Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! -17

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

இவ்வளவு நேரம் என்னத்த சிரைச்சுக்கொண்டு நிண்டனி மயிராண்டி. உங்கட வீட்டு வாசலில நிண்டு கூப்பிட்டாலும் என்னெண்டு கேக்க மாட்டியளா

கடவுள்... பிசாசு... நிலம்! -17

இவ்வளவு நேரம் என்னத்த சிரைச்சுக்கொண்டு நிண்டனி மயிராண்டி. உங்கட வீட்டு வாசலில நிண்டு கூப்பிட்டாலும் என்னெண்டு கேக்க மாட்டியளா

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

மழை வெறிகொண்டு நின்றாடியது. மீண்டும் அந்தக் குரல் அக்காவின் பெயரைச் சொல்லி அழைத்தது. அக்கா அந்தக் குரலை உற்றுக் கேட்டாள். உடம்பைத் துடைத்துக்கொண்டு சொன்னாள் “இது எங்கட மணியன்ர குரல்.” ``அவன் ஏன் யாழ்ப்பாணத்துக்கு வரப்போகிறான், மணியனாய் இருக்க வாய்ப்பில்லை’’ என்றேன். “இல்லை அவன்தான். நீ போய்ப் பார்” என்றாள். நான் மெல்ல பயந்திருந்தேன். மழையில் கரைந்துபோன குஞ்சாச்சியின் உருவம் எனக்குள் அடம்பன் கொடியென திரண்டிருந்தது. வாசலில் தொப்பலாக நனைந்தபடி நின்றிருந்த மணியனைப் பார்த்ததும் ``உள்ளே வாங்கோ’’வென அழைத்தேன்.

“இவ்வளவு நேரம் என்னத்த சிரைச்சுக்கொண்டு நிண்டனி மயிராண்டி. உங்கட வீட்டு வாசலில நிண்டு கூப்பிட்டாலும் என்னெண்டு கேக்க மாட்டியளா” நனைந்திருந்த தன்னை வசவுகளால் காயப்பண்ணுபவனைப்போலத் திட்டிக்கொண்டே இருந்தான். அக்காவைப் பார்த்ததும் அடங்கிக்கொண்டான். ஈரத்தைத் துடைக்க பெரிய துவாயை எடுத்துக் கொடுத்தாள். மணியன் உடல் ஈரத்தில் பூத்திருந்தது. அவன் நடுங்கியபடிக்கே அக்காவிடம் சொன்னான்.

“எனக்கொரு சாயத்தண்ணி போட்டுத் தாங்கோ.”

ஏற்கெனவே அடுப்பில் தண்ணீர் கொதித்துக்கொண்டிருந்தது. மணியன் யாழ்ப்பாணத்துக்கு ஏன் வந்தான்? வன்னியைவிட்டுத் தாண்டுவதற்கு எப்போதும் விரும்பியவன் கிடையாது. ஆனால் இவ்வளவு தூரம் எங்களுடைய வீட்டைக் கண்டுபிடித்து வந்திருக்கிறானே... இவனை நம்ப முடியாது. பன்னிச்சையடியில் யாருக்காவது உவத்திரத்தை கொடுத்துவிட்டு இங்கு வந்திருக்கிறானோ என்று சந்தேகித்தேன். அக்கா தேத்தண்ணி கொடுத்ததும் கேட்டாள்.

``என்ன விஷயமாய் யாழ்ப்பாணத்துக்கு வந்தனி?’’

“சும்மா வந்தனான். எல்லாரும் சொல்லுற மாதிரி யாழ்ப்பாணத்தில என்ன புதுமையாய் இருக்கெண்டு பார்க்கத்தான்.”

``எப்பிடி எங்கட வீட்டு விலாசம் தெரிஞ்சது?’’

``நான் அண்டைக்கு உங்கட அம்மாவிட்ட கேட்டனான்.’’

``ஓ..! அப்பா எப்பிடி இருக்கிறார்?’’

“அவருக்கு என்ன, பள்ளிக்கூடத்தைத் துப்பரவாக்கிக்கொண்டு இருக்கிறார்.”

கடவுள்... பிசாசு... நிலம்! -17

மணியனைப் பார்த்தேன். அவனுடைய கண்கள் நிலையற்ற அசைவுகளோடு இருந்தன. குரல்வளை ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. உமிழ்நீர் அவனுக்குள் சுரந்துகொண்டேயிருக்கிறது. அவன் அதை மீண்டும் மீண்டும் விழுங்கிக்கொண்டே இருக்கிறான். அக்கா எழுந்து சென்று சாப்பிட்டு முடியாத எனது சோற்றுக் கோப்பையை எடுத்துக் கழுவினாள். மணியனுக்குச் சாப்பாட்டைப் பரிமாறினாள். நான் மணியனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவனுக்குள் அலையலையாக எழுந்து தணிய மறுக்கும் தவிப்பையும் ஒருவிதமான அச்சத்தையும் நான் கண்டுகொண்டேன்.

“ஆதீரா! என்னடா கருவாட்டுச்சட்டியை பூனை பார்க்கிற மாதிரி என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்?”

என்னையும் அவன் கவனித்திருக்கிறான். நான் `ஒன்றுமில்லை’ என்று தலையாட்டினேன். மணியன் சாப்பிட்டு முடித்ததும், வீட்டு வாசலில் அமர்ந்து பீடியைப் பற்றவைத்தான். அக்கா கடுமையான தொனியில் சொன்னாள்.

“இது கோயில் வளவு, இஞ்ச இதுக்கெல்லாம் இடமில்ல மணியன்.”

அக்கா சொன்ன வேகமும் தொனியும் அவனை வாடச் செய்தன. சரி என்பதைப்போல கையில் எடுத்த பீடியை ஓடிக்கொண்டிருந்த மழைநீரில் சுண்டி வீசினான். அவனுடைய கண்கள் கலங்கி நின்றன. பீடி குடிக்க முடியாததை நினைத்து அழுகிறான் என்று கருத முடியவில்லை. எதையோ நினைக்கிறான். எதற்காகவோ வருந்தி அழுகிற மனிதனின் உடலில் புகுந்து நிற்கும் நடுக்கத்தை மணியன் தனக்குள் உணர்கிறான் போலும்!

மாலை ஐந்து மணியாகியிருந்தது. அம்மாவும் அல்லியக்காவும் மழையில் நனைந்தபடி வீட்டுக்குள் நுழைந்தனர். மணியன் அம்மாவைக் கண்டதும் மரியாதையோடு ஒரு புன்னகையைப் பரிமாறினான். அம்மா அவனைப் பார்த்து,

“என்னடா இஞ்ச வந்து நிக்கிறாய்?”

“சும்மா வந்தனான். ஏன் வரக் கூடாதோ?”

அம்மா அவன் கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லாமல், வீட்டின் பின்னால் குளிக்கச் சென்றாள். அல்லியக்கா உடம்பைத் துடைத்து மாற்று உடையை அணிந்துகொண்டாள். அவளது முகத்தில் சந்தோஷக் களை துளிர்த்து நின்றது. அக்கா நக்கலாகச் சொன்னாள்.

“முகத்தில் திரி நீண்ட குப்பி விளக்கின் வெளிச்சம் அடிக்கிறது. அப்படியெனில் சந்திப்பு நிகழ்ந்துவிட்டது.”

அல்லியக்காவின் முகத்தில் திடீரெனத் தோன்றிய வெட்கம் அத்தனை பழைமையான காதலின் நளினம். ஆடையைச் சரி செய்துகொண்டு சொன்னாள்.

“ஓமடி புருஷனைப் பார்த்தாச்சு. இப்பதான் எனக்கு நிம்மதியாய் இருக்கு.”

மணியன் எல்லாவற்றுக்கும் பொதுவாகச் சிரித்துக்கொண்டிருந்தான். அல்லியக்காவைக் கொஞ்சம் நிதானமாக அவதானித்தான். அம்மா குளித்து முடித்து வந்தாள். மணியனைப் பார்த்து “சாப்பிட்டியோ?” என்று கேட்டதும், அவன் ஓமென்று தலையாட்டினான். அம்மாவுக்கும் அக்காவுக்கும் அவன் வீட்டுக்கு வந்திருப்பது பிடிக்கவில்லை. எனக்கும்தான். பன்னிச்சையடி கிராமத்தில் அடங்காப்பிடாரியாகத் திரிகிற மணியன் மேல் எத்தனையோ குற்றச்சாட்டுகள். களவும் குடியும் அவனுக்கு அடையாளங்களாக மாறியிருந்தன. அல்லியக்காவும் அம்மாவும் சாப்பிடத் தொடங்கியிருந்தார்கள். மழை விட்டிருந்தது. மணியன் எழும்பி வீதி வரைக்கு நடந்துபோய் வருவதாகச் சொன்னான். பீடி குடிக்க வேண்டுமென்கிற வேட்கை அவனுக்குள் தணலாய் நின்றது. அவன் வீட்டைவிட்டுப் போனதும் அம்மா சொன்னாள்.

“அவன் சரியான கள்ளன். நகைகள், காசுகளைப் பக்குவமாய் எடுத்து வை.” அக்கா சரியெனத் தலையாட்டினாள்.

காந்தியண்ணாவைச் சந்தித்த கதையைக் கேட்க ஆவலாயிருந்தோம். மணியன் இருந்ததால் பெரிதாகக் கதைக்க முடியவில்லை. அவன் போய்த் திரும்பி வருகிற ஊட்டுக்குள் சந்திப்புக் கதையைக் கேட்கலாம் என்று தோன்றியது. அல்லியக்காவே அம்மாவைக் காட்டிச் சொல்லத் தொடங்கினாள்.

“அக்காவோட புண்ணியத்தில அவரப் பார்த்திட்டன். இன்னும் ஒரு மாசத்துக்குள்ள அவர் வன்னிக்குள்ள போயிடுவாராம். அதுக்கு முதல் நானும் வன்னிக்குத்தான் போகவேணும். உங்கட ஊரில வந்து வாழுறதுக்கு ஒரு இடம் பார்க்கவேணும்.”

“எங்கட காணிக்குள்ளேயே இருக்க வேண்டியதுதானே” நான் சொன்னேன்.

“என்னடா இன்னும் கொஞ்சம்விட்டால் அல்லிக்கே காணியை எழுதிக் குடுத்திடுவாய் போலயிருக்கு” அம்மா பகிடியாகச் சொன்னதும், “அவனுக்குத்தான் நாங்கள் எங்கட காணியை எழுதப்போறம்” என்றாள் அல்லியக்கா.

‘கந்தர் குடில்’ இடமா? அல்லது அதுவுமொரு ரகசியக் குறியீடா?

அம்மா சொன்னாள். “கண்டிப்பாய் அது இடமில்லை.”

“பின்ன எப்பிடி அந்தச் சொல் எந்த இடத்தைச் சொல்லுதெண்டு உங்களுக்கு மட்டும் தெரியுது?”

கடவுள்... பிசாசு... நிலம்! -17

“ஆதீரன்... பெரிய ஆக்கள் மாதிரி கதைக்கக் கூடாது. உனக்கு என்னத்துக்கு இப்ப அந்த விளக்கமெல்லாம்...”

அம்மா இப்படிக் கேட்டாலே இனி அவளிடம் எதுவும் கதைக்க முடியாது. போதுமென்று சொல்லும் சமிக்ஞை. நான் அல்லியக்காவிடம் மெதுவாகக் கேட்டேன்.

“காந்தியண்ணா வேற என்ன சொன்னவர்?”

“உன்னைக் கவனமாய் படிக்கட்டாம். அங்க இங்கையெண்டு சுத்த வேண்டாமாம்.”

அவர் இப்பிடி மறைஞ்சிருந்தபடிக்கும் இதைத்தான் சொல்லிவிட்டவரே. எப்ப பார்த்தாலும் படிக்கச் சொல்பவர்களை நினைத்தால் கடுங்கோபமே வருகிறது. வெளியே ஒரு குட்டிநாயைத் தூக்கிக்கொண்டு மணியன் நடந்துவருவது தெரிந்தது. நாய் கத்துகிற ஒலி கேட்டு அம்மா வெளியே எட்டிப்பார்த்தாள். மணியன் தன்னுடைய நெஞ்சோடு அணைத்தபடி வாசலில் நின்றுகொண்டு அக்காவிடம் சொன்னான்.

“கொஞ்சம் பால்கரைச்சுத் தாங்கோ, குடுப்பம்.”

“உது எங்க நிண்ட நாய்க்குட்டி, ஏன் அதை இஞ்ச தூக்கி வந்தனி. கொண்டே விட்டிட்டு வா.” அக்கா சொன்னாள்.

“பாவம், மழையில நனைஞ்சு தனிய நிண்டு கத்துது.”

“அது பரவாயில்லை. கொண்டுபோய் விட்டிட்டு வா மணியன்.” நான் சொன்னேன். அம்மா எதுவும் கதையாமல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தாள். அல்லியக்கா மணியனை விநோதமாகப் பார்த்தாள். அவன் எடுத்த இடத்தில் குட்டியைக் கொண்டுபோய் விடுவதற்காகத் திரும்பி நடந்தான். அம்மா சொன்னாள்.

“இவனை நாளைக்கு வெளிக்கிட்டு போகச் சொல்லவேணும். ஆதீரன்... அவனிட்ட இண்டைக்கே சொல்லிப்போடு.”

“வந்தவன் ரெண்டு மூன்று நாளைக்கு நிக்கட்டுமேன்.”

“திருப்பிக் கதையாமல் நான் சொல்லுறதைச் செய்.”

அன்றைக்கு அல்லியக்காவும் எங்களுடைய வீட்டிலேயே தங்கினாள். இரவும் மழை பெய்துகொண்டிருந்தது. நான், மணியன், அம்மா ஒரே பக்கத்தில் படுத்துக்கொண்டோம். ஏனைய இருவரும் எதிர்ப் பக்கத்தில் படுத்திருந்தனர். மணியன் இரவிரவாக விழித்திருந்தான். அவனுடைய கண்கள் மூடுவதற்கே அஞ்சின. பூமியைப் பார்த்துக்கொண்டிருக்கவே விரும்புகிற ஒரு குற்றவாளியின் நிழலைப்போல எனக்கருகே அவன் மல்லாந்து படுத்திருந்தான். அவனுக்கு மிக அருகில் புரண்டுபோய்க் கேட்டேன்.

“உனக்கு என்னதான் பிரச்னை, ஏன் பேய் அடிச்சவனைப்போல இருக்கிறாய்?”

மணியன் தளர்ந்திருந்த தனது உடலை ஒரு மெல்லிய மூச்சுவிடலில் திடப்படுத்திக் கொண்டான். வெளியே பெய்துகொண்டிருக்கும் மழையின் ஈரலிப்பில் காற்று நிகழ்ந்தது. மணியன் சொன்னான்.

“நிறைய குற்றங்கள் செய்திட்டன். இயக்கம் என்னைப் பிடிச்சு அடைச்சிடுமோ எண்டு பயமாய் இருக்கு.”

“அப்பிடி என்ன செய்தனி?”

“நாளைக்கு விரிவாய்ச் சொல்லுறன். ஆனால் எனக்கு வன்னிக்குள்ள போக பயமாய் இருக்கு.”

“ஏன்?”

“அங்க, இயக்கம் என்னைப் பிடிச்சால் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிடுவாங்கள்.”

“அது நல்லதுதான் மணியன். ஆனால், இஞ்ச அப்பிடிக் கிடையாது. சுட்டெல்லே போடுவினம்.”

படுக்கையிலிருந்து எழும்பிய மணியன் நெஞ்சைப் பற்றிக்கொண்டு சொன்னான். “என்னை இயக்கம் சுடாது... நான் செய்தது எல்லாமே சின்னக் குற்றங்கள்.”

“சின்னனோ, பெரிசோ. இயக்கத்துக்குக் குற்றமெண்டால் அளவு முக்கியமில்ல.”

“நான் விடுகிற மூச்சோட சத்தம் எனக்குள்ளேயே கேக்குது. ஆதீரன்... உங்கட அண்ணாவிட்ட சொல்லி என்னைக் காப்பாத்தி விடு” என்று விம்மி விம்மி அழுதான்.

“சரி அழாமல் படு மணியன். என்ன நடந்தது எண்டு நாளைக்குச் சொல்லு.”

வீட்டுக்கு வெளிய யாரோ டோர்ச் லயிற்றை அடித்துக்கொண்டு வருவது தெரிந்தது. அவர்கள் கதைக்கும் சத்தம் அந்த இரவுக்கு விரோதமாயிருந்தது.

(நீளும்...)