தான் சீனிவாசன்.

'கரம், சிரம், புறம் நீட்டாதீர்.’

'ஓடும் பஸ்ஸில் ஏற வேண்டாம். பேருந்து நின்ற பின் இறங்கவும்.’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் பெறவும்.’

பேருந்தினுள் அச்சு எழுத்தில் ஆங்காங்கே எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் படித்தான் சீனிவாசன். அவனுக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர், தன் கையை ஜன்னல் கம்பி மீது வைத்திருந்தார். அதனால், பாதிக் கை பேருந்துக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.

''பார்த்தீங்களா அம்மா, கை வெளியே நீட்டாதேனு எழுதியிருந்தாலும் எப்படி வெச்சிருக்காங்க. நம்ம நன்மைக்காகத்தானே எழுதிப் போட்டிருக்காங்க. அதன்படி நடந்தால், நமக்குத்தானே நல்லது'' என்று அம்மாவிடம் கிசுகிசு குரலில் சொன்னான் சீனிவாசன்.

அம்மா எதுவும் சொல்லவில்லை. பேருந்து ஓட்டுநர் தனது இருக்கைக்கு வந்ததும்,  வெளியே நின்றிருந்த சிலர் பாய்ந்து ஏறினார்கள். வண்டி கிளம்பிய பிறகு சில இளைஞர்கள் ஓடிவந்து ஏறிக்கொண்டு, படிகளிலேயே நின்றார்கள்.

நிறைந்த மனசு !

ஓட்டுநர் சீட்டுக்குப் பின்னால், கம்பி வலையில் ஒரு சின்ன மரப்பெட்டி இருந்தது. ''அம்மா, அதுதான் ஃபஸ்ட் எய்டு பாக்ஸ்.  முதலுதவிப் பெட்டி. பஸ்ஸுல யாருக்காவது அடி பட்டுடுச்சுனா... அதில், காயத்துக்கு மருந்து இருக்கும்'' என்றான் சீனிவாசன்.

விடுமுறை நாள் என்பதால், பேருந்து நிரம்பி வழிந்தது. நிறையப் பேர் நின்றுகொண்டு பயணம் செய்தார்கள். ''படியிலே நிற்காதீங்க தம்பிகளா... உள்ளே வாங்க'' என்றவாறு நடத்துநர், டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்.

''நம் நாட்டில் ரூல்ஸ் நிறையவே இருக்கு. அது நடைமுறையில் செயல்படுவதுதான் ரொம்பக் குறைவு'' என்றார் அப்பா.

பேருந்து,கழுகுமலையை நெருங்கிக்கொண்டிருந்தது. ஓட்டுநர் இருக்கைக்கு அருகே பேனட் மீது ஒரு நடுத்தர வயது அம்மா உட்கார்ந்திருந்தார். திடீரென, ''ஐயோ... கால்!'' என்று அலறினார்.

ஓட்டுநர் சடன் பிரேக் போட்டதால், நிலை தடுமாறிய அந்த அம்மாவின் வலது கணுக்காலில் இரும்புக் கொக்கி இடித்து, ரத்தம் வந்தது.

அருகே நின்றிருந்த இளம் பெண், ''இங்கே உட்காராதேனு  சொன்னேனே கேட்டியா'' என்றார் எரிச்சலுடன். அந்த அம்மாவின் மகளாக இருக்க வேண்டும்.

''முதல்ல இந்த இடத்தைவிட்டு எழுந்திரு'' என்று ஓட்டுநரும் எரிச்சலுடன் சொன்னார்.

''நிற்க முடியாமல்தானே உட்கார்ந்தேன்'' என்று முணு முணுத்தவாறு அந்த அம்மா எழுந்துகொண்டார்.

''அந்தப் பெட்டியில் இருந்து, காட்டனை எடுத்துக் கொடுங்க. ரத்தத்தைத் துடைச்சுக்கட்டும்'' என்றார் ஒருவர்.

ஒருவர், சட்டென்று அந்த முதலுதவிப் பெட்டியைத் திறந்தார். அது, காலியாக இருந்தது. உள்ளே இருந்த அந்துப்பூச்சி ஒன்று, இங்கும் அங்குமாக ஓடியது.

நிறைந்த மனசு !

''முதலுதவிப் பெட்டிக்கே முதலுதவி செய்யணும்போல'' என்றார் ஒருவர், கிண்டலாக.

''எந்த கவர்ன்மென்ட் பஸ்ல ஃபஸ்ட் எய்டு பாக்ஸ் ஒழுங்கா இருந்திருக்கு'' என்றார் ஒருவர்.

கழுகுமலைப் பேருந்து நிலையத்துக்குள் வந்துநின்றது பேருந்து. சீனிவாசன், வேகமாகக் கீழே இறங்கிச்சென்றான்.

''டேய், எங்கேடா போறே?'' என்று அப்பாவும் அம்மாவும் பதற்றம் அடைந்தார்கள்.

சில நிமிடங்களில் மூச்சிறைக்க வந்து ஏறினான். அவன் கையில் ஒரு கேரி பேக். அந்த அம்மாவை நோக்கிச் சென்றான். கேரி பேக்கில் இருந்து டெட்டால் பாட்டிலை எடுத்தான். பிறகு, காட்டன் ரோலில் இருந்து கொஞ்சம் பிய்த்து எடுத்தான். டெட்டாலில் பஞ்சை நனைத்து, அவர் கால் காயத்தைத் துடைத்துவிட்டான். பிறகு, ஒரு ஆயின்மென்ட்டை தடவினான். அந்த அம்மா, சீனிவாசனைப் பார்த்து, ''ரொம்ப நன்றி தம்பி'' என்றார்.

''நீங்க வேணும்னா என் சீட்டில் வந்து உட்காருங்க'' என்றான் சீனிவாசன்.

''வேண்டாம் தம்பி... இன்னும் கொஞ்ச நேரத்துல கோவில்பட்டி வந்திடும்'' என்றார்.

''ஊர்ல போய் டாக்டர்கிட்டே காட்டுங்க'' என்ற சீனிவாசன், பேருந்தில் இருந்த அந்த முதலுதவிப் பெட்டியைத் திறந்தான்.

எல்லோரும் அவனையே கவனிக்க, தன் கையிலிருந்த காட்டன், பேண்டேஜ் கிளாத், ஆயின்மென்ட் ஆகியவற்றோடு சில மாத்திரை கவர்களையும் வைத்தான். பிறகு அப்பா, அம்மாவோடு வந்து அமைதியாய் உட்கார்ந்துகொண்டான்.

''நாங்க எல்லாரும் முதலுதவிப் பெட்டி காலியா இருக்குனு குறைதான் சொன்னோம். நீ, அந்த அம்மாக்கு உதவி செய்து, பெட்டியையும் நிறைச்சுட்டே'' என்ற ஒரு பெரியவர் குரலில் நெகிழ்ச்சி.

பேருந்து ஓடிக்கொண்டிருந்தது. முதலுதவிப் பெட்டி நிறைந்தது போல, சீனிவாசனின் பெற்றோர் மனமும் பெருமிதத்தில் நிறைந்திருந்தன.