Published:Updated:

வருங்கால ராஜா வர்றார்.. வர்றார் !

வர்தினி பாலு

அந்தக் காட்டுக்கு சுற்றுலா வந்தது, ஒரு மனிதக் கூட்டம். காட்டுச் சாலையில் வேகமாக வந்த அவர்களின் ஜீப் முன்பு, ஒரு நரி வந்துவிட்டது.

திகைத்து நின்ற நரி, சில நொடிகளில் பாய்ந்து புதருக்குள் பதுங்கியது.

''நரியைப் பார்த்ததும் ஒரு நிமிஷம் இதயம் நின்னுடுச்சு. ஆனா, அது நம்மளைப் பார்த்து பயந்து ஓடிடுச்சு'' என்றான் ஒருவன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''பயந்து ஓடினதா நினைக்காதே. நரி ரொம்பப் புத்திசாலி, ரொம்பத் தந்திரசாலி. மனிதர்களில்  கெட்டிக்காரங்களை, நரிக்கு ஒப்பிட்டுப் பேசுவாங்க'' என்று சொன்னார், ஜீப்பில் இருந்த ஒரு பெரியவர்.

''அந்தப் புத்திசாலி, மறுபடியும் வந்துடப்போகுது கிளம்புவோம்'' என்று ஒரு பெண்மணி சொல்ல, ஹாரன் அடித்தபடி ஜீப் கிளம்பியது.

புதருக்குள் இருந்து மெதுவாக வெளியே வந்த நரிக்கு, மனிதர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யம். 'இன்னாடா சொல்றாங்க? நாம அவ்வளவு திறமைசாலியா?’ என்று யோசித்தது.

வருங்கால ராஜா வர்றார்.. வர்றார் !

மனிதர்கள் இப்படி பேசிக்கொண்டதை நரி மட்டும் கேட்கவில்லை. அதே புதரில் பதுங்கி இருந்த ஒரு கரடியும் கேட்டது. நரிக்குப் பின்னாடியே வெளியே வந்த அது, பணிவாக வணங்கியது.

''நண்பா... மனுஷங்க எவ்வளவு பெரிய அறிவாளிங்க என்பதற்கு அவங்க கண்டுபிடிச்ச பல கருவிகளே சாட்சி. அவங்களே உன்னை அறிவாளினு சொல்றாங்கன்னா, அது உண்மையாதான் இருக்கும். உன் அருமை தெரியாமல், நான்கூட சில சமயம் உன்னை அடிச்சிருக்கேன். உதைச்சிருக்கேன். அதுக்கெல்லாம் மன்னிச்சுக்க'' என்றது கரடி.

'இந்தக் கரடி நிஜமாத்தான் பேசுதா... இல்லே, நம்மளைக் கலாய்க்குதா?’ என்று நரிக்கு இன்னமும் சந்தேகம் போகவில்லை.

ஆனாலும் கரடி சொன்ன வார்த்தைகள், நரிக்குத் தலை மேல் பெரிய கிரீடத்தைத் தூக்கி வைத்த மாதிரி இருந்தது.

விஷயம் இந்த இடத்தோடு முடியவில்லை. அந்தக் கரடி, இந்த விஷயத்தைக் காடு முழுக்கப் பரப்பியது. குடுகுடு என ஓடும் முயல், தண்ணீருக்கும் தரைக்குமாகத் தாவும் தவளை, தலைகீழாகத் தொங்கும் வெளவால், புற்றுக்குள் மறைந்திருக்கும் பாம்பு என எதையும் விடவில்லை. எல்லாவற்றிடமும் சொன்னது.

அன்று முதல், விலங்குகள் அனைத்தும் நரிக்கு மிகுந்த மரியாதை அளித்தன. நாளடைவில் நரி காட்டில் எதிர்பட்டாலே, மரியாதை நிமித்தம்  வணக்கம் சொல்லத் தொடங்கின.

இது, நரியின் கர்வத்தை அதிகப்படுத்தியது. ஒரு கழுதையைத் தனக்கு வேலையாளாக நியமித்துக்கொண்டு, எங்கு சென்றாலும் அதை எடுபிடியாக அழைத்துச் சென்றது. நரி அழைத்ததும் கழுதை கைகட்டி, வாய் பொத்தி வந்து நிற்கும்.

''நாட்டில், முன்னாடி பலசாலிகளான மன்னர்கள் ஆட்சி செய்தாங்க. இப்போ, புத்திசாலிகள் ஆளும் காலம். அதே முறையை இங்கேயும் நடைமுறைப்படுத்தணும். சிங்கம், புலி எல்லாம் உங்களைவிட பலசாலிகளாக இருக்கலாம். ஆனால், நீங்கதான் புத்திசாலி. அதனால, நீங்கதான் காட்டின் ராஜாவாக வரணும். இது, இங்கே இருக்கிற எல்லா விலங்குகளின் ஆசை. தலைவா, நீ ஆட்சிக்கு தடாலடியாக வா'' என்று கழுதை உசுப்பேற்றியது.

''நேரம் வரட்டும், உங்க ஆசையை நிறைவேற்றி வைக்கிறேன்'' என்று பந்தாவாகச் சொன்னது நரி.

நாளடைவில், மிகுந்த ஆணவத்தில் மற்ற விலங்குகளை மதிக்காமல் சுற்றியது நரி. ஒருநாள், கழுதையோடு சேர்ந்து காட்டின் அடர்ந்த பகுதிக்குச் சென்றது. அங்கே, ஒரு பெரிய மரத்தில் குரங்குகள் கிளைக்குக் கிளை தாவி விளையாடிக்கொண்டிருந்தன. தான் வருவதைக்கூட கவனிக்காமல், குரங்குகள்  விளையாடுவதைக் கண்ட நரிக்கு சரியான கோபம்.

வருங்கால ராஜா வர்றார்.. வர்றார் !

''அடே வானரப் பசங்களா, கீழே இறங்கி வாங்கடா'' என்று கத்தியது.

குனிந்து பார்த்த குரங்குகளின் தலைவன் ''யாருப்பா நீ? எதுக்கு சும்மா இருக்கிற எங்களைக் கீழே கூப்பிடுறே?'' என்று கேட்டது.

இதைக் கேட்ட கழுதை, ''ஏய்... எங்க அண்ணனைத் தெரியாமல் இந்தக் காட்டுல இருக்கீங்களா? மரத்து மேலேயே இருந்தால் இப்படித்தான். கீழே என்ன நடக்குதுனு தெரியாது'' என்றது கழுதை.

''கீழே எது நடந்தாலும் யார் நடந்தாலும் எங்களுக்கு என்ன?'' என்று கேட்டது குரங்குத் தலைவன்.

நரிக்கு கோபம் தலைக்கு ஏறியது. ''அடேய் முட்டாள் வானரங்களே, நான் வந்தால் இந்தக் காட்டில் எல்லோரும் வணங்குவாங்க. மனிதர்களே போற்றும் புத்திசாலி நான். இந்தக் கழுதையைப் பார்.  என்னைவிட எவ்வளவு பெரிசு. ஆனால், எனக்கு கைகட்டி வேலை செய்யுது. நான் அடிச்சாலும் எதுவும் பேசாமல் வாங்கிக்கும்'' என்று கூறி, கழுதையை ஓங்கி அடித்தது.

கழுதை வலியில் துடித்தாலும் பொறுமையாக நின்றது. ''அடே குரங்கே, என்னைப் பற்றி இப்போ தெரிஞ்சுக்கிட்டியா? கீழே இறங்கி வந்து நீயும் உன் கூட்டமும் எனக்கு மரியாதை செலுத்துங்க'' என்றது நரி.

குரங்குத் தலைவன் யோசித்தது. ''சரி, நானும் என் கூட்டமும் உன்னை வணங்குகிறோம். ஆனால், எல்லோரும் சொல்கிற மாதிரி நீ புத்திசாலி என்று நிரூபிச்சுக்காட்டு. அப்போதுதான் நம்புவோம்'' என்றது.

''அதற்கு என்ன செய்யணும்?'' என்று கேட்டது நரி.

''எங்களை மாதிரி நீயும் இந்த மரத்தில் ஏறி கிளைக்கு கிளை தாவிக் காட்டு'' என்றது தலைவன்.

வருங்கால ராஜா வர்றார்.. வர்றார் !

அப்போதுதான் இரண்டு குட்டிக் குரங்குகள் கிளைவிட்டு கிளை தாவி விளையாடிக்கொண்டிருந்தன. இதை கண்ட நரி, 'இந்தக் குரங்குக் குட்டிகளே தாவும்போது நம்மால் முடியாதா என்ன?’ என்று நினைத்து, குரங்கின் சவாலுக்கு ஒப்புக்கொண்டது.

கழுதையை அருகில் அழைத்து அதன் மீது ஏறி,  மரத்தைக் கஷ்டப்பட்டு பிடித்து ஏறி உயரே சென்றது. சபாஷ் என்று குரங்குத் தலைவன் பாராட்டியதும் பெருமை பிடிபடவில்லை.

''இப்போது ஒரு கிளையில் இருந்து மறு கிளைக்குத் தாவணும் அவ்வளவுதானே'' என்று அலட்சியமாகத் தாவ முயன்றது.

அவ்வளவுதான்... கை நழுவி 'டொமீல்’ என்று உயரத்தில் இருந்து கீழே விழுந்தது. கை, கால்களில் சரியான அடி. குரங்குகள் எல்லாம் சிரிக்க, பாவம் நரி. நொண்டியவாறு எழுந்து நின்றது.

''குரங்குகளான எங்களை மாதிரி மரத்தில் தாவ முடியாது என்கிற சின்ன விஷயம்கூட உனக்குத் தெரியலை. நீ புத்திசாலியா? இந்த மனுசப்பசங்க இப்படித்தான். யாரையாவது உசுப்பிவிட்டு உடம்பை ரணகளம் செய்வாங்க'' என்றது குரங்குத் தலைவன்.

கழுதை மூலம் இந்த விஷயம் காடு முழுக்க பரவ, நரியின் செல்வாக்கு பழையபடி காலியானது.