Published:Updated:

`சுத்தம், சேவை, கரிசனம், கலந்துரையாடல்..!' -கிராமத்தைக் கலக்கிய காரைக்குடி மாணவர்கள்#MyVikatan

மாணவர்கள்
மாணவர்கள்

கிராம மக்களுடன் சேர்ந்து கயிறு இழுத்தல், உறியடித்தல், பாண்டி ஆடுதல் போன்ற விளையாட்டுகள் விளையாடியும் அவர்களை இளம்பிராயத்துக்கே மாணவர்கள் அழைத்துச் சென்றனர்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

காரைக்குடி அருகே உள்ள வேட்டைக்காரன்பட்டி என்ற சிற்றூருக்கு சமீபத்தில் உறவினர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அங்கே சுமார் 30 மாணவ, மாணவியர் உற்சாகமுடன் தெருக்களைச் சுத்தம் செய்துகொண்டும் மரக் கன்றுகளை நடவு செய்துகொண்டும், அங்கிருந்த அரசு தொடக்கப்பள்ளியின் கழிவறையைச் சுத்தம் செய்துகொண்டும் இருந்தனர். நான் ஆச்சர்ய மிகுதியால் அவர்களை அணுகி, யார் நீங்கள். எதற்கு இவற்றையெல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? எனக் கேட்டேன். உடனே அங்கு மாணவர்களோடு மாணவராய் களத்தில் நின்றுகொண்டிருந்த பெண்மணி ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு விரிவாக விளக்கத் தொடங்கினார்.

`சுத்தம், சேவை, கரிசனம், கலந்துரையாடல்..!' -கிராமத்தைக் கலக்கிய காரைக்குடி மாணவர்கள்#MyVikatan

``நாங்க எல்லோரும் காரைக்குடி அருகில் இருக்கும் இராமசாமி தமிழ்க் கல்லூரியைச் சேர்ந்தவங்க. தமிழ் மொழி வளர்ச்சி என்ற உயர்ந்த நோக்கத்துக்காக 1967-ல் செந்தமிழ்ச் செல்வர் இராம.பெரி.பெரியகருப்பன் செட்டியார் அவர்கள் தன் தந்தையார் நினைவாக ஆரம்பிக்கப்பட்டு தமிழ் வளர்த்து வளர்கிறது எங்கள் அரசு உதவிபெறும் கல்லூரி. நான் ஜெயமணி. தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராகவும் இருக்கிறேன்.

பள்ளி, கல்லூரியில் மாணவர்கள் படிக்கும் காலத்துலேயே இந்த நாட்டின்மீதும் மக்கள்மீதும் உண்மையான அக்கறை கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் உருவானதுதான் நாட்டு நலப்பணித் திட்டம். இதற்காக ஒவ்வொரு கிராமத்தையும் அடையாளம் கண்டு, ஒரு வாரம் முதல் 10 நாள்கள் வரை அங்கேயே தங்கி அந்தக் கிராம மக்களுடன் மக்களாய் வாழ்ந்து அவர்களுக்கு சேவை செய்வதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். அப்படி இந்த ஆண்டில் எங்கள் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் இந்த வேட்டைக்காரன்பட்டியில் ஏழு நாள்கள் முகாம் நடத்துகிறோம்.

கிராம மக்களுடன்
கிராம மக்களுடன்

வெறும் சமூக சேவைகள் மட்டுமல்லாமல் கிராமங்களில் உள்ள மூத்த குடிமக்களுடன் அவர்கள்மீது அன்பும் அக்கறையும் கொண்டு எமது மாணவச் செல்வங்கள் மாலை நேரங்களில் கலந்துரையாடுகின்றனர். அப்போது அவர்களின் முக்கியமான அனுபவங்களை எல்லாம் மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஆச்சர்யமூட்டும் அனுபவங்களும் நிஜக் கதைகளும், வாழ்வியல் நீதிகளும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் கேட்டு எங்கள் மாணவர்கள் வியந்துபோயினர். அவர்களின் வாழ்வியல் அனுபவங்கள் மாணவர்களுக்கு ஒரு புதுவிதப் பாடங்கள்.

அதேபோல், மூத்த குடிமக்களிடம் அவர்களின் அருகே உட்கார்ந்து, அவர்கள் பேசுவதை அன்போடு செவிமெடுப்பது அந்த வயதான ஜீவன்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் தந்தது. மேலும், காணாமல்போன நம் பாரம்பர்ய விளையாட்டுகளான பல்லாங்குழி, தாயம் போன்றவற்றையும் அவர்களுடன் விளையாடி அவர்களை மகிழ்வித்தனர். அங்குள்ள கிராம மக்களுடன் சேர்ந்து கயிறு இழுத்தல், உறியடித்தல், பாண்டி ஆடுதல் போன்ற விளையாட்டுகள் விளையாடியும் அவர்களை இளம்பிராயத்துக்கே மாணவர்கள் அழைத்துச் சென்றனர்.

`சுத்தம், சேவை, கரிசனம், கலந்துரையாடல்..!' -கிராமத்தைக் கலக்கிய காரைக்குடி மாணவர்கள்#MyVikatan

அதேபோல் முகாமில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வீடு வீடாகச் சென்று கல்வி, சுகாதாரம், நடைமுறை வாழ்க்கைகள் குறித்து அவர்களிடம் ஏராளமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்கள். தலைக் கவசம் அணியாததால் இருசக்கர வாகன விபத்துகளில் சிக்கி மரணமடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இங்குள்ள சாலைகளில் தலைக்கவசம் இல்லாமல் பயணிக்கும் ஒவ்வொரு நபரிடமும் அதன் அவசியம் பற்றி ஆதாரங்களுடன் மாணவர்கள் எடுத்துரைத்தனர்.

தலைக் கவசத்துடன் பயணம் செய்த இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கதராடைகள் அணிவித்தும் கௌரவப்படுத்தினோம். மருத்துவ முகாமும் நடத்தினோம். அதற்காக முகாமுக்கு வர இயலாத முதியவர்கள் வீடுகளில் இருந்தால், அவர்களை வீட்டுக்கே சென்று மாணவர்கள் அழைத்து வந்து பரிசோதனைகள் முடித்து திரும்பவும் வீட்டில் கொண்டுபோய் விட்டு வந்தனர். இதைக் கண்டு இங்குள்ள முதியோர் பெருமக்கள் எல்லாம் மிகுந்த சந்தோஷமும், மாணவர்கள் காட்டிய கரிசனத்தால் மிகுந்த மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

`சுத்தம், சேவை, கரிசனம், கலந்துரையாடல்..!' -கிராமத்தைக் கலக்கிய காரைக்குடி மாணவர்கள்#MyVikatan

அத்துடன் வறுமை நிலையில் உள்ள மூத்த வயதுடைய மகளிரை அடையாளம் கண்டு அவர்களுக்குப் புத்தாடைகளும் வழங்கி அவர்களை மகிழ்வித்தோம். கிட்டத்தட்ட அந்தக் கிராமத்தினரின் நெருங்கிய உறவினர்களாகவே எங்கள் மாணவர்கள் மாறிப்போனார்கள். கிராமங்களுக்கு உயிர்நாடியாக இருப்பவை உள்ளாட்சி நிர்வாகங்கள். அதுவும் கிராமசபை கூட்டங்களில் இயற்றப்படும் தீர்மானங்கள் மிக முக்கியமானவை. அவற்றின் அவசியத்தை ஊர் மக்களை எல்லாம் ஒன்று திரட்டி கூட்டம்போட்டு அவர்களிடம் எடுத்துரைத்தோம். ஒவ்வொரு கிராமத்திலும் ஒருங்கிணைந்த பெண்கள் சுகாதார வளாகம் உள்ளது. ஆனால், திறப்பு விழா கண்ட சில நாள்களிலேயே அவை மக்களின் பயன்பாட்டுக்கு இல்லாமல் போய்விடுகிறது.

எனவே, அவற்றையெல்லாம் எங்கள் மாணவர்கள் சுத்தம் செய்து, கழிப்பறையின் அவசியம் பற்றி எடுத்துக்கூறி கிராமப் பெண்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளோம். கிராமத்து ஊரணியை சுத்தம் செய்து, அதன் கரைகளில் மரக்கன்றுகள் நட்டும், ஊருக்குள் கிடந்த பிளாஸ்டிக்குகளை அகற்றியும், கோயில்களில் உழவாரப் பணி செய்தும் இந்த வேட்டைக்காரன்பட்டி கிராமத்தை எங்கள் கல்லூரி மாணவர்கள் உற்சாகமுடன் சுத்தம் செய்து மெருகேற்றியுள்ளனர்.

சுகாதாரப் பணியில் மாணவிகள்
சுகாதாரப் பணியில் மாணவிகள்

ஒவ்வொரு நாள் இரவிலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கருப்பர் சாமி ஆட்டம், கரகாட்டம், நாட்டுப்புற பாடல்கள் என மண்ணின் மணம் கமழும் கலைகளை இங்கே அரங்கேற்றுகிறோம். இவை உழைத்து களைத்துப் போய் இருக்கும் இந்தக் கிராமத்து மக்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கின்றன. மாணவ, மாணவியருக்கும் இதுபோன்ற மேடைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் இருக்கிறது.

சமூக சேவை, நாட்டு நலப்பணித்திட்டம் என்பது வெறும் பெயரளவுக்கு இல்லாமல், இந்த ஊரே பெயர் சொல்லும் அளவுக்கு எங்களால் இயன்றதைச் செய்துகொண்டிருக்கிறோம்” என்றார் உதவிப் பேராசியர் ஜெயமணி.

`சுத்தம், சேவை, கரிசனம், கலந்துரையாடல்..!' -கிராமத்தைக் கலக்கிய காரைக்குடி மாணவர்கள்#MyVikatan

கிராமத்து மக்களுக்கு உண்மையான உணர்வுடன் களத்தில் நின்று சேவை ஆற்றிய அந்த மாணவச் செல்வங்களை எவ்வளவு போற்றினாலும் தகும். ஏனெனில், இந்தியா கிராமங்களில்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த முகாம் ஒரு வார காலத்துக்கு மட்டுமே அங்கு நடைபெற்றாலும், அந்தக் கிராமத்தின்மீது மாணவர்கள் காட்டிய உண்மையான அன்பு, சுத்தம், சேவை, விழிப்புணர்வு, கரிசனம்,கலந்துரையாடல் இவைகளால் வேட்டைக்காரன்பட்டி கிராமத்து மக்களின் ஒட்டுமொத்த இதயங்களில் உயர்ந்த இடம் பிடித்து நிற்கிறார்கள் காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி மாணவர்கள்.

- பழ.அசோக்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு