Published:Updated:

கொரோனாவிடம் கருணை மனு! - மருத்துவர் கு.சிவராமன்

கொரோனா வைரஸ் குறித்து உலகமே உதறலில் இருக்க, அந்த வைரஸிடம் ஒரு கரிசன பேச்சுவார்த்தை நடத்துவது போல மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் படைத்த கவிதை...

போதும் நிறுத்து

தோழா

இன்னும் கூட நீ

நண்பன்தான்.

உன்

கோடானு கோடி

கூட்டத்தில்

நீ மட்டும்

வெறிகொண்டு

ஆடுவது

எதனால்? புரியவில்லை!

கொரோனா
கொரோனா

பிரபஞ்சத்தைச் சூடாக்கி

ஆழ்கடலை அச்சுறுத்தி

காற்றைக் கலங்கமாக்கி

விண்ணைக் கண்ணீர் சிந்தவிட்டதாலா?

உன் உறவைச் சிதைத்து

உருமாற்றி ஊரைப்

பயமுறத்த உலவவிட்ட

உயிர்தொழில் நுட்ப பயங்கரமா?

எனக்கு மட்டும் உலகம்

என் பசிக்கு மட்டும் சோறு

என் தோலுக்கு மட்டும் நறுமணம்

என் நோய்க்கு மட்டும் மருந்து

என் இளைப்பாறலுக்கு மட்டும் நிழல்

என் சன்னதிக்கு மட்டும் சாமி

என் சந்ததிக்கு மட்டும் சாளரம்

எனும் எங்கள்

சுயநலக் குரூரத்தின் மீதான கோபமா?

கொரோனா
கொரோனா

எங்கள் எல்லையை

சுரண்டுபவர்தாம் அவர்!

எங்கள் மலையை

எட்டிப்பார்த்தவர்தாம் அவர்!

எங்கள் எதிரிகளுக்கு

இனாம் அளிப்பவர்தாம் அவர்!

எங்கள் தொழிலுக்கு

தொடர் போட்டிதாம் அவர்!

ஆனாலும்,

எங்களவர் அவர்.

"எங்கள்" எனும்

போலிக் கோட்டை

எங்களைப் போன்றே

போட்டுக்கொண்டவர் அவர்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்கள் புத்தத்தை

உலகறியச் செய்தவர் அவர்

எங்கள் மரபின்

இன்னொரு நீட்சி அவர்.

எங்கள் ஒவ்வோர் அசைவின்

ஒரு இயந்திரக் கூறு அவர்.

மண்ணில் இருந்து

மருந்து வரை

விண்ணில் இருந்து

வீட்டுபொம்மை வரை

ஆலையில் இருந்து

ஆடை வரை

"அவனின்றி ஒரு அணுவும் அசையாது"

என ஆக்ரமித்தவர் அவர்

அவரை விட்டுவிடு தோழா!

போதும் உன் வெறியாட்டம்.

கொரோனா
கொரோனா

தொடங்கிற்று

எங்கள் தேசத்துக்குள்ளும்!

உன் உலாவில்

உயிர்பயம்

இப்போது என் தெருக்களிலும்!

'தட்பத்தில் உன் ஆட்டம்

வெப்பத்தில் பலிக்காது'

என கொஞ்சம் மெத்தனம்

உண்டு எங்களுக்கு.

ஆனாலும்

சூழலைச் சிதைத்து

உன் வீதியை

வாழ்வியலை நாசம் செய்யும்

எங்களுக்கும்

கருடபுராணம்

கற்பிக்க வருகிறாயா என

பீதியும் உண்டு.

கொரோனா
கொரோனா

வேண்டாம் தோழா

விலகிப் போ!

அமைதியாகு.

"இயல்பில் நான்

இப்படி இல்லை"

எனும் உன் உரத்த

கூக்குரல் கேட்கின்றது.

பகுத்துண்டு

பல்லுயிர்

ஓம்பச் சொன்னவன்

என் தமிழ் ஆசான்

உன் உயிருக்கும்

உணவளித்து

மதிப்பளித்து

இனியாவது

இருப்போம்.

நீள்கடல்

வான் மலை

மட்டும்

இப்புவிக்கு

நிச்சயம் போதாது.

நாங்களும்

காட்டு மலர் போல்

கானகத்து குருவி போல்

குளத்து மீன் போல்

கண்ணறியா

கிளாமிடாமோனஸ் போல்

வாழ பழகிக் கொள்கிறோம்

விட்டுவிடு தோழா!

கொரோனா
கொரோனா
Image by Aamir Mohd Khan from Pixabay

கோவிட்

உன் கோவம் போதும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு