Published:Updated:

`பழமொழிக்குள் ஒளிந்திருக்கும் கதைகள்!' - வியக்க வைத்த நவீன நாடகம்

`பாட்டிகளும் பழமொழிக் கதைகளும்' நவீன நாடகம் சென்னை பெசன்ட் நகர் 'ஸ்பேசஸ்' அரங்கில் நடைபெற்றது.

நவீன நாடகம்
நவீன நாடகம்

பாட்டி என்றதும் நம் மனத்திரையில் சில கதைகள் விரியும். `ஒரு ஊர்ல ஒரு ராஜா' என்று பாட்டி கதையைச் சொல்ல ஆரம்பிப்பாள். பல இரவுகள் நம்மை உறங்க வைக்கும் சூட்சுமத்தைப் பாட்டிகள் அறிந்து வைத்திருந்தனர். கதை மட்டும் சொல்லாமல் நடுவில் பழமொழிகளும் சொல்வாள் பாட்டி. அந்தப் பழமொழிகளும், சொலவடைகளும் நம்ஆதிகாலக் கதைகளின், தொன்மத்தின் தொடர்ச்சியாக வழக்கில் இருப்பவை. பழமொழிக் கதைகள் என்ற வகைமையே நம் இலக்கியத்தில் உள்ளது.

கைப்பேசிகளில் இணையக் கதைகள் கேட்கும் சமகாலச்சூழலில் பாட்டிகளையும், பழமொழிகளையும் நமக்கு நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது 'பாட்டிகளும் பழமொழிக் கதைகளும்' நவீன நாடகம்.

நவீன நாடகம்
நவீன நாடகம்

இருளும் ஒளியும் இணைந்திருந்த அரங்கில், பாட்டி வேடமணிந்த நாடகக் கலைஞர்கள் தங்கள் கையில் முறம், பானையுடன் அரங்கில் நுழைந்தனர். வந்தவர்கள் 'பேரக் குழந்தைகளா ! வாங்கடா வாங்க! எனப் பார்வையாளர்களை வரவேற்றனர். ஒளி இப்போது முழுவதுமாக மேடையை ஆக்கிரமித்திருந்தது. நான்கு பாட்டிகளும் மேடையில் அமர்ந்து கதைக்கத் தொடங்கினர். அவர்களின் உரையாடலில் சமகால அரசியலும் பொதிந்திருந்தன. உரையாடல் கதையாகி பார்வையாளர்களுக்குக் கதை சொல்ல ஆரம்பித்தனர். ஒவ்வொரு கதை தொடங்குவதற்கு முன் ஒரு பழமொழி. அந்தப் பழமொழியை விளக்குவதாக விரியும் அக்கதை.

'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்ற பழமொழியைச் சொல்லிவிட்டு, எளியவர்களின் குரல் அதிகார மட்டத்திலிருப்பவர்களின் செவிகளில் சேர்வது அரிது. இந்தக் கருத்தை ராஜாவின் கதையைச் சொல்லி விளக்கம் கொடுத்தனர். பாட்டிகள் சொன்ன கதைகளை, 'ம்ம்' கொட்டி கைதட்டி வரவேற்றனர் பார்வையாளர்கள். திடீரென பாட்டிகள் கதைகளின் போக்கில் கும்மி அடிக்க பார்வையாளர்களும் உட்கார்ந்தபடியே கும்மி அடித்த நிகழ்ச்சி கிராமத்தின் திருவிழாக்களை நினைவூட்டும் வகையில் அமைந்தது. கதைகளின் நடுவே `ஒப்பாரி' வழியே கதை சொல்ல, பார்வையாளர்கள் பலருக்கும் அது புதுவித அனுபவமாக இருந்தது.

பகு
பகு

பாட்டிகள் பழமொழிக்கும், கதைகளுக்கும் சமகால அரசியல் நிகழ்வுகளைப் புனைவாக்கிச் சொன்னவிதம் பார்வையாளர்களைக் கவர்ந்தது. நாடகத்தை எழுதி இயக்கிய பகுவிடம் பேசியபோது, ``இப்போது பழமொழி கலந்து பேசும் வழக்கம் மக்களிடையே குறைந்துவிட்டது. இணையங்களில் ஒலி- ஒளி வடிவில் கதை கேட்கிறார்கள். கதை சொல்லும் வழக்கம் குறைந்துவிட்டது. கதை சொல்லும் மரபு இந்தத் தலைமுறைக்கும் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாகியதே இந்நாடகம்" என்றார்.