Published:Updated:

பேரு மாறிப்போச் !

விழியன் படங்கள் : பாலு

பிரீமியம் ஸ்டோரி

சரண்யாவுக்கு பெயர் மாற்றி விளையாடும் விளையாட்டு மிகவும் பிடிக்கும். தன் தோழிகள் வீட்டுக்குச் சென்றால்... அவள் பெயரை மாற்றி், தோழி பெயரை வைத்துக்கொள்வாள். இவள் பெயரைத்  தோழிக்குக் கொடுத்துவிடுவாள். அப்படித்தான், ஒருநாள் குழலி வீட்டில் பெயர் மாற்றி விளையாடிக் கொண்டிருந்தபோது, குழலியின் பெற்றோர் வெளியே கிளம்பியதால், அவசர அவரமாக குழலியைக் கூட்டிச் சென்றுவிட்டார்கள். குழலியுடன் சரண்யாவின் பெயரும் சென்றுவிட்டது. ‘குழலி’ என்ற பெயர் நன்றாக இருந்ததால், சரண்யாவும் சந்தோஷமாகத் தன் வீட்டை நோக்கி நடந்தாள்.

அவள் வீட்டை அடைய ஒரு மலையைக் கடக்க வேண்டும். அப்போது, ஒரு கறுப்புக் குதிரை எதிரே வந்தது. அந்தக் குதிரையிடம், அது செல்லும் பக்கமாகத் தன்னையும் ஏற்றிச்செல்லுமாறு கேட்டாள். சரி என ஒப்புக்கொண்டது குதிரை.

“உன் பெயர் என்ன?” என்று குழலி பெயரில் இருந்த சரண்யா கேட்க, “ப்ளாக் பியூட்டி... கறுப்பழகி” என்றது குதிரை. “ஓ... அன்னா சீவல் எழுதிய, ‘கறுப்பு அழகி’ நாவலில் வரும் குதிரை நீதானா?” என வியந்தவள், ‘‘சரி, நாம பெயரை மாற்றிக்கொள்வோமா?” என்று கேட்டாள்.
 

‘குழலி’ என்ற பெயரைக் குதிரைக்கும் ‘கறுப்பழகி’யைத் தனக்கும் எடுத்துக்கொண்டாள்.

பேரு மாறிப்போச் !

குதிரை வேறு பக்கம் சென்றதால், இறங்கி நடக்க ஆரம்பித்தாள். தன் பின்னால் ஒருவர் பின்தொடர்வதைக் கவனித்தாள். ரொம்ப உயரமாக, பயங்கர வலிமை வாய்ந்தவராக இருந்தார் அவர்.

‘‘மாமா, எனக்கு கால் வலிக்கி்றது கொஞ்சம் தூக்கிக்கொண்டு செல்கி்றீர்களா?” என்றாள் தைரியமாக.

அவரும் சரி என்றார். ‘‘உங்க பெயர் என்ன மாமா?” என்றாள். “கோலியாத்” என்றார் அவர்.

‘‘டேவிட் வீழ்த்திய கோலியாத் நீங்கள்தானா?’’  என்றவள், தன் வழக்கமான வேலையைச் செய்தாள். கறுப்பழகி பெயரை கோலியாத் கொஞ்சம் தயக்கத்துடன் பெற்றுக்கொண்டு, தனது பெயரைக் கொடுத்தார்.

ஒரு வீராங்கனை போல கம்பீரமாக வீடு சேர்ந்தாள்.  அவள் அம்மா, மாலை உணவு கொடுத்தாள். சுவையாக இருந்தது. வழக்கத்துக்கு மாறாக நிறையச் சாப்பிட்டாள். “சரண்யா, நீயேவா இதை எல்லாம் சாப்பிட்டே?” என்று அம்மா வியந்தாள்.

பேரு மாறிப்போச் !

“ஹா... ஹா... ஹா... நான் சரண்யா இல்லை, நான் கோலியாத்” என்று நடந்ததை விவரித்தவள், திடீரென சரண்யா பெயர் வேண்டும் என்றாள்.
ஆனால், அந்தப் பெயர் இப்போது குழலியிடம் இருக்கி்றது. இருட்டத் துவங்கிவிட்டதால், சிறுமியின் தாயே குழலி வீட்டுக்குச் சென்று பெயர் மாற்றி வருவதாகத் தெரிவித்தாள். ஆனால், குழலியின் பெயர் குதிரையிடமும், குதிரையின் பெயர் அந்தப் பெரிய வீரனிடமும் இருக்கி்றது அல்லவா?

அதனால், தாயின் பெயரான ‘அன்பரசி’யை மகளுக்குக் கொடுத்துவிட்டு, கோலியாத் பெயரை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

அந்த வீரனை வழியில் சந்தித்தாள். வீட்டில் இருந்து எடுத்துவந்த பழங்களை அவனுக்குக் கொடுத்துவிட்டு, பெயர்களை மாற்றிக்கொண்டாள். இருட்டிவிட்டதால் தானும் துணைக்கு வருவதாகச் சொன்னான் கோலியாத்.

பேரு மாறிப்போச் !

கறுப்புக் குதிரையைத் தேடிச்சென்றார்கள். அது ஒரு மரத்தின் நிழலில் நின்றது. மெள்ள அதன் முதுகில் வருடி, அதற்கும் சில பழங்களைக் கொடுத்துவிட்டு, குழலியின் பெயரை வாங்கினார். ‘‘வாங்க, வேகமாக குழலி வீட்டுக்குப் போகலாம். என் மீது அமருங்கள்’’ என்றது கறுப்பழகி. குழலியின் வீட்டை அடைந்தபோது, குழலியும் அவளுக்குத் தன் பெயர் வேண்டும் என அழுதுகொண்டிருந்தாள். சரண்யாவின் அம்மா, அங்கே சென்று பெயரை மாற்றினார். நன்றாக இருட்டத் துவங்கியது.

கறுப்பழகியும் கோலியாத்தும்,  சரண்யாவின் அம்மாவை அவர் வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். வாசலிலேயே காத்திருந்த மகள், தன் பெயரை அம்மாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதும் மிகவும் மகிழ்ந்தாள்.

வணக்கம் சொல்லிவிட்டு, கறுப்பழகியும் கோலியாத்தும் விடைபெற்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு