Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! -20

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

அம்மாவிடம் பன்னிச்சைத்தாய் தந்ததை சொல்லியிருக்கக் கூடாது. அந்த நொடியில் நாகப்பர் மேல் வந்த கோபத்தில் சொல்லிவிட்டேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! -20

அம்மாவிடம் பன்னிச்சைத்தாய் தந்ததை சொல்லியிருக்கக் கூடாது. அந்த நொடியில் நாகப்பர் மேல் வந்த கோபத்தில் சொல்லிவிட்டேன்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதி வந்ததுமே, மணியனை இயக்கத்திடம் கையளித்தாள் அம்மா. தமிழீழக் காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவனை அழைத்துச் சென்றனர். “மணியன் நீ அப்பிடிச் செய்திருக்கக் கூடாது” என்று மட்டும் அம்மா சொல்லியனுப்பினாள். அவனை பயம் களைக்கச் செய்திருந்தது. குற்றத்தின் பாதைகளில் அவன் பலவீனப்பட்டிருந்தான். அவனைத் தண்டிப்பதோ, வருத்துவதோ கனம் பெருத்த குற்றமாகிவிடும். ஆனால், அவனைத் தண்டித்துத்தான் திருத்த வேண்டுமென அம்மா சொன்னாள். அன்றைக்கு முழுக்க மணியனைக் காவல்துறை சீர்திருத்தப் பள்ளிக்குக் கூட்டிச் சென்றதே பன்னிச்சையடி கிராமம் முழுக்கச் செய்தியாக இருந்தது. பன்னிச்சைத் தாய் தந்தருளிய உடுக்கை, வீட்டுக்குள் தேடி அலைந்தேன். காணாது அம்மாவிடம் கேட்டேன். ``அதை நாகப்பர் எடுத்துச் சென்றுவிட்டார்’’ என அம்மா சொன்னாள். அந்த உடுக்கை ஏன் நாகப்பர் எடுத்துச் சென்றார்... இப்போது அவரை எங்கே பார்க்க முடியும்? பலர் கள்ளருந்தும் பொதுவான இடத்துக்கு ஓடிப்போனேன். காவோலையை மூட்டி நெருப்பில் சூடைக்கருவாட்டைச் சுட்டுக்கொண்டிருந்தவரிடம் கேட்டேன்,

``நாகப்பர் இஞ்ச வந்தவரோ?’’

அவர் கள்ளை அருந்தி, சுட்டகருவாட்டைக் கடித்தபடி, தனது சாறத்தை அவிழ்த்து தலையைக் குனிந்து பார்த்துச் சொன்னார்.

“இதுக்குள்ளதான் வைச்சனான், ஆனால் ஆளக் காணேல்ல. எனக்குக் கண்ணில பழுது, நீயொருக்கால் வந்து பாரடா” என்றார்.

“உனக்கு சின்னப் பிள்ளையளோட கதைக்க, பேசத் தெரியாதே” என்று அவரைத் திட்டியபடி நாகப்பரின் வீட்டுக்கு ஓடினேன். நாகப்பர் அங்குமில்லை. நான் வீட்டுக்குத் திரும்பி வந்தேன். அக்காவும் அவளது நண்பிகளும் கதைத்துக்கொண்டிருந்தனர். அவர்களில் சிலருக்கு யாழ்ப்பாணம் என்பதே கனவு பூமியாக இருந்தது. அக்கா யாழ்ப்பாணத்தின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டிருந்தாள். அம்மாவிடம் ஓடிப்போய் “நாகப்பர் உடுக்கை எடுக்கேக்க எதவாது சொன்னவரே” என்று கேட்டேன். யோசித்துப் பார்த்துவிட்டுச் சொன்னாள். “அவனுக்கு நான் விருப்பப்பட்டு குடுத்தத விட்டிட்டு போய்ட்டான் என்று சொன்னவர்.’’

“அவர் எங்க தந்தவர்... எப்ப பார்த்தாலும் பொய்யும் புளுகும். இண்டைக்கு வரட்டும், அவருக்கு இருக்கு.”

``அவர் தராமல் உனக்கு உந்த உடுக்கை ஆர் தந்தது?’’

“பன்னிச்சைத்தாய்”

``ஆரடா?’’

“பன்னிச்சைத்தாய்”

“உனக்கு என்ன விசரே, கிழவி உனக்கு முன்னால தோன்றி உடுக்கை தந்தவாவே.”

“உண்மையாய் அவாதான் தந்தவா.”

“சரி. நாகப்பர் வரட்டும். உண்மை எதெண்டு கேப்பம்.”

கடவுள்... பிசாசு... நிலம்! -20

அம்மாவிடம் பன்னிச்சைத்தாய் தந்ததை சொல்லியிருக்கக் கூடாது. அந்த நொடியில் நாகப்பர் மேல் வந்த கோபத்தில் சொல்லிவிட்டேன். நாகப்பர் வந்தால் இன்றொரு விசாரணை இருக்கிறது. நான் அவற்றைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு இப்போது தேவை உடுக்கு. பன்னிச்சைத்தாய் விழித்திருக்கும் உப்புக்காட்டில் உடுக்கை அடிக்க வேண்டுமென மனம் எழுந்து கொண்டேயிருக்கிறது.

இரவாகிவிட்டது. நாகப்பர் வரவில்லை. அவருடைய வீட்டுக்கு மீண்டும் இரண்டு தடவை போய்ப் பார்த்தேன். வெளிச்சமில்லை. மணியனின் தந்தை ராமலிங்கம் வீட்டுக்கு வந்திருந்தார். நடந்தவற்றை அம்மா ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள். “சரியான வேலை செய்திருக்கிறாய், அவனைத் திருத்த இவங்களால மட்டும் தான் முடியும் ” என்று சொல்லிக்கொண்டே எழுந்து சென்றார். மணியன் நிறைய கசப்புகளை தகப்பனுக்கு நிகழ்த்தியிருக்கிறான். அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. “எனக்கு அவன் பிள்ளை, என்னை நோகச்செய்யலாம். ஆனால் மற்ற ஆக்களை அப்பிடியெல்லாம் செய்யக் கூடாது” என்றார். இரவின் ஒவ்வோர் இழையிலும் நாகப்பரின் வருகைக்காக தொங்கிக் கொண்டிருந்தேன். நாளை காலை பன்னிச்சைத்தாயிடம் போக வேண்டும். காலையிலேயே மழை பெய்துவிட்டால் வேட்டைக்கு வசதியாகவிருக்கும். அம்பிகாவைச் சந்திக்க வேண்டும். அவளுக்குக் காட்டுக்குள் தேன் எடுத்துவந்து கொடுக்க வேண்டும். ஏனென்று உணர முடியாமல் ஒவ்வொரு தருணமும் படபடத்து எனக்குள் வந்தமர்கிற ஒரு தும்பியைப்போல் ஆகிவிட்டாள். அவளுடைய நிழலிலும் வாசனை பெருகுகிறது என்று நம்பத் தொடங்கும் எனக்கு எந்தப் பேயாடியிடமும் முறி மருந்தில்லை. முற்றத்தில் அமர்ந்திருக்கிறேன். பன்றி வேட்டைக்குச் செல்லும் விநாயகம் மாமா இடியன் துவக்கோடு நடந்து செல்கிறார். அவரின் பொய்க்கால் சத்தம் ஒரு இசைக்கோர்வையின் லயத்தோடு கேட்கிறது. அமைதிப்படை ராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளாகி வலது காலை இழந்தவர். “அமைதிப்பட எங்களிட்ட வரும்போது, பூ மாலைகளோட வரவேற்றம். பிறகு அவங்கள் எங்கட குடலை உருவி மாலை போட்டுட்டாங்கள்” எப்போதாவது கதைக்கும்போது இப்படிச் சொல்லுவார். இடியன் விநாயகம் என்றால் தெரியாதவர் யாருமில்லை. “விநாயகம் இடியன் துவக்கால இந்திய ராணுவத்தையே எதிர்த்த ஆளடப்பா, இயக்கத்தில இருந்திருந்தால் தளபதி யாகியிருப்பான்” என்பார் நாகப்பர்.

“உள்ள வந்து படு, நாளைக்குக் காலமைதான் இனி நாகப்பர் வருவார்.” அம்மா சொன்னாள்.

“ஒருக்கால் அவற்ற வீட்டில போய் பார்த்திட்டு வரவே?’’

“உந்த இருட்டுக்குள்ளால திரியாமல் வந்து படு. நாளைக்குப் பாக்கலாம்.”

“அவர் ஏன் எடுத்துக்கொண்டு போனவர்... கிழவன் வரட்டும். ஒரு குடுவை குடுக்கத்தான் வேணும்.”

இரவு முழுக்க விழித்திருந்தேன். நாகப்பர் வரவேயில்லை. விடிந்து காலைச் சாப்பாட்டு நேரத்துக்கு வந்திருந்தார். அவருடைய கண்கள் நல்ல தெளிவாக இருந்தன. என்னைப் பார்த்து பிரகாசமாகச் சிரித்தார். வெற்றிலை வாயைக் கொப்பளித்து, செம்பில் வாய்வைத்துக் குடித்தார்.

“என்ர உடுக்கு எங்க?’’

“உன்ர புடுக்கோ, அது ஏனடா எனக்கு” என்று நக்கலாகச் சிரித்தார்.

“உடுக்கு... உடுக்கு.”

“அது என்னட்டத்தான் கிடக்கு, வீட்ட வா எடுத்துத் தாறன்.”

நான், ``போகலாம்’’ என்றேன்.

“சாப்பிட வந்தவரைக் கூட்டிக்கொண்டு போக நிக்கிறாய், இதென்ன பழக்கம். கொஞ்ச நேரம் இரு” அக்கா திட்டினாள்.

ஒற்றைக்காலில் காத்திருக்கும் கொக்கைப்போல அவரின் சாப்பாட்டுத் தட்டையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் மிக வேகமாகச் சாப்பிடக்கூடியவர். ஆனால், இன்றைக்கு முட்டையில் மயிர் புடுங்கும் விநோத ஆராய்ச்சியாளரைப்போல இடியாப்பத்தின் ஒவ்வொரு சிக்கலையும் ஆராய்ந்து கொண்டிருந்தார். சம்பலை இதுவரையும் சாப்பிடாத ஒருவரைப்போல இது தேங்காய்ப் பூவில் செய்யும் உணவா எனக் கண்களால் வியக்கிறார். ஏன் இந்த தாமதிப்பு, இத்தனை வேண்டாத பாவனைகள் என்று தெரியவில்லை. எனக்குக் கோபம் வந்தது. நான் உப்புக்காட்டுக்கு நடக்கத் தொடங்கினேன். பன்னிச்சைத்தாயிடம் முறையிடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. பன்னிச்சை மரத்திலேயே நிறைய உடுக்குகள் காய்களைப்போலத் தொங்கிக்கொண்டி ருந்ததைக் கண்டு அதிர்ந்துவிட்டேன். உடல் நடுங்கத் தொடங்கிவிட்டது. அதிசயங்களுக்கு முன்னால் சாதாரணன் மண்டியிடுவான். நான் மண்டியிட்டேன். குருதி பொங்கி உடம்புக்குள் வெம்மையாகச் சுரக்கிறது. `என் தாயே! உனது அருளை நான் போற்றுகிறேன். உனது திருவிளையாடல்களை நான் மெச்சுகிறேன். இதோ என் குருதி குடி. இதோ என் குருதி குடி’யென கால்களை உயர்த்தி உடுக்கைப் பறிக்கிறேன். உடுக்கின் ஒலியும் நாதமும் எழுகின்றன. பன்னிச்சைத்தாய்க்குக் குருதி அளிக்கிறேன். மரத்தின் வேர்களில் நீரைப்போல குளிர்விக்கும் எனது குருதியை அவள் வாங்கிக்கொண்டேயிருந்தாள். அப்போது எனது கண்கள் சொருகுவதை உப்புக்காடு மட்டுமே பார்த்தது. பிறகு நடந்தவற்றையெல்லாம் நாகப்பர் சொல்லியே அறிந்தேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! -20

நான் கண்கள் சொருகி பன்னிச்சை மரத்தடியில் சாய்ந்தேன். ஆனால் என்னைப் போராளிகள் கண்டெடுத்தது திருநீற்று வாய்க்கா லிலுள்ள பனைமரத்தடியிலாம். என்னுடைய குரல்வளையில் எந்தக் காயமுமில்லையாம். ஆனால், அதிலிருந்து குருதி வந்ததற்கான தடயம் இருந்ததாம். போராளிகள் என்னைத் தங்களுடைய முகாமுக்குத் தூக்கிச் சென்று முதலுதவி மருத்துவத்தைப் பார்த்திருக்கின்றனர். ஆனால் எதுவும் பயனளிக்காமல் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், நித்திரையைவிட்டு எழும்புகிற ஒருவனைப்போல கண்களைக் கசக்கிக்கொண்டு, அலுப்பு முறித்தேனாம். அதன் பிறகு போராளிகளில் ஒருவர்,

``நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் காட்டுக்குள் வந்தனியள்?’’ என்று கேட்டார்.

“நான் வரவேயில்லை.”

“பின்ன ஆர் உங்களைக் கூட்டிக்கொண்டு வந்தது?”

“ஒருத்தரும் இல்லை, எனக்கு ஒண்டும் தெரியாது.”

உப்புக்காட்டுக்குள் போராளிகளின் முகாம்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் என்னை இப்போது கண்டெடுத்தவர்கள் கொஞ்சம் இறுக்கமான பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு என்மீது சந்தேகப்படவேண்டிய தேவைகள் இருந்தன. என்னை விசாரணை செய்ய வீட்டுக்கு அழைத்து வந்தனர். அம்மா அவர்களை வரவேற்று அமரச் சொன்னாள். ``அவர்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லு. பொய் சொல்லக் கூடாது’’ என என்னிடம் கூறினாள். அவளுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் உள்ளுக்குள்ளேயே விழுங்கிச் சிரித்தாள். என்னை விசாரணை செய்த போராளி என்னுடைய பெயர், யாழ்ப்பாணத்திலுள்ள வீட்டு முகவரி போன்றவற்றைக் கேட்டு எழுதிக் கொண்டார். நான் படிக்கும் பள்ளிக்கூடம், ராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருப்பதால் அவர்களுக்குச் சந்தேகப்பட ஒரு பொருள் இருந்தது. அம்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த விசாரணை நடந்து கொண்டிருந்த வேளையில் `தொப்பி’ குயிலன் வாகனத்தில் வந்து இறங்கினார். அந்தப் போராளிகளுக்கு `தொப்பி’ குயிலனைத் தெரிந்திருக்காது. அவர்கள் அப்படியே அமர்ந்திருந்து என்னிடம் விசாரணையைத் தொடர்ந்தனர்.

``ஏன் காட்டுக்குள் அவ்வளவு தூரம் வந்தனியள்?’’

“நான் வரேல்ல.”

“நீங்கள் வராமல் பின்ன எப்பிடி அங்க மயக்கமாய் கிடந்தனியள்?”

நான் கேட்டேன். “ஏன் காட்டுக்குள் வரக் கூடாது. அது உப்புக்காடு. ஆர் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். அப்பிடி இல்லையா?’’

“இல்லை.”

“அப்ப ஆரார் எவ்வளவு தூரம் வரலாம் என்று சொல்லுங்கோ, அப்பிடி நடந்து கொள்கிறேன்.”

“எங்களைப் பார்த்தால் என்ன நக்கலாய் கிடக்கா?”

“பின்ன, நீங்கள் காட்டுக்குள்ள இருக்கிறதால நாங்கள் நாட்டுக்குள்ள பாதுகாப்பாய் இருக்கிறம்.ஆனால் நீங்கள் இருக்கிற காட்டுக்குள்ள ஒருத்தன் வந்தால் அதென்ன துரோகமே, இல்ல கேக்கிறன்.”

`தொப்பி’ குயிலன் சிரித்துக்கொண்டே “சரி நிப்பாட்டுங்கோ உங்கட நாடகத்த... அவன் கோபப்பட்டால் கேக்கிற கேள்விகளுக்கு எங்களிட்ட பதில் இல்லாமல் போய்டும்” என்றார்.

அந்தப் போராளிகள் என்னைக் கட்டியணைத்து, ``இவர்தான் இப்படி உங்களை சும்மா விசாரிக்கச் சொன்னவர்’’ என்று குயிலனைக் காண்பித்தனர்.

நான் அவர்களிடம் ஒன்றும் பறையாமல் வீட்டினுள்ளே போனேன். அவர்களுக்கு முன்னால் சிரிக்கக் கூடாதல்லாவா!

(நீளும்)