Published:Updated:

சத்தமில்லாத யுத்தம்! - சிறுகதை

ராஜேஷ்குமார், ஓவியம்: ஸ்யாம்

சத்தமில்லாத யுத்தம்! - சிறுகதை

ராஜேஷ்குமார், ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:

பொற்கொடி புறப்படும் அவசரத்தில் இருந்தாள். காலை ஏழு மணியின் பரபரப்பு, அந்தப் பெண்கள் ஹாஸ்டலின் எல்லா திசைகளிலும் தீப்பிடித்த தினுசில் பரபரவென்று இருந்தது. இரண்டாவது மாடியின் கடைசியில் இருந்தது அவளுடைய அறை.

நிலைக்கண்ணாடி முன் நின்று, தன் நீளமான அசல் தலைமுடியை பெரிய பல் கொண்ட சீப்பால் வாரி சிக்கெடுத்து, தழையத் தழையப் பின்னும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தாள். ரோஜா நிற சதைப்பிடிப்பான உதடுகளுக்கு நடுவே ஹேர்பின்னை வைத்து, அரிசிப் பற்களால் கடித்திழுத்தாள். மினுமினுப்பான சின்ன நெற்றியிலும், திரட்சியான மோவாயிலும் வியர்வை பொடித்திருந்தது. தலைமுடியைப் பின்னலாக மாற்றி, அதில் ஹேர்பின்னை செருகிய பொற்கொடி, சல்வார் கமீஸ் துப்பட்டா மடிப்புகளைச் சரிப்படுத்திக்கொண்டு, கைப்பையை சுவர் ஆணியிலிருந்து உருவியபோது, பக்கத்து அறையிலிருந்து மிருதுளா உள்ளே வந்தாள்.

''என்ன பொற்கொடி, வழக்கமா நீ ஆபீஸுக்குப் போக எட்டு மணிக்குத்தான் ரூமை விட்டு வெளியே வருவே... இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் கிளம்பறே..?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இன்னிக்குத் தண்டு மாரியம்மன் கோயிலுக்குப் போகணும்!''

''நீ கோயிலுக்கெல்லாம் போகமாட்டியே... இன்னிக்கு என்ன விசேஷம்?''

''விசேஷம் ஒண்ணுமில்லை. ஒரு சந்தோஷம்தான்!''

''நீ இவ்வளவு சந்தோஷமா இருந்து நான் பார்த்ததேயில்லை...''

''ஒரு நிமிஷம் இரு மிருதுளா..!'' என்று சொன்ன பொற்கொடி, சுவர் அலமாரிக்குப் போய், ஒரு ஸ்வீட் பாக்ஸோடு வந்தாள்.

''ம்... எடுத்துக்க. முந்திரி கேக்!''

''என்ன விசேஷம்... இன்னிக்கு உன்னோட பர்த்டேயா?''

''இல்ல!''

''பின்னே..?''

''மொதல்ல முந்திரி கேக்கை எடுத்து உன் வாய்க்குள்ளே போட்டுக்கோ. அது கரைஞ்சு உன்னோட தொண்டைக்குள்ளே போனதும் சொல்றேன்.''

சத்தமில்லாத யுத்தம்! - சிறுகதை

''நீ விடமாட்டியே..!''

- சொன்ன மிருதுளா, ஒரு முந்திரி கேக்கை விண்டு, வாயில் போட்டுக்கொண்டாள்.

''ம்... இப்ப சொல்லு!''

பொற்கொடி சில விநாடிகள் மௌனம் காத்துவிட்டுச் சொன்னாள்... ''எனக்கு டிவோர்ஸ் கிடைச்சு இன்னியோடு சரியா ஒரு வருஷமாகுது!''

பொற்கொடியை முறைத்தாள் மிருதுளா. ''ஏண்டி... இது உனக்கே நியாயமா படுதா? டிவோர்ஸ் கிடைச்ச நாளை ஏதோ பிறந்தநாள் மாதிரி கொண்டாடறே..?''

பொற்கொடி சிரித்தாள்.

''என்னைப் பொறுத்தவரைக்கும் இது பத்து தீபாவளிக்கும் பத்து பொங்கலுக்கும் சமம்!''

- சொல்லிவிட்டுக் கண்களைச் சிமிட்டிய பொற்கொடி, ஹேண்ட்பேக்கை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாள். ஹாஸ்டல் வராந்தாவின் பாதி தூரத்தைக் கடந்திருப்பாள். எதிரே ஹாஸ்டல் மேனேஜர் பர்வதவர்த்தினி.

''குட்மார்னிங் மேடம்!''

''குட்மார்னிங்...''

- சொன்ன பர்வதவர்த்தினி தயக்கமாக நின்றாள்.

''பொற்கொடி!''

''என்ன மேடம்..?''

''அது... வந்து... வந்து...''

''சொல்லுங்க மேடம்...''

''ரிசப்ஷன் ரூம்ல, உன்னோட கணவர் வேணுகோபாலன் வந்து வெயிட் பண்ணிட்டிருக்கார்.''

அந்த விநாடியே, பொற்கொடியின் முகம் சூடுபட்ட பாலிதீன் பேப்பராய் சுருண்டது. கண்களில் அனலோடு பர்வதவர்த்தினியை ஏறிட்டாள். ''மேடம்! எத்தனை தடவை உங்ககிட்டே சொல்லியிருக்கேன், அந்த ஆளை என்னோட கணவர்னு நீங்க சொல்றது எனக்குப் பிடிக்கலை, பிடிக்கலை, பிடிக்கலைனு!''

''ஸாரி பொற்கொடி... இனிமே சொல்லல. வேணுகோபாலன்னு ஒருத்தர் வந்து வெயிட் பண்ணிட்டிருக்கார். போய்ப் பார்க்கறியா?''

பர்வதவர்த்தினி சொல்லிவிட்டுப் போய்விட, பொற்கொடி ஒரு பெரிய கேள்விக்குறியை முகத்தில் ஒட்ட வைத்துக்கொண்டு, வரவேற்பறையை நோக்கிப் போனாள்.

சோபாவில், ஒரு நாளிதழைப் புரட்டியபடி உட்கார்ந்திருந்தான் வேணுகோபாலன். நேர்த்தியாக தலைசீவி, பளிச்சென்ற நிறத்தில் பேன்ட்- ஷர்ட் அணிந்து, அந்தக் காலைவேளையிலேயே கண்களுக்கு குளிர் கண்ணாடி கொடுத்திருந்தான்.

பொற்கொடி மௌனமாக எதிரில் போய் நின்றாள். நாளிதழிலிருந்து தலையை உயர்த்தாமல் இருக்கவே, தொண்டையை மெல்லக் கனைத்தாள்.

நிமிர்ந்து, முகத்தில் ஆச்சர்யத்தைக் காட்டினான். ''ஓ! வந்துட்டியா... ஸாரி, பேப்பர் நியூஸ்ல மும்முரமா இருந்துட்டேன்!''

பொற்கொடி அந்த அறையின் மூலையைப் பார்த்தபடி கேட்டாள்...

''என்ன விஷயம்?''

''உட்கார்ந்து பேசலாமே...''

''எனக்கு உட்கார நேரமில்லை!''

''அஞ்சே நிமிஷம்..!''

பொற்கொடி தன் மணிக்கட்டில் அப்பியிருந்த கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே, ''சரியா அஞ்சே அஞ்சு நிமிஷம்தான்! அதுக்கு மேல ஒரு மைக்ரோ விநாடிகூட இருக்க மாட்டேன்'' என்றபடி, எதிரேயிருந்த சோபா வில் தொப்பென்று உட்கார்ந்தாள்.

''சொல்லுங்க... என்ன விஷயம்?''

''யு.எஸ்-ஸிலிருந்து ஜெயராமன் வந்திருக்கான். அவன் வந்து ரெண்டு வாரமாகுது!'' என்றான் வேணுகோபாலன்.

''சரி, அதுக்கு என்ன?''

''உனக்குத்தான் தெரியுமே... அவன் என்னோட திக்கஸ்ட் ஃப்ரெண்ட். நம்ம கல்யாணத்தின்போது, அவன்தானே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்தான்! சொல்லப்போனா, நமக்கிடையில ஒரு காதல் தூதனா இருந்து, நம்ம லவ்வை சக்சஸ் பண்ணி, கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்ததும் அவன்தானே!''

''ப்ச்... இப்ப எதுக்கு பழங்கதைஎல்லாம்?''

''ஜெயராமன் யு.எஸ்-ல இருந்தப்போ அங்கேயே ஒரு பொண்ணைக் காதலிச்சு, கல்யாணம் பண்ணிக்கிட்டான். இப்ப மனைவியோடு வந்திருக்கான். இன்னும் ஒரு வாரத்துல அவங்க யு.எஸ். கிளம்பிடுவாங்க. அதுக்கு முன்ன இங்குள்ள நண்பர்களுக்காக ஸ்பெஷலா பார்ட்டி அரேஞ்ஜ் பண்ணியிருக்கான். ஹோட்டல் ரெஸிடென்ஸியில் இன்னிக்கு சாயந்திரம் பார்ட்டி...''

''சரி!''

''நீயும் என்னோடு வரணும்!''

''என்ன, விளையாடறீங்களா? நாமதான் லீகலா பிரிஞ்சுட்டோமே! அதுவும், இன்னிக்குதான் நமக்கு டிவோர்ஸ் கிடைச்ச முதலாம் ஆண்டு. அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா, இல்லையா?''

''எல்லாம் ஞாபகம் இருக்கு! இதோ பார் பொற்கொடி, நீயும் நானும் விவாகரத்து வாங்கினது ஜெயராம னுக்குத் தெரியாது. தெரிஞ்சா தாங்க மாட்டான். எனக்கு இருக்கிற ஒரே ஃப்ரெண்ட் அவன்தான். பார்ட்டிக்கு நீயும் நானும் தம்பதியா வந்து 'விஷ்’ பண்ணணும்னு ரொம்பவும் ஆசைப் படறான். உன்கூட செல்போன்ல பேச நாலைஞ்சு தடவை ட்ரை பண்ணினான். அம்மா வீட்டுக்குப் போயிருக்காங்கனு ஏதேதோ காரணம் சொல்லித் தடுத்துட்டேன். இனியும் அவனை ஏமாத்த முடியாது...''

வேணுகோபாலன்  பேசிக்கொண்டிருக்கும்  போதே, அவனுடைய கண்கள் பனித்தன.

பொற்கொடி தன்னுடைய தோள்களை அலட்சியமாய் 'ஜெர்க்’ செய்தாள். ''எனக்கும் பொற்கொடிக்கும் டிவோர்ஸ் ஆயிடுச்சுனு சொல்லிட்டுப் போகவேண்டியதுதானே? இதுல மூடி மறைக்க என்ன இருக்கு?'' என்றாள்.

''அவனைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும், பொற்கொடி! ரொம்பவும் சென்ஸிட்டிவ் டைப். நாம பிரிச்சுட்டோம்னு தெரிஞ்சா ரொம்ப உடைஞ்சு போவான்! நம்ப பிரச்னை அவனுக்குத் தெரிய வேண்டாம், ப்ளீஸ்! இந்த பார்ட்டி முடிஞ்ச ரெண்டொரு நாள்ல அவங்க யு.எஸ். கிளம்பிப் போயிடுவாங்க. அப்புறம், அஞ்சு வருஷம் கழிச்சு வரானோ, பத்து வருஷம் கழிச்சு வரானோ, பார்த்துக்கலாம்! இதுக்கப்புறம் அவ னுக்கு விஷயம் தெரிஞ்சாலும் பரவாயில்லை!''

பொற்கொடி எதுவும் பேசாமல் மௌனமாக நின்றாள்.

''ப்ளீஸ் பொற்கொடி, மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதே! புது மனைவியோடு வந்திருக்கான். நம்ம விஷயம் அவங்களுக்கு ஓர் உறுத்தலா இருக்க வேணாமேனு பார்க்கிறேன். இந்த ஒரு தடவை மட்டும் ஹெல்ப் பண்ணு. அதுக்கப்புறம் நீ இருக்கிற பக்கம்கூட நான் தலை வெச்சுப் படுக்கமாட்டேன்.''

வேணுகோபாலன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவனுடைய செல்போன், ரிங்டோனை வெளியிட்டது. எடுத்துப் பார்த்தவன் லேசாக பதற்றமானான்... ''பொற்கொடி! லைன்ல ஜெயராமன்!''

''அந்த போனை இப்படிக் குடுங்க!''

- வேணுகோபாலனிடமிருந்து செல்போனை பறித்தாள் பொற்கொடி.

''ப்ளீஸ், நீ எதுவும் அவன்கிட்டே ஏடாகூடமா பேசிடாதே!''

இவன் பதறிக்கொண்டு இருக்கும்போதே, பொற்கொடி செல்போனில் பேச ஆரம்பித்தாள்... ''என்ன ஜெயராமன்! திருட்டுக் கல்யாணமா?''

மறுமுனையில் ஜெயராமன் சிரித்தான். ''அப்படியெல்லாம் இல்லை சிஸ்டர்! யாருக்குமே தகவல் தெரிவிக்க முடியாதபடி, திடுதிப்புனு நடந்துடுச்சு. ஆமா, நீங்க அம்மா வீட்டுக்குப் போயிருக்கிறதா வேணு சொன்னானே, ஊர்ல எல்லாரும் நல்லாருக்காங்களா?''

சத்தமில்லாத யுத்தம்! - சிறுகதை

''ம்... அம்மாவுக்குதான் உடம்பு கொஞ்சம் சரியில்லை. அதான் ஆபீஸுக்கு ஒரு 'லாங் லீவ்’ போட்டுட்டுப் போயிட்டேன். ஆமா, உங்க வொய்ஃப் எப்படி?''

''வெர்னிகானு பேரு. இந்திய வம்சாவளிதான். தமிழ் பேசினா புரிஞ்சுப்பா. இன்னிக்கு சாயந்தரம் நம்ம நண்பர்களுக்கு சின்னதா ஒரு வரவேற்பு. யார் வர்றாங்களோ இல்லையோ, நீங்களும் அந்தத் தடியனும் கட்டாயம் வந்து ஆசீர்வாதம் பண்ணணும்!''

''பண்ணிட்டா போகுது! ஆசீர்வாதம் பண்ண எங்களை மாதிரியான ஒரு பொருத்தமான ஜோடி இந்த உலகத்திலேயே எங்கே தேடினாலும் கிடைக்காது. ஆமா, ரிசப்ஷன் எத்தனை மணிக்கு?''

''ஆறு மணிக்கு!''

''வந்துடறோம்!''

''தடியன் பக்கத்துல இல்லையா?''

''பாத்ரூம்ல இருக்கார்.''

''சரி, அப்புறமா அவன்கிட்டே பேசிக்கிறேன். சாயந்திரம் மீட் பண்ணுவோம்!''

''ஓ.கே!''

பொற்கொடி செல்போனை அணைத்து, வேணுகோபாலனி  டம் நீட்ட, வாங்கிக்கொண்டே, 'தேங்க்ஸ்’ என்றான்.

''ஒரு கண்டிஷன்..!''

''என்ன..?''

''ஃபங்ஷன்ல சரியா ஒரு மணி நேரம்தான் இருப்பேன்!''

''அது போதும்!''

வாசலுக்கு வந்தவள், ரோட் டோரக் கடையில் சுடச்சுட காபி குடித்துவிட்டு, ஆட்டோ பிடித்து ஆபீஸ் போய்ச்சேர்ந்தாள்.

ரியாக ஆறு மணிக்கெல்லாம் ஹோட்டலின் வாசலில் இருந்தாள் பொற்கொடி. வரவேற்பறையில் காத்திருந்த வேணுகோபாலன் போய் எதிர்கொண்டான்.

''தேங்க்ஸ்!''

''வாங்க, போகலாம்..! ரிசப்ஷன் எந்த ஃப்ளோர்ல..?''

''செகண்ட்!''

இருவரும் லிஃப்டில் பயணித்தார்கள். இரண்டாவது மாடியின் வராந்தாவில் நடக்கும்போது பொற்கொடி சொன்னாள்...

''நான் சம்மதிச்சுட்டேன்ங்கிறதுக்காக அங்கே ரொம்பவும் ஈஷிக்க வேணாம்!''

''நோ பிராப்ளம்... நான் ரெண்டடி தள்ளியே இருக்கேன்!''

வண்ண பலூன்களும், காகித தோரணங்களும் அசைந்துகொண்டிருந்த அந்தச் சிறிய கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்குள் நுழைந்தார்கள்.

ஹாலில் யாருமே இல்லை. ஜெயராமனும் அவனுடைய மனைவி வெர்னிகாவும் மட்டும் ஒரு சோபாவில் பக்கம் பக்கமாய் உட்கார்ந்தபடி பேசிக்கொண்டிருந் தார்கள்.

இருவரும் அவர்களை நெருங்கினார்கள். வேணுகோபாலன் கேட்டான்... ''என்னடா, ஃபங்ஷன் ஆறு மணிக்குன்னு சொன்னே! இங்கே யாரையும் காணோமே..?''

''வருவாங்க. உட்காருடா! பை த பை, ஷி ஈஸ் மை பெட்டர் ஹாஃப் வெர்னிகா!''

அந்த வெர்னிகா ஆரோக்கியமான ஈறுகளைக் காட்டிச் சிரித்து, ''ப்ளீஸ் டு மீட் யூ'' என்று சொல்லி, வேணுவின் கைகளைப் பற்றிக் குலுக்கினாள்.

பொற்கொடி எரிச்சலோடு உட்கார்ந்தாள்.

''என்ன ஜெயராமன், இப்படி லேட்டாகும்னு தெரிஞ்சுருந்தா நாங்களும் நிதானமாவே வந்திருப்போமே!'' என்றாள் சலிப்பு எட்டிப் பார்க்கும் குரலில்.

''அதனால என்ன சிஸ்டர், கொஞ் சம் நேரம் பேசிட்டிருப்போமே?''

பொற்கொடி வேணுகோபா லனை முறைக்க, அவன் கண்களால் 'ப்ளீஸ்’ என்றான்.

''ஜெயராமன்!''

''சொல்லுங்க சிஸ்டர்!''

''எனக்கு ஏழு மணிக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு...''

''அது என்ன உங்களுக்கு மட்டும் முக்கியமான வேலை. இந்தத் தடியனுக்கு அதுல பங்கு கிடையாதா..?''

''அது... வந்து...''

''வேண்டாம் சிஸ்டர், எனக்குப் பொய் சொல்றவங்களைக் கண்டா பிடிக்காது!''

''நான் எதுக்காகப் பொய் சொல்லணும்..?''

''இன்னிக்கு உங்க ரெண்டு பேருக்கும் டிவோர்ஸ் கிடைச்ச நாள். உண்மையா?''

அதிர்ந்து போனவனாய் நிமிர்ந்தான் வேணுகோபாலன். ''என்னடா... நீயும் சிஸ்டரும் கண்ணை மூடிக்கிட்டா இந்த உலகமே இருண்டு போயிடும்னு நினைச்சீங்களா?''

பொற்கொடியின் முகத்திலும் திகைப்பு பரவியது. ''ஜெயராமன்! நீங்க என்ன சொல்றீங்க..?''

''உங்க ரெண்டு பேருக்கும் டிவோர்ஸ் கிடைச்ச பின்னாடி நீங்க ரெண்டு பேருமே சந்தோஷமா இல்லை. சந்தோஷமா இருக்கிற மாதிரியும், தைரியமா இருக்கிற மாதிரியும் நடிச்சுட்டு இருக்கீங்க...''

''அப்படீனு யார் சொன்னது..?''

''வண்டார்குழலி!''

''அது யாரு வண்டார்குழலி?''

''சாயிபாபா காலனியில், 'மயிலிறகு’ என்கிற பேர்ல ஒரு கவுன்சலிங் சென்டர் இருக்கே, தெரியுமா? உங்களுக்குத் தெரியாம என்ன... வாழ்க்கையில் விரக்தி அடைஞ்ச நபர்களுக்கு ஆறுதலும் தேடுதலும் சொல்லும் அமைப்பு அது. அந்த அமைப் போட கன்வீனர்தான் வண்டார் குழலி. எனக்கு ஒருவகையில அவங்க தூரத்து உறவு. கடந்த ஆறு மாச காலத்துல, நீங்களும் இந்தத் தடியனும் அஞ்சு தடவை கவுன்சலிங் போயிருக்கீங்க. 'என் கணவரோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போயிருந்திருக்கலாம். அவசரப்பட்டுட்டேன்’னு நீங்களும், 'பொற்கொடி ரொம்பவும் நல்லவ! எனக்கிருந்த சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்ல நான்தான் அவகிட்டே உதாசீனமா நடந்துகிட்டேன்’னு இந்தத் தடியனும் கண்ணீர் விடாத குறையா புலம்பியிருக்கீங்க. 'ஸ்ட்ரெஸ் காரணமா நிம்மதியா சாப்பிட முடியல, ஒரு ரெண்டு மணி நேரம் சேர்ந்த மாதிரி நிம் மதியா தூங்க முடியல’னு உங்க தவிப்பைக் கொட்டியிருக்கீங்க.

இருந்தாலும், எந்த வருத்தத்தையும் காட்டிக்காம, தைரியமா இருக்கிற மாதிரி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கீங்க. முகமூடி போடாத குறையா மத்தவங்க முன்ன சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிச்சிருக்கீங்க. ஆனால், உண்மையில் உங்க ரெண்டு பேருக் குமே மறுபடியும் சேர்ந்து வாழ ணும்னு ஆசை. ஆனாலும், முடியலை.

ஏன்..?

ஏன்னா, ரெண்டு பேருமே 'ஈகோ’ங்கிற போர்வாளைத் தூக்கிட்டு அலைஞ்சுட்டிருக்கீங்க. கைகள்ல போர்வாள் இருக்கும்போது, எதிராளியோடு சண்டை போடத்தானே தோணும்? யாராவது ஒருத்தர் மொதல்ல வாளைக் கீழே போட்டாலும் போதும், அங்கே சமாதானக் கொடி பறக்கும் என்கிற உண்மை உங்களுக்குப் புரியாம போனதுதான் ஆச்சர்யம்! பிரியறதுக்கு ஒரு விநாடி சிந்தனை போதும்; ஆனா, வாழற துக்கு ஒவ்வொரு விநாடியும் சிந் தனை தேவை. இந்த உண்மையை புரிஞ்சுக்கிட்ட கணவன் - மனைவி யாரும் டிவோர்ஸ் கேட்டு கோர்ட் படி ஏற மாட்டாங்க!''

பொற்கொடி சில விநாடிகள் மௌனமாக இருந்துவிட்டு, ஜெயராமனை ஏறிட்டுக் கேட்டாள்... ''சத்தம் கேட்டுதா?''

''சத்தமா... என்ன சத்தம்?''

''நான் என்னோட போர்வாளைக் கீழே போட்ட சத்தம்!''

ஜெயராமன் வேணுகோபாலனிடம் திரும்பி, ''நீ இன்னும் போடலையா?'' என்றான்.

''நான் அதை, இங்கே நுழையறதுக்கு முன்னே, வாசல்லேயே போட்டுட்டேன்!''

வெர்னிகா இரண்டு அட்டைப் பெட்டிகளை எடுத்து அவர்களிடம் நீட்டியவாறு, புன்னகையோடு சொன்னாள்...

''இன்னும் அரை மணி நேரத்துக்குள்ளே ரிசப்ஷன் ஆரம்பம். எங்களுக்கு இல்லை; உங்க ரெண்டு பேருக்கும்தான். இதோ புது டிரெஸ். அந்த ரூமுக்குப் போய் மாத்திட்டு வாங்க!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism