கட்டுரைகள்
Published:Updated:

அனகராதி - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

இதுவரை கேட்டிராத பறவைகளும் விலங்குகளும் பூச்சிகளும் எழுப்பிய வினோத ஒலிக்கலவையில் கண் திறந்தவள், நீண்டுயரும் நெடுஞ்சிகரங்களால் விண்தொடும் இந்த மலைத்தொடரைத்தான் முதலில் கண்டாள்

உறக்கத்திலிருப்பவளை எழுப்ப அம்மாதான் தண்ணீர் தெளிக்கிறாள் என்பதான நினைப்பில் சுதாரித்துக் கண்விழித்தவள்மீது அருவியெனப் பொழியத் தொடங்கியது மழை. நனைவதன் பதற்றத்தில் எழுந்து நின்றவளுக்கு இருளன்றி ஏதும் புலப்படவில்லை. அவள் இங்கே முதன்முதலாகக் கண்விழித்த அந்த நேரம் இரவாக இருந்தது. எத்திசையில் நகர்ந்தால் யாதிருக்குமோ என்கிற அறியாநிலையில் நின்ற இடத்திலேயே நின்றிருந்தாள். பெருக்கெடுத்தோடும் வெள்ளம் அவளது காலடி மண்ணை அரித்தபடியே ஓடியது. அவளது கால்களோ வேர்போல இறங்கின பூமிக்குள். என்மீது விரும்பிப்பெய்கிற இந்த மழை எனக்குத் தீம்பேதும் செய்துவிடாது என்று நின்றிருந்த அவ்விடத்திலேயே சப்பணம் இட்டமர்ந்து மழைக்குள்ளேயே கண்ணயர்ந்தாள்.

இதுவரை கேட்டிராத பறவைகளும் விலங்குகளும் பூச்சிகளும் எழுப்பிய வினோத ஒலிக்கலவையில் கண் திறந்தவள், நீண்டுயரும் நெடுஞ்சிகரங்களால் விண்தொடும் இந்த மலைத்தொடரைத்தான் முதலில் கண்டாள். இருந்த ஒரு சிறுகுன்றும் குவாரிக்காரர்களால் காணாமலாக்கப்பட்ட ஊரினளான அவள் இப்போது இந்த நீள்நெடு மலைத்தொடரின் வனப்பில் தோய்ந்து திளைத்துக்கொண்டிருந்தாள். எந்த மலைத்தொடர் இது? ஆல்ப்ஸ்... ஆன்டிஸ்... இந்துகுஷ்... ஹிமாலயாஸ்... காகஸஸ்...? எதுவென அடையாளம் காணவியலாத அவள் அதற்கு `பெயர் வேண்டா மலை’ எனப் பெயர் சூட்டினாள். இதன் அடிவாரத்தில் ஒளியை உருக்கி ஊற்றினாற்போல தகதகத்தோடிடும் இந்த ஆறு எதுவாக இருக்கும் என்பதையும்கூட அவள் அறிய முடியாதவளாயிருந்தாள். தனக்குத் தெரிந்திருந்த ஆறுகளின் பெயர் ஒவ்வொன்றையும் நினைவுபடுத்தி அதுவாக இருக்குமா இதுவாக இருக்குமா என்று யோசித்தவள் `மீட்பாறு’ என்று சற்று முன்தான் அதற்குப் பெயரிட்டு முடித்தாள்.

அனகராதி - சிறுகதை

அவளைப் பொறுத்தவரை மீட்பாறு என்பதுதான் எல்லாவகையிலும் அதற்குப் பொருத்தமான பெயர். அந்தப் பெயரைச் சொல்லிக்காட்டுவதற்கு அங்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று இனிதான் அவள் தேடிப் பார்க்கவேண்டும். மனித சஞ்சாரம் இருப்பதற்கான சுவடேதும் தென்படாத இங்கே யாரும் எதிர்வரப்போவதில்லை என்று தனக்கே சொல்லிக்கொண்டாள். அதெப்படி ஆறென்று இருந்தால் அங்கே மனிதக்கூட்டம் இருக்கத்தானே செய்யும்? ஒருவேளை, முதன்முதலாக இந்த ஆற்றிலிறங்கிய மனுசி தானாக இருந்தால்? அந்த நினைப்பே அவளுக்குள் பெருஞ்சிலிர்ப்பாகியது. தானொருத்தி மட்டுமே நீந்திக் களிப்பதற்கா இவ்வளவு பெரிய ஆறு என்கிற பரவசத்திற்கும் இவ்வளவு பெரிய ஆற்றில் தான் மட்டும் தன்னந்தனியாக நீந்தி எப்படிக் களிப்படைய முடியும் என்கிற கேள்விக்குமிடையே அவள் தத்தளித்தாள்.

கடலென அகன்றோடும் ஆற்றின் கரையேறி இளைப்பாறுவதும் இளைப்பாறுவதிலேயே களைப்படைந்தவள் போல மீண்டும் ஆற்றுக்குள் பாய்ந்து மீன்களுடன் விளையாடுவதுமாக இருந்தாள். இதென்ன படித்துறையா, ஒரே இடத்தில் நீந்திக் கரையேற? இப்படி எண்ணியதிலிருந்து எங்கு வேண்டுமானாலும் இறங்கி ஆற்றின் போக்கில் போய் ஏதோவொரு இடத்தில் கரையேறினாள். இப்படி நெடுந்தூரத்தைக் கடக்கும் அவள் ஆற்றோட்டத்திற்கு எதிர்த்திசையில் மணல்புதைய நடந்து புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்வதை இந்நாள்களில் வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். பிறகு, இது என்ன நான் பிறந்து வளர்ந்த இடமா, இங்கு என் சொந்தபந்தங்கள் யாரும் இருக்கிறார்களா, ஒருவேளை தன்னைப்போலவே வேறு யாரேனும் உயிர்பிழைத்து இங்கே வரக்கூடும் என்று என் ஆழ்மனம் உள்ளூர எதிர்பார்க்கிறதா, எதற்காக திரும்பத்திரும்ப இதேயிடத்திற்கு வருகிறேன் என்று கேட்டுக்கொண்டாள். அதனால்தான் அவள் இப்போது சிலநாள்களாக எங்கே கரையேறத் தோன்றுகிறதோ அங்கே கரையேறி கால்போன போக்கில் நடக்கிறாள். கண்ணயரத் தோன்றினால் அங்கே இருக்கும் ஏதேனுமொரு பாறையிடுக்கிலோ மரக்கிளையிலோ படுத்துறங்கி விழிக்கிறாள். எட்டு இரவுகளும் ஏழு பகல்களுமான இக்காலம் இவ்விதமாகத்தான் இங்கு கழிகிறது அவளுக்கு.

நேரம் பொழுது பாராது ஆற்றிலேயே ஊறிக் கிடந்தாலும் இன்னும் தன்மீது துருவேறிய இரும்பின் வீச்சம் நீங்காதிருப்பதாகவே அவள் நினைத்துக்கொண்டாள். அவ்வப்போது அந்த வீச்சம் அழுகிய பிணங்களின் வாடையோடும் பெருக்கெடுத்தோடும் கழிவுகளின் நாற்றத்தோடும் சேர்ந்து அவளது மூக்கை குப்பென அடைத்து சுவாசத்தைத் திணறடித்தது. இந்த வீச்சம் தன் தேகத்தில் படிந்திருக்கிறதா, அன்றி நினைவிலிருந்து மேலெழும்பி வீசுகிறதா என்கிற முடிவுக்கு அவளால் வரமுடியவில்லை. கரையணைத்த கானகத்தை நிறைத்திருக்கும் கனிகளைத் தின்று பசியாறிட விழையும்போதெல்லாம் இந்த வீச்சம் அடர்ந்து குமட்டியது. ஆற்றோரத்தை அலங்கரிக்கப் பூத்திருக்கும் மலர்களிலிருந்தும் பசுந்தாவரங்களிலிருந்தும் உலர்ந்த மரப்பட்டைகளிலிருந்தும் வீசும் மணத்தை மீறி என்றென்றைக்கும் இந்த வீச்சம் தன்மீது படிந்தேதான் இருக்கும்போல என்றெண்ணும்போதே அவளுக்கு துக்கம் பெருகியது. மனிதவாடையே பட்டிராத இந்த மலையும் காடும் ஆறும் தன்மீதிருந்து பரவும் இந்த வீச்சத்தால் மாசடைந்துவிடுமோ என்றெண்ணி மருகினாள். கருவிலிருக்கும் தன் குழந்தையின் மீதும் இந்த வீச்சம் படர்ந்துவிடுமோ என்கிற அச்சத்தில் வயிற்றைத் தடவிக்கொண்டேயிருந்தாள். இந்த அச்சம் பெருகும் போதெல்லாம் அவள் ஆற்றுக்குள்ளிருக்கும் நேரம் கூடியது.

கிளம்பி ஆறுநாள்களாகிய பின்னும் இன்னும் ஐந்துநாள்கள் பின்தங்காமல் நடந்தால்தான் தன் சொந்த ஊரான கோக்ரஜ்பூரை அடையமுடியும் என்கிற பரிதவிப்பில் நடந்துகொண்டிருந்த அஸ்லிமா பீவி என்கிற பெண் ஆசிய நெடுஞ்சாலை நாற்பத்தெட்டில் பிரசவித்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது. உழைத்து வாழ்வதற்கெனத் தேர்ந்து வந்தடைந்திருந்த பெருநகரங்கள் கைவிட்ட நிலையில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்த தமது சொந்த ஊர்களுக்கு நடந்துகொண்டிருந்த அஸ்லிமா பீவியைப் போன்ற எத்தனையோ கர்ப்பிணிகள் மேம்பாலத்தடியிலும் தண்டவாளத்தின் மீதும் கொப்பளிக்கும் தார்ச்சாலைகளிலும் வெட்டவெளியில் தாதிகளின் துணையின்றிப் பிள்ளைகளை ஈன்றெடுத்தார்கள். கைக்குச் சிக்கிய கூரியகற்களால் தொப்புள்கொடியைத் துண்டித்துக்கொண்ட அந்தப் பச்சையுடம்புக்காரிகள் ஈரம் பிசுபிசுக்கும் சிசுவைத் தோளில் போட்டுக்கொண்டு நடையைத் தொடர்ந்த அவலக்காட்சிகள் அவளது மனத்திரையில் ஓடின. பேறுகாலத்திற்குரிய பிரத்யேக கவனிப்பு ஏதுமின்றி நடந்த அந்தப் பிரசவங்களில் ஒன்றென ஆகிவிடாமல், இந்த மீட்பாற்றின் கரையில் தனக்குப் பிரசவம் நடக்கவிருப்பது பெரும்பேறெனக் கருதினாள்.

கருவுற்றிருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட நாளில் அவள் இன்னதென்று பிரித்தறிய முடியாத உணர்வுக்கலவைக்குள் சிக்கித் தவித்தாள். அவன்தான் தோளில் சாய்த்துக்கொண்டு எதுவும் பேசாமல் ஆனால் எல்லாவற்றையும் பேசிக் கொண்டிருப்பவன்போல நீண்டநேரமாக அவளது தலையை வருடிக்கொடுத்தபடி இருந்தான். காலடியில் குறுகுறுக்கும் அலையைப்போல வாஞ்சையூறிய அவனது விரல்கள் கூந்தலுக்குள் அளைவதால் கிளர்ந்த நெகிழ்ச்சியிலும் நிம்மதியுணர்விலும் நிலைதிரும்பிய அவள் அதைத் தன் ஆவிசேர் முத்தங்களால் உணர்த்தினாள். தனக்கும் மட்டில்லாத மகிழ்ச்சியே, ஆனால் அச்சமும் சேர்ந்தே வளர்கிறது என்று அவள் ரகசியம் கூறியபோது, பயப்படாதே, தைரியமாயிரு, நான் உடனிருக்கிறேன் என்றவன் இப்போது சிறையில் இருக்கிறான்.

பயப்படாதே, தைரியமாயிரு, நான் உடனிருக்கிறேன். நாட்டின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிப்பவை என்று தடைசெய்யப்பட்ட அனகராதியிலுள்ள இச்சொற்களை அவன் அன்றைக்கு என் பொருட்டு தன்னிலை மறந்து சொல்லாமல் இருந்திருந்தால் சுதந்திரமாக வெளியில் இருந்திருப்பானே என்கிற அங்கலாய்ப்பு தீராதிருந்தது. கைதாகாமல் வெளியில் இருப்பதுவே சுதந்திரமாகிவிடுமா என்கிற கேள்வியும் அதனுள் சேர்ந்திருந்தது.

இணையரை ஆற்றுப்படுத்த அந்தரங்கமாகப் பகிரப்பட்ட சொற்களை உளவறிந்து இப்படி அரசியல் நோக்கம் கற்பிப்பது சரியல்ல என்று தன்பக்கத்து நியாயத்தைச் சொல்லவே அவன் 14 ஆண்டுகள் சிறைக்குள் உழன்றிருக்கவேண்டும், அதற்குப் பிறகுதான் பிணையே கிடைக்கும். குற்றம் நிரூபிக்கப்படும்வரை நிரபராதி என்கிற நியதியை நிரபராதம் நிரூபிக்கப்படும் வரை குற்றவாளியே என மாற்றியுள்ள ஓர் அரசின் கீழ் அவன் தனக்கான நீதியை எங்ஙனம் பெறமுடியும் என்ற கேள்வி அவளை வாட்டியது. கரையேறி மரமொன்றின் அடித்தூரில் சோர்வுடன் சாய்ந்துகொண்டாள். ஒருவேளை ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து இடையில் வெளியே வந்தானென்றால் என்னை எங்கேயென்று தேடுவான்? அவன் தேடியலையும் முன்பாக நானே அவனுக்கு முன்னால் போய் நின்றுவிட வேண்டும். ஆமாம், நான் சென்றுவிடத்தான் வேண்டும்... அய்யோ, எத்திசையில் இருக்கிறது எனது நாடும் ஊரும்?

வேண்டாம், அங்கே போக நினைக்காதே. அங்கு தேடப்படும் தேசவிரோதிகள் பட்டியலில் உன் பெயரும் இருக்கிறது. தப்பியோடிய குற்றமும் சேர்ந்துள்ளதை மறவாதே. நாட்டின் எந்த மூலையில் கால்வைத்தாலும் உன்னைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது. நிலத்திலும் வான்வெளியிலும் அங்குலத்திற்கொரு காமிரா கண்காணித்துக்கொண்டிருகிறது. கவனம் வை, ஒற்றர்கள் அந்தரத்தில் பதுங்கி உளவறிகிறார்கள். கர்ப்பிணிகள் பலரைச் சிறைப்படுத்துவதையும் சிறைப்பட்ட பெண்டிரை கர்ப்பிணிகளாக்குவதையும் தமது பராக்கிரமமென முண்டா தட்டும் படையினரிடம் சிக்கிச் சீரழியப்போகிறாயா? அரசியலற்ற அபத்த யோசனைகளால் உன்னோடு சேர்த்து உன் பிள்ளையின் உயிரையும் போக்கடித்துக்கொள்ளாதே. எந்த நிலையில் இங்கே வந்து சேர்ந்தாய் என்பதை அதற்குள்ளேயே மறந்துபோனாயா? அய்யோ எப்படி மறப்பேன்? அவர்களிடமிருந்து தப்பிக்க நான் பட்ட துயரங்கள் பற்றிய நினைப்பு செத்தாலும் பிணத்தோடு சேர்ந்திருக்குமே என்று அரற்றினாள்.

முன்னிரவில் இழுத்துச்செல்லப்பட்ட அவனிடம் முதற்கட்ட விசாரணையை முடித்த தேசிய சிறை நிரப்பல் துறையின் அதிகாரிகள் மறுநாள் அதிகாலை மூன்றுமணிக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் குடியிருப்பிலிருந்த இவளது வீட்டின் மதிலேறிக் குதித்துக் கதவைத் தட்டினர். கதவு தட்டப்படும் விதத்திலேயே யாரென யூகித்துவிட்ட அவளோ விடிகிற வரைக்கும் கதவைத் திறப்பதில்லை என்பதில் தீர்மானமாக இருந்தாள். ஒரு கட்டத்தில் அவர்கள் கதவை உடைக்கத் தொடங்கினர். பெருஞ்சத்தத்தால் உறக்கம் கலைந்து எழுந்துவந்து ஏன் இப்படி அகாலத்தில் தொல்லை தருகிறீர்கள் என்று கேட்ட அக்கம்பக்கத்தவர்களை அவர்கள் பெல்லட் குண்டுகளால் சுட்டு விரட்டத் தொடங்கினர். குண்டடிபட்டவர்களின் கதறல் ஒலியால் பதறிப்போன அவள், தன்பொருட்டு பிறர் தாக்கப்படுவதைத் தடுத்துவிடும் பதைப்பில் கதவைத் திறந்து வெளியே வரும்போது மணி நான்கு. அவளையும், அரசாங்கப்பணியைச் செய்யவிடாமல் தடுத்ததாக ஒன்றரை வயதுக் குழந்தை உள்ளிட்ட அக்கம்பக்கத்தவர் நாற்பத்தாறு பேரையும் தேசிய சிறை நிரப்பல் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

நாட்டின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிப்பவை என்று தடைசெய்யப்பட்ட அனகராதியிலுள்ள சொற்களில் மூன்றைக் காதால் கேட்ட குற்றத்திற்காக ஆன்ட்டி நேஷனல் அபாலிசன் ஆக்ட்டின் கீழ் அவளுக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை. அதே குற்றத்தை கருவிலிருக்கும்போதே செய்துள்ள அவளது குழந்தையைக் கலைக்க ஆன்ட்டி நேஷனல் அபார்ஷன் சென்டருக்கு இழுத்துச் செல்லும் வழியில்தான் அவள் தப்பித்தாள்.

அனகராதி - சிறுகதை

நாடடங்கின் காரணமாக வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளதால் அவள் வெளியூருக்குத் தப்பிச்செல்ல வாய்ப்பில்லை என்று கணித்த தேசிய சிறை நிரப்பல் துறையினர் அவளது நண்பர்களின் வீடுகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தபோது அவள் பிரதான சாலைகளைத் தவிர்த்து கவனத்தை ஈர்க்காத இண்டு இடுக்குகளுக்குள் நுழைந்தாள். ஓட்டமும் நடையுமாக இலக்கின்றி விரைந்துகொண்டிருந்தவள் சடக்கென ஒரு திருப்பத்தில் ரயில்பாதையைக் கண்டாள். ரயிலோட்டமின்றிக் கைவிடப்பட்ட 13ஆவது பிளாட்பாரம் முடியும் அந்த இடம் புதர் மண்டிக் கிடந்தது. பகல் நெடுக பசியோடும் தாகத்தோடும் அங்கேயே பதுங்கியிருந்த அவளுக்குள் ஏதாவதொரு பாதுகாப்பான இடத்திற்குப் போய்விட வேண்டும் என்கிற பதைப்பு கூடிக்கொண்டேயிருந்தது. தண்டவாளங் களைக் குறுக்கே கடந்து எதிர்த்திசை ஏகினால் நகரத்தின் மறுபகுதிக்குள் நுழைந்துவிடலாம். தங்களது நட்புவட்டத்தினரில் தேசிய சிறை நிரப்பல் துறையினரின் கவனத்திற்கு சட்டென வராதவர்கள் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று யோசித்தபடி இருட்டுவதற்காகக் காத்திருந்தாள். ஒன்றிரண்டு கூட்ஸ்வண்டிகள் ஓடின நேரம் போக ரயில் நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது.

மாலை சுமார் ஐந்து மணி இருக்கும். ரயில் நிலையத்தின் ஒலிபெருக்கி திடீரெனக் கரகரத்தது. புலம்பெயர் தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு ஏற்றிக்கொண்டு இந்த மார்க்கத்தில் வந்துகொண்டிருக்கும் சிறப்பு ரயிலொன்று தண்ணீர் பிடிப்பதற்காக 11ஆவது பிளாட்பாரத்தில் சிலநிமிடங்கள் நிற்கப்போவதாகவும் வழக்கமான வண்டி என்று நினைத்து யாரும் ஏறிவிட வேண்டாம் என்றும் அறிவிப்பு வந்தது.

அறிவிப்பையடுத்த நிமிடங்களில் அந்த பிளாட்பாரத்தில் பொதியேற்றிய கைவண்டிகளுடன் ஆட்களின் நடமாட்டம் தெரிந்தது. வந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். அவர்கள் அன்னக்கூடைகளிலும் அட்டைப்பெட்டிகளிலும் உணவுப்பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டில்களையும் பரபரவெனப் பகிர்ந்தெடுத்துக்கொண்டு பிளாட்பாரத்தின் இருமுனைகள் வரை குறிப்பிட்ட இடைவெளி விட்டு நிற்கத் தொடங்கினார்கள். அவர்களைப்போலவே இன்னொரு பகுதியினர் பிளாட்பாரத்திலிருந்து குதித்துத் தண்டவாளங்களைத் தாண்டி தண்ணீர் பைப்புகளை ஒட்டி நிற்கத் தொடங்கினார்கள். அவர்கள் அவளுக்கு வெகு அருகில் இருந்தனர். பொறிதெறிப்பாய்க் கிளம்பியோடி அவர்களுடன் கலந்து நின்றுவிட்டாள். வெறுங்கையோடு ஏன் நிற்கிறீர்கள் என்று அவளது கையிலும் ஒரு அட்டைப்பெட்டியைக் கொடுத்த இளைஞனொருவன், கவனமாக வண்டி நின்னதுக்கப்புறம் சன்னலில் எட்டிக் கொடுங்க சிஸ்டர் என்று சொல்லிவிட்டு நகர்வதற்கும் ரயில் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.

வண்டி நிற்பதற்கும் முன்பாகவே வெளியே குதித்த சிலர் தங்களிடமிருந்த காலி பாட்டில்களில் தண்ணீர் பிடிக்க ஓடினார்கள். குழந்தைகளுக்குப் பால் வாங்கக் கடையேதும் இருக்குமா எனத் தேடினார்கள். உணவுப்பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களும் தங்களுக்கும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையிழந்த பயணிகளில் சிலர் சன்னல்வழியாகக் கைகளை நீட்டிக்கொண்டு காத்திராமல் பாய்ந்தடித்து இறங்கினார்கள். அவர்களைக் கட்டுப்படுத்தி ஒவ்வொருவருக்கும் கொடுப்பது பெரும்பாடாக இருந்தது. வண்டி அடுத்து எங்கே நிற்கும், யார் என்ன கொடுப்பார்கள் என்கிற உத்தரவாதம் ஏதுமில்லாத நிலையில் கிடைப்பதைக் கைப்பற்றும் ஆவேசத்தை அவர்களிடம் கண்டாள். தனக்கொரு பொட்டலத்தையும் தண்ணீர் பாட்டிலையும் மீதம் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று முன்பிருந்த எண்ணத்தைக் கைவிட்டு எல்லாவற்றையும் சன்னலோரம் இருந்த குழந்தைகளுக்கு எட்டியெட்டிக் கொடுத்து முடித்தாள். உன் வயிற்றிலுள்ள குழந்தைக்கு என்ன கொடுப்பாய் என்று யாரோ அவளைக் கேட்பது போலிருக்கவே திரும்பிப் பார்த்தாள். அதே இளைஞன் பொட்டலங்களால் நிரம்பியதொரு கட்டைப்பையைக் கையில் கொடுத்துவிட்டு, வண்டி கிளம்பப்போகிறது பாருங்கள் சிஸ்டர், விடுபட்டவர்களுக்கு சீக்கிரம் கொடுத்து முடியுங்கள் என்று சொல்லி நகர்ந்தான். அந்தவொரு நொடியில் என்ன நினைத்தாளோ சட்டென ரயிலில் ஏறிவிட்டாள்.

பாவம் இந்தப் பெண், நமக்குப் பொட்டலங்களைக் கொடுக்கும் மும்முரத்தில் வண்டி கிளம்புவதையே மறந்து இப்படி வந்து சிக்கிக்கொண்டாளே என்று அந்தப் பெட்டியிலிருந்த பயணிகள் அங்கலாய்த்ததைப் பார்த்து அவளுக்கு அந்த நிலையிலும் உள்ளூர நகைப்போடியது. கவலைப்படாதீர்கள், அடுத்து வண்டி எங்கே நின்றாலும் நான் இறங்கி ஊர் திரும்பிக்கொள்கிறேன் என்று சமாதானம் சொன்ன அவளுக்கு அவர்கள், அமர்வதற்கான ஓர் இடத்தையும் கொடுத் தார்கள். அவளது உண்மையான திட்டமும் கூட அதுவாகத்தான் இருந்தது. ஆனால் அந்த இரவிலும் அடுத்துவந்த பகலிலும் எங்குமே நிற்காமல் ஓடிய வண்டி அடுத்த இரவுக்குள் பாய்ந்தது. வேர் ஈஸ் மை ட்ரெய்னில் சோதித்துப் பார்த்த இளையான் ஒருவன், அவ்வளவுதான், இதேவேகத்தில் வண்டி போனால் விடியலில் நாம் இறங்க வேண்டிய ஜங்ஷன் வந்துவிடும் என்றான் உற்சாகமாக.

அவளிடம் கனிவுடன் பேசிய மூதாட்டியொருத்தி, ஊர் திரும்ப உனக்கு வண்டி கிடைக்கும் வரை எங்கள் கிராமத்திலேயே தங்கிக்கொள் மகளே என்றாள். என்னமோ நம்ம ஊர் ஜங்ஷனுக்கு அடுத்த தெருவில் இருப்பதைப்போல நீ விருந்தாளியை அழைக்கிறாய். அங்கே இறங்கி நாம் ஊர் போய்ச்சேர ஏதாச்சும் ஏற்பாடு இருக்கா இல்லே நடந்தே மாயணுமான்னு இறங்கினால்தான் தெரியும் என்று மற்றொருத்தி அலுத்துக்கொண்டாள். கேலியும் கிண்டலுமாக வெளித்தோற்றத்தில் தெரிந்த அவர்களது பேச்சுகளில் ஊர் நெருங்கப்போவது குறித்த அச்சமே உட்பொருளாய் இருந்தது. சொந்த ஊரில் இல்லாத வாழ்வாதாரம் தேடித் தொலைதூரம் போய் இப்போது உயிராசையில் திரும்பும் தங்களைக் காப்பாற்ற ஊர் என்ன வைத்துள்ளது என்கிற கேள்வி திரும்பத்திரும்ப அங்கே சுழன்றடித்தது. அந்தக் கேள்வியிடமிருந்து தப்பியோடத் துடிப்பவன் போன்றிருந்த ஒருவன் இப்படியே ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருந்தால் இறங்கவேண்டிய நேரத்தில் தூங்கிக்கிட்டுதான் இருக்கப்போறோம் என்று எச்சரித்தான். வண்டி நம்ம  ஜங்ஷனோட சரி. அடிச்சுப்பிடிச்சு இறங்கணும்கிற அவசரமில்லை என்று இன்னொருவன் இடக்காகச் சொன்னதைக் கட்டளைபோல ஏற்று ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவர்களை, வண்டி நிற்கவேண்டிய நம்ம ஜங்ஷனைத் தாண்டி ஓடிக்கிட்டிருக்கு என்று வேர் ஈஸ் மை ட்ரெய்ன் இளையான் கூப்பாடிட்டு எழுப்பினான்.

சிக்னல் பிரச்னையாக இருக்கும். அடுத்த ஸ்டேசனில் நிப்பாட்டக்கூடும் என்று அவர்களாகச் சொல்லிக்கொண்ட சமாதானத்திற்கு மாறாக, நிற்பதற்கான எந்த அறிகுறியுமற்று ஒவ்வொரு ஸ்டேஷனையும் பின்தள்ளி மின்னலென விரைந்தோடிக் கொண்டிருந்தது வண்டி. இப்போது அவன் மேலும் பதற்றத்தோடு சொன்னான், வண்டி இப்போ மேற்கு நோக்கி ஓடிக்கிட்டிருக்கு. இந்த மார்க்கத்தில் போவதற்கான தேவையே இல்லை. சங்கிலிகளைப் பிடித்திழுத்தும் ரயில் நின்றபாடில்லை.

ஓடிக்கொண்டேயிருக்கும் ரயிலில் இருந்துவிடுவதுதான் தனக்குப் பாதுகாப்பு என்று முதலில் நினைத்துக்கொண்டிருந்த அவளுக்கும்கூட நிலைமை ஏதோ விபரீதமாகிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. கைவசமிருந்த உணவும் தண்ணீரும் நேற்றிரவு தீர்ந்தபோது, விடியலில் இறங்கிவிடப் போகிறோம்தானே என்றிருந்த தைரியம் இப்போது மறைந்துவிட்டிருந்தது. யாரிடமும் ஒரு பருக்கைச் சோறுமில்லை, ஒரு மிடறு நீருமில்லை. வெளியேயிருந்து தோலைத் தீய்ப்பதுபோல் வீசிய அனற்காற்று உடம்பில் மிச்சம்மீதியிருந்த நீர்ச்சத்தையும் உறிஞ்சிக் குடித்தது. தாகத்திலும் பசியிலும் சொடுங்கி ஒவ்வொருவராக வீழ்ந்தார்கள். வேறுவழியின்றி கழிப்பறைக் குழாய்களில் தண்ணீர் பிடித்து உயிர்த்தண்ணீராய் விட்டதில் ஓரிருவர் மீண்டாலும் அவளது பெட்டியில் மட்டும் ஒரே நாளில் ஆறு சாவுகள். அடுத்தடுத்த பெட்டிகளிலும் இதேகதிதான். பார்க்கப் பார்க்கக் கண்ணெதிரிலேயே செத்து விழுந்தார்கள். செத்தவர்களின் குடும்பத்தார் நெஞ்சே வெடிப்பதுபோல் வீறிட்டழும் ஒலி ரயிலின் தடதடப்பை மீறிக் கேட்டது.

ரயிலின் துருவேறிய இரும்பின் வீச்சமும் தண்ணீர் நின்றுபோனதால் கழிவறையிலிருந்து கிளம்பிய துர்நாற்றமும் பிணங்களிலிருந்து கசியும் நிணநீரின் வாடையும் சேர்ந்து மிச்சமிருப்பவர்களை மூச்சிழுக்கவிடாமல் திணறடித்தது. அவளுக்கு 1921ஆம் ஆண்டின் கூட்ஸ் வேகன் ட்ராஜிடி நினைவுக்கு வந்தது. பிரிட்டிஷ் காலனியாட்சியாளர்களால், காற்றும் வெளிச்சமும் இல்லாத கூட்ஸ் வேகனில் அடைத்துச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட சுதந்திரப்போராட்ட வீரர்களான அரசியல் கைதிகள் வழியிலேயே மூச்சுத்திணறிச் செத்தழுகிப்போன கொடூரங்களை இந்தியாவின் திரூர் ரயில் நிலையத்தில் சுவரோவியங்களாகப் பார்த்திருந்த அவள், அந்த கூட்ஸ் வண்டி நூறாண்டுகளாக பிணங்களைச் சுமந்தபடி இன்னமும் ஓடிக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டாள்.

பிணங்களின் விகாரங்களைக் காணவொப்பாத அருவருப்பில் ஒன்றுமில்லாத வயிற்றை எக்கியெக்கி வாந்தியெடுத்துக்கொண்டிருக்காமல் அவளது சொல்படி அவர்கள் ரயிலிலிருந்து பிணங்களை வெளியே வீசிக் கடந்தார்கள். இந்தியாவின் வால்பாறைக்கும் இலங்கையின் மலையகத்திற்கும் பெருந்தோட்டத் தொழிலுக்குச் சென்றவர்கள் செத்தவர் களையும் சீக்காளிகளையும் நாய்நரிகளுக்கு இரையாக மலைப்பாதையெங்கும் கிடத்திப் போன துயரக்காட்சி உயிர்த்தெழுந்தது அவள் மனக்கண்ணில். நாட்டின் மிகப்பெரிய திறந்தவெளிக் கழிப்பறை என்று இகழப்படும் ரயில்பாதை இனி நாட்டின் திறந்தவெளிப் பிணவறை என்கிற இகழ்ச்சிக்கும் ஆளாகட்டும் என்று சபித்தாள்.

கிளம்பின நாளைக் கணக்கில் கொண்டால் உலகின் மிகநீண்ட ரயில் ரயில்பாதையான ட்ரான்ஸ் சைபீரியன் தடத்தைக்கூட இந்நேரம் ஓடியடைந்திருக்க முடியும். ஆனால் இந்த வண்டி திட்டமிட்ட நாளைத் தாண்டி ஆறாவது நாளாகவும் ஓடிக்கொண்டேயிருந்தது. சிவப்பு விளக்கு எரியும் ஓடுபாதையிலும்கூட சமிக்ஞைகளை மீறி ஓடுவதைப் பார்த்தால் இந்த வண்டி ரயில்வே தகவல் வலையத்தின் கட்டுப்பாட்டை இழந்து நாட்டையும் கண்டத்தையும் தாண்டி பூமிக்கும் வெளியே ஓடிக்கொண்டிருக்கிறதோ என அவள் ஐயமுற்றாள். ஓடும் விசையிலேயே எரிபொருளை உற்பவித்துக்கொண்டு தண்டவாளம் பதிக்காத வெளியிலும் தனக்கான ஓடுபாதையைத் தானே பதித்துக்கொண்டு அது நிற்காமலே ஓடிக்கொண்டேதான் இருக்கப்போகிறது என்றும்கூட யோசித்தாள். இந்த வண்டி போகும் வேகத்திற்கு எதிரே இதேபோல தறிகெட்ட வண்டி ஏதேனும் வந்து மோதினால் என்ன கதியாகும் என்று நினைக்கவே நடுக்கமாய் இருந்தது அவளுக்கு. செல்போன் சிக்னலும் நின்றுபோனதால் ரயில் இப்போது எந்த மார்க்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைக்கூட அறிவியலாதபடி வெளியுலகத் தொடர்புகளிலிருந்து முற்றிலுமாக நாம் துண்டிக்கப்பட்டுவிட்டோம் என்பதை மட்டும் அவள் பொதுவில் சொன்னாள்.

தேசிய சிறை நிரப்பல் துறையிடமிருந்து அவளையும் அவளது கருவையும் காப்பாற்றிய இந்த ரயிலே இப்போது மரண வாகனமாக மாறிவிட்டிருப்பதை அறிந்த பின்னும் அதற்குள்ளேயே உழல்வது அறிவீனம். வாழ்வதற்கான ஒளி மங்கி சாவின் பிரகாசம் கூடியொளிர்வதைக் கண்டாள். சாவதென்றான பின் மலத்தொட்டியும் பிணக்காடுமாகிப்போன இந்தத் துருப்பிடித்த இரும்புக்கொட்டடிக்குள் செத்தழுக வேண்டியதில்லை எனத் தீர்மானித்தவள் அந்த நொடியிலேயே ரயில் கடந்துகொண்டிருந்த ஓர் ஆற்றுக்குள் எகிறிக் குதித்தாள்.

ஓரிடத்தில் நில்லாத ஆறு அவளை ஏந்திவந்து இங்கு கரையேற்றியிருக்கிறது. ஆற்றின் மகளான அவள், இந்தச் சுதந்திரவெளியில் தன் மகவை ஈன்றெடுக்கப் போகிறாள். ஆள்வதற்கு ஒருவருமற்ற இந்த இடமே அவர்கள் வாழ்வதற்குரிய மேன்மையுடையதாய் இருக்கிறது.