தமிழண்ணா ஓவியம் : ஜெயசூர்யா
ஜப்பான் நாட்டில் ஒரு சின்ன ஊர். அந்த ஊரில் பண்ணையார் குடும்பம் என்றால், எல்லோருக்கும் தெரியும். பண்ணையாருக்கு ஆறு மகள்கள், ஆறு மகன்கள். அவர்களில் ஒருவன்தான் ஜோஜி.
ஜோஜி நன்றாகப் படங்கள் வரைவான். ஒரு குச்சி கிடைத்தாலும் போதும். மாட்டுச் சாணத்தைத் தொட்டும் வரைந்துவிடுவான். அவன் வரைவது எல்லாமே பூனைகள்தான். சிறிய பூனை, பெரிய பூனை, ஒல்லியான பூனை, குண்டான பூனை என விதவிதமாக வரைவான்.

ஒருநாள், அவனுடைய அப்பா ஜோஜியைக் கூப்பிட்டு, 'நீ இப்படியே பூனையாக வரைஞ்சுகிட்டு இருந்தா, எப்படி விவசாயி ஆவது?' என்று சத்தம் போட்டார்.
'மன்னிச்சுக்கங்க அப்பா, நான் வரைவதை நிறுத்த முயற்சி பண்றேன்' என்றான் ஜோஜி.
இனிமேல் வரையக் கூடாது என்று சொல்லிக்கொள்வான். ஆனால், பண்ணையில் ஒரு பூனையைப் பார்த்துவிட்டால் அவ்வளவுதான். உறுதி தளர்ந்துவிடும். அந்தப் பூனையை வரைய உட்கார்ந்துவிடுவான்.
'ஜோஜி நிச்சயமா விவசாயி ஆக மாட்டான். அவனோட அண்ணன், தம்பிகள் எல்லாம் நிலத்தில் ஒத்தாசையா இருக்காங்க. இவனோ, பூனை... பூனைனு அலையுறான்'' என்று பண்ணையார், மனைவியிடம் வருந்தினார்.
''அவன், அர்ச்சகரா ஆகணும்னு இருக்கோ என்னமோ! அவனைக் கோயிலில் சேர்க்கலாமே'' என்றாள் அம்மா.
பண்ணையார், தன் மகனை அருகிலுள்ள கிராமக் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள தலைமை அர்ச்சகரிடம் விஷயத்தைச் சொல்லி, அங்கே சேர்த்தார்.
ஜோஜி, மற்ற மாணவர்களுடன் அங்கேயே தங்கி, அர்ச்சகர் கொடுக்கும் பாடங்களைப் படிக்க ஆரம்பித்தான். எழுதுவதற்கு மை தயாரித்தான். ஜோஜி போலவே மற்ற மாணவர்களும் மை தயாரித்துப் பாடங்களைக் கண்ணும் கருத்துமாக எழுதினர்.
ஆனால் ஜோஜியோ, அவனுக்கு எழுதக் கொடுத்திருந்த தாள்களில் வரையத் தொடங்கினான். பூனை... பூனை... சிறிய பூனை, பெரிய பூனை, ஒல்லிப் பூனை, குண்டுப் பூனை எனத் தாள்கள் முழுவதும் பூனைகள்.

'ஜோஜி, நீ இப்படியே பூனைகளை வரைந்துகொண்டிருந்தால், அர்ச்சகராக முடியாது'' என்றார் தலைமை அர்ச்சகர்.
'அய்யா, என்னை மன்னிச்சிருங்க. இனி, வரைவதை நிறுத்திவிடுகிறேன்'' என்றான் ஜோஜி.
சொன்னபடி முயற்சி செய்தான். ஆனால், கோயிலில் பூனைகளைப் பார்க்கும்போதெல்லாம், படிக்க வேண்டியதை மறந்து, படம் வரைய ஆரம்பித்துவிடுவான்.
கோயில் சுவர், திரைச்சீலை என்று எல்லா இடங்களிலும் பூனைகளாக வரைந்து தள்ளினான். பக்தர்கள், அதைப் பார்த்து வெறுத்தார்கள். தலைமை அர்ச்சகரிடம் புகார் செய்தார்கள்.
பொறுமை இழந்த அவர், ''ஜோஜி, நீ அர்ச்சகராகப் போவதில்லை, மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கே போய்விடு' என்று சொல்லிவிட்டார்.
ஜோஜி, தன் அறைக்குச் சென்று அவனுடைய பொருள்களை மூட்டை கட்டினான். வீட்டுக்குப் போகப் பயமாக இருந்தது. அப்பா, கோபத்தில் என்ன செய்வார் என்று தெரியாது. அதனால், அருகில் இருந்த இன்னொரு கிராமத்தின் கோயிலில் தங்க முடிவு செய்தான்.
ஜோஜி நடக்கத் தொடங்கினான். இருட்டிக்கொண்டு வந்தது. வேக வேகமாக அந்தக் கிராமத்தின் கோயிலுக்கு வந்துசேர்ந்தான். பெரிய கதவை மிகுந்த சிரமப்பட்டுத் திறந்து உள்ளே சென்றான். உள்ளே ஒரே இருட்டு.

'ஏன் கோயிலுக்குள் விளக்கு இல்லை; ஆட்களும் இல்லை. என்னாச்சு இந்தக் கோயிலுக்கு?’ என்று தனக்குள் கேட்டுக்கொண்டு, கதவுக்கு அருகே இருந்த விளக்கை எரியவிட்டான். அப்போது, அவனுக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது. ''ஆகா... எனக்கு வேலை வந்திருச்சு'' என்று வாய்விட்டுக் கத்தினான்.
அந்தப் பெரிய இடத்தில் திரைச்சீலைகள், பெரிய பெரிய வரைபடத் தாள்கள் சுருட்டிவைக்கப்பட்டிருந்தன. அதுதான் அவன் மகிழ்ச்சிக்குக் காரணம். உடனடியாக மை, தூரிகை எல்லாம் எடுத்து வரையத் தொடங்கினான். வழக்கம்போல சிறிய பூனை, பெரிய பூனை, ஒல்லியான பூனை, குண்டான பூனை, பூனைகள்... பூனைகள்... பூனைகள்!
இந்த முறை அங்கே இருந்த பெரிய திரைச்சீலையின் அளவுக்குப் பெரிதாக ஒரு பூனையை வரைந்தான். அந்தப் பிரமாண்டமான பூனை, மிகத் தத்ரூபமாக இருந்தது. ஜோஜி, இதுவரை அவ்வளவு பெரிய பூனையை வரைந்ததே இல்லை. அந்தப் பூனையை மிகவும் பிடித்துப்போயிற்று.
அவ்வளவு பெரிய பூனையை வரைந்ததால், மிகவும் களைப்பாக இருந்தது. அந்த அறையிலேயே படுத்துவிட்டான். ஆனால் தூக்கம் வரவில்லை. பெரிய அறையாக இருந்ததால், உலகத்திலேயே அவன் ஒருவன் மட்டும் இருப்பது போன்ற உணர்வு. ஏதாவது சின்ன அறை இருக்குமா என்று தேடினான். ஓரிடத்தில், சுவரில் அலமாரி போன்று இருப்பதைக் கவனித்தான்.
அதைத் திறந்தான். நான்கு பேர் படுப்பதற்கு வசதியான இடமாகத் தெரிந்தது. அது, ஜோஜிக்குப் பிடித்திருந்தது. உள்பக்கம் நுழைந்து, கதவை இழுத்து மூடித் தூங்க ஆரம்பித்தான்.
பின்னிரவில் ஓர் உறுமல் சத்தம் கேட்டு விழித்தான். 'உர்ர்ர்ர்ர்ர்... உர்ர்ர்ர்ர்’ என்ற சத்தம், அவன் இருக்கும் அறையில் கேட்டது. சத்தத்தைவைத்துப் பார்க்கும்போது ஒரு பெரிய மிருகமாக இருக்க வேண்டும் என்று நினைத்தான் ஜோஜி.

இதுபோன்ற பிராணிக்குப் பயந்துதான், அர்ச்சகரோ, பக்தர்களோ இங்கு இல்லை போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டான். இப்போது, இவன் படுத்திருக்கும் இடத்துக்கு நேர் கீழே அந்தப் பிராணியின் உறுமல் கேட்டது. சிறிது நேரத்தில் அந்தப் பிராணிக்கும் இன்னொரு பிராணிக்கும் சண்டை நடப்பது புரிந்தது. இரண்டு விலங்குகள் ஒன்றோடு ஒன்று கட்டிப்புரளுவது போலிருந்தது. ஜோஜிக்கு கதைவைத் திறந்து பார்க்கப் பயமாக இருந்தது.
திடீர் என ஒரு பெருத்த ஒலி. அதுவும் கொஞ்ச நேரத்தில் நின்றுபோனது. ஜோஜிக்கு உள்ளூர நடுக்கம். 'அந்த மிருகம் நாம் கீழே இறங்கி வரக் காத்திருக்கிறதோ?’ என்று நடுங்கினான். தூங்காமல் கொட்டக்கொட்ட விழித்திருந்தான்.
சில மணி நேரங்களில் விடிந்துவிட்டதற்கான அறிகுறி தெரிந்தது. சூரியக் கதிர்கள், கதவைத் தாண்டி உள்ளேபுகுவதை உணர்ந்தான். மெதுவாக கதவைத் திறந்துகொண்டு கீழே இறங்கினான்.
இறங்கியதும் அவன் கண்ட காட்சி அதிரவைத்தது. அங்கே, பிரம்மாண்டமான எலி ஒன்று செத்துக்கிடந்தது. அது, ஒரு கன்றுக்குட்டி அளவுக்குப் பெரியதாக இருந்தது.
'இந்த எலி, எந்த மிருகத்துடன் சண்டை போட்டு மடிந்திருக்கும்?’ என்று சுற்று முற்றும் பார்த்தான் ஜோஜி.
திரைச்சீலைகள், அதில் அவன் வரைந்த சின்னதும் பெரியதுமான பூனைகள்... அவன் வரைந்த பெரிய பூனைப் படத்தைப் பார்த்தான். 'இந்தப் பூனையின் தலையை, வலது பக்கமும் வாலை, இடது பக்கமும் அல்லவா வரைந்திருந்தேன்? இப்போது தலை, இடது பக்கமும் வால், வலது பக்கமும் திரும்பியிருக்கிறதே’ என நினைத்தவனுக்கு இரவில் என்ன நடந்தது என்பது புரிந்துவிட்டது.
'நீதான் இந்த எலியிடம் இருந்து என்னைக் காப்பாற்றினாயா? கீழே இறங்கிக் காரியத்தை முடித்துவிட்டு மீண்டும் மேலே ஏறிக்கொண்டாயா?'' என்று கேட்டான்.
அந்தப் பூனையின் பாதங்களைக் தடவி, ''என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி பூனையாரே'' என்றான் ஜோஜி.
அப்போது, கோயில் அர்ச்சகர் மற்றும் பொதுமக்களில் சிலர் அங்கு வந்தனர். அந்தக் கிராமத்துக்கே சவாலாக இருந்த எலி, இறந்துகிடப்பதையும் ஜோஜி அதன் அருகே நிற்பதையும் பார்த்தனர். நடந்ததை ஜோஜி அவர்களுக்கு விளக்கினான். ஜோஜியை, 'அந்தக் கோவிலில் அவன் விரும்பும் காலம் வரை வசிக்கலாம்’ என்று அர்ச்சகர் சொன்னார்.
ஜோஜிக்கு மகிழ்ச்சி. அங்கேயே தங்கி படங்களை வரைந்தான். மிகச் சிறந்த ஓவியன் ஆனான். அனைத்து நாடுகளும் அவனைக் கௌரவித்தன.