Published:Updated:

ராகுல் வீட்டுத் தோட்டம் !

சந்திர.பிரவீண்குமார் மகேஸ்

ராகுல் வீட்டுத் தோட்டம் !

சந்திர.பிரவீண்குமார் மகேஸ்

Published:Updated:
ராகுல் வீட்டுத் தோட்டம் !

 ராகுலின் வீட்டுத் தோட்டத்தில், விதவிதமான செடிகளும் மரக்கன்றுகளும் அழகாக இருக்கும். அதைப் பார்க்கும்போதே ராகுலுக்கு சந்தோஷமாக இருக்கும். தோட்டம் முழுவதும் நன்றாகச் சுற்றி ஆட்டம் போடுவான்.

அது எல்லாமே ராகுலின் அப்பா உழைப்பில் உருவானவை. அவன் அப்பா, ஒரு சுற்றுச்சூழல் பிரியர்.   அவர் வேலை விஷயமாக நிறைய ஊர்களுக்குப் போவார். அவர் எந்த ஊருக்குப் போனாலும் மரக்கன்றையோ, விதைகளையோ வாங்கிவருவார்.  ராகுலுக்கு வாங்கி வரும் விளையாட்டுப் பொருட்களைவிட மரக்கன்றுகள்தான் அதிகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது, ராகுலுக்குப் பெரிய ஏமாற்றமாக இருக்கும். அவன் வகுப்பில் படிக்கும் பையன்கள் வீட்டுக்குப் போகும்போது, நிறைய விளையாட்டுப் பொருட்கள் இருக்கும். அதைப் பார்க்கும்போது ராகுலுக்கு ஏக்கமாக இருக்கும்.

''இதோ பார்த்தியா ராகுல், இந்த ஹெலிகாப்டரை ரிமோட் மூலம் கன்ட்ரோல் பண்ணலாம். என் அப்பா, டெல்லிக்குப் போய் இருந்தப்ப வாங்கிவந்தார்'' என்பான் ராகுலின் நண்பர்களில் ஒருவனான சரண்.

''உன் அப்பாகூட அடிக்கடி ஊருக்குப் போவாரே. உன்கிட்டேயும் நிறைய விளையாட்டு பொருள்கள் இருக்கா?'' என்று கேட்பான் இன்னொருவன்.

ராகுல் 'ஆமாம்’ என்பதுபோல தலையை ஆட்டுவான். ஒன்றிரண்டு தவிர, வேறு விளையாட்டுப் பொருட்கள் இல்லை என்று சொன்னால், நண்பர்கள் கிண்டல் செய்வார்களே என யோசிப்பான். இதனாலே நண்பர்களிடம் அதிகம் பேசுவதைத் தவிர்ப்பான்.

அப்பாவிடம் புது பொம்மை கேட்டு அடம்பிடிப்பான். ஆனால், அவன் அப்பா ''இருக்கிறதை வெச்சு விளையாடு ராகுல். புதுசு புதுசா வாங்கறதுக்குப் பணம் இல்லைப்பா!'' என்பார்.

''ஆனா, மரக்கன்றுகள் வாங்க மட்டும் பணம் இருக்கா?'' என்று கேட்பான் ராகுல்.

அப்பா கொஞ்சமும் கோபப்பட மாட்டார். அவன் தலையைக் கோதி, சிரித்துவிட்டுப் போய்விடுவார்.

அந்த வருடம், வெயில் காலம் சீக்கிரமே வந்துவிட்டது. வெக்கை தாங்க முடியவில்லை. எல்லா இடத்திலும் புழுக்கம். ஆனால், ராகுல் வீட்டைச் சுற்றி நன்றாக காற்று வரும். அந்த வீட்டைக் கடக்கும் எல்லோருமே ஏக்கமாகப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

ராகுல் வீட்டுத் தோட்டம் !

ஒருநாள், அவன் தெருவில் இருக்கும் சரண் தனது அப்பாவோடு, அங்கே வந்தான். ''ராகுல், கோடை விடுமுறை முடியும் வரை சரண் நம்ம வீட்டுல வந்து விளையாடுவான்'' என்றார் அப்பா.

சரணும் தன் வீட்டில் இருந்து நிறைய விளையாட்டுப் பொருட்களை எடுத்து வந்திருந்தான். கொஞ்ச நாளில்,  இன்னும் இரண்டு, மூன்று பேர் விளையாட வந்தார்கள். ஊரில் இருந்து ராகுலின் மாமா பிள்ளைகளும் வந்தார்கள்.

ஒருநாள் இரவு அப்பாவை அணைத்தவாறு ''எனக்கு நிறைய நண்பர்கள் கிடைச்சு இருக்காங்கப்பா. நேரம் போறதே தெரியலை'' என்றான் ராகுல்.

''பசங்க வீடு தேடி விளையாட வர்றதுக்கு, சில்லென வரும் காற்றும் காரணம்'' என்றார் அப்பா.

காலையில் எழுந்த ராகுல், தோட்டத்துக்குச் சென்று ஆசையாக எல்லாச் செடிகளையும் தடவிக்கொடுத்தான். ''எனக்கு நிறைய நண்பர்களைக் கொடுத்த இயற்கையே உன்னைப் பத்திரமாகப் பார்த்துப்பேன்'' என்றான்.

வெளியே நண்பர்கள் வரும் சத்தம் கேட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism