Published:Updated:

``நம் வடிவேலுதான் `காந்திகிரி'யை முதலில் தந்தவர்!" - எழுத்தாளர் சுஜாதா #VikatanVintage

பி.ஜே.பி. அரசுக்குத் தன் செக்யூலர் அடையாளங்களை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை மழுங்கடிக்க நினைத்தபோது, Man of the Moment ஆக அவர் கிடைத்தார். மற்றது சரித்திரம்!

sujatha
sujatha

அப்போதெல்லாம் ப்ளஸ் டூ கிடையாது. எஸ்.எஸ்.எல்.ஸி., பரீட்சை எழுதி முடித்தவுடன், காலேஜில் 'இன்டர்மீடியட்'டில் இரண்டு வருஷம் படிக்க வேண்டும். அதன்பின் இரண்டு வருஷம் டிகிரி படிப்பு.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் 1952-ல் இன்டர் படித்து முடித்தவர்களின் குரூப் போட்டோவை, கர்னல் ராஜன் எனக்கு அனுப்பியிருந்தார். கையெழுத்து கேட்டிருந்தார். இதில் கடைசி வரிசையில் ஐந்தாவதாக நிற்கும் அடியேன் முக்கியமில்லை. இரண்டாவது வரிசையில் பதினொன்றாவதாக நிற்பவர்தான் முக்கியம். அவர் அப்துல் கலாம்!

joseph's college
joseph's college

அன்று, திருச்சி பொன்னையா ஸ்டுடியோக்காரர் வந்து ஃபாதர்ஸ் லாட்ஜ் முன்னால் மாலையில் பெஞ்சு நாற்காலி அமைத்து, என் போன்று உயரமாக இருந்தவர்களைப் பின் வரிசைக்கு அனுப்பி, கறுப்புப் போர்வைக்குள் மறைந்துகொண்டு ப்ளேட் வைத்து மூடியை சில செகண்டுகள் திறந்து எடுத்த இந்தப் போட்டோவைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றுவது இதுதான்...

'அடையாளமற்ற, முகமற்ற சுமார் 100 இளைஞர்கள், வாழ்வின் விளிம்பில் மாரத்தான் ஓட்டம் போலப் புறப் பட்டோம். இன்று 55 ஆண்டுகள் கழிந்த பின் பலர் சிறந்தோம்; சிலர் இறந்தோம்; அமெரிக்கா சென்றோம்; கார்கள் தயாரித்தோம்; கவிதைகள் எழுதினோம்; டாக்டர்களானோம்; ஓட்டல்கள் வைத்தோம்; வெள்ளைக் காரிகளை மணந்தோம்; ராணுவத்தில் சேர்ந்தோம்; எழுத்தாளர் ஆனோம்; பாரத தேசத்தின் குடியரசுத் தலைவர் ஆனோம்... ஒரு சேரத்தான் புறப்பட் டோம் மாரத்தான் போல!'

அப்துல் கலாமை உயர்த்திய அந்தத் தருணம் என்ன?

பி.ஜே.பி. அரசுக்குத் தன் செக்யூலர் அடையாளங்களை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை மழுங்கடிக்க நினைத்தபோது, Man of the Moment ஆக அவர் கிடைத்தார். மற்றது சரித்திரம்!

*

சஞ்சய் தத்தின் 'லகே ரஹோ (தொடருங்கள்) முன்னா பாய்' என்கிற இந்திப் படமும் (டைரக்ஷன் ராஜ்குமார் ஹிரானி) இந்த வருஷம் ஆஸ்கருக்கு அமீர்கானின் 'ரங் தே பசந்தி'யுடன் தனிப் படமாகப் போயிருக்கிறதாம்.

மிகப் பெரிய ஹிட் படம்! 'காந்தி கிரி' (காந்தித்தனம்) என்கிற புதிய வார்த்தையை அறிமுகப்படுத்தி, நகைச்சுவை கலந்து காந்தியத் தத்துவத்தைச் சொல்கிற இந்தப் படம் வெளிவந்ததும் அண்மையில் காந்தியைப் பற்றிய புத்தக விற்பனையும் பத்திரிகைக் கட்டுரைகளும் அதிகரித்துள்ளன.

வடிவேலு
வடிவேலு

'காந்திகிரி'யை முதலில் தந்தவர் நம் வடிவேலுதான் என்று நினைக்கிறேன் 'கிரி' என்ற படத்தில் அவரது மறக்க முடியாத 'இவன் எவ்வளவு நல்லவன் டானு சொல்லிட்டாங்க' காமெடி, காந்திகிரியின் வெளிப்பாடு!

- எழுத்தாளர் சுஜாதா, 'கற்றதும் பெற்றதும்' தொடரில் இருந்து. | ஆனந்த விகடன் - அக்டோபர் 22, 2006

# விகடன் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்களின் முக்கியமானது, 2006 முதல் இன்று வரையிலான அனைத்து விகடன் இதழ்களையும் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதே. நம் தளத்திலுள்ள லட்சக்கணக்கான கட்டுரைகளும் பேட்டிகளும் பொக்கிஷங்களாக வாசிக்கக் கிடைக்கின்றன. > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக இப்போது ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv