Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 4

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

நீதிவான் ஸ்தலத்துக்கு விரைந்து வந்தார். காந்தியண்ணாவின் நடுவீட்டில் தலைகீழாய் தொங்கிய சடலத்தைப் பார்த்து, பிரேத பரிசோதனைக்காக உத்தரவிட்டார்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 4

நீதிவான் ஸ்தலத்துக்கு விரைந்து வந்தார். காந்தியண்ணாவின் நடுவீட்டில் தலைகீழாய் தொங்கிய சடலத்தைப் பார்த்து, பிரேத பரிசோதனைக்காக உத்தரவிட்டார்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

பிள்ளையார் கோயில் மணியொலித்தது. பூசை தொடங்கியிருக்கும். மிகவேகமாக நடந்து போனேன். உதயகால பூசையில் திருமுறை ஓதுவதில் மோகம் கொண்டிருந்தேன். இன்றைக்குத் திருநாவுக்கரசரின் தேவாரத்தைப் பாடவேண்டுமென நினைத்தேன். வெளியே இருந்த அடிகுழாயில் கால்களைக் கழுவி, கோயிலுக்குள் நுழைந்தேன். சங்குகள் முழங்கின. எப்போதும் வருபவர்களில் காந்தியண்ணா மட்டும் இல்லாதிருந்தார். எல்லோர் முகங்களிலும் அவருக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாதென்ற வேண்டுதல் இருந்தது. மேனியைத் தீட்சையால் நறுமணப்படுத்திக்கொண்டு நின்ற சண்முகவடிவேல் ஆசானின் கண்களில் எப்போதும் சுடர்கிற ஞான ஒளியை வணங்கினேன். திருமுறை இசைக்கும் நேரம் வந்தது. `திருச்சிற்றம்பலம்’ சொல்லி பதிகத்தை இசைக்கத் தொடங்கினேன். நான் கடவுளை நினைந்து உருகிப் பாடுவதாக ஆசான் சண்முகவடிவேல் சொல்வதுண்டு. இன்றைக்கு “உனது வாசனைக் குரலினால் இறைவனுக்குச் சந்தனம் பூசுகிறாய்” என்றார். பூசை முடிந்ததும் தரப்பட்ட வெண்புக்கையை வாங்கிக்கொண்ட அடியவர்கள் மத்தியில், காந்தியண்ணா வீட்டில் நிகழ்ந்திருக்கும் சம்பவமே பேசுபொருளாயிருந்தது.

“இப்ப இயக்கமாய் இருந்தால்கூட பரவாயில்லை. இயக்கத்தின்ர வாலாய் இருந்தால் வாழுறது கஸ்ரம்” என்றார் சிவப்பிரகாசம் மாஸ்ரர்.

நீதிவான் ஸ்தலத்துக்கு விரைந்து வந்தார். காந்தியண்ணாவின் நடுவீட்டில் தலைகீழாய் தொங்கிய சடலத்தைப் பார்த்து, பிரேத பரிசோதனைக்காக உத்தரவிட்டார். தலைமறைவான காந்தியண்ணாவைக் கைதுசெய்ய சட்டரீதியாக போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டது. அடையாளம் காணப்படவியலாத வகையில் முகம் சிதைக்கப்பட்ட சடலத்தை போலீஸார் அங்கிருந்து கொண்டு சென்றனர். கூடியிருந்த சனங்கள் கலைய மறுத்து வீட்டின் முற்றத்திலேயே நின்றனர். நீதிவான் சனங்களை விலக்கியபடி வெளியேறினார்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 4

எல்லாவற்றையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அல்லியக்கா, கிணற்றில் நீரள்ளி வீட்டைக் கழுவத் தொடங்கினாள். காந்தியண்ணா இயக்கத்தில் உறுப்பினர் கிடையாது. ஆனால் முழு ஆதரவாளர் என்பதை எல்லோரும் அறிந்திருந்தனர். இப்படியொரு நெருக்கடிக்குள் காந்தியண்ணா எங்கேயோ போய் மறைந்துவிட்டார். அல்லியக்காவுக்குத் துணையாக அக்கா இருந்தாள். என்னை வீட்டுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு வருமாறு பணித்தாள். ஊரே உறைந்துபோயிருந்தது. காந்தியை ராணுவமோ அல்லது அரச ஆதரவு பெற்ற இயக்கமோ சுட்டுக்கொன்றுவிடுமென சனங்களுக்குள் கிலி பிறந்தது. ஊர் முழுக்க ரோந்து செல்லும் ராணுவத்தினரின் கண்கள் காந்தியை மட்டுமே தேடிக்கொண்டிருந்தன.

நான் வீட்டுக்குச் சென்றேன். புட்டும், பச்சை மிளகாய் சம்பலும், பழஞ்சொதியும் அடுப்படியில் இருந்தன. எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு குழைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். வீட்டின் கதவைத் திறந்துகொண்டு காந்தியண்ணா என் முன்னே வந்துநின்றார். விழிகள் மலர்ந்து கன்னம் பனிக்க எழுந்து “அண்ணா” என்று கட்டியணைத்தேன். அவரோ “நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே. நாங்கள் வெல்லுவம், எங்களிட்ட அறமிருக்கு” என்றார். எங்களுடைய வீட்டு வளவில் இருந்த கோயில் கிணற்றுக்குள் மறைந்திருக்கிறார். “அந்தக் கிணற்றுக்குள் பாம்புகள் இருக்கின்றன, கவனம்” என்றேன். அவர், ``நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று சாதாரணமாகத் தலையை அசைத்தார்.

“ஆதீரன், நீ எனக்கொரு உதவி செய்யவேணும்.”

“சொல்லுங்கோ.”

“நான் எழுதித் தாறத கொண்டுபோய், இனியவன்ர சலூனில குடுக்கவேணும்.”

‘தாங்கோ, கொண்டுபோய் குடுத்திட்டு வாறன்.”

என்னுடைய பள்ளிக்கூடப் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்துக் கொடுத்தேன். காந்தியண்ணா அதில் ‘ரகசியப் பனி’ என்று எழுதினார். அந்தக் குறிப்பை எடுத்துக்கொண்டு இனியவன் சலூனுக்கு நடக்கலானேன்.

எப்போதும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும் இனியவன் சலூனில், வாடிக்கையாளர்கள் அமர்ந்துகொள்ள நீளமான இரண்டு வாங்குகள் போடப்பட்டிருக்கும். நாளிதழ்கள் ஒழுங்கற்று விரவிக்கிடக்கும். நாசியிலேறும் புத்துணர்ச்சியான வாசனையோடு இனியவன் முடிதிருத்தம் செய்துகொண்டிருப்பார். நான் கடைக்குள் நுழையும்போது,

“சொல்லிக் கொடுத்த பின்னும் அள்ளிக் கொடுத்த பின்னும் முத்தம் மீதமிருக்கு...

தீபம் மறைந்த பின்னும் பூமி இருண்ட பின்னும் கண்ணில் வெளிச்சமிருக்கு!”

பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. என்னிலும் பார்க்க சின்னப்பெடியன் ஒருவனுக்கு முடிதிருத்தம் செய்துகொண்டிருந்தார் இனியவன். அந்தப் பெடியனின் தந்தை நாளிதழைப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவருக்கருகில் அமர்ந்தேன். ரஹ்மான் குரல் உயர உயர அரபிக்கடலோரம் கன்னித்தென்றல் ஆடை விலக்கிக்கொண்டே இருந்தது. பெடியனுக்கு முடிவெட்டி முடித்ததும் என்னைக் கதிரையில் வந்தமருமாறு சொன்னார் இனியவன். மறுக்காமல் கதிரையில் போய் அமர்ந்தேன். அவர்கள் காசைக் குடுத்து வெளியேறும் தருணத்துக்காகக் காத்திருந்தேன். வெளியேறியதும் எனது சட்டைப்பைக்குள் இருந்த ‘ரகசியப் பனி’ குறிப்பை இனியவனிடம் கொடுத்து, “காந்தியண்ணா குடுத்துவிடச் சொன்னவர்” என்றேன். வளர்ந்திருந்த தனது வலதுகரத்தின் சின்ன விரல் நகத்தினால் பெருவிரல் நகத்தை முட்டி டிப் டிப்பென சத்தம் எழுப்பினார். கதவைச் சாத்திவிட்டு, வேறொரு காகிதத்துண்டில் ‘எட்டுத்தொகை’ என்றெழுதி ``காந்தியிடம் குடு’’ என்றார். நான் சலூனைவிட்டு வெளியேறுகிறபோது ராணுவத்தினர் ரோந்து போய்க் கொண்டிருந்தனர். ‘ரகசியப் பனி’யோடு வந்தவன், ‘எட்டுத்தொகை’யோடு திரும்பினேன். காந்தியண்ணாவிடம் அந்தக் குறிப்பைக் கையளித்தேன். அவர் அதைப் பார்த்துவிட்டு புன்னகை செய்தார். நன்றி பெருகும் மகிழ்ச்சியோடு என்னைக் கட்டியணைத்து,

“நான் இண்டைக்கு இரவு இங்கிருந்து வெளிக்கிட்டுடவன், நீ அல்லியக்காட்ட ஒண்டுக்கும் யோசியாமல் இருக்கச் சொல்லு. எல்லாம் நல்லபடியாய் நடக்கும்” என்றார்.

நானும் அக்காவும் காந்தியண்ணாவின் வீட்டிலேயே இரவு தங்கினோம். நடந்தவற்றை அல்லியக்காவிடம் சொன்னேன். “அவர் எங்க போனாலும் உயிரோட இருந்தால் சரி” என்றாள். அவளிடமிருந்து வேறெந்த வார்த்தைகளும் வரவில்லை. கண்ணீர் வழிய துயரத்தின் பேரலைகளில் தலைசாய்த்தாள்.

‘ரகசியப் பனி’ என்றால் என்ன, ‘எட்டுத்தொகை’ என்றால் என்ன என்பதையறியும் ஆர்வம் எனக்குள் காய்ச்சல்போல கொதியாய் நின்றது. நித்திரையற்று புரண்டு படுத்தேன். நேற்றைக்கு யாரென்று தெரியாத ஒருவரின் பிணம் தொங்கிய அந்த வீட்டில், கொளுத்திவைக்கப்பட்ட ஊதுபத்தி வாசம் வயிற்றைக் குமட்டியது. இருட்டு தனித்துக் கிடந்தது. காந்தியண்ணா இப்போது பாதுகாப்பான இடத்துக்குச் சென்றிருப்பாரா... அவரைப் போராளிகள் அழைத்துச் சென்றிருப்பார்களா என்ற கேள்விகள் எழுந்தவண்ணமிருந்தன. நித்திரையற்று இருளை மட்டுமே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். நிலம் விடிந்ததும் வீட்டுக்கு ஓடிப்போய் கிணற்றை எட்டிப்பார்த்தேன். காந்தியண்ணா இல்லை. சந்தோஷத்தில் கண்ணகி அம்மனை வழிபட்டு துதித்தேன். வீசிய காற்றில் இதம் உணர்ந்தேன்.

அன்று காலையில் அண்ணா வீட்டுக்கு வந்திருந்தான். காந்தியண்ணாவுக்கு நிகழ்ந்ததை அவன் அறிந்திருந்தான். “இயக்கம் அவரைப் பாதுகாக்கும்” என்று மட்டும் சொன்னான்.

“உங்களுக்கு ‘ரகசியப் பனி’, ‘எட்டுத்தொகை’ என்றால் என்னவென்று தெரியுமோ?” அண்ணாவிடம் கேட்டேன்.

“எட்டுத்தொகையென்றால் சங்ககாலப் பாட்டுகளின் ஒரு தொகுப்பு. ஏன் கேக்கிறாய்?”

“ஒன்றுமில்லை. சும்மா கேட்டனான்.”

அக்கா பால்புட்டுச் செய்தாள். அண்ணாவுக்குப் பிடித்த சாப்பாடு. வழமைபோல அவன் தனது கைத்துப்பாக்கியைக் கழற்றிவைத்துவிட்டு, சாப்பிடத் தொடங்கினான். அதே கிளர்ச்சியும் பேருணர்வும் உந்தித்தள்ள அதை எனது கரங்களால் மீண்டுமொரு முறை தடவிப்பார்த்தேன். வெளியே மழை பொழியத் தொடங்கிற்று. நீண்ட நாள்கள் கழித்து அண்ணா வீட்டில் தங்கினான். அன்றிரவு முழுவதும் நானும் அவனும் கதைத்துக்கொண்டேயிருந்தோம். அவனை நோக்கிக் கேட்டேன்.

“எங்கட பள்ளிக்கூட அதிபர இயக்கம் ஏன் சுட்டது?”

“அவர் துரோகம் செய்திருப்பார்.”

“என்ன துரோகம்?”

“எனக்குத் தெரியாது, ஆனால் உங்கட அதிபருக்குத் தெரிஞ்சிருக்கும்.”

“இயக்கத்துக்குத் தெரிஞ்சிருக்காதோ?”

“தெரிஞ்சிருக்கும்.”

“நீங்களும் இயக்கம்தானே, பின்ன எப்பிடி உங்களுக்குத் தெரியாமல் போச்சு?”

கடவுள்... பிசாசு... நிலம்! - 4

“நானும் இயக்கம்தான். ஆர் ஆருக்கு என்ன தெரியவேணுமோ அது மட்டும்தான் இயக்கத்தில தெரியும். எல்லாருக்கும் எல்லாம் தெரிய அது என்ன முருகன் கோயில் கும்பாபிஷேக நிர்வாகமோ?”

அண்ணா கொஞ்சம் இறுக்கமாக பதில் சொன்னான். வெளியே பெய்துகொண்டிருந்த மழைக்கு ஒரு தேத்தண்ணி குடித்தால் சுதியாய் இருக்குமெனத் தோன்றியது. அண்ணாவும் நானும் மழையையே பார்த்துக்கொண்டிருந்தோம். வீட்டின் முன்னே மின்னல் வெளிச்சம் பரவி விழுந்து மறைந்தது. அடுத்த நாள் காலையில் அண்ணா செல்லத் தயாரானான். அவனுடைய கைத்துப்பாக்கியை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டான். அதன் பிறகு அவனிடம் ஒரு கம்பீரம் புகுந்தது. மெல்லப் புன்னகைத்து விடைபெறும்போது அக்கா கையில் திருநீற்றை அள்ளிவந்து அவனது நெற்றியில் பூசிவிட்டாள். அண்ணா மறுபடியும் புன்னகைத்தான்.

அல்லியக்கா தனித்திருந்தாள். ராணுவத்தினர் வந்து காந்தியண்ணாவை விசாரித்துச் சென்றனர். கணவனைக் காணவில்லையென அவள் அழுது புலம்பினாள். சொந்தக்காரர்கள் அனைவரும் காந்தியண்ணாவுக்கு ஏதோ நடந்துவிட்டதென நினைத்துக்கொண்டார்கள். அக்கா சமைத்து முடித்து அல்லியக்காவுக்குச் சாப்பாடு கொண்டு சென்றாள். அல்லியக்கா “என்ர புருஷனைக் காணேல்ல, என்ர புருஷனைக் காணேல்ல” என்று வீதியில் போகும் சனங்களுக்குக் கேட்கும்படி அழுதுகொண்டேயிருந்தாள். அவள் அதையே ஒரு போராட்ட உத்தியாக்கிக்கொண்டாள். பூட்டம்மா, “காந்திக்கு எந்தக் கூடாததும் நடக்காது, அவன் காட்டுக்குள் நடந்து கரையேறுவான்” என்றாள். வானம் இருட்டிக்கொண்டு வந்தது. அடுத்த நாள் காலையில், பள்ளிக்கூடம் செல்லவேண்டுமென தோன்றியது. அதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்துவிட்டு நித்திரையானேன்.

பிள்ளையார் கோயிலின் உதயகால பூசைக்காக வீட்டிலிருந்து வெளிக்கிட்டேன். அக்கா கதவை இறுகச் சாத்திவிட்டு உள்ளே இருந்தாள். நிலம் விடியத் தொடங்கி யிருந்தது. தனியாக நடந்துசென்றுகொண்டிருந்த என்னைப் பார்த்து தெருநாய்கள் குரைக்கின்றன. வீதி வெறிச் சோடி கிடக்கிறது. தோட்டத்துக்குச் செல்லும் கமக்காரர்கள் சிலர் சைக்கிளில் செல்கின்றனர். நான் சொற்ப நிமிடங்களில் கோயிலைச் சென்றடைந்தேன். பூசை தொடங்குவதற்கு நேரமிருந்தது. ஐயர் பூசைக்கான அடுக்கெடுப்பு களில் தீவிரமாக இருந்தார். கோயிலுக்கு முன்னால் வந்து நின்ற வாகனத்திலிருந்து ராணுவத்தினர் குதித்திறங்கிய சத்தம், அதிகாலையை உதைத்தது. அவர்கள் ஆயுதங் களோடும் காலணிகளோடும் கோயிலுக்குள் நுழைந்தனர். ஆசான் சண்முகவடிவேல் அவர்களை வழிமறித்து காலணிகளை வெளியே விடுமாறு பணிவுடனும் அன்புடனும் கேட்டுக் கொண்டார். ஒரு படையினன் அவரைத் துப்பாக்கி பிடியால் ஓங்கி அடித்தான். ஆசான் குருதியொழுக வீழ்ந்தார். நாங்கள் ஒடுங்கி நடுங்கினோம். சிப்பாய் ஒருவன் பெரிதாகக் குரல் எழுப்பிக் கேட்டான்.

“ஆராடா இங் பவித்ரன்?”

(நீளும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism