Published:Updated:

மைக்ரோ கதை: தேங்கா... மாங்கா... பட்டாணி... சுண்டல்..! #MyVikatan

couple
couple

சொன்னது போல் அவர்கள் வரும் போதெல்லாம் (கிட்டத்தட்ட தினமும்) வந்து சுண்டல் கொடுத்தான். சுண்டல் வாங்குவதைவிட அவனிடம் பேசுவதற்காகவே அவனை எதிர்நோக்கினார்கள் இருவரும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"சுண்டல் சாப்பிடலாமா?" என்றாள் கால்களில் ஒட்டியிருந்த மணலைத் தட்டிக்கொண்டே.

சுற்றிலும் தேடினான் அவன் சுண்டல் விற்கும் சிறுவர்களை.

சுண்டல் வாங்க நினைப்பவர்களைக் கண்டறிய மூளையில் ரேடார் எதுவும் வைத்திருப்பார்களோ என்று நினைக்கும்படி ஒரு சிறுவன் மூடி போட்ட வாளியைத் தூக்கிக்கொண்டு வந்தான்.

"சுண்டல் சாப்பிடுங்கண்ணே... சூடா இருக்கு."

அவன் பேசியதைக் கேட்டு சட்டென்று தலை நிமிர்ந்தாள் அவள்.

"மதுரையா?" என்றாள் அவனிடம்.

"ஆமாங்க்கா... எப்படிங்க்கா கண்டுபிடிச்சீங்க...? நீங்களும் மதுரையா?" என்றான்.

"ஆமா. ஒன் பேரென்ன?"

"முத்துங்க்கா. சுண்டல் சாப்பிடுங்க்கா."

"எவ்வளவுடா ஒண்ணு?" என்றான் அவன்.

"அஞ்சு ரூவாண்ணே."

"என்னடா ஒரு ரூவா இருந்தத இப்ப அஞ்சு ரூவா சொல்றீங்க?"

"என்னண்ணே... என்னய மாதிரி இருந்தப்ப வந்தீங்களாக்கும் மெரினாக்கு இதுக்கு முந்தி...?"

"என்னடா, மதுரைக்கார கிண்டலா? சுண்டல் வேணாம் போன்னா என்ன பண்ணுவ?"

"நீங்க வேணாம்ன்னா... அக்காதான வேணும்ன்னு கேட்டாங்க... நீங்க சொல்லுங்க்கா."

ஹுக்கும் என்று சிரித்தவளை விளையாட்டாக முறைத்தான்.

Marina Beach
Marina Beach

"ஒருத்தி மதுரைக்காரிய வச்சுக்கிட்டே சமாளிக்க முடியலை. இதுல இன்னொண்ணு வேறயா? ஆள விடுங்கடா சாமி... இந்தா பத்து ரூபா... ரெண்டு குடு" என்று ரூபாய்த் தாளை நீட்டினான்.

"முத்து, அஞ்சு ரூவா மட்டும் அவருட்ட இருந்து வாங்கிக்கோ... என் சுண்டலுக்கு நான்தான் குடுப்பேன்", என்று அவளுடைய பர்ஸைத் திறந்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து நீட்டினாள்.

பதில் ஏதும் சொல்லாமல் சகஜமாக அவனிடம் இருந்து நோட்டையும் அவளிடமிருந்து நாணயத்தையும் வாங்கி, அந்த நாணயத்தை அப்படியே அவனிடம் கொடுத்துவிட்டு இரண்டு சுண்டல் பாக்கெட்டுகளை எடுத்து ஆளுக்கொன்றாய் கொடுத்தான்.

"தைரியமா சாப்பிடுங்க்கா. சுத்தமான ஃபில்டர் தண்ணில கழுவி, ஊறவைச்சி, வேக வச்சது. கைசுத்தமா எங்கம்மா செஞ்சது", என்று சர்டிஃபிகேட் தந்தான்.

"தாங்க்ஸ், முத்து", என்று அவள் வாங்கிக்கொண்டாள்.

"ஏன்டா, சுண்டல் விக்கிறியே... ஸ்கூலுக்குப் போகலையா?" என்று கேட்டான் அவன்.

"ஐய்யே... பார்ட் டைம் ஜாப் கேள்விப்பட்டதில்ல நீங்க?" என்று எதிர்கேள்வி கேட்டான் முத்து.

மறுபடியும் சிரித்த அவள், "நாங்க வரப்போல்லாம் சுண்டல் கொண்டுவரியா?" என்று கேட்டாள்.

"சரிங்க்கா", என்றான் முத்து.

"சரிங்கறயே... நாங்க எப்போ வருவோம்ன்னு உனக்கு எப்பிடிடா தெரியும்?" என்றான் அவன்.

ஒரு கணம் அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தவன், "எனக்குத் தெரியும்ண்ணே", என்று அவனிடமும், "வரேங்க்கா", என்று அவளிடமும் சொல்லிவிட்டுச் சென்றான்.

சொன்னது போல் அவர்கள் வரும் போதெல்லாம் (கிட்டத்தட்ட தினமும்) வந்து சுண்டல் கொடுத்தான். சுண்டல் வாங்குவதைவிட அவனிடம் பேசுவதற்காகவே அவனை எதிர்நோக்கினார்கள் இருவரும். மதுரைக்காரர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு அவனைக் கிண்டலடிப்பதும் அவர்களுக்கு ஈடு கொடுக்கமுடியாமல் பல நேரங்களில் அவன் திணறுவதும் வர வர வழக்கமாகிவிட்டது. அதிலும் முத்துவிடம் சிக்கி மீள முடியாமலேதான் போனான் ஒவ்வொரு முறையும்.

ஆனால் இன்று நிலைமை தலைகீழ்.

மெரினா பீச் சுண்டல் சிறுவன்
மெரினா பீச் சுண்டல் சிறுவன்
சித்திரிப்பு படம்

"ஏன்டா முத்து... யப்பா... முத்தப்பா... சொல்லுடா... உங்க மதுரைல இப்பிடித்தான் முறை சொல்லுவாங்களா...? என்னைய அண்ணேங்கற... அப்புறம் அவங்க எப்பிடிடா உனக்கு அக்கா...?"

சிரிப்பும் கேலியுமாய் இருந்த அந்தச் சிறுவனின் முகம் சட்டென்று சுருங்கியது. இவனின் பேச்சு முடியும் முன் வார்த்தைகள் தெறித்து விழும் அவன் வாய் இறுகிக்கொண்டது.

"சொல்லுடா... சரி... அவங்க அக்கான்னே வச்சுக்குவோம்... அப்ப என்னைய மாமான்னுல்லடா சொல்லணும்...",என்றான் அவனும் விடாப்பிடியாக, முத்துவை மடக்கிய சந்தோஷத்தில்.

மௌனமாய் சுண்டல் கொடுத்துவிட்டு போகப் போனவனைக் கையைப் பிடித்து நிறுத்தினான்.

"டேய்... டேய்... டேய்... பதில் சொல்லிட்டுப் போடா..." என்றான்.

"ஏய்... விடுப்பா. சின்னப் பையன்... அவன் ட்ட போய்...", என்றவளை...

"நீ சும்மா இரு... நியாயமான கேள்வி தான கேட்குறேன்... அவன் சொல்லட்டும்" என்றான்.

பதிலேதும் சொல்லாமல் நின்றிருந்தவனை இழுத்து அருகில் அமர வைத்துத் தோளில் கை போட்டான்.

"சரி... நான் அண்ணே... இவங்க அக்கா... அதோ அங்க உக்காந்திருக்காங்க பாரு..." என்று கைகாட்டினான் இரு குழந்தைகளுடன் அமர்ந்திருந்த தம்பதியரை. "அவங்கள என்னன்னு கூப்புடுவே?" என்றான்.

அமைதியாய் இருந்தவனை, "பதில் சொன்னா விட்டுடுவேன்", என்றான் சிரித்தபடியே.

தோளில் இருந்த கையை மெதுவாய் அகற்றியபடி எழுந்தான் முத்து.

காதல் (சித்திரிப்பு படம்)
காதல் (சித்திரிப்பு படம்)

சுண்டல் வாளியைத் தூக்கிக்கொண்டு, "அவங்களும் அண்ணே... அக்காதான்" என்றான் அவன் கண்களை ஆழ்ந்து பார்த்து, மனதில் உள்ள காட்சிகளையும் எண்ணங்களையும் பார்வையாலேயே கடத்த முயன்று தோற்று.

அவளிடம் திரும்பி, "வரேங்க்கா", என்று வழக்கமான விடைபெற்றான்.

புரிந்தும் புரியாமலும் ஆழ் மனதில் ஏதோ சலசலக்க, இருளில் கரையும் முத்துவின் உருவத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களானது அடுத்து முத்துவைப் பார்ப்பதற்கு.

இரையும் அலைகளை வெறித்துக் கொண்டு மணலை அளைந்து கொண்டு அமர்ந்திருந்தவனை நிமிர்த்தியது, "சுண்டல் வேணுமாண்ணே?" என்ற பழகிய மெல்லிய குரல்.

வாளியை மணலில் வைத்துவிட்டு எதிரே மண்டியிட்டு அமர்ந்தவனை கண்களில் நிரம்பிய சோகத்தோடு பார்த்தான்.

"அக்கா இருக்கற ஊர்ல பீச் இருக்காண்ணே?" என்றவனை பார்வையை மறைக்கும் நீரினூடே பார்த்து, இல்லையென்று தலையசைத்தான்.

வாளியிலிருந்து சுண்டல் பாக்கெட்டை எடுத்தவன், அவன் கைகளைப் பிரித்து அதை வைத்துவிட்டு லேசான அழுத்தத்துடன் சொல்லிவிட்டுச் சென்றான், "அக்காவுக்கு".

அந்த ஒற்றைச் சொல்லின் அர்த்தம், அந்தக் கணம், அவன் இதயம் பிளக்க, வெடித்துச் சிதறும் அழுகையினூடே மெல்லிய மந்திரமாய் ஒலித்தது அந்தக் குரல்...

"தேங்கா... மாங்கா... பட்டாணி... சுண்டல்..."

- கா. தாஸ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு