Published:Updated:

தேசிய நாடகப் பள்ளி அளிக்கும் மூன்றாண்டு கால நாடகக்கலைகள் பட்டயப்படிப்பு... விண்ணப்பிப்பது எப்படி?

நாடகத்திற்குத் தேவையான முன்னேற்பாடுகள் தொடங்கி, அரங்கில் நாடகம் நடந்து முடியும் வரை செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் கற்றுத் தரக்கூடியதாக இந்த நாடகக் கலைகள் பட்டயப்படிப்பு அமைந்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் (Ministry of Culture) கீழ் புதுடெல்லியில் அமைக்கப்பட்டிருக்கும் தேசிய நாடகப் பள்ளி (National School of Drama) மூன்று வருட கால அளவிலான நாடகக்கலைகள் பட்டயப்படிப்பு (Three Years Diploma Course in Dramatic Arts) மாணவர் சேர்க்கை அறிவிப்பை ஜூன் மாதம் வெளியிட்டிருந்தது. டெல்லியில் கோவிட்19 கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருந்ததால், இப்படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க எவரும் ஆர்வம் காட்டவில்லை. எனவே, இப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

நாடகக்கலைகள் பட்டயப்படிப்பு

நாடகத்திற்குத் தேவையான முன்னேற்பாடுகள் தொடங்கி, அரங்கில் நாடகம் நடந்து முடியும் வரை செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் கற்றுத் தரக்கூடியதாக இந்த நாடகக் கலைகள் பட்டயப்படிப்பு அமைந்திருக்கிறது.

தேசிய நாடகப் பள்ளி (National School of Drama)
தேசிய நாடகப் பள்ளி (National School of Drama)

மூன்றாண்டு கால அளவிலான இப்பட்டயப்படிப்பில், முதலாமாண்டில் இரு பருவங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பருவத்தில் நடிப்பு (Acting), வடிவமைப்பு (Design), இயக்கம் (Direction), அரங்க வரலாறு (Theatre History), இலக்கியம் மற்றும் கலைநயம் (Literature & Aesthetics) ஆகியவற்றை அறிமுக நிலையில் கற்றுத் தரப்படும். இரண்டாவது பருவத்தில் இவையனைத்தும் விரிவாகக் கற்றுத் தரப்படும்.

இரண்டாவது ஆண்டில் மூன்று மற்றும் நான்காவது பருவங்களில் அரங்க வரலாறு, இலக்கியம் மற்றும் கலைநயம், நடிப்பு, வடிவமைப்பு மற்றும் இயக்கம் ஆகியவற்றைச் சிறப்புப் பயிற்சியாகக் கற்றுத்தரப்படும். மூன்றாவது ஆண்டில் நடிப்பு அல்லது வடிவமைப்பு மற்றும் இயக்கம் பிரிவில் மேம்பட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.

படிப்பிற்கான பாடங்கள்

நாடக இலக்கியம் (Dramatic Literature) எனும் பகுதியில் நவீன இந்திய நாடகம் (Modern Indian Drama), தொன்மையான இந்திய நாடகம் (Classical Indian Drama), உலக நாடகம் (World Drama), அரங்கக் கட்டடக்கலை (Theatre Architecture), பண்பாட்டுப் படிப்புகள் (Cultural Studies) எனும் பாடங்கள் இடம் பெற்றிருக்கின்றன. நடிப்புப் (Acting) பிரிவில் யோகா (Yoga), அசைவுகள் (Movement). குரல் மற்றும் பேச்சு (Voice & Speech), அரங்க இசை (Theatre Music), நடிப்பு மற்றும் முன்னேற்பாடின்றி திடீரெனப் பங்கேற்றல் (Acting & Improvisation) எனும் பாடங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இயக்கம் (Direction) பகுதியில் இயக்கம் தொடர்பான பல்வேறு பாடங்கள் இடம் பெற்றிருக்கின்றன. வடிவமைப்பு மற்றும் அரங்கச் செய்நுட்பம் (Design & Theatre Technique) பகுதியில் அரங்கக் கட்டிடக்கலை (Theatre Architecture), காட்சி வடிவமைப்பு (Scenic Design), ஆடை வடிவமைப்பு (Costume Design), ஒளி வடிவமைப்பு (Lighting Design), ஒப்பனை வடிவமைப்பு (Makeup Design) எனும் பாடங்கள் இடம் பெற்றிருக்கின்றன. தயாரிப்பு (Production) பிரிவில் தயாரிப்பு குறித்த பல்வேறு தலைப்புகளில் பாடங்கள் இடம் பெற்றிருக்கின்றன. உயர்மதிப்புப் படிப்புகள் மற்றும் பயிலரங்கப் பகுதிகள் (Appreciation Courses & Workshop Sessions) எனும் தலைப்பிலும் பல்வேறு பாடங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

தேசிய நாடகப் பள்ளி (National School of Drama)
தேசிய நாடகப் பள்ளி (National School of Drama)
nsd.gov.in/delhi/

வயது மற்றும் கல்வித் தகுதிகள்

ஆங்கிலம் மற்றும் இந்தி எனும் இரு மொழிகளில் பயிற்றுவிக்கப்படும் இந்தப் பட்டயப் படிப்பிற்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், குறைந்தது ஆறு நாடகம் தொடர்புடைய அரங்கத் தயாரிப்புகளில் பணியாற்றியிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பணியாற்றத் தகுதியுடையவராக இருக்க வேண்டும். நாடக அரங்கப் பணியில் சிறப்பு பெற்ற ஒருவரிடமிருந்து பரிந்துரைக் கடித்தம் பெற்றிட வேண்டும். பெரும்பான்மையாக இந்தி மொழியேப் பயன்படுத்தப்படும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 1-7-2021 அன்று 18 வயதுக்குக் குறையாமலும், 30 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு. தேர்வு செய்யப்படும் அனைத்து மாணவர்களும் இந்தப் பள்ளி நிர்ணயித்திருக்கும் மருத்துவத் தகுதியையும் பெற்றிருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இட ஒதுக்கீடு

நாடகக்கலைகள் பட்டயப்படிப்பிற்கு மொத்தம் 26 இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் 4 இடங்கள் எஸ்சி பிரிவினருக்கும் 2 இடங்கள் எஸ்டி பிரிவினருக்கும், 7 இடங்கள் ஓபிசி பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. மாற்றுத்திறனாளிகளிருப்பின் இந்திய அரசு இட ஒதுக்கீட்டு விதிகளின் கீழ் அதற்கான இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.

விண்ணப்பம்

இந்தப் படிப்பிற்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் குறிப்பேட்டினை http://onlineadmission.nsd.gov.in/ எனும் இணைய முகவரிக்குச் சென்று, பெயர், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தகவல் குறிப்பேட்டினை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்டு, அதன் பிறகு இணைய வழியில் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.50/-ஐ இணைய வழியில் செலுத்திட வேண்டும்.

இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 22-9-2021.
தேசிய நாடகப் பள்ளி (National School of Drama)
தேசிய நாடகப் பள்ளி (National School of Drama)
nsd.gov.in/delhi/

மாணவர் தேர்வு

இந்தப் பள்ளியின் மாணவர்கள் சேர்க்கைத் தேர்வுக்கு அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, இப்படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களின் செயல்திறன் (Aptitude) மற்றும் திறன் (Talent) ஆகியவைகளைக் கொண்டு மாணவர்களின் சேர்க்கையை இறுதி செய்யும். அதற்கு முன்பாக, விண்ணப்பித்தவர்களுக்கு முதனிலைத் தேர்வு (Preliminary Test), கேட்டாய்தல் (Audition) மற்றும் இறுதிப் பட்டறை (Final Workshop) வழியாக மாணவர்கள் தேர்வு நடைபெறும்.

கோவிட்19 கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக, இந்த 2021-2024 ஆம் மாணவர் சேர்க்கைக்கு அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவினர், இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுடைய செயல்திறன் மற்றும் திறன் அறிந்து மாணவர் சேர்க்கையினை நடத்துவர். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாணவர் சேர்க்கை நிறைவு செய்யப்பட்ட பின்பு வகுப்புகள் தொடங்கும்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகள் - கல்வித் தகுதி மற்றும் விண்ணப்ப விவரங்கள்!

கல்விக்கட்டணம்

இப்பட்டயப்படிப்பிற்குச் சேர்க்கைக் கட்டணம் ரூ.150/-, பயிற்சிக்கட்டணம் ரூ.150/- (மாதத்திற்கு), மாணவர் பேரவைக் கட்டணம் ரூ.60/- (ஆண்டுக்கு), ஒப்பனைக் கட்டணம் ரூ.5000/- (சரிசெய்து கொள்ளக்கூடியது), பிணையப்பணம் மற்றும் நூலக வைப்புக் கட்டணம் ரூ.9000/-, எழுதுபொருள் கட்டணம் ரூ.2500/- ஆகியவற்றைச் செலுத்திட வேண்டும்.

விடுதி வாடகை ரூ.250/-, மின்சாரம் மற்றும் தண்ணீர் பயன்பாட்டுக் கட்டணம் ரூ.150/- மருத்துவக் கட்டணம் ரூ.100/- உணவுக்கட்டணம் ரூ.3000/- என்று மாதந்தோறும் செலுத்திட வேண்டும். மின்சாரம் மற்றும் தண்ணீர் பயன்பாட்டுக் கட்டணம் பயன்பாட்டிற்கேற்ப மாறுபடும். இதேபோல், உணவுக் கட்டணம் மாதந்தோறும் மாறுபடலாம். மாணவர்கள் சேர்க்கையின் போது, ரூ.1000/-ஐ சேர்த்துச் செலுத்தி வைத்திருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேடை நாடகம்
மேடை நாடகம்

உதவித்தொகை

இப்பட்டயப்படிப்பு மாணவர்களில் தேர்வு செய்யப்பெற்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.9000/- உதவித்தொகையாக வழங்கப்படும். உதவித்தொகை பெறும் மாணவர்கள், ரூ.3,42,000/-க்கு பிணையத் தொகைக்கான பத்திரம் எழுதிக் கொடுத்திட வேண்டும். உதவித்தொகை பெறும் மாணவர்கள், ஏதாவதொரு காரணத்தினால் இடையில் படிப்பை நிறுத்தினால், வழங்கப்பட்ட உதவித்தொகை முழுவதும் பிடித்தம் செய்யப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கூடுதல் தகவல்கள்

இப்பட்டயப்படிப்பு குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிய, https://nsd.gov.in/ எனும் முகவரியிலான இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது 011-23031120 / 21 எனும் அலுவலகத் தொலைபேசியிலோ அல்லது nationalschoolofdrama@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு