Published:Updated:

`அறிவார்ந்த காகம்' - சிறுகதை #MyVikatan

காகம்

புதுமையான மற்றும் அற்புதமான யோசனையைக் கேட்ட தாத்தா காகம் ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போய்விட்டது. பேரனின் சிறப்பான யோசனையைக் காகங்கள் செயல்படுத்தத் தொடங்கின.

`அறிவார்ந்த காகம்' - சிறுகதை #MyVikatan

புதுமையான மற்றும் அற்புதமான யோசனையைக் கேட்ட தாத்தா காகம் ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போய்விட்டது. பேரனின் சிறப்பான யோசனையைக் காகங்கள் செயல்படுத்தத் தொடங்கின.

Published:Updated:
காகம்

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு தாத்தா காகமும் பேரன் காகமும் உணவு தேடி காட்டுவழியே பறந்து கொண்டிருந்தன. நீண்ட தொலைவு பறந்ததால் இரண்டுக்கும் மிகுந்த தாகம் எடுத்தது.

காகங்கள் இரண்டும் தண்ணீரைத் தேடி காட்டினுள் அங்குமிங்கும் அலைந்தன. அங்கிருந்த உயரமான மரக்கிளையின் உச்சியில் அமர்ந்து, தண்ணீர் இருக்குமிடத்தைத் தேடியபோது, நீண்ட தொலைவில் இருந்த ஒரு வீட்டின் வெளியே பானை ஒன்று இருப்பதைக் காகங்கள் கண்டன.

அந்தப் பானையை நோக்கி ஆவலுடன் பறந்துசென்ற காகங்கள், தண்ணீர் குடிக்க வேண்டி பானையின் மேல் அமர்ந்தன. ஆனால், பானையின் அடியில் சிறிதளவே நீர் இருந்தது. அந்த நீர் காகங்களுக்கு எட்டவில்லை. அதனால், காகங்கள் இரண்டும் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாகின. அப்போது, தாத்தா காகத்திற்குச் சிறுவயதில் தான் மேற்கொண்ட புத்திசாலித்தனமான ஒரு செயல் நினைவிற்கு வந்தது!

தாத்தாவும் பேரனும்
தாத்தாவும் பேரனும்

உடனே உற்சாகத்துடன் தன் பேரனை நோக்கி.. ``தம்பி! நான் சிறுவனாக இருந்தபோது இதே போன்ற ஒரு சூழ்நிலை எனக்கும் ஏற்பட்டது. அப்போது எனது நுண்ணறிவை நான் பயன்படுத்தினேன். அங்கிருந்த சிறுசிறு கற்களை எடுத்து குறைவான நீர் உள்ள பானையினுள் போட்டேன். இவ்வாறு தொடர்ந்து கற்களைப் பானையினுள் போட, பானையின் அடியில் இருந்த நீர் மேலே வந்தது. நான் தாகம் தீர நீரைக் குடித்தேன்."

``இன்றும் நாம் அவ்வாறே செய்யலாம்"என்றது தாத்தா காகம்.

இதைக்கேட்ட பேரன் காகம் ``தாத்தா.. அந்தக் காலத்திலேயே நீங்க ரொம்ப அறிவாளியாக இருந்திருக்கீங்க. உங்க காலத்தில் இது புத்திசாலித்தனமான யோசனைதான். ஆனால், இதெல்லாம் இப்போது ரொம்ப கடினமான செயலாகவும் மிகப் பழைமையான சிந்தனையாகவும் மாறிவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்போதெல்லாம் எதையுமே புதுமையாகவும், அறிவார்ந்தும் சிந்திப்பவர்களையே இந்த உலகம் கொண்டாடுகிறது. வெற்றிகளும் அவர்களை நோக்கியே தவமிருக்கின்றன. எனவே, நான் இப்போது ஒரு புதுமையான யோசனை சொல்கிறேன். அதைச் செயல்படுத்திப் பார்க்கலாமா?" என்று கேட்டது பேரன் காகம்.

பேரனின் பேச்சைக் கேட்ட தாத்தாவிற்கு மிகுந்த வியப்பும், மகிழ்ச்சியும் ஏற்பட்டன. ``சரி! உன் புதுமையான யோசனையைச் சொல். அது இப்போது நமக்கு ஒத்துவருமா என்று பார்க்கலாம்" என்றது.

``தாத்தா! மனிதர்கள் இளநீர், ஜூஸ் போன்றவற்றை உறிஞ்சிக் குடிக்க சிறு குழாய்களைப்(ஸ்ட்டிரா) பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன். அதோ அந்த தென்னந்தோப்பில் நிறைய தென்னை ஓலைகள் கீழே விழுந்து கிடக்கின்றன. அவற்றுள் ஒன்றை எடுத்துக்கொள்வோம். அந்த ஓலையை ஆளுக்கு ஒரு பக்கமாகப் பிடித்து ஸ்ட்டிரா போல சுருட்டுவோம்."

காகம்
காகம்

``அந்த ஸ்ட்டிராவை பானையினுள் விட்டு மிகச் சுலபமாகவும், விரைவாகவும் நீரை உறிஞ்சிக் குடித்துவிடலாம்"என்றது பேரன் காகம்.

இந்தப் புதுமையான மற்றும் அற்புதமான யோசனையைக் கேட்ட தாத்தா காகம் ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போய்விட்டது. பேரனின் சிறப்பான யோசனையைக் காகங்கள் செயல்படுத்தத் தொடங்கின. மிக எளிதாகத் தண்ணீரை உறிஞ்சிக் குடித்து தமது தாகத்தைத் தீர்த்துவிட்டு மகிழ்வுடன் பறந்து சென்றன.

``தம்மின் தம்மக்கள் அறிவுடையோர்!" என்பதையும், 'புத்திசாலித்தனமும், அறிவார்ந்த புதுமைச் சிந்தனைகளும் காலத்திற்கு ஏற்றாற்போல மாறிக்கொண்டே இருப்பன" என்பதையும் நேரடியாக உணர்ந்த தாத்தா காகம், தனக்குள் புன்னகைத்தவாறு பேரனுடன் உற்சாகமாகப் பறந்தது.

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/