Published:Updated:

சுவர்களை ஆக்கிரமிக்கும் விளம்பரங்கள்... காலத்தால் கரைந்துபோகும் ஓவியங்கள்...! #MyVikatan

நகரின் நுழைவாயில்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன. நகரின் சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை நகரில் உள்ள அரசு கட்டடச் சுவர்களில் இடம் பெற்றிருக்கும் அழகிய வரலாற்று ஓவியங்களை அழித்துவிட்டு சினிமா, அரசியல், வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள் இடம்பெறுவதையும், கால ஓட்டத்தில் அவை கரைந்துவருவதைக் கண்டும் பொதுமக்கள் கவலையும் வேதனையும் அடைந்து வருகின்றனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க புதுக்கோட்டை நகராட்சி 2013-ம் ஆண்டில் நூற்றாண்டு விழாக் கொண்டாடிய பெருமை கொண்டது. அப்போது, புதுக்கோட்டை நகரைப் பொலிவாக்கும் பல திட்டங்கள் புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டன. நகரின் நுழைவாயில்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன. நகரின் சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டன. அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள், பொது இடங்கள் ஆகியவற்றின் சுவர்களில் புதுக்கோட்டையின் பெருமைகள் பேசும் அழகழகான ஓவியங்கள் ஏராளமாய் வரையப்பட்டன. பெரும் பொருள்செலவுடன் இப்பணி நடைபெற்றது. பொதுமக்கள் மத்தியில் இந்த ஓவியங்கள் மிகப்பெரும் வரவேற்பை பெற்றன. சாலைகளைக் கடந்து செல்வோர் அனைவரும் இந்த அழகிய ஓவியங்களைக் கண்டு ரசித்தனர். இதில் இடம் பெற்றிருந்த ஓவியங்கள் பலவும் புதுக்கோட்டையின் பல்வேறு சிறப்பம்சங்களையும், இயற்கைக் காட்சிகளையும், சாதனை நாயகர்களையும், தமிழ்ச் சமூகத்தின் பாரம்பர்யத்தையும் படம் பிடித்துக் காட்டின. இதைக் கண்டு ரசித்த பொதுமக்கள் தங்கள் செல்போன்களிலும் இதை ஆர்வமாய்ப் பதிவு செய்தனர்.

நல்ல நிலையில் இருந்த ஓவியங்கள்
நல்ல நிலையில் இருந்த ஓவியங்கள்

இச்சூழலில் கடந்தாண்டில் (2018) வெளியான நடிகர் சிவகார்த்திகேயனின் `சீமராஜா’ திரைப்பட விளம்பரங்கள் இச்சுவரில் வரையப்பட்டன. இதனால் பல ஓவியங்கள் அழியும் ஆபத்து ஏற்பட்டது. இதற்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. சமூக வலைதளங்களிலும் இது வைரல் ஆனது. இதனால் இந்த சினிமா விளம்பரம் எழுதுவது தடுத்து நிறுத்தப்பட்டது. `சீமராஜா’ சினிமா விளம்பரங்கள் எழுதியவர்கள் வைத்திருந்த பெயின்ட், பிரஷ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. காவல்துறையினரும் அவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பினர். நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கைக்குத் தயாரானது. இதையடுத்து, நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த செலவிலேயே சினிமா விளம்பரங்களை அழித்துவிட்டு மீண்டும் அந்த ஓவியங்களை வரைந்து தருவதாக உறுதி அளித்தார். இதற்குப் பின்னர் அப்பிரச்னை முடிவுக்கு வந்தது.

இது நடந்து முடிந்த சில நாள்களிலேயே ஓவியங்கள் வரையப்பட்டிருந்த சுவர்கள் எல்லாம் ஆங்காங்கே அரசியல் விளம்பரங்களும் சில வர்த்தக நிறுவனங்களின் சுவரொட்டிகளும் இடம்பெறத் தொடங்கின. மேலும் காலப்போக்கில் ஓவியங்களின் வண்ணங்களும் மங்கத் தொடங்கிவிட்டன.

நல்ல நிலையில் இருந்த ஓவியங்கள்
நல்ல நிலையில் இருந்த ஓவியங்கள்

இச்சூழலில் தற்போது நடிகர் விஜய்யின் `பிகில்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியிடப்பட உள்ள நிலையில், அப்படத்தின் விளம்பரங்கள் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை உள்ள அரசு கட்டடச் சுவர்களில் வரையப்பட்டு வருகின்றன. இதனால் அச்சுவர்களில் வரையப்பட்டிருந்த புதுக்கோட்டையின் பெருமைகள் பேசும் ஓவியங்கள் அழிக்கப்படும் ஆபத்து உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மிகுந்த வருத்தமும் கவலையும் அடைந்து வருகின்றனர். இதைக் காவல்துறையினரும், நகராட்சி நிர்வாகமும் உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதொடர்பாக புதுக்கோட்டை சமூக நல ஆர்வலர் புதுகை செல்வா கூறியதாவது : ``சுவர்கள் என்பவை ஆதிகாலம் முதலே தகவல் பலகைகளாக இருந்துள்ளன. பின்னர் அது பிரசாரத் தளங்களாக காலப்போக்கில் மாறிப்போயின. புதுக்கோட்டையின் சமஸ்தானப் பெருமைகள், சித்தன்னவாசல் ஓவியங்கள், முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார், விடுதலைப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி போன்ற மகத்தான மனிதர்களின் ஓவியங்கள், இயற்கைக் காட்சிகள், புதுக்கோட்டையின் பெருமை பேசும் ஓவியங்கள் போன்றவை புதுக்கோட்டையின் அரசாங்க கட்டடச் சுவர்களை அலங்கரித்து இருந்தன. மேலும், தமிழ் சமூகத்தின் பாரம்பர்யமும், பண்பாடும், தொன்மையும் அந்தச் சுவர் ஓவியங்களில் வண்ணமயமாய் தீட்டப்பட்டு இருந்தன. இந்தச் சுவர் ஓவியங்களை வரைவதற்காக ஏராளமான ஓவியர்கள் வெளிமாநிலங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டனர்.

சிதிலமடைந்த நிலையில் ஓவியங்கள்
சிதிலமடைந்த நிலையில் ஓவியங்கள்

ஆனால் இப்போது அந்த ஓவியங்களை அழித்துவிட்டு சினிமா, அரசியல், வர்த்தக விளம்பரங்கள் எழுதுவது என்பது மிகவும் வருத்தத்துக்குரிய ஒன்று. நம் கண்களில் தொடர்ந்துபடும் காட்சிகளும், வாசகங்களும்தான் நம் மனதிலும் மூளையிலும் எப்போதும் ஆழமாய்ப் பதியும் சக்தி கொண்டவை. எனவே, நல்லவைகள் நம் கண்ணில்பட வேண்டாமா? அப்படிப்பட்ட நல்ல ஓவியங்களை அழித்துவிட்டு அரசியல், சினிமா மற்றும் வர்த்தக விளம்பரங்கள் தேவைதானா? இந்த ஓவியக் காட்சிகளை புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் மீண்டும் வரைந்து புதுப்பிக்க வேண்டும். அந்த ஓவியங்களை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்பதே புதுக்கோட்டை மக்களின் விருப்பமும் வேண்டுகோளும். அதுதான் நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சிக்குப் பெருமை” என்கிறார் புதுகை செல்வா.

-பழ.அசோக்குமார்.

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு