Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! -24

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

எனது புருவங்கள் உயர்ந்தன. எங்கே, யார், எப்படியென ஆர்வம் தத்தளிக்க அவரையே பார்த்தேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! -24

எனது புருவங்கள் உயர்ந்தன. எங்கே, யார், எப்படியென ஆர்வம் தத்தளிக்க அவரையே பார்த்தேன்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

இரவு தருவித்த நடுக்கத்தோடு, காந்தியண்ணாவின் காயத்துக்குச் சூடாக்கிய மஞ்சளும், நல்லெண்ணெயும், கல்லுப்பும் சேர்த்து குழைத்துப் பூசினோம். காந்தியண்ணாவோடு வந்தவரின் பெயர் ஓவியன். குள்ளமாக இருந்தார். அவரின் சுருட்டைத் தலைமுடியும், இரண்டு கண்ணிமைகளும் சேர்ந்துகொள்ளும் நெற்றியும் வடிவாக இருந்தன. காயத்தின் தணலில் வதையுணர்ந்தபடி காந்தியண்ணா இருந்தார். அவருக்குள் மிதந்துகொண்டிருந்த அல்லியக்காவின் துயரம், ஒரு பனையளவு அலையென எழுந்து சீறியது. அக்காவையும் என்னையும் கட்டியணைத்து விம்மி விம்மி அழுதார். ரத்தமும் கண்ணீரும் கலந்த அந்தப் பொழுதை ஓவியன் பார்த்துக்கொண்டிருந்தார். அல்லியக்காவுக்குக் கொள்ளிவைத்த எனது கையைப் பற்றி அழத் தொடங்கினார். அக்காவும் நானும் அவருக்கு ஆறுதலாகக் கட்டியணைத்து அழுதோம். மெல்ல மெல்ல துயரின் தசைகள் பிய்ந்து இளகின. காந்தியண்ணா கண்களைத் துடைத்துக்கொண்டு “பிள்ளை... நாங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில வெளிக்கிட்டிடுவம், நீங்கள் பயப்பிடத் தேவையில்ல.”

“இப்ப நாங்கள் பயப்பிடுறம் எண்டு ஆர் சொன்னது” அக்கா கேட்டாள்.

போராளிகள், ராணுவத்தின் சீருடையை அணிந்திருப்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. முதன்முறையாக இப்படியொரு காட்சியைப் பார்க்கிறேன். காந்தியண்ணா தன்னைப் போராளியாகச் சொன்னது கிடையாது. ஆனால் ஓவியன் போராளி. அவரும் அதையே அணிந்திருந்தார்.

“உங்கள் ரெண்டு பேருக்கும் வேற உடுப்பில்லையோ, உந்த உடுப்ப பார்த்தால் என்னவெல்லாமோ செய்யுது” என்றேன்.

“இந்த உடுப்புதான் எங்களை இவ்வளவு நேரமாய்க் காப்பாற்றியிருக்கு” என்றார் ஓவியன். அதை ஆமோதிப்பதைப்போல காந்தியண்ணா தலையசைத்தார். அக்கா அவர்களுக்குத் தேநீர் பரிமாறினாள். சாப்பிடுவதற்குப் பலகாரங்களைக் கொடுத்தாள்.

`என்ன நடந்தது, ஏன் இப்படி ரத்தம் ஒழுக ஒழுக ஓடிவருகிறீர்கள், ராணுவத்தின் சீருடை அணிந்து எங்கே போனீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்க விரும்பிய கேள்விகள் எனக்குள் ஊறிக்கொண்டேயிருந்தன. ஆனால் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்பது அடைக்கல மாதாவின் வீட்டு மரபில்லை. ஓவியன், தனது முதுகின் கீழே செருகிவைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வெளியேவைத்தார். காந்தியண்ணா என்னைப் பார்த்துக்கொண்டு ஓவியனிடம் சொன்னார்.

கடவுள்... பிசாசு... நிலம்! -24

“அணிலைத் தூக்கி வெளியவெச்சதும் ஆதீரன்ர கண்ணைப் பார்த்தனியளே, அவனுக்கு இதெண்டால் ஒரு புளுகம். தமையன் வீட்டுக்குக் கொண்டுவந்தால் அதை உள்ளங்கையிலவெச்சு நிறுத்துப் பாப்பான்.”

“அணில் என்றால் பிஸ்டலோ?” என்று கேட்டேன். ஓவியன் ஓமென்று தலையசைத்துக்கொண்டு “அணில் இண்டைக்கு மூன்று பேரை வேட்டையாடியிருக்கு” என்றார்.

எனது புருவங்கள் உயர்ந்தன. எங்கே, யார், எப்படியென ஆர்வம் தத்தளிக்க அவரையே பார்த்தேன். என்ன அதிசயமோ காந்தியண்ணா நடந்தவற்றைச் சொல்லத் தொடங்கினார்.

“நேற்றைக்கு ஆர்மிக்காரங்கள சிவத்தான்ர மில் முடக்கிலவெச்சு சுட்டது நாங்கள்தான். எங்களைத் தேடிச் சுற்றிவளைப்பு நடக்குது. நாங்கள் தாக்குதலைச் செய்துபோட்டு பொயிலைத் தோட்டத்துக்குள்ள ஓடிட்டம்.”

“எல்லா இடத்திலையும் தேடின ஆர்மி அங்க தேடேல்லையோ?” என்று கேட்டேன்.

“அவங்கள் முதல் இறங்கினதே அதுக்குள்ளதான். ஆனா எங்களைக் கண்டுபிடிக்க முடியுமோ? புகை போக முடியாத இடத்துக்குள்ளேயே புலி போய்டுமெல்லே” என்றார் காந்தியண்ணா.

“தாக்குதல் நடந்த நேற்று இரவிலிருந்து இப்ப வரைக்கும் அங்கயே இருந்தனியள்?” அக்கா கேட்டாள்.

“இல்லை, நாங்கள் இண்டைக்குக் காலம்பிறையே இடம் மாறிட்டம்.” ஓவியன் சொன்னார். அவருடைய குரலில் சாகசமற்ற தீரமிருந்தது.

“எங்க போனியள்?”

காந்தியண்ணாவின் வாய் ஓரத்தில் புன்னகை. ஓவியன் முகத்தில் பதில் சொல்ல முடியாத தீர்மானம். ``சரி, சொல்லக் கூடாதென்றால் விடுங்கள்’’ என்றேன். ``அப்பிடியொரு ரகசியமும் இல்லை. அல்லி எரிஞ்ச சுடலைக்குப் போக வேணும்போல இருந்தது. அதுமட்டுமில்ல, அதுதான் பாதுகாப்பும்கூட. ஆரையும் அங்க வந்து தேட மாட்டினம்’’ என்றார் காந்தியண்ணா.

“பிறகு என்ன நடந்தது?”

“பிறகுதான் எல்லாமும் நடந்தது” ஓவியன் என்னைப் பார்த்துச் சொன்னார்.

``நாங்கள் சுடலைக்குப் போகேக்க விடியப்பிறம் நாலு மணியிருக்கும். பொயிலைத் தோட்டத்திலருந்து சுடலைக்குப் போறதுக்கு எங்களிட்ட இருந்த ஒரே வழி குளத்தைக் கடக்கிறது. ஆனால், அங்க ஆர்மி நிப்பாங்கள் எண்டு ஒரு யோசனை வந்தது. அப்பிடி இருந்தால் வந்தவழியே வரலாமென்று முடிவெடுத்து குளத்தில் நீந்திச் சுடலைக்கு வந்தம். சுடலைக்குப் பின்னாலுள்ள பத்தைக்குள்ள மறைஞ்சிருந்தம். அப்பதான் எங்களுக்கு ஒரு தகவல் வந்தது. நாங்கள் அந்தக் காரியத்தை வெற்றிகரமாய்ச் செய்துபோட்டுத்தான் வந்திருக்கிறம்.’’

“என்ன காரியம்?”

“தாக்குதல்தான்.”

“எங்க?”

“மேல் மாடி ஆர்மி காம்ப்.”

சொல்லிக்கொண்டே ஓவியன் வீட்டைவிட்டு வெளியே போய், கைப்பேசியில் யாரையோ அழைத்து “நாங்கள் மருதன்ர இடத்தில நிக்கிறம்” என்றார். ஒரு அரை மணித் தியாலத்தில் ஆட்டோ ஒன்று எங்களுடைய வீட்டுக்கு முன்னால் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி வந்த பெண்ணுடைய கையில் ஓர் உடுப்புப் பை இருந்தது. அவள் வீட்டுக்குள் நுழைந்ததும், ஓவியன் பையை வாங்கி, உடுப்பை மாற்ற வெளியே போனார். காந்தியண்ணாவும் சேர்ந்து உடுப்பை மாற்றினார். ராணுவத்தின் சீருடைகளை ஓர் உரப்பையில் கட்டி, வீட்டின் பின்னே புதைக்குமாறு ஓவியனுக்கு அந்தப் பெண் சொல்லவில்லை. கட்டளையிட்டார். துரிதமும் தெளிவும்கொண்ட நகர்வுகளாக இருந்தன. அந்தப் பெண்ணை காந்தியண்ணாவும் இப்போதுதான் முதன்முறை சந்திக்கிறார்போலும். அவர்களுக்குள் பெரிதாக உரையாடலே நிகழவில்லை. ஆட்டோக்காரன் வாலிபனாக இருந்தான். அவனை அழைத்து, ``பாம்புக்குத் தகவல் சொல்லு, இன்னும் ஒரு அஞ்சு நிமிசத்தில வெளிக்கிடலாம்’’ என்ற அந்தப் பெண்மணி, அக்காவிடம் ``உங்கட பெயர் என்ன?’’ என்று விசாரித்தார். அக்கா தன்னுடைய பெயரைச் சொல்லி ஒரு புன்னகையை அளித்தாள். ``உங்களுடைய அம்மாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்’’ என்றார். எங்களைக் கட்டியணைத்து, “என்ர பிள்ளையள் நீங்கள். கவனமாய் இருங்கோ” என்ற காந்தியண்ணா ஆட்டோவில் இறுதியாக ஏறிக்கொண்டார். ஆட்டோ எங்களுடைய வீட்டிலிருந்து வெளிக்கிட்டுச் சென்றதும், நானும் அக்காவும் தனித்துப்போன உணர்வு இருந்தது.

“ஆட்டோவில வந்த அக்காதான் இவையளுக்குப் பொறுப்பாளர்போல.”

“எனக்கும் அப்பிடித்தான் தெரியுது.” அக்கா சொன்னாள்.

“ஓவியன் வெளியால போய் போன் கதைச்சதைக் கேட்டனியளோ, எங்கட வீட்டுக்கு மருதன்ர இடமெண்டு குறிப்புச் சொன்னவர்.”

“ஓம்... ஓம். அவர் அடுத்த தடவை வரவிட்டுக் கேப்பம். இப்பிடி எத்தினை பேருக்குச் சொல்லி வெச்சிருக்கிறாரோ...”

அக்கா கோபப்படுவதைப் போல அந்தப் பரவசத்தை ஏற்றுக்கொண்டாள். ‘இந்த இடம் மட்டுமா... எனது இதயமும் மருதனுடையதே’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். இரவு தீர்ந்துபோய்க்கொண்டிருந்தது. எனக்கு நித்திரையே வரவில்லை. விடிந்தால் எல்லாம் தெரிந்துவிடும்.

அதிகாலைப் பூசைக்கான ஆயத்தங்களிலிருந்த சின்ன முருகன் கோயில் ஐயரைச் சுட்டுக் கொன்ற ராணுவத்தினர், உடலை மூலஸ்தானத்துக்குள் இழுத்துச் சென்று கதவைப் பூட்டினர். கோயிலுக்குப் போனவர்கள் அச்சத்தில் வீடுகளுக்குத் திரும்பினர். ராணுவத்தோடு சேர்ந்து இயங்கும் துரோகிகள் யாரோ உளவுபார்த்திருக்கிறார்கள் எனத் தெரிந்தது. காட்டிக் கொடுப்புகள், துரோகத் தனங்கள், இயக்கப் பழிவாங்கல்களென ஆயுதக் கொலைகளுக்குத் தலைப்பிட்டுச் சடலங்களைப் பெருக்கிக் கொண்டிருந்தது காலம்.

கடவுள்... பிசாசு... நிலம்! -24

‘மேல்மாடி ஆர்மி காம்ப்’ மீது நேற்றிரவு நடந்த தாக்குதலில், மூன்றுக்கு மேற்பட்ட ராணுவத்தினர் பலியாகியதாகத் தகவல்கள் உலவின. அன்றாடம் பாதிக்கப்பட்ட சனங்கள் என்ன செய்வதெனத் தெரியாமல், காம்ப் இருக்கும் வழியைவிட்டு வேறு பாதைகளைப் பயன்படுத்தினர். ஐயரைச் சுட்டுக் கொன்ற செய்தி காற்றெல்லாம் பரவியது. மூலஸ்தானத்தின் கதவுத் திறப்பை ராணுவம் கையளித்தபோது நடுவெயில் வானில் தகித்தது. ரத்தம் காய்ந்த அவரின் உடல்மீது விளக்கின் எண்ணெய் வழிந்துகொண்டிருந்தது. வேல் தாங்கி நின்ற முருகனின் காலடியில், அவரின் சடலத்தைக் காண நேர்ந்த சனங்கள் `ஐயோ... கடவுளே...’ என விம்மிப் பொருமினர்.

காந்தியண்ணாவும் ஓவியனும் இந்தத் தாக்குதலைச் செய்துவிட்டு எங்கள் வீட்டில் வந்து மறைந்திருந்தனர் என்பதை நினைத்தால் மயிர்க்கால்கள் நடுங்குகின்றன. காந்தியண்ணாவுக்கு ஆயுதங்களைக் கையாண்டு பழக்கமில்லை என்று நம்பினேன். ஆனால் அவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. கையெறி குண்டுகளை இவர்தான் வீசியிருக்கிறார். ஐந்து ராணுவத்தினருக்கு மேல் காயப்பட்டிருக்கின்றனர். பலியான மூவரையும் ஓவியனே சுட்டிருக்கிறார். அவருடைய அணில் வேட்டையாடிய எண்ணிக்கை மூன்று என்று சொன்னதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். பிஸ்டலுக்கு `அணில்’ எனும் பெயர் மாற்றத்தை என்னால் நம்ப முடியாதிருந்தது. தடவிப் பார்க்கையில் மென்மையும் குழந்தைமையும் திரும்புகிற உயிரினம் அணில். அதன் பெயரை இந்தக் குளிர் பரவி நிற்கும் உலோகத்துக்கு எப்படிச் சூட்டினார்கள் என்று நொந்தேன். ஐயரின் கொலைக்கு வழமைபோல ஜனநாயக அமைப்புகள் கண்டனங்களை வெளியிட்டன. ராணுவம் வழமைபோல அந்தக் கொலைக்கும் தமக்கும் தொடர்பில்லையென அறிக்கை வெளியிட்டது. பல்வேறு மதங்களின் மதகுருக்களும் சமூக ஆளுமைகளும் கலந்துகொண்ட ஐயரின் இறுதி ஊர்வலத்தில், கண்ணீர் அஞ்சலி துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அந்தப் பகுதியின் ராணுவ அதிகாரி ஒருவர், ஊர்வலத்தில் பங்கெடுத்துக்கொண்டார். அது சிலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பலருக்கு ஆறாத காயத்தின்மீது சுடுசாம்பலைக் கொட்டியதைப் போலிருந்தது. அந்த ராணுவ அதிகாரியின் கையிலும் ஒரு துண்டுப்பிரசுரத்தைக் கொடுத்தேன். அவர் வாங்கிக்கொண்டார். ஐயரின் சவ ஊர்வலத்தில், இயக்கத்தின் அரசியல் போராளிகளும் பங்கெடுத்தனர். அங்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கக்கூடுமென ஒரு பதற்றம் இருந்தபோதிலும் எதுவும் நிகழவில்லை.

ஐயரின் சடலத்தைச் சுடலைக்குத் தூக்கிச் செல்லும் பாதையின் மருங்கிலுள்ள புதருக்குள் இரண்டு சடலங்கள் கிடந்தன.

(நீளும்...)