FA பக்கங்கள்
Published:Updated:

குடையும் நந்தினியும் !

மா.பிரபாகரன் ஓவியம் : மகேஸ்

குடையும் நந்தினியும் !

அது ஒரு சிறுவர் குடை. மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட குடை. கண்ணைக் கவரும் கிளிப் பச்சை நிறத்தில் துணி விரிப்பு, பளபளப்பான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் முட்டுக் கம்பிகள், அழகான பூண் கொண்டை, கார்ட்டூன் சித்திரம் பொறித்த கைப்பிடி என அழகாக இருந்த அதை, நந்தினியின் பிறந்தநாள் பரிசாக அப்பா வாங்கினார்.

நந்தினி, தெற்றுப்பல் தெரிய சிரிக்கும் 10 வயது சிறுமி. அப்பா வாங்கிவந்த அந்தக் குடை, அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. குடைக்கும் நந்தினியைப் பிடித்திருந்தது.  அவளோடு ஒட்டிக்கொண்டது. விற்பனைக்காகக் கடையில் இருந்தபோது, அதன் மூத்த சகா ஒன்று அடிக்கடி சொல்லும் வார்த்தைகள், குடையின் நினைவுக்கு வந்தது. ''நம்மை யார் வைத்திருக்கிறார்களோ... அவரே நமது எஜமானன். நாம் அவருக்கு உண்மையாக நடந்துகொள்ள வேண்டும்!''

'இன்று முதல் இந்தச் சிறுமி எனது எஜமானி. நான் இவளுக்கு உண்மையாக இருப்பேன்’ என்று நினைத்த குடைக்கு ஒரு சந்தேகம். தங்கள் கையில் கிடைத்த பொருள்களை அக்குவேறு, ஆணிவேறாகப் பிரித்துப்போடுவதில் சிறுவர்களுக்கு அலாதிப் பிரியம். நந்தினியும் தன்னைப் பிய்த்துவிடுவாளோ?

குடையின் நினைப்புக்கு முற்றிலும் மாறாக இருந்தாள் நந்தினி. அவள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு நளினம், அழகுணர்ச்சி இருந்தது.  குடையை மென்மையாகக் கையாண்டாள். முதலில்,  துணி மடிப்பின் பிணைப்பை விடுவிப்பாள். பின்னர், கைப்பிடிப் பொத்தானை மென்மையாக, போதிய விசையுடன் அழுத்துவாள். மலர்களின் இதழ்கள் மாதிரி குடை விரியும். குடையை மடக்குவதும் அப்படித்தான்.

குடையும் நந்தினியும் !

நந்தினி வீட்டு முன்வாசலில் ஒரு வராண்டா உண்டு. அதன் சுவற்றில், மடிக்கப்பட்ட நிலையில் குடை தொங்கும். ஒருநாளும் அலங்கோலமாகத் தொங்கியது இல்லை. 'உடைமைகளை நேசிக்கும் சிறுமி, எனது எஜமானி’ என்று நினைத்த குடைக்கு, ஆனந்தம்.

'நந்தினிக்கு, ஒரு குடை வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது?’ என்று குடைக்கு ஒரு கேள்வி தோன்றியது. நந்தினியின் வகுப்பு ஆசிரியை, தினமும் பள்ளிக்குக் குடை பிடித்துக்கொண்டு வருவார். அணிந்திருக்கும் சேலைக்குப் பொருந்தும் விதத்தில் மூன்று, நான்கு குடைகள் அவரிடம் இருக்கும். அதைப் பார்த்துதான் நந்தினிக்கும் குடை ஆசை தோன்றியது.

நந்தினி, வீட்டு போர்ட்டிகோவில் தோழிகளோடு ஓடிப்பிடித்து, ஒளிந்து விளையாடுவாள். அம்மாவோடு கதை பேசுவாள். நிலாச் சோறு சாப்பிடுவாள். அவள் செய்யும் ஒவ்வொரு குறும்பையும் குடை ரசிக்கும்.

இப்படி இனிமையாக இருந்தபோதுதான், அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஊரில் இருந்து நந்தினியின் பாட்டி வந்திருந்தார். நந்தினி, பாட்டியோடு கடை வீதிக்குப் போனாள். ஒரு கடையில் காய்கறி வாங்கும்போது, குடையை மறந்து வைத்துவிட்டுச் சென்றுவிட்டாள். கடைக்காரர், சிறிது நேரம் கழித்துதான் குடையைக் கவனித்தார். 'மறந்துவைத்தவர்கள் வந்து கேட்கட்டும்’ என்று ஒரு பக்கமாக வைத்துவிட்டார்.

வெயில் ஏறத் தொடங்கியது. காய்கறி மூட்டை, கூடைகள் மத்தியில் இருப்பது குடைக்குக் கசகசத்தது. இதுபோன்று மணிக்கணக்கில் வெளியே இருந்தது இல்லை. கடைவீதியின் சூழ்நிலை குடைக்குப் பிடிக்கவில்லை. 'நந்தினி ஏன் என்னைவிட்டுப் போனாள்?’ என்று குடை வருந்தியது.

மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெட்டி, அந்தக் கடையின் தரையோடு பூசப்பட்டிருந்தது. கடைக்காரர், இரவில் கடை முடித்துப் போகும்போது, குடையை அதில் வைத்துவிட்டார். அதில், எடைக் கற்களும் சில நாணயங்களும் இருந்தன. குடை, பயத்தில் அழுதது. இரவு முழுவதும் சிறுசிறு பூச்சிகள், வண்டுகளின் தொல்லை. அவை, குடையின் உடம்பு முழுவதும் ஊர்ந்தன. நந்தினி, தன்னை மீட்டுச் செல்வாள் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தது.

நீண்ட விடுமுறையில், பாட்டியோடு நந்தினி ஊருக்குப் போய்விட்டது, அதற்குத் தெரியாது. அந்தக் குடை, கடைக்காரரின் உடமை போலவே ஆகிவிட்டது. தினமும் காலையில் வந்து கடையைப் போடுவார். குடையை விரித்து நிறுத்தி, அதன் நிழலில் ஒரு காய்கறிக் கூடையை வைப்பார். பாவம் குடை! தனது நிலையை எண்ணி நாட்களை நகர்த்தியது.

ஒருநாள் நந்தினி, அப்பாவோடு கடை வீதிக்கு வந்தாள். நந்தினியைக் கண்டதும் உற்சாகத்தில் துள்ளியது குடை. நந்தினி அருகே வந்ததும் பரபரத்தது. 'என் நிலையைப் பாரு நந்தினி. என்னை இங்கே இருந்து கூட்டிட்டுப் போயிரு நந்தினி’ என்று பதறியது.

குடையும் நந்தினியும் !

நந்தினியின் பார்வையும் குடையின் மீது சென்றது. அவள், அப்பாவின் காதில் கிசுகிசுத்தாள். அவர் மெதுவாக கடைக்காரரைப் பார்த்து, ''ஏங்க, இந்தக் குடை உங்களுடையதா?'' என்று கேட்டார்.

''இல்லை சார். யாரோ மறந்துட்டுப் போய்ட்டாங்க. ஏன் சார்?'' என்று கேட்டார் கடைக்காரர்.

''இது, என் குடை மாதிரியே இருக்கு. 20 நாளைக்கு முன்னாடி இங்கே வந்தப்ப, மறந்துவெச்சுட்டேன்'' என்றாள் நந்தினி.

''அப்படியா பாப்பா? யாராவது வந்து கேட்பீங்கன்னுதான் இங்கேயே வெச்சிருந்தேன். எடுத்துக்க பாப்பா'' என்ற கடைக்காரர், குடையை எடுத்துத் தன்னிடம் இருந்த துணியால் அதைத் துடைத்து நீட்டினார்.

நந்தினி வாங்கிக்கொண்டாள். குடைக்கு ஒரே மகிழ்ச்சி. 'ஆகா... மறுபடியும் நந்தினி கைக்கு வந்துவிட்டோம். இனிமேல் பூங்கா, கோயில் எனச் செல்லலாம்.  நந்தினியின் விளையாட்டுகளை, குறும்புகளை வீட்டு வராண்டாவில் இருந்தவாறு கண்டு மகிழலாம்’ என உற்சாகம் அடைந்தது.

நந்தினி, குடையை விரித்து தலைக்கு மேலே பிடித்துக்கொண்டாள். சூரியனின் கதிர்கள் சுளீர் எனச் சுட்டபோதும் குடைக்கு வருத்தம் இல்லை. சூரியகாந்தி பூவைப் போல சிரித்தது.