Published:Updated:

துர்கா !

துர்கா !

 நடிப்பு : ஐஸ்வர்யா 
 கலை : ஸ்யாம்
ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன்
கதை, திரைக்கதை : தேவிபாலா 
இயக்கம் : நீங்களேதான்

துர்கா !

ஒரு நாள் பிரிவுக்கே தவிக்கும் ஆனந்த், ஆயிரம் நாட்களுக்கு மேல் துர்காவைப் பிரிய சம்மதிப்பானா? பணமும் தேவை... பாசம் அதைவிட முக்கியம்! துர்கா என்ன முடிவெடுக்கலாம்? துர்காவின் இடத்தில் நீங்கள் இருந்தால், என்ன செய்வீர்கள்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- என்று முடிந்திருந்த கடந்த எபிசோட், அடுத்து எப்படி எப்படியெல்லாம் பயணிக்கலாம் என்பதற்கு... பலவிதமான ட்விஸ்ட்களைச் சொல்லி அசத்தியிருக்கின்றனர் ஏகப்பட்ட தோழிகள். அவர்களில் சிலரின் ட்விஸ்ட்கள் இதோ....

மும்பை - லஷ்மி, திருச்சி - லஷ்மி, சென்னை - தீபிகா... இவர்கள் மூவரும், 'கணவன் ஆனந்தின் முழு சம்மதத்துடன் துர்கா வெளிநாடு போகலாம்' என பச்சைக் கொடி காட்டுகிறார்கள். பிரச்னை எங்கே?

விழுப்புரம் - திலகா, நிலக்கோட்டை - புஷ்பலதா... 'சுதா, குழந்தையை பார்த்துக் கொள்வாள்’ என முன்னவரும், 'உறவுகள் அத்தனை பேரும் உதவட்டும்’ என பின்னவரும் விரும்புகிறார்கள்! நடக்கிற காரியமா இது?

திருநின்றவூர் - தனுஷா, சென்னை - விமலா, திருவான்மியூர் - ஜெயா சங்கரன் ஆகிய மூன்று தோழிகளும், 'குடும்பத்துடன் போக துர்கா அனுமதி பெறுவாள்' என்கிறார்கள். பிறகு சிக்கலே இல்லையே?

செங்கோட்டை - பிரியா, திருவள்ளூர் - ராஜம் இருவரும்... 'வீட்டில் இருந்தபடியே நெட் மூலம் இரவு நேரத்தில் உழைத்து சம்பாதிக்கலாம்' என்கிறார்கள். ஆக்கபூர்வமான விஞ்ஞான சிந்தனை... ஆனால், கதை காணாமல் போகுமே!

##~##

அம்பத்தூர் - வசுமதி கண்ணன் சொல்கிறார் - 'வராகனின் அம்மா என்கிற புது கேரக்டர் உதவும்' என்று. புதிய சிந்தனைதான்... ஆனால், இப்போதைக்கு ஒட்டும்போலத் தோன்றவில்லை!

சென்னை - சுபஸ்ரீ பரத்வாஜ்... 'இதே இந்தியாவில் பெரிய சம்பளம் வாங்கி சாதிப்பவர்கள் இல்லையா? துர்காவால் முடியாதா' என கோபப்படுகிறார்... நியாயம்தானே!

கோவை - கனகாம்பாள், திண்டிவனம் - ஷோபா இருவரும், 'சம்பளப் பணத்தை முன்பணமாக பெறும் துர்கா, கடன்களை அடைக்கலாம். அதன் மூலம் குடும்பத்தினரை அமைதிப்படுத்தலாம்' என்று வித்தியாசமாக யோசிக்கின்றனர். ஆனால்... யார் தருவார் அத்தனை பணத்தை முன்கூட்டியே?

மதுரை - உஷா... 'ஆனந்துக்கு அதே கம்பெனியில் வேலை! குழந்தை அஞ்சுவுக்கு க்ரெச்' என ஒரு மாதிரியாக நெருங்குகிறார்!

பெங்களூரு - மாலதி நாராயணன், கதையைத் தீர்மானித்திருக்கிறார் இப்படி - 'ஆனந்துக்கு பிஸினஸ்; உதவிக்கு அன்வர்; ஆதரவுக்கு அப்பா நடேசன்! குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஒரு நல்ல பெண்மணி கிடைத்தால், வீட்டுப் பெண்கள் எதிர்க்க முடியாது! இந்த இரண்டும் அமைந்தால் துர்கா வெளிநாட்டுக்குப் போக என்ன தடை?' எனக் கேட்டு இந்த எபிசோடின் இயக்குநர் ஆகிறார் இந்தத் தோழி!

பாராட்டுக்கள்! கேள்விகளைக் கேட்டு புதுப் பிரச்னைகளுக்கான கதவைத் திறந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்!

துர்கா !

மருந்தின் மயக்கத்தில் மீண்டும் ஆனந்த் உறங்கத் தொடங்க... துர்கா மெள்ள விடுவித்துக் கொண்டு, வீட்டுக்குப் புறப்பட்டாள். சிஸ்டர், ஆனந்துடன் இருக்க... வராகன், அன்வர் இருவரும் வெளியே வந்தார்கள், துர்காவுடன்.

''சார், உன்னைப் போகவிட மாட்டாராக்கா?''

- அன்வர் கவலையுடன் கேட்டான்.

''நாளைக்கு மும்பையில இருந்து வர்ற அதிகாரிகளை சந்திச்சு நீ பதில் சொல்லியாகணுமே துர்கா!''

- இது வராகன்.

''எனக்கு மட்டும் ஆனந்த், அஞ்சுவை எல்லாம் விட்டுட்டுப் போக ஆசையா? இத்தனை பிரச்னைகள் இங்கே இருக்கே. அவர் ஃபேக்டரியும் லாக் அவுட் ஆயிட்டா, என் ஒருத்தி சம்பளத்துல எல்லாத்தையும் எப்படி சமாளிப்பேன்?''

துர்கா !

''அக்கா... எப்படியும் விசா, டிக்கெட்னு ஏற்பாடுகளை செஞ்சு, நீ புறப்பட ஒரு மாசம் நிச்சயமா ஆகும். வெளிநாட்டுக்குப் போறது நாளைக்கே நடக்கிற காரியமா?''

''ஆனா, சம்மதத்தை சொல்லியாகணுமே அன்வர்?''

''எல்லாம் நல்லபடியா நடக்கும் துர்கா. ஆனந்த்கூட நான் இங்க இருக்கேன். நீ தைரியமா வீட்டுக்குப் போ. அன்வர்... கொண்டு போய் விடு!'' என்றார் வராகன்.

படுக்கை அறைக்குள் நுழைந்த துர்கா,  உறக்கத்திலிருந்த அஞ்சுவின் தலை கோதினாள். மாமியார், நாத்தனார்களும்கூட உறக்கத்துக்குச் சென்றுவிட, ''ஆனந்த் என்னம்மா சொல்றான்?'' என்றபடியே வந்தார் நடேசன்.

''அவருக்கு என்னைப் பிரிய விருப்பமில்லை. குழந்தையையும் எப்படி சமாளிக்கறதுனு தெரியல. நான் எப்படி மாமா வெளிநாட்டுக்குப் போக முடியும்? போனாத்தான் நிம்மதியா இருக்க முடியுமா?''

''ஆனந்த் சூழ்நிலையைப் புரிஞ்சுக்கணும். இந்தக் குடும்பத்தைத் தாங்க வேண்டிய பொறுப்பு, அவனுக்குத்தான். மல்லிகா, உங்கக்கா இந்த ரெண்டு பேருக்கும் அவன் செய்ய வேண்டாம். ஆனா, வராகன் பட்ட மூணு லட்சம் கடனை அடைக்கிற பொறுப்பு யாருக்கு துர்கா?''

''இவருக்கும் லாக் அவுட் ஆயிட்டா, பிரச்னை பெரிசாகுமே?''

''நீ நாளைக்கு அதிகாரிகள்கிட்டப் பேசி, அவகாசம் கேளு. வேண்டாம்னு சொல்லிடாதே. நாம கலந்து பேசலாம் துர்கா.''

''அத்தை, கல்பனா, சுதாகிட்ட இந்த விவரத்தைச் சொல்லிடணும் மாமா.''

''நான் நாளைக்கே பேசறேன்மா. நீ படு.''

காலையில் எழுந்து எல்லா வேலைகளையும் முடித்து, விறுவிறுவென ஆபீஸுக்குப் புறப்பட்டாள் துர்கா. வாசற்படியில் நின்று டாட்டா காட்டிய அஞ்சு, திடீரென துர்காவிடம் தாவியது.

''நான் கூப்பிட்டா பக்கத்துல வர்றதில்லை. ரெண்டு அத்தைங்ககிட்ட ஒட்டறதில்லை. நானும், என் பொண்ணுங்களும் இதைக் கொல்லவா நிக்கிறோம்?'' என்று பொரிந்தாள் அங்கு நின்றிருந்த ராஜம்.

''குழந்தை காதுபடவே துர்காவை நீ திட்டினா, குழந்தை எப்படி உங்கிட்ட ஒட்டும்?''

''எனக்கு எதிரி வெளியில இல்லை. நீங்கதான்!''

''நல்லதை சொன்னா, எதிரியாடீ? பொண்ணுங்கள தலையில தூக்கி வெச்சுக்கிட்டு, மருமகளை மட்டும் தட்டற அம்மாக்களை நிக்க வெச்சு சுடணும்!''

''மாமா... எதுக்கு இப்ப பிரச்னை?''

சட்டென்று உள்ளே திரும்பினாள் ராஜம்.

''ஸாரிம்மா! நீ கிளம்பு. அஞ்சுவை நான் பார்த்துக்கறேன். இப்ப நீ ஆனந்தைப் பாக்காதே. நேரா ஆபீஸ் போயிடும்மா. அவன் உன்னைக் குழப்பிடக் கூடாது!'' என்று துர்காவை அனுப்பி வைத்தார் நடேசன்.

ஆபீஸில் சேர்மன், லட்சுமி இருவருமே துர்கா வெளிநாடு போகத்தான் வேண்டும் என்று அழுத்தமாகச் சொன்னார்கள்.

பன்னிரண்டு மணிக்கு வந்து சேர்ந்த அதிகாரிகள், முதலில் துர்காவைப் பாராட்டினார்கள். பிறகு, பேச்சு ஆரம்பமானதும்... தெளிவாக தன் குடும்ப நிலை, அதில் தனக்குள்ள கமிட்மென்ட்ஸ், பாசம், பணத்தேவை, சிக்கல் என எதையும் விடாமல், அழகான ஆங்கிலத்தில் சீரான குரலில் சொல்லிக் கொண்டே வந்தாள் துர்கா.

அமைதியாகக் கேட்டுக் கொண்ட அதிகாரிகள், ''இதப்பாருங்க துர்கா... கம்பெனியோட எந்த ஒரு சட்டத்தையும் நாங்க உடைக்க முடியாது. அதுக்கு நீங்க கட்டுப்பட்டாத்தான் இந்த வேலை. இங்கே நடைமுறைகளை முடிச்சிட்டு, நீங்க அங்கே வர, ஐம்பது நாள் அவகாசம் இருக்கு. அதுக்குள்ளே உங்க பிரச்னைகளை ஓரளவு சரிக்கட்டிட்டு வரப் பாருங்க. உங்க புத்தி, திறமை, சாதுர்யம் எல்லாம் அங்கே உள்ள தலைமை அதிகாரிகளுக்கு புடிச்சுப் போனா, நீங்க கேட்டதெல்லாம் கிடைக்கலாம். அந்த நம்பிக்கையோட நீங்க ஏன் வரக்கூடாது... வாய்ப்பை மறுக்காதீங்க துர்கா. சாதிக்கப் பாருங்க!'' என்று அவளுக்குச் சாதகமாக அழகாக ஆலோசனை கள் வர, துர்காவால் எதிர்க்க முடியவில்லை. தலையாட்டினாள்.

''உங்க வேலைக்கான உத்தரவு இன்னும் ஆறு நாட்கள்ல உங்க கைக்குக் கிடைக்கும். மற்ற ஏற்பாடுகளை உங்க சேர்மன் செஞ்சு தருவார். ஓ.கே?''

துர்கா கை குலுக்கிவிட்டு, வெளியே வந்தாள். அதிகாரிகள் போன பிறகு, சேர்மன் அழைத்தார்.

''தேங்க்யூ துர்கா! யோசிக்க யோசிக்க... வழி பிறக்கும். கவலைப்படாதீங்க.''

''சரி சார்!''

லட்சுமி வாழ்த்துத் தெரிவித்தாள். துர்கா ஆபீஸை விட்டு வெளியே வர, அன்வர் காத்திருந்தான்.

''என்னக்கா?''

''புது வேலையை ஒப்புக்கிட்டு வந்தாச்சு அன்வர். இனிமே என்னவெல்லாம் போராட்டங்களோ?''

''பேசலாம்க்கா. நீ, நான், வராகன் அண்ணன், மாமா நாலு பேரும் ஒரு ரவுண்டு பேசுவோம். பிறகு, ஆனந்த் சார்கிட்டப் பேசுவோம். மாமாவுக்கு போன் போட்டு இப்பவே வரவழைங்க.''

''எங்கே அன்வர்?''

''வாப்பாவோட பண்ணை வீடு இருக்குக்கா. அங்கே போயிடலாம். வராகன் அண்ணன், மாமாவைக் கூட்டிட்டு வரட்டும்.''

அடுத்த ஒரு மணி நேரத்தில் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டுக்கு நாலு பேரும் வந்துவிட்டார்கள். அன்வர், முதலில் தேநீர் வரவழைத்தான்.

துர்கா !

''அக்கா... ஆனந்த் சாரோட ஃபேக்டரி லாக் அவுட் ஆனாலும் கவலைப்படாதீங்க. நான் வாப்பாகிட்ட சொல்லி, சாருக்கு ஒரு பிஸினஸ் ஏற்பாடு பண்றேன். நானே பக்கபலமா இருக்கேன். அதுல அவர் நிறைய சம்பாதிக்கலாம். அவருக்கும் தன்னம்பிக்கை, தைரியம் ரெண்டும் வரும்!''

''சரி அன்வர். குழந்தை..?''

''மாமா இருக்காரே?''

''மாமாவால ஓரளவுக்குத்தான் பார்த்துக்க முடியும். மத்த மூணு பெண்களால குழந்தை விஷயத்தில் எனக்கு உதவி கிடைக்கும்னு தோணல. என் முயற்சிக்கு ஆதரவு தரக்கூடிய நீங்க மூணு பேருமே ஆண்கள், பெண்கள் ஆதரவு எனக்கில்லை.''

நடேசன் இதை ரசித்தார். வராகன் குறுக்கிட்டார்.

''குழந்தையை மட்டும் கூட்டிட்டுப் போக நீ அனுமதி கேக்கக் கூடாதா?''

''அங்கே அவளை யாரு பார்த்துப்பாங்க?''

''க்ரெச் இருக்காதா துர்கா?''

அன்வர் படக்கென நிமிர்ந்தான்!

''அந்த மாதிரி காப்பகங்கள் இங்கயே இருக்கே!''

''தாத்தா, பாட்டி, அப்பா, அத்தைகள்னு நாங்க எல்லாரும் இருக்கும்போது அஞ்சுவை எப்படி காப்பகத்துல விட முடியும்... அது தர்மமா?''

''இதையே வீட்ல பேசிப்பாருங்க அங்கிள். பெண்கள் பக்கமிருந்து என்ன பதில் வருதுனு தெரியுமில்லையா? அதை வெச்சு அக்கா முடிவெடுக்கலாமே?''

''ஒரு நல்ல தாயா நான் இல்லையோனு என் மனசு துடிக்குது மாமா!''

''ஏம்மா அப்படிச் சொல்ற?''

''பின்னே... பணத்தைத் தேடி ஓடற அவல நிலைக்கு ஒரு பொண்ணு ஆளாயிட்டா, அவளுக்குள்ளே இருக்கற தாய் செத்துப் போயிட மாட்டாளா?''

- குரல் இடறி, துர்காவின் கண்கள் கலங்க, வராகன் படக்கென எழுந்தார்.

''என்னால மூணு லட்சம் கடன் உனக்கு. தன் மகள் சுமக்க வேண்டிய பாரத்தை, மருமகள் சுமக்கறாளேனு நன்றி உணர்ச்சி அத்தைக்கு இல்லை. அந்தக் கடனை எப்படியாவது நானே அடைச்சிடறேன் துர்கா. அதுக்காக நீ போக வேண்டாம்!''

''அக்கா... மல்லிகா சம்பந்தப்பட்ட பிரச்னைகளை நான் ஏத்துக்கிறேன். அதுக்காகவும் நீ போக வேண்டாம்!'' - இது அன்வர்!

''அம்மாடி... உங்கக்காவோட கஷ்டத்துல நீ பாதி பங்கெடுத்துக்கோ. மீதியை உங்கத்தான் பார்த்துப்பாரு'' - சொன்னவர் நடேசன்!

துர்கா மூன்று பேரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

''நான் எல்லாரையும் குற்றம்சாட்டறதா தப்பா புரிஞ்சுகிட்டீங்களா?''

''துர்கா... உன்னை யாராவது தப்பா புரிஞ்சுக்கிட்டா, அவங்களுக்கு சோறுகூட கிடைக்காது!''

''அக்கா... பிரிவு அவசியம்னா, பிரிஞ்சுதான் ஆகணும். சரி... குழந்தை அஞ்சுவை காப்பகத்துல விடவேண்டாம். அவளைப் பாத்துக்க வீட்டோட ஒரு பெண்மணியைக் கொண்டு வந்து வெச்சா?''

துர்கா கண்களை மலர்த்தினாள்!

''எத்தனையோ நல்ல அபலைப் பெண்கள் உண்டு. சாப்பாடும் போட்டு, சம்பளமும் கொடுத்தா, அஞ்சுவைப் பாத்துக்க மாட்டாங்களா?''

''அன்வர் சொல்றது நல்லாருக்கு துர்கா!'' என்று வராகன் ஆமோதிக்க,

''அன்வர்... இதுக்கு அத்தை சம்மதிக்கணுமே. என் பேத்தியை பார்த்துக்க எவளோ ஒருத்தி எதுக்கு வரணும்னு கேப்பாங்க.''

''அப்ப அவளே பார்த்துக்கட்டும்!''

''மாமா... அதுக்கும் அத்தை ஒப்புக்க மாட்டாங்களே?''

''இதப்பாரம்மா... ராஜம் யாரு ஒப்புக்க?''

''அப்படி சொல்ல முடியுமா மாமா? உங்க பிள்ளையைப் பெத்த அம்மாவாச்சே?''

''துர்கா... உறவுக்கு மரியாதை கொடுக்கவும் ஒரு வரம்பு இருக்கு. ராஜம் உனக்கு மேலதிகாரி இல்லை... புரியுதா?''

''மேலதிகாரிகளுக்கு பயப்படாத பெண்கள்கூட மாமியாருக்குப் பயப்பட வேண்டியிருக்கே மாமா!''

மூன்று பேரும் சிரித்துவிட்டார்கள்!

''ஒரு பொறுப்பான நல்ல பெண்ணைத் தேடுவோம், குழந்தைக்காக. நான் வீட்லதானேம்மா இருக்கேன். அது எங்கிட்ட ஒட்டிக்கும். ஆனந்த்கிட்ட எல்லாம் பேசுவோம். சரியா?''

''சரி... வீட்ல இந்த விவரத்தைச் சொல்லியாச்சா மாமா?''

''ம்... சொல்லிட்டேன்!''

''அத்தை என்ன சொன்னாங்க?''

''பதிலுக்கு நான் காத்திருக்கல. அதுக்குள்ளே உன் போன் வந்துட, புறப்பட்டு வந்துட்டேன். அவ யாரு சொல்றதுக்கு? உன் குடும்பம் தலைதூக்க, நீ சில முடிவுகளை எடுக்கத்தான் வேணும். பெண்கள் வேலைக்குப் போகாத காலம் ஒண்ணு இருந்தது. அப்புறமா காலையில போனா, சாயங்காலம் வீடு திரும்புற வேலையா இருந்தது. இப்ப ஐ.டி-யில வேலை பார்க்கிற பெண்கள் நடு ராத்திரி வீடு திரும்பறாங்க. இப்ப உனக்கு வெளிநாட்டு வாய்ப்பு வந்திருக்கு. பெண், யாரையும் சார்ந்து நிக்கிற காலம் இல்லைம்மா இது. தனி ஆவர்த்தனம் ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு. புரிஞ்சுக்கிட்டா மரியாதை. இல்லைனா அதுவும் இல்லை!''

''சரி! நீங்க பார்க்க வர்றது என்னைத்தான்னு அத்தைக்குத் தெரியுமா?''

''அவ முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் வெச்சு நடுவுல பெரிய வாக்கியத்தையே எழுதிருவா துர்கா. சாதாரண ஆள் இல்லை. தெரியட்டுமே. உனக்கு நான் ஆதரவா இருந்தா, தலையை சீவிடுவாளா?''

''அக்கா... ஆனந்த் சார்..?''

''பேசிப் புரிய வைக்கலாம். ஒடம்பு கிடப்புல இருக்கும்போது, மனசு சண்டித்தனம் பண்ணும் துர்கா. மச்சான் புரிஞ்சுக்குவார். நாங்கள்லாம் உன்கூட இல்லையா?'' என்று அழுத்தமாகச் சொன்னார் வராகன்.

இவர்கள் நாலு பேரும் பேசிக் கொண்டிருந்த அதேநேரம்... ஆஸ்பத்திரிக்குள் ராஜம், கல்பனா, சுதா மூன்று பேரும் நுழைந்து கொண்டிருந்தார்கள். துர்கா வெளிநாட்டுக்குப் போகிறாள் என்று கேட்டது முதல், ராஜம் நெருப்பில் நின்றாள்.

''புருஷன், புள்ளை எல்லாத்தையும் விட்டுட்டாளே..?''

- கல்பனா முந்திக் கொண்டாள்.

''அம்மா... அவ துணிச்சல்காரி. குடும்பம் அவளுக்குத் துச்சம்.''

''அண்ணி போய் லட்சக் கணக்குல சம்பாதிச்சிட்டு வந்தா, குடும்பத்துக்கு நல்லதுதானே?''

- இது சுதா!

''அடி செருப்பால! அந்த அன்வரை உன்கூட இவ ஜோடி சேர்த்து வைக்கப் போறானு நீ அவளுக்குத் தாளம் போடறியாடீ? ஒருக்காலும் அது நடக்காது!''

கல்பனா அம்மாவிடம் வந்தாள்.

''இதப்பாரு... எல்லா ஆம்பளைகளும் அவ பக்கம். இப்ப இவளும் போயிட்டா... நீயும், நானும் தடுத்தா, எதுவுமே நிக்காது!''

''அதுக்காக?''

''எங்கிட்ட விடு!''

சுதாவிடம் வந்தாள்!

''இதப்பாருடி... துர்கா இல்லைனா, அன்வர் உன்னை மதிக்க மாட்டான். அவ உள்நாட்ல இருந்தாத்தான் உங்க கல்யாணம் நடக்கும். புரியுதா?''

''அட, ஆமாம்க்கா!''

''சரிடி! உங்கப்பாவே துர்கா பக்கம்தானே இருக்கார்?''

''அப்பா ரிட்டையரான செல்லாக்காசு. என் புருஷனோ... உதவாக்கரை. அன்வர் நம்ம குடும்பத்துக்குள்ளே இன்னும் வரல. இவளைப் போகவிடாம தடுக்கற சக்தி ஒரே ஒருத்தருக்குத்தான் உண்டு!''

''யாருடீ அது?''

''அவ புருஷன் - உன் பிள்ளை ஆனந்த்தான்!''

''அவன் பொண்டாட்டி பக்கம்தான்டி பேசுவான். அவனை இவ வளைச்சிட்டா. ஆம்பிளைங்கள கைக்குள்ள போட்டுக்கிற வித்தையை நல்லாக் கத்து வெச்சுருக்கா. மானம் போகுது எனக்கு.''

''அம்மா... உனக்கு வெக்கமா இல்ல இப்படிப் பேச? உன் பிள்ளை மனசை மாத்த உன்னால முடியாதா? நீ கையாலாகாதவளா? கத்திப் பேசி, புத்தி மழுங்கிப் போச்சா உனக்கு?''

ராஜம் குழப்பத்துடன் பார்க்க, ஆனந்தின் அறைக்குள் மூவரும் நுழைந்தார்கள்.

''எப்படீப்பா இருக்கே?''

''என் ஞாபகம் உங்களுக்கெல்லாம் இருக்கா? இந்தப் பக்கம் யாரும் எட்டிக் கூடப் பாக்கறதில்லை?''

ராஜம் திரும்பி கல்பனாவைப் பார்க்க, கல்பனா புருவத்தை மட்டும் லேசாக உயர்த்த, ராஜம் அழத் தொடங்கினாள்!

''இப்ப எதுக்கு நீ அழற?''

''எப்படியும் உன்னை, அஞ்சுவை விட்டுட்டு துர்கா வெளிநாட்டுக்குப் போகத்தான் போறா. இங்கே இருக்கிறவரைக்கும் அவ உன்கூட தனியா இருக்கட்டுமேனுதான் நாங்க யாரும் தொந்தரவு பண்ணல!''

''துர்கா போக மாட்டாம்மா!''

''அப்படி நீ நம்பிட்டு இருந்தா, உன்னைப் பார்த்து நாங்க பரிதாபப்படாம என்ன செய்யறது? உங்கப்பா, கல்பனா மாப்ளை, அந்த அன்வர்... மூணு பேரும்தான் இப்ப உன் பொண்டாட்டிக்கு ஆலோசகர்கள். ஊருக்கு உழைக்கறேன்னு கண்டவங்கள கட்டிக்கிட்டு அழறா. வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிக்க நினைக்கிறது எதுக்கு தெரியுமோ... அவங்கக்காவோட ஆபரேஷனுக்கு லட்சக் கணக்குல செலவாகுமாம். கோவப்படாதேப்பா. முழுக்க முழுக்க சுயநலம்!''

''நீ விடும்மா... தம்பியோட கம்பெனி லாக் அவுட் ஆகப் போகுது. தம்பியும் வீட்ல வந்து ஒக்காந்துட்டா, அவ சம்பாதிச்சா தானே முடியும்?'' - கல்பனா!

சுதா குறுக்கே புகுந்தாள்.

''வேலையில்லாத ஆம்பளைங்களுக்கு, வேலை பார்க்கற, படிச்ச மனைவிகளை எதிர்த்து நிக்க முடியாது. அண்ணன் பாவம். அப்படியே அண்ணன் தடுத்தாலும், அண்ணி கேக்கப் போறாங்களா என்ன?''

''பாவம் ஆனந்த்! இவனும், அந்தப் பச்சக் குழந்தை அஞ்சுவும் இப்பிடி நாதியில்லாம ஆகணுமா?''

மும்முனைத் தாக்குதலில் செயலிழந்துபோன ஆனந்துக்கு முகம் சிவந்து, உடம்பு முழுக்க ரத்தம் பாய்ந்தது!

என்ன செய்யப் போகிறான் ஆனந்த்?

- தொடருங்கள் தோழிகளே...
ஆடைகள் உதவி: பி.எம். சில்க்ஸ், மயிலாப்பூர், சென்னை.

 பிரஷர் குக்கர் பரிசு!

 பெங்களூரு - மாலதி நாராயணன்...

துர்கா !

'' 'வாசகிகள் கைமணம், போட்டோ அனுப்புங்க... சேதி சொல்லுங்க, அனுபவம் பேசுகிறது’னு எல்லா பக்கத்துலயும் என் பேர் வந்திருக்கு. அவள் விகடனின் தீவிர வாசகிங்கிறதுல எனக்கு பெருமை அதிகம். விகடன் குழுமத்தோட எல்லா புத்தகங்களையும் வாங்கினாலும், அவள் விகடனும் சக்தி விகடனும்தான் எனக்கு ரொம்ப டியர் ஃப்ரெண்ட்ஸ். கொஞ்சம் ஓவர் கான்ஃபிடன்ஸா தெரியலாம்... இயக்குநர்னு என் பெயர் ஒரு நாள் வரும்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தேன். விடாம ரெகுலரா கதை சொல்லிட்டே இருந்தேன். இப்ப அது நடந்துருச்சே! ரொம்ப ஹேப்பி...'' என்று குதூகலிக்கிறார் இந்த சீனியர் சிட்டிஸன். இவருக்கு பிரஷர் குக்கர் அன்புப் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

வாசகிகளுக்கு சூப்பர் பரிசுப் போட்டி

 இந்தஅத்தியாயத்தைப் படித்து முடித்ததுமே... அடுத்த அத்தியாயம் எப்படி என்பதை தீர்மானியுங்கள். அதை அப்படியே மனதில் வடித்துக் கொண்டாலும் சரி, எழுதி வைத்துக் கொண்டாலும் சரி... 044-42890014 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் பெயர், ஊரை முதலில் சொல்லி விட்டு உங்கள் குரலிலேயே கதை திருப்பத்தை பதிவு செய்யுங்கள். மிகச்சிறந்ததாக தேர்ந்தெடுக்கும் கதைத் திருப்பத்தை வைத்து அடுத்த அத்தியாயத்தை நகர்த்துவார் தேவிபாலா. அத்தகைய எபிசோடை சூப்பராக சமைக்கும் வாசகிக்கு பிரஷர் குக்கர் பரிசு!

முக்கிய குறிப்பு: செவ்வாய் விட்டு செவ்வாய் 'அவள் விகடன்' கடைக்கு வருவது உங்களுக்குத் தெரிந்ததுதான். இதழ் வெளிவரும் வாரத்தின் சனிக்கிழமை அன்று மாலைக்குள் 044-42890014 எண்ணைத் தொடர்பு கொண்டு கதைத் திருப்பத்தை பதிவு செய்ய மறக்காதீர்கள் !