Published:Updated:

செல்வி இந்திரமாலினியின் இரண்டாம் திருமணம்!

சுபா, ஓவியம்: ஸ்யாம்

செல்வி இந்திரமாலினியின் இரண்டாம் திருமணம்!

சுபா, ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:

றைக்கு வெளியே 'செல்வி இந்திரமாலினி, பதிப்பாளர், தங்கத்தாமரை பதிப்பகம்’ என்று பொறிக்கப்பட்ட பித்தளை பெயர்ப் பலகை!

அறையில் இந்திரமாலினி சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தாள். எதிரில் வனதுர்கா. இடையில் மேஜையில் ஒரு டிஜிட்டல் ரிக்கார்டர்.

'கேள்வியெல்லாம் முடிஞ்சதா? என் வெற்றிக்கதையைப் பதிவு பண்ணிக்கிட்டியா?' என்று இந்திரமாலினி புன்னகையுடன் கேட்டாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வனதுர்கா, ரிக்கார்டரை எடுத்துக் கைப்பையில் வைத்துக்கொண்டாள்.

'ஒம் பேர் எனக்குப் புடிச்சிருக்கு. உங்க பத்திரிகையில வனதுர்காங்கற பேர்ல எந்த மேட்டர் வந்தாலும் உடனே படிச்சிடுவேன். ஒன் எழுத்தும் எனக்குப் புடிக்கும். சொந்தப் பேரா, புனைபெயரா...?'

'புனைபெயர்தான் மேடம். உண்மையை மட்டுந்தான் எழுதணும்னு நெனைச்சேன். அதுக்கு இந்தப் பேர் பொருத்தமா தோணுச்சி..' என்றவள், 'உங்களை பர்சனலா ஒண்ணு கேக்கலாமா மேடம்?' என்று தயங்கினாள்.

இந்திரமாலினி அவளைப் பார்த்தாள். அகன்ற கண்கள். அவற்றில் பளபளப்பு. அளவான நெற்றியில் சின்னதாகத் திலகம். நீளமூக்கின் நுனியில் ஒரு கடுகு மச்சம். சின்ன உதடுகள். எதனாலோ அவளுக்கு வனதுர்காவைப் பிடித்துப் போய்விட்டது.  

'ம்.. கேளேன்...'

'உங்களுக்கு என்ன வயசு மேடம்?'

'நாற்பத்திரண்டு.'

செல்வி இந்திரமாலினியின் இரண்டாம் திருமணம்!

'வாவ்... நம்பவே முடியல.. அவ்வளவு அழகா இருக்கீங்க.. பதிப்பகத் துறையில இவ்வளவு சாதிச்சிருக்கீங்க.. உங்க வெற்றிக்குப் பின்னால இருக்கற ஆண் யாரு மேடம்?'

'நான் செல்வி இந்திரமாலினி...'

'யூ மீன்... நீங்க இன்னும் கல்யாணமே பண்ணிக்கலையா?'

இந்திரமாலினி தன்னுடைய அகவாழ்வைப் பற்றி வெளியில் சொன்னதில்லை. மற்றவர்கள் தன்னுடைய அந்தரங்கத்தில் எட்டிப் பார்க்க முயன்றாலும் கோபம் வரும். இப்போது வரவில்லை.

'அது ஒரு துன்பியல் நிகழ்வு...' என்று கூறிச் சிரித்தாள் இந்திரமாலினி.

வனதுர்காவுக்காக உதடுகளில் சிரிப்பை அணிந்துகொண்டாளே தவிர, உள்ளத்தில் நீண்ட நாட்களாக அடக்கி வைத்திருந்த ஒரு எரிமலை வெடிக்கத்தான் செய்தது இந்திரமாலினிக்கு.

ன்றைக்கு மழை காரணமாக பவர்கட். காஞ்சனாக்குட்டி சீக்கிரமே தூங்கிப் போயிருந்தது. எண்ணெய் விளக்கின் ஒளியில் குழந்தை தேவதையாக ஜொலித்தாள். இந்திரா ஜன்னலின் ஊடே வெளியே பார்த்தாள். ஊரே இருண்டிருந்தது.

இன்னும் வளர்ச்சி காணாத பிரதேசம். வீடுகள் ஒன்றோடு ஒன்று முறைத்துக்கொண்ட மாதிரி இங்கொன்றும், அங்கொன்றுமாய் முளைத்திருந்தன.

பாஸ்கர் மீது கோபம் வந்தது. மாதத்தில் இருபது நாட்கள் ஊர் ஊராய் சுற்றுகிற வேலையை வைத்துக்கொண்டு, இளம் மனைவியையும், இரண்டு வயதுக் குழந்தையையும் இந்த மாதிரி விட்டுப் போகிறவன், திருச்சியின் மையத்திலேயே வீடு தேடியிருக்கலாம் என்று அவனிடமே புலம்பியிருக்கிறாள். 'வாடகை கம்மி’ என்பதுதான் எப்போதும் அவன் பதில்.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் 'அங்கே திருட்டு, இங்கே கொள்ளை’ என்று தினம், தினம் ஏதாவது சொல்லி அவளைப் பயமுறுத்திக்கொண்டிருந்தார்கள்.  

ஜன்னல் திரையை இழுத்துவிட்டு காஞ்சனாக்குட்டிக்கு அருகில் படுத்துக்கொண்டாள். காலையில் பாஸ்கர் வந்துவிடுவான் என்ற நினைப்பு சற்று ஆறுதல் தந்தது.

அந்த நள்ளிரவில், திடீரென்று வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம். கதவருகே சென்று 'யாரு?' என்று சத்தமாக கேட்டாள்.

'உங்க ஹஸ்பெண்டுக்கு ஆக்ஸிடென்ட்... ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணியிருக்காங்கம்மா...'

கணவனுக்கு விபத்து என்றவுடன் எதையும் யோசிக்கத் தோன்றவில்லை. பதற்றத்துடன் கதவைத் திறந்தாள். மழைச்சாரல் அவள் மீது திரையாய்ப் படர்ந்த கணத்தில் அவன் உள்ளே நுழைந்தான்.

அரை வெளிச்சம். ஏதோ தப்பு நடக்கப்போகிறது என உள்ளுணர்வு எச்சரிக்க, சிறிது திகில் தாக்கி அலற வாய் திறந்தபோது, கப்பென்று அவன் கை, அவள் வாயைப் பொத்தியது. இன்னொரு கை கதவைத் தாளிட்டது.

இந்திரா திமிறினாள். நெளிந்தாள். அவன் விரல்களைக் கடித்தாள். அவன் நெஞ்சைக் குத்தினாள். கால்களால் தரையில் மோதித் துள்ளினாள். கரடி மாதிரி அவன் பிடிப்பை விடாமல் அவளைப் பின்புறமாய்த் தள்ளி நகர்த்தினான். அவள் மறுபடியும் உதறிக்கொண்டபோது அவளது இடது தோளில் கழுத்தருகே அடித்தான். தாங்கமுடியாத வலி. கண்கள் இருண்டன.

'வேண்டாம்... விட்டுடு... நான் கல்யாணமானவ... கொழந்தை வேற இருக்கு...' என்று என்னென்னவோ இறைஞ்சுகிற மாதிரி மனதுக்குப்பட்டது.

மறுநாள் காலையில் முகத்தில் தெளிக்கப்பட்ட தண்ணீரின் சில்லிப்போடு விழித்தபோது 'இந்திரா.. இந்து.. என்ன ஆச்சு?' என்ற பதற்றக் கேள்வியுடன் பாஸ்கரின் முகம் அவளது கண்களின் அருகே தெரிந்தது.  

அறையில் சூரிய ஒளி. சட்டென்று அத்தனையும் நினைவுக்கு வர, இந்திரா பதறி எழுந்தாள். மூலையில் எறியப்பட்டிருந்த புடவையை அவசரமாய் அள்ளி மார்போடு சேர்த்துக்கொண்டாள்.

'கதவு திறந்து கிடக்குதேன்னு பதறிட்டே உள்ளே வந்தா நீ இந்த மாதிரி மயங்கிக் கெடக்கறே.. என்னாச்சும்மா?'

பாஸ்கர் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். துக்கம் பொங்கியது. இந்திரா கதறலுடன் கூறினாள்.

'என்ன இந்திரா, முட்டாள்தனம் பண்ணிட்ட? யாருன்னு தெரியாம கதவைத் திறக்கலாமா?'

இந்திரா மூலையில் முடங்கினாள். தன்னிச்சையாகக் கண்கள் கண்ணீரை வெளியேற்றின. உதடுகள் துடித்தன. விலகாத கிலி உடம்பை நடுக்கிக்கொண்டிருந்தது. அவளை மட்டுமல்லாமல், வீட்டையும் சேர்த்துக் கொள்ளையடித்து விட்டுப் போயிருந்தான் வந்தவன்.

போலீஸில் சொல்வதா வேண்டாமா என்று அலசி விட்டு சொன்னால் அவமானம் என்பதால் சொல்ல வேண்டாமென்று தீர்மானித்தான் பாஸ்கர்.

இந்திராவுக்குத்தான் மனதும், உடம்பும் சமாதானப்படாமல் தவித்துக்கொண்டிருந்தன. மழையில் தூக்கி எறியப்பட்ட கோழிக்குஞ்சு மாதிரி உடம்பு உதறிக்கொண்டே இருந்தது.

அன்றைய தினத்துக்குப் பிறகு பாஸ்கர் கொஞ்சம் கொஞ்சமாக மாறிப் போனான்.

ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக் கதவைத் திறந்து போட்டு விட்டு விடியற்காலையிலேயே வெளியே போய்த் திரும்பி வந்தான்.  'மனசுல ஏதோ குழப்பம்... கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாம் போல இருந்தது' என்று அவளை ஏறிட்டுப் பார்க்காமலேயே பேசினான். 'அவன் எப்படியிருந்தான் இந்திரா?'

சொடுக்கிய சாட்டை மாதிரி அந்தக் கேள்வி அவள் மேல் பாய்ந்தது. சுரீரென்ற வலியுடன் அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

'ம்ஹ்ம்ஹ்ம்' என்று முனகலாய் கிளம்பி விம்மல் பிறந்தது.

'ஏய்... என்னத்துக்கு இப்ப அழற.. ம்? ச்சே... என் நிம்மதியே போச்சு...'

அலுவலகத்துக்குப் புறப்படும் போது, 'ஒழுங்காக் கதவைத் தாப்பாள் போட்டு வெச்சிக்க... கண்டவனுக்கும் திறந்து விடாதே...' என்று வார்த்தைகளை இறைத்து விட்டுப் போனான்.

அது ஆரம்பம்தான்!

ராத்திரிகளில் அவளுடைய ஸ்பரிஸம் அவனை தீ மாதிரி சுட்டது. விலகிப் படுத்துக்கொண்டான். அவளை நேரடியாகப் பார்த்து பேசுவதை தவிர்த்தான். அப்படியே முகம் பார்த்துப் பேசினால் கேள்விகள்தான்.

'அவன் எப்படி இருந்தான்?'

'அவனை முன்ன பின்ன பாத்திருக்கியா...?'

'அன்னிக்கு உன்னை என்னெல்லாம் செய்தான்...? குழந்தை முழிச்சுக்கவே இல்லியா..?'

'நெஜமாவே மயக்கமாயிட்டியா... இல்லை...?'

'என் கொழந்தையைத் தொடாதே.. அதுக்கும் ஒன்னை மாதிரி சொரணையில்லாம எல்லாமே மரத்துப் போய்டப் போவுது...'

அவன் மறுபடி அலுவலக வேலையாக டூர் போனபோது, ஒரு நள்ளிரவில் காஞ்சனாவை திடீரென்று காய்ச்சல் தாக்கியது.

கவலையும், பயமும் மாற்றி மாற்றித் தாக்க, இந்திரா குழப்பத்தோடு இரவு முழுக்க குழந்தையின் அருகில் விழித்திருந்தாள். விடிகிற நேரத்தில் கதவு தட்டப்பட்டது. உடலில் நடுக்கத்துடன், 'யாரு?' என்று கேட்டாள்.

'நான்தான்...'

பாஸ்கரின் குரல். அவசரமாய்த் திறந்து விட்டாள்.

'நீங்க எப்ப வரப் போறீங்கன்னு காத்திட்டிருந்தேன்' என்றாள்.

அவன் அவளைப் பார்த்தான். 'ஏன் அவன் மறுபடியும் வந்தானா?'

'காஞ்சனாவுக்கு திடீர்னு ஜுரம்... உடம்பெல்லாம் கொதிக்குது...'

செல்வி இந்திரமாலினியின் இரண்டாம் திருமணம்!

பாஸ்கர் முகத்தில் பதற்றம் வந்தது. காஞ்சனாவைத் தொட்டுப் பார்த்து, 'எப்பலேர்ந்து?' என்று கேட்டான்,

'நேத்து ராத்திரிலேர்ந்து...'

'டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போக வேண்டியது தானே?'

'ராத்திரி தனியா எப்படீங்க போறது...?'

'ஏன்? தனியாப் போனா என்ன ஆயிடும்? புதுசா எதுவும் ஆயிடாதே... குழந்தையை டாக்டர்கிட்ட கூட கூட்டிட்டுப் போகாம அப்படி வீட்டுக்குள்ளேயே உக்காந்து எதைக் காப்பாத்திட்டே?'

காஞ்சனாவை வாரி எடுத்துக்கொண்டு அவன் படியிறங்கிப் போனான். குழந்தைக்கு சாதாரண காய்ச்சல்தான் என்று டாக்டர் மருந்து கொடுத்திருந்தார்.

ஒரு மாதம் கழித்து ஒரு நாள் வக்கீலிடமிருந்து அவள் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. நடுங்கும் கரங்களுடன் பிரித்தாள். விவாகரத்து நோட்டீஸ்.

இந்திராவின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. துக்கமும், தன்னிரக்கமும் நெஞ்சை வதைத்தன. ஓர் உந்துதலில் பேப்பரும், பேனாவும் எடுத்தாள்.

'அன்புள்ள கணவருக்கு,  

எவனோ முகம் தெரியாத ஒருவன் அவனுடைய வெறியைத் தீர்த்துக்கொண்டான். உண்மைதான். அவன் என் உடலை மட்டும் ஒரே ஒரு நாள் நாசமாக்கினான். ஆனால் நீங்கள்..? தினம் தினம், அந்த இரவைப் பற்றியும், அவனைப் பற்றியும் மறுபடி மறுபடி சந்தேகக் கேள்விகளாய்க் கேட்டீர்கள். என் அண்மையும், ஸ்பரிஸமும் உங்களுக்கு அருவருப்பாகிவிட்டன. உங்கள் பார்வை யும், கேள்விகளும் என் மனதை தினம் தினம் கற்பழிக்கின்றன. இப்போது விவாகரத்து நோட்டீஸ். இந்த விவகாரம் கோர்ட்டுக்கெல்லாம் போய் வெட்ட வெளிச்சமாக வேண்டாம். நானே விலகிக்கொள்கிறேன். குழந்தையை பக்கத்து வீட்டில் கொஞ்சுவதற்கு அழைத்துப் போயிருக்கிறார்கள். அது உங்களிடமே வளரட்டும். நான் வளர்த்தால்தான் அதன் வாழ்க்கையும் வீணாகிவிடுமே..!

- இந்திரா'

'மேடம்...' வனதுர்காவின் சற்றே உரத்த குரல், இந்திராவை உலுக்கியது. நினைவிலிருந்து மீண்டு அவளைப் பார்த்தாள்.

''சொல்லும்மா..!''

'ஒரு சின்ன ஆப்ளிகேஷன்...'

'என்ன?'

'அப்பாவோடதான் வந்தேன். ரிசப்ஷன்ல வெயிட் பண்றாரு. உங்கள பார்த்து பேச முடியுமானு கேட்டாரு?''

'அதுக்கென்ன வரச்சொல்லு...'

அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவரைப் பார்த்ததும் இந்திரமாலினி அதிர்ந்து போனாள். பாஸ்கரேதான்!

இந்திரமாலினி, வனதுர்காவின் பக்கம் திரும்பினாள். வனதுர்காவின் கண்களில் நீர் வழிந்துகொண்டிருந்தது. ஓடிவந்து இந்திரமாலினியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள்.

'என்னை மன்னிச்சிடும்மா... நீதான் அம்மான்னு எனக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் தெரியும். அப்பாவை விட்டு ஏன் பிரிஞ்சு போனேங்கற விஷயமும் அப்பா சொல்லித்தான் தெரியும். அப்பா செஞ்சது தப்புனு அவருக்குப் புரிய வைக்கறதுக்குக் கொஞ்சம் லேட்டாகிடுச்சு.. புரிஞ்சுக்கிட்டாரு... மன்னிப்பு கேக்கத்தான் வந்திருக்காரு..'

பாஸ்கரின் கண்களில் பெருக்கெடுத்தது நீர். ' 'கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு கணவன் ஏதாவது ஒரு வகைல ஊனமாய்ட்டா அவனை டைவர்ஸ் பண்ணிட்டுப் போன ஒரு பொண்ணையாவது காமிங்கப்பா’னு காஞ்சனா என் மூஞ்சில துப்பினா...

'ஒருவேளை எனக்கு அந்த மாதிரி ஏதாவது ஆயிட்டா, அதை மறைச்சு வெச்சு யாரோ ஒருத்தனுக்கு என்னைக் கட்டி வெப்பீங்களா, மாட்டீங்களா?’னு கேட்டா... செருப்பால அடிச்ச மாதிரியிருந்துச்சு.''

கும்பிட்டான். 'ஸாரிம்மா... ரொம்ப ரொம்ப ஸாரி. என்னை மன்னிச்சு ஏத்துக்க இந்திரா...'

இந்திரமாலினியின் சக்சஸ் ஸ்டோரி, அந்த பாப்புலர் மேகஸினில் அட்டைப்படக் கட்டுரையாக வெளியான அன்று, வடபழனி கோயிலில் செல்வன் பாஸ்கரோடு, மகள் காஞ்சனா என்னும் வனதுர்காவின் முன்னிலையில், செல்வி இந்திரமாலினியின் இரண்டாவது திருமணம் சிறப்பாக நடந்தேறியது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism