Published:Updated:

பதிப்புலகின் பெரும் ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணனின் மறைவும், நினைவும்!

க்ரியா ராமகிருஷ்ணன்
க்ரியா ராமகிருஷ்ணன்

ராமகிருஷ்ணனை சந்தித்துத் திரும்பும் பொழுதுகள், தேர்ந்த ஒரு நூலை உள்ளுணர்ந்து வாசித்த அனுபவத்தைத் தரும். அவரவர் புரிதலுக்கேற்ப புதிய புதிய இலக்கியங்களையும் நுண்கலைப் படைப்புகளையும் அறிமுகம் செய்வார். விசாலமான தேடலை உருவாக்குவார்.

புத்தகக் கண்காட்சிகள், தமிழகத்தின் கலாசாரத் திருவிழாவாக மாறியிருக்கும் தருணம் இது. கொரோனாவால் இந்தாண்டு சென்னை கண்காட்சி நடக்குமா தெரியவில்லை. குடும்பம் குடும்பமாக வாகனங்களில் வந்து, கடை கடையாக ஏறியிறங்கி, வாசிக்கிறார்களோ, இல்லையோ தமிழ் மக்கள் கைநிறைய புத்தகங்களை வாங்கிச் செல்வதைப் பார்க்க மகிழ்ச்சியாகத்தானிருக்கும்.

சமீபகாலங்களில் புத்தகக் கண்காட்சிகளை அவதானிக்கும்போது, கொண்டாட்டத்தை அதிகப்படுத்துவது, புத்தகங்களின் வடிவங்களும் ஆக்கங்களுமே என்பது ஒரு கருத்து. சிறிதும் பெரிதுமாக, விதவிதமான வடிவங்கள், அழகழகாக கனத்த அட்டைகள், தொட்டுப்பார்க்கத் தூண்டும் வடிவமைப்பு... மொத்தி மொத்தியாகப் புத்தகங்கள்... தமிழ் பதிப்புத்துறை இன்று மிகப்பெரும் உச்சத்துக்குப் போயிருக்கிறது. இருண்மையாகக் கிடந்த பதிப்புத்துறையில் நுழைந்து இப்பெரும் மாற்றத்துக்கு வித்திட்ட முன்னோடி, க்ரியா ராமகிருஷ்ணன்.

க்ரியா ராமகிருஷ்ணன்
க்ரியா ராமகிருஷ்ணன்

புத்தகங்களின் உள்ளடக்கத்தை மட்டுமின்றி, அதன் ஆக்கத்தையும் ஈர்க்கும் வகையில் மாற்றிய முன்னத்தி ஏர். என்னென்ன தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டோ அனைத்தையும் தன் க்ரியா பதிப்பக உருவாக்கங்களில் பரிட்சித்து இளம் பதிப்பாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் நம்பிக்கையளித்தவர். இன்று கொரோனா, குடித்த உயிர்களின் எண்ணிக்கையில் ஒன்றாகிப்போயிருக்கிறார் ராமகிருஷ்ணன். 76 வயதான ராமகிருஷ்ணன் தொற்றுக்கு உள்ளாகி கடந்த ஒரு மாதகாலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். தொற்று நீங்கினாலும் அதனால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்புகள் குணமாகாததால் 17-ம் தேதி அதிகாலை காலமானார்.

உண்மைதான். க்ரியா ராமகிருஷ்ணன் காலமாகத்தான் ஆகியிருக்கிறார். 30 ஆண்டுகாலம் தன் மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்து அவர் உருவாக்கிய 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி' தமிழ் உள்ள வரைக்கும் காலத்தில் அவரை நிலைத்திருக்கச் செய்யும்.

ராமகிருஷ்ணன் பிறந்தது சென்னையில். லயோவிலும் ஜெயின் கல்லூரியிலும் படித்தார். கல்லூரிக் காலத்தில் சா.கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ம.ராஜாராம் நண்பர்களானது, வாசிப்பின் திசையில் ராமகிருஷ்ணனைத் திருப்பியது. அகிலன், நா.பா, ஜெயகாந்தன் ஆகியோரின் வாசிப்பில், தேர்ந்த இலக்கிய பிரக்ஞை வாய்த்தது. நான்கு பேரும் இணைந்து 'இலக்கிய சங்கம்' என்றொரு அமைப்பைத் தொடங்கி, தேவநேயப் பாவாணர் நூலகத்தில் வாசிப்புக் கூட்டங்களை நடத்தினார்கள்.

க்ரியா ராமகிருஷ்ணன்
க்ரியா ராமகிருஷ்ணன்

நேரத்துக்குத் தொடங்கி, நேரத்துக்கு முடிக்கும் கராறான அந்த கூட்டங்களில் கவிதை, கதை, கட்டுரைகள், இசை, ஓவியம், நாடகம் குறித்தெல்லாம் விவாதித்திருக்கிறார்கள். அதுவே, எழுத்து, மொழி பெயர்ப்பு என அடுத்த தளத்துக்கு ராமகிருஷ்ணனை இழுத்துச் சென்றது.

பணி நிமித்தம் டெல்லியில் தங்கியபோது கிடைத்த வெங்கட்சாமிநாதனின் நட்பு, சர்வதேச கலைவடிவங்களின் மீதான விவாதத்தையும் பார்வையையும் கூர்தீட்டியது. டெல்லியிருந்து சென்னை திரும்பிய ராமகிருஷ்ணன், ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே கிருஷ்ணமூர்த்தி, ஞானக்கூத்தன், முத்துசாமி, பாலகுமாரன், எல்லோருடனும் இணைந்து 'கசடதபற' இதழைக் கொண்டு வந்தார். தமிழ் இலக்கியத் தளத்தில் 'கசடதபற' மிகுந்த அதிர்வை உருவாக்கியது.

'கசடதபற' தந்த அனுபவத்தில், பார்த்த வேலையை விட்டுட்டு தோழி ஜெயலட்சுமியோடு இணைந்து க்ரியா பதிப்பகத்தை தொடங்கினார் ராமகிருஷ்ணன். 'தமிழ் பதிப்புத்துறையில் எவரும் செய்யத் தயங்கும் விஷயங்களை செய்வதே க்ரியாவின் இலக்காகத் தீர்மானித்தோம்' என்று ஒரு நேர்க்காணலில் பதிவு செய்திருக்கிறார் ராமகிருஷ்ணன்.

ராமகிருஷ்ணனின் கிரியேட்டிவ் பதிப்பு நுட்பத்தில் முதலில் வெளிவந்த நூலென்றால் ஞானக்கூத்தனின் 'அன்று வேறு கிழமை' கவிதைத்தொகுதிதான். ஆனால் க்ரியாவின் முதல் வெளியீடு, நா.முத்துசாமியின் 'நாற்காலிக்காரர்'. இதில் மூன்று நாடகங்கள் இடம்பெற்றிருந்தன.

க்ரியா ராமகிருஷ்ணன்
க்ரியா ராமகிருஷ்ணன்

ஒரு பதிப்பகமாகத் தாக்குப்பிடிக்க இலக்கியம் மட்டும் தாங்குதளமாக இருக்கமுடியாது. அதைப் புரிந்துகொண்ட ராமகிருஷ்ணன், பல்வேறு தளங்களில் விதவிதமான தலைப்புகளில் நூல்களை வெளியிட்டார். வேளாண்மை, மருத்துவம் என பல துறைகளில் அவர் கவனம் விரிந்தது. வெறுமனே டிடிபி செய்து வெள்ளைத்தாளைக் கருப்பாக்கி வணிகமாக்குவதில் ராமகிருஷ்ணனுக்கு இசைவில்லை என்பதில்தான் அவர் தனித்துவம் இருக்கிறது.

டேவிட் வெர்னர் எழுதிய 'டாக்டர் இல்லாத இடத்தில்' நூலுக்கென தனியாக லெட்டர் பிரஸ் யூனிட் அமைத்து, 26 மாதங்கள் அதற்கெனவே உழைத்தார். ஒரு பதிப்பகத்தின் பணியென்பது, எழுத்தாளனின் படைப்பை அச்சாக்கம் செய்வது மட்டுமல்ல. செம்மைப்படுத்துவதும்தான் என்று நம்பினார் ராமகிருஷ்ணன். தன் பதிப்பில் வந்த எல்லா நூல்களையும் செம்மைப்படுத்த ஆசிரியர் குழுவொன்றை வைத்திருந்தது க்ரியா. காஃப்கா, ஆல்பெர் காம்யூ, யானிஸ் வருஃபாகிஸ், ஸீக்ஃப்ரீட் லென்ஸ், ஹேஸல் எட்வர்ட்ஸ் எனப் பல பிறநாட்டு எழுத்தாளர்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். 'அந்நியன்', 'முதல் மனிதன்', 'அபாயம்', 'குட்டி இளவரசன்', 'விசாரணை' எனப் பல அரிய மொழிபெயர்ப்புகள் க்ரியாவிலிருந்து வந்தன.

ஒரு பக்கம் பதிப்புப்பணிகள் நடக்க, அகராதி உருவாக்கத்தில் தன்னைக் கரைத்துக்கொண்டார் ராமகிருஷ்ணன். கிட்டத்தட்ட ஒரு கோடி வார்த்தைகளை அட்டவணைப்படுத்தியிருக்கிறார். இப்போதும் அவருடைய இணையதளத்தில் எவர் வேண்டுமானாலும் புதிய வார்த்தைகளை பதிவு செய்யலாம். தகுந்த ஆய்வுக்குப் பிறகு அதை ஆவணப்படுத்துவார். தற்போது வெளிவந்துள்ள பதிப்பில், திருநர் வழக்குச் சொற்கள், இலங்கைத் தமிழ் வழக்குச் சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன.

ஒரு பதிப்பாளராக மட்டுமின்றி, ஒர் இலக்கியச் செயற்பாட்டாளராகவும் இயங்கியவர் ராமகிருஷ்ணன். ரோஜா முத்தையா நூலக உருவாக்கத்தில் இவரின் பங்கு முக்கியமானது. 'கூத்துப்பட்டறை' கட்டமைப்பிலும் மிகுந்த பங்களிப்பு செலுத்தியிருக்கிறார். 'மொழி அறக்கட்டளை' என்ற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் மரபுத்தொடர் அகராதியை வெளியிட்டார். அகராதிகளை ப்ரெய்லி மொழியில் கொண்டுவந்தார். தன் இணையப் பக்கத்தில் ஒரு சொல்வங்கியை உருவாக்கி வைத்தார்.

`வார்சா பல்கலைக்கழக தமிழ் மாணவர்களும், க்ரியா தற்காலத் தமிழ் அகராதியும்!'- பேராசிரியர் அ.ராமசாமி!

ராமகிருஷ்ணனை சந்தித்துத் திரும்பும் பொழுதுகள், தேர்ந்த ஒரு நூலை உள்ளுணர்ந்து வாசித்த அனுபவத்தைத் தரும். அவரவர் புரிதலுக்கேற்ப புதிய புதிய இலக்கியங்களையும் நுண்கலைப் படைப்புகளையும் அறிமுகம் செய்வார். விசாலமான தேடலை உருவாக்குவார்.

ராமகிருஷ்ணன் மறைவை பேரிழப்பு என்று சம்பிரதாயமாகச் சொல்லிவிடமுடியாது. மொழியின் உடலிலிருந்து உதிர்ந்தஒரு பிரதான சிறகு. அவர் இன்னும் நிறைய ஆக்கவேண்டியிருந்தது. போதிய உதவிகளின்றி சற்று சோர்வுற்றிருந்தார். காலம் கொரோனாவின் உடலேறி அவரை அழைத்துக்கொண்டது. இதுவரை அவர் தந்து சென்றவை, மிகப்பெரும் கொடை. அவர் நினைவுகளை தாங்கி நிற்போம். போற்றுவோம்!
அடுத்த கட்டுரைக்கு