Published:Updated:

``உண்மை புனைகதையைவிட விசித்திரமானது!'' - அசோகமித்திரன் பிறந்ததினப் பகிர்வு

Ashokamitran

குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் பலருக்கும் ஆதர்சமானவர் அசோமித்திரன்.

``உண்மை புனைகதையைவிட விசித்திரமானது!'' - அசோகமித்திரன் பிறந்ததினப் பகிர்வு

குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் பலருக்கும் ஆதர்சமானவர் அசோமித்திரன்.

Published:Updated:
Ashokamitran

2017 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று அசோகமித்திரன் இறந்துபோனார். சென்னை, வேளச்சேரியில் அசோகமித்திரன் தங்கியிருந்த, அவரது இறுதி சுவாசத்தை தாங்கிக்கொண்டிருந்த அந்த அப்பார்ட்மென்ட் வாசலில் மாலையும் கையுமாக சிறுகூட்டம் நின்றிருந்தது. அசோகமித்திரன் அடக்கம் செய்ய எடுத்துச்செல்லப்பட்டார் என்ற தகவலே அவர்களுக்கு வந்துசேர்ந்திருந்தது. தங்களுக்குள் அசோகமித்திரனைப் பற்றிச் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். மெலிந்த கரங்களில் 'கீ-வாட்ச்' அணிந்திருந்த கண்ணாடிக்காரர் அசோகமித்திரனின் கதைகள் குறித்து வெகுநேரம் குறித்து பேசிக்கொண்டிருந்தார். சிறிதுநேரத்தில் அனைவரும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் 'மாலையும் கையுமாகத்' திரும்பிச் சென்றனர்.

Ashokamitran
Ashokamitran

அந்தக் கண்ணாடிக்காரர், 'மாலையைத் திருப்பிக் கடையில் கொடுத்தால் காசைத் திருப்பித் தருவார்களா?' என்று பலரிடம் கேட்டபடியே சென்றார். ஒருகணம், அந்தச் சூழலும், அந்தக் கதாபாத்திரமும்தான் அசோகமித்திரனின் படைப்புலகமாகத் தோன்றியது. நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை எந்தப் பூச்சுகளும் இல்லாமல் பதிவு செய்தவர் அசோகமித்திரன். தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை ஒரு பார்வையாளனாகப் பார்த்து அதன் மாந்தர்களின் துயரை, கசப்புணர்வை, எள்ளலை தனது எழுத்தாக்கினார். சமூகத்தில் பெரும்பாலும் கவனிக்கப்படாத உதிரிகளாக வாழும் மனிதர்களின் வாழ்க்கைப்பாடுகளைச் சித்திரமாக்கியிருப்பார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெரும் கோட்பாடுகளையோ, நீதி போதனைகளையோ தன் எழுத்துகளில் நுழைத்தவரல்ல அசோகமித்திரன். அவரின் கதைகள் யதார்த்த வாழ்வின் தரிசனங்களைக்கொண்டிருந்தன. நாடக அரங்கில் வெளிச்சம்படாத அரங்கின் மூலையில் அமர்ந்துகொண்டே, நாடகம் முடிந்து திரைச்சீலைகளைக் கழட்டி மடிக்கும் தொழிலாளியின் சம்பாஷனைகளைக் கவனித்துச் சொல்பவராகவே அவர் இருந்துள்ளார். 200-க்கும் மேலான சிறுகதைகள், 9 நாவல்கள், சில கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார், அசோகமித்திரன். அதில் பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்களையும், கதைக்களங்களையும் கையாண்டிருக்கிறார்.

Ashokamitran
Ashokamitran

அசோகமித்திரன் எழுதியவற்றில் மிக நுட்பமான கதை 'புலிக்கலைஞன்'. அந்தச் சிறுகதையில் 'புலிக்கலைஞனாக' வரும் காதர் என்ற புலிவேஷமிடும் கலைஞன். ஒரு சினிமா ஸ்டூடியோவுக்கு வாய்ப்புகேட்டு வருகிறான் காதர். தன்னால் திறமையான முறையில் புலி வேஷம் போட்டு ஆட முடியும் ஏதாவது வாய்ப்பு தாருங்கள் எனக் கேட்கிறான். தங்களின் படத்துக்கு புலி வேஷம் போடும் ஆள் தேவையில்லை எனச் சொல்கிறார்கள் அங்கிருப்பவர்கள். காதர் அவர்கள் முன்னிலையில் தனது `டைகர் பைட்'டை நிகழ்த்திக்காட்டுகிறான். அந்தரத்தில் பேனுக்கு அருகில் பறந்து தொங்கி, மேசைகளின் மீது தாவிக்குதித்து தனது திறமையை நிரூபிக்கிறான். அவனது விலாசத்தை எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்லுமாறு கூறுகிறார்கள். அவனும் எழுதிக்கொடுத்துவிட்டு நகர்கிறான். அவன் செய்வதையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் கதையாசிரியர், அடுத்த படத்தில் அவரை நடிக்க வைத்துவிடவேண்டுமென நினைக்கிறார்.

தனது அடுத்த கதையில் கதாநாயகன் எதிரிக் கோட்டைக்குள் நுழையும் காட்சியில் `புலிவேஷக் காட்சி' ஒன்றை உருவாக்குகிறார். காதருக்குக் கடிதம் போடுகிறார். நான்கு நாள்களில் விலாசதாரர் இல்லையென்று அந்தக் கடிதம் திரும்பிவருகிறது. காதரைச் தேடிச் செல்கின்றனர். பல இடங்களில் தேடுகிறார்கள். காதர் கிடைக்கவில்லை. கதாநாயகன் எதிரிக் கோட்டைக்குள் நுழையும் காட்சி எடுக்கப்பட வேண்டிய நாளும் வருகிறது. காதர் கிடைக்கவில்லை. ஒருவேளை அவன் கிடைத்திருந்தாலும் அவர்கள் பயன்படுத்த முடியாது. ஏனெனில், அந்த மாதத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் கிராமிய சங்கீதத்துடன் கதாநாயகன் காவடி எடுப்பதாகக் காட்சி வந்திருக்கிறது.

Ashokamitran
Ashokamitran

அந்தப் படம் தமிழ்நாடெல்லாம் தாங்க முடியாத கூட்டத்தைக் கூட்டியதால், இவர்கள் எடுக்கும் இந்தப் படத்தில் கதாநாயகன் 'கரகம்' எடுப்பதாகத் தீர்மானிக்கப்படுகிறது. இந்தக் கதையின் காதர் நம்மில் பலர்தான். காதர் கதாபாத்திரம்போலத்தான் அவனுக்கு உதவ நினைக்கும் அந்தக் கதாசிரியரும். இந்தச் சமூகத்தில் தனது திறமையைக்காட்ட முயலும் பலருக்கும் வாய்ப்பு வருகையில் காதரைப் போல விலாசம் தொலைந்து போகிறது. உதவ நினைப்பவர்களுக்கு விலாசம் மாறிப்போய் அவர்களும் காதரைப் போன்ற கையறுநிலைக்கு உள்ளாகிறார்கள். இந்தக் கையறுநிலை மாந்தர்களும் அசோகமித்திரனின் எழுத்துக்குள் வாழ்கிறார்கள்.

அசோகமித்திரனின் ஒவ்வொரு நாவலையும் ஒவ்வொருவர் 'கிளாசிக்' வரிசையில் சேர்த்திருப்பார்கள். அதில் மிக முக்கியமான நாவல் 'கரைந்த நிழல்கள்'. திரையரங்கின் இருளை, செவ்வகமாகக் கிழித்துக்கொண்டு திரையில் தோன்றும் காட்சிகளுக்கு கண்கள் விரிய விசிலடித்துக் கைதட்டியிருப்போம். காட்சிகளோடு ஒன்றிப்போய் அழுதிருப்போம். வயிறு வலிக்க சிரித்திருப்போம். அந்த சினிமா உருவாக்கத்தில் உழைத்தவர்கள் பல்லாயிரம் பேர். நமது கைதட்டல்களோ, விசில் சத்தங்களோ ஒருபோதும் கேட்டிராதவர்கள் அவர்கள். திரைக்குப் பின்னாலான அவர்களின் உலகத்தை 'கரைந்த நிழல்கள்' நாவலில் உயிர்ப்பித்திருப்பார். சினிமாவின் புகழ் வெளிச்சத்தில் கரைந்து போன நிழல்கள்தாம் அந்த மனிதர்கள். பாடல் காட்சிகளில் நடனமாடும் குரூப் டான்சர்கள், உதிரி கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள், வறுமையிலிருக்கும் ஒரு புரொடெக்சன் மேனேஜர், ஒரு நடிகை என நாவலில் பல கதாபாத்திரங்கள் இடம்பெறும். 'வெற்றி' என்கிற மந்திரச் சொல்லுக்காக மனிதர்கள் படும்பாட்டை, துரோகத்தை லாகவமாகக் கையாண்டிருப்பார். சினிமாத்துறை சார்ந்து நடக்கும் கதைதான் என்றாலும் அடிப்படை மனித மனதின் சாரத்தை ஒவ்வொரு அத்தியாயத்திலும் புலப்படுத்தியிருப்பார். உண்மை புனைகதையைவிட விசித்திரமானது என அவர் சொல்வார். இந்தக் கதாபாத்திரங்களின் தொழிலை, மனநிலை வாழ்வாகக் கொண்டவர்களின் நிலை விசித்திரமான ஒன்றாகத்தான் இருக்கும்.

அசோகமித்திரன்
அசோகமித்திரன்

அசோகமித்திரன் எழுதி, பலராலும் கொண்டாடப்படும் 'தண்ணீர்' நாவலின் அட்டைக்குறிப்பில் எழுத்தாளர் வண்ணநிலவன் இவ்வாறு எழுதியிருப்பார். 'இந்த பாஷையும், தேசமும் பெருமைகொள்ளத்தக்க இலக்கிய கர்த்தா அசோகமித்திரன்.' நகர வீதிகளின் அதிகாலையிலும், அந்தி சாய்கையிலும் குறுக்கலான தெருக்களில் குடங்களோடு பெண்களும், ஆண்களும் மல்லுக்கட்டும் காட்சியை அனைவரும் கண்டிருப்பர். தண்ணீர் அவஸ்தையிலிருக்கும் ஜமுனாவை மைய கதாபாத்திரமாகக் கொண்டு 'தண்ணீர்' நாவல் விரியும். ஜமுனாவின் தங்கை சாயா, சினிமா ஆசை காட்டும் பாஸ்கர் ராவ் என கதாபாத்திரங்களின் வழியாக எல்லா மனிதனுக்குள்ளும் புரையோடிப்போன அத்தனை உணர்வுகளையும் கடத்தியிருப்பார்.

அசோகமித்திரன் எத்தனை களம் மாறினாலும் அவரது தீவிரமான களமாக மனித மனமே இருந்திருக்கிறது. யாருக்கும் புலப்படாத அவ்வப்போது வெளிப்படுகிற மனித மனத்தின் கீழ்மையை, ஏமாற்றத்தை, வஞ்சத்தை, பகையை தனது கதை மாந்தர்கள் வழியே வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது எழுத்தின் சிறுபகுதியே மேலே குறிப்பிட்டவை. குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் பலருக்கும் ஆதர்சமானவர் அசோமித்திரன். ஆனால், அவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வாழ்ந்து சென்றவர்.

விகடன் தடம் நேர்காணலில் அவர் இப்படி ஒரு பதிலைச் சொல்லியிருப்பார்.

அசோகமித்திரன்
அசோகமித்திரன்
"வாழ்க்கையில பாசிபிளிட்டீஸ்தான் ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்னு நினைக்கிறேன். வெவ்வேறு மனிதர்கள், அவர்களின் வெவ்வேறு சுபாவங்கள், அவர்கள் வாழும் வெவ்வேறு சூழல்கள்… அதையெல்லாம் மாற்றிப் போட்டு இவருக்கு இந்தச் சூழ்நிலையில இப்படி நடந்தா என்னாகும்னு யோசிக்கறதுலதான் கதை உருவாகுது. பாசிபிளிட்டீஸ் இருக்கிற வரை கதைகள் இருக்கும். எழுதிக்கிட்டே இருக்கலாம்".
அசோகமித்திரன்

கலைஞர்களும், படைப்பாளிகளும் ஆயுள் என்ற இலக்கற்றவர்கள். மரணித்தபின் அவர்கள் படைப்பின் வழியாக புதுக்கணக்கைத் தொடங்குகிறார்கள். அப்படி வாழ்கிறார் அசோகமித்திரன்.