Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 5

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

சிப்பாயால் தாக்கப்பட்டு குருதியொழுகத் தரையில் கிடந்த ஆசான், கைகளை ஊன்றி எழும்ப முயன்றார். கோயிலில் நின்ற அனைவரையும் முட்டுக்காலிட்டு அமரச் சொன்னார்கள்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 5

சிப்பாயால் தாக்கப்பட்டு குருதியொழுகத் தரையில் கிடந்த ஆசான், கைகளை ஊன்றி எழும்ப முயன்றார். கோயிலில் நின்ற அனைவரையும் முட்டுக்காலிட்டு அமரச் சொன்னார்கள்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

ராணுவம் தேடிவந்து நிற்கும் பவித்ரன் வேறு யாருமல்ல. என்னுடைய நெருங்கிய சொந்தக்காரர். அவரை “பவி மாமா” என்றுதான் அழைப்பேன். ஒரு வள்ளலைப்போல அனைவருக்கும் புன்னகையை தானம் செய்யும் முகவெட்டு. இளநரை பரவிய அடர்ந்த தலைமுடி. அழுத்தி மடித்த சால்வைத் துண்டைப்போல் நெற்றி. அதன்மேல் அழியாவரம் பெற்ற தீட்சைக் குறி. ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் கசங்கிய குரலைச் சரிப்படுத்தும் பாவனையோடு மெல்லிய செருமல். கருணையின் கண்கள் மிதக்கக் கோயிலில் தொண்டு செய்வதை விரும்புகிறவர். எட்டு முழ வேட்டியைக் கட்டிக்கொண்டு வெறும் மேனியோடு தங்கச் சங்கிலி அணிந்திருக்கும் பவி மாமா வடிவாக இருப்பார்.

கோயிலுக்குள் புகுந்த ராணுவத்தினர் `பவி... பவி...’ என்று மூர்க்கமாய்த் தேடிக்கொண்டிருந்தனர். சிப்பாயால் தாக்கப்பட்டு குருதியொழுகத் தரையில் கிடந்த ஆசான், கைகளை ஊன்றி எழும்ப முயன்றார். கோயிலில் நின்ற அனைவரையும் முட்டுக்காலிட்டு அமரச் சொன்னார்கள். துப்பாக்கிகளுக்கு முன்னே வாய் மூடிய கடவுளரைப்போல எந்த எதிர்ப்பும் காட்டாமல் அவர்கள் சொல்வதையே செய்தோம். ஆசான் சண்முகவடிவேல் மட்டும் கைகளை ஊன்றி எழுந்து “நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்” என்று பெருங்குரலில் ராகம் பிசகாமல் பதிகம் பாடத்தொடங்கினார். எங்களுக்கு எதிரே நின்ற சிப்பாய் வெறிகொண்டு பாய்ந்து ஆசானை மீண்டும் உதைத்துத் தள்ளினான். பிடரி அடிபட ஆசான் விழுந்த சத்தம் பொல்லாத நாள்களின் சகுனம்போல் எனக்குத் தோன்றிற்று. பவித்ரன் கோயிலில் இல்லையென்று உறுதியான பின்பு தேடிக் களைத்த ராணுவத்தினர் வெளியேறினர். ஆசானுக்கு அதிக குருதிப்போக்கு ஏற்பட்டதால் மயக்கமாகியிருந்தார். அவரை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் சென்றோம். நிலம் விடிந்த பின்னரும், கோயிலுக்குள் திரண்டிருந்த இருளில் குருதியலைகளின் வீச்சம் பெருகிக் கொண்டேயிருந்தது.

கடவுள்... பிசாசு... நிலம்! - 5

நடந்தவற்றைக் கேள்விப்பட்ட சனங்கள் அதிர்ந்தனர். மங்கலமென ஏற்றிவைக்கப்பட்ட தீபத்தின் சுடரே வீட்டைச் சாம்பலாக்கும் நெருப்பாகிவிடுவதைப்போல இந்தச் சமாதானம் எங்களை ஏமாற்றிக் கொல்கிறதென நொந்தனர். நாளும் பொழுதும் ராணுவத்தினரால் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். பிள்ளைகள் வீடு திரும்பும் வரை காத்திருக்கும் தாய்மாரின் கருவறையில் ஓலம் அமிலம்போல் ஊறத் தொடங்கிற்று. அச்சமும் நடுக்கமும் கொண்டு ஒவ்வொரு நொடியையும் எண்ணிக்கொண்டனர். யுத்தம் அமைதியைவிட நேர்மையானது என்று சனங்கள் மனதுக்குள் நினைக்கத் தொடங்கினர். எந்தவொரு தீர்க்கதரிசியாலும் உறுதியாகக் கூறிவிட முடியாத பயங்கரங்கள் உருமாறிப் பரவிக்கொண்டிருந்தன. சமாதானம் ஒரு கொள்ளை நோய். அது அப்பாவிகளின் கண்ணீருக்கும் மன்றாட்டத்துக்கும் மசியாது. இந்த தேசமே மரணத்தின் பட்டணம். சதாகாலமும் மண்ணைச் சடலங்களால் மூடிக்கொள்ளும் நடுக்கம் நிறைந்த இந்த வாழ்க்கையை உக்கிப்போகும்படி மண்ணுக்குள் புதைக்க வேண்டுமென்ற எல்லோரினதும் குமுறல் சுழல்காற்றில் முழங்கியது. ‘எங்கள் சுதந்திரம் அந்நியர் வசமோ... தாய்நிலத்தில் இளைப்பாறல் எங்களுக்கில்லையோ?’ என்று பாடப்புத்தகத்தில் எழுதிவைத்தேன். இரவு முழுவதும் அக்காவும் நானும் பவி மாமாவைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தோம். அவருக்கு எதுவும் நடந்துவிடக் கூடாதென அம்மனிடம் தேங்காய் ஒன்றை நேர்ந்துவைத்தோம்.

காலையில் பூட்டம்மாவுக்குக் கொஞ்சம் உடம்புக்கு ஏலாமல் இருந்தது. ஆளனுப்பி அக்காவை வரச்சொல்லியிருந்தாள். அக்காவை பூட்டம்மாவின் வீடுவரை கூட்டிச் சென்று விட்டிட்டு வந்தேன். கண்ணகி அம்மன் கோயிலில் கொஞ்ச நேரம் இருக்கவேண்டுமாற் போலிருந்தது. காந்தியண்ணா, பவி மாமா என்று நீளும் இந்தத் தேடுதல்கள் எதுவரை நீளுமோ என்று யோசித்துக்கொண்டிருந்தேன். எல்லாக் கடவுளும் தோற்கடித்த திசையின் வெளியில், தப்பிக்கப் பாதைகளில்லை. நிலத்தின் துக்கம் அமிழ மறுத்து எம்பி நின்றது. மகிழ்ந்து குலாவ ஒரு நொடியற்றதா என் வாழ்வென மண் பிளக்க கதற வேண்டுமெனத் தோன்றியது. கண்ணகி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது கண்களில் பதுங்கலின் எரிதணல் அடங்கியிருந்தது. கூட்டமாய்க் கிளிகள் சத்தமிட்டபடி பறந்துசென்றன.

வீதியிலிருந்து யாரோ எங்கள் வீடு நோக்கி நடந்துவருவது தெரிந்தது. வெள்ளை நிறத்திலான வேட்டியும் முழுக்கைச் சட்டையும் அணிந்திருக்கும் நபரைத் தூரத்தில்வைத்தே இனங்காண முடியாமல் இருந்தது. முகத்தில் வியர்வை வழிய வெற்றிலையைச் சப்பித் துப்பியபடி, அந்நபர் எனக்கருகில் வந்து நின்ற பின்னரும் யார் எனத் தெரியாமல் விழித்தேன். புலனில் பரவி எழுந்தது திகைப்பின் கணம். காய்ச்சல் படிந்த கண்களுடன் என்னை உற்று நோக்கிய அவரிடம் கேட்டேன்.

“நீங்கள் மருதன் அண்ணாதானே?”

“ஓம். கெட்டிக்காரன் அடையாளம் கண்டுட்டியள்.”

“ஆரெண்டு தெரியாமல் கொஞ்ச நேரம் பயந்திட்டன். சரியா மெலிஞ்சுபோய் முகமெல்லாம் காய்ஞ்சுபோயிற்று. ஏதேனும் உடம்பு சுகமில்லையோ?”

“கொஞ்சம் ஏலாமல் இருந்தனான். இப்ப எவ்வளவோ சுகம். ரெண்டு மூண்டு நாளைக்கு இஞ்ச தங்கவேணும். அதுதான் வந்தனான்.”

அறைகள் எதுவுமற்ற வீட்டுக்குள் மருதனை அழைத்துச் சென்றேன். அவர் தனக்கென ஒரு மூலையை உறுதிசெய்துகொண்டார். பையை அதில் வைத்ததும் அமர்ந்துகொண்டார். செம்பில் தண்ணீரள்ளிக் கொடுத்தேன். ஒரு செம்பு தண்ணீரையும் விடாமல் குடித்து முடித்தார்.

“சாப்பிடுங்கோ, புட்டும் சொதியும் இருக்கு.”

“நான் வரேக்கதான் பாண் சாப்பிட்டு வந்தனான். மதியம் சாப்பிடுகிறன்.”

“சரி சோர்வாய் இருக்கிறியள். கொஞ்ச நேரம் படுங்கோ.”

புல்லுப் பாயையும் தலையணையும் அவரிடம் கொடுத்துவிட்டு பூட்டம்மாவின் வீட்டுக்குப் பதகளித்து ஓடிச் சென்றேன். அக்காவிடம் விஷயத்தைத் தெரியப்படுத்தினேன்.

“சாப்பாடு குடுத்தனியே?”

“அவர் மதியம் சாப்பிடுகிறாராம்.”

“சரி, நீ வீட்ட போ. ரெண்டு பேருக்குமாய் மதியம் சமைச்சுக் கொண்டுவாறன்” என்றாள்.

யார் இந்த மருதன்? அம்மாவின் விருந்தாளிகள் அனைவரும் போராளிகளே. ஆனாலும், இவரின் நடத்தைகள் விநோதமாக இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டில் தங்கியிருந்து சென்ற அதே மருதனில்லை இன்று வந்தவர். வெற்றிலையும் சுண்ணாம்புமாக இருக்கிறார். வெளியில் செல்லும்போது தன்னுடலில் வயோதிகத்தை ஊன்றி நடக்கிறார். ஆண்டாண்டாகக் கனிந்த ஒரு முதுகிழவனைப்போல ஆகிவிடுகிறார். வீட்டிலிருக்கும்போது பட்டாம்பூச்சி புத்தகத்தை வாசித்துக்கொண்டிருப்பார். அவரின் மனது நிசப்தத்தில் ததும்புகிறதுபோலும்!

நான் பள்ளிக்கூடம் போய்விட்டுத் திரும்பியதும், மாலையில் கொஞ்ச நேரம் கதைத்துக் கொண்டிருப்பது வழக்கம். ஒருநாள் நேருக்கு நேராய் அவரிடமே கேட்டேன்.

“நீங்கள் இயக்கமோ?”

அவர் இந்தக் கேள்வியை எதிர்கொள்ள உள்ளங்கைச் சூடாய் ஒரு புன்னகையை உதிர்த்தார். இடறிய காலைத் தூக்கிவைக்கும் நிதானத்தோடு என்னைப் பார்த்துக் கேட்டார்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 5

“என்னைப் பார்த்தால் இயக்கம் மாதிரியா தெரியுது?”

“ஒருவர் இயக்கமெண்டு சொல்ல பொதுவான அடையாளம் ஒண்டும் இல்லைதானே” என்றேன்.

“அம்மா என்னை உங்களுக்கு ஆரெண்டு சொல்லியிருக்கிறா?”

“ஒண்டுஞ் சொல்லேல்ல. அவாவிட்ட கேட்டா உனக்கெதுக்குப் பெரிய ஆக்களோட விஷயம் எண்டு கேப்பா.”

எனது பதிலைக் கேட்டதும் மருதன் சிரித்தார். அவர் படித்துக்கொண்டிருந்த பட்டாம்பூச்சி நாவலின் பக்கமொன்றைப் புரட்டி, சொற்களை எண்ணுபவர்போல பாவனை செய்தார். தான் யார் என்று சொல்ல மறுக்கும் உடல் மொழியது. அங்கிருந்து மெல்ல எழுந்துகொண்டேன். அக்காவின் விழிகள் மலர்ந்து மருதன் அண்ணாவைப் பார்த்துக்கொண்டிருந்தன. அந்த விழிகளில் ஊற்றுகள் இருந்தால், எங்கள் வீடு நீரில் மூழ்கிவிடும் போலிருந்தது. அக்கா ஒரு பெண்ணின் அகங்காரத்தோடு மருதனைப் பார்க்கத் தொடங்கிய அக்கணம் வானத்தில் வெள்ளி முளைத்தது. அவளொரு மீனாக இல்லாத போதிலும் அரூப ஆற்றில் நீந்திக் களைத்தாள். வலிமையான வெளிச்சம் வீட்டுக்குள் பரவத் தொடங்கிற்று. மருதன், புத்தகத்தின் பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்தார்.

பவி மாமாவின் வீடு அன்றிரவு சுற்றி வளைக்கப்பட்டது. அவரின் மூத்த சகோதரரான சிவலிங்கத்தை ராணுவம் கூட்டிச் சென்றது. பவி மாமா சரணடைந்ததும் சிவலிங்கத்தை விடுதலை செய்வதாக ராணுவத்தினர் கூறினர். பவி மாமாவுக்கு அடைக்கலம் தருவதற்கு யாழ்ப்பாணம் முழுக்க ஆட்கள் இருக்கின்றனர். அப்படியொரு அசலான மனிதர். அவரைக் கண்டுபிடிப்பது ராணுவத்துக்குச் சுலபமான காரியமில்லை. ஆனால், சிவலிங்கம் மாமாவை ராணுவம் கூட்டிச் சென்ற செய்தியறிந்தால், அவர் துயர்ப்படுவார். பூட்டம்மா, “நடப்பவையெல்லாம் மீண்டுமொரு பேரழிவுக்கான அத்திவாரம் போலிருக்கின்றன” என்றாள். மாமாவோடு நட்பில் இருந்த சிலரை ராணுவத்தினர் விசாரணை செய்தனர். அவர்களது வீடுகள் சோதனை செய்யப்பட்டன. எங்குமற்று போன மாமாவை, எல்லா இடத்திலும் தேடிக்கொண்டிருந்த ராணுவத்தினரைக் கண்டு ஏளனம் பொங்கச் சிரித்தேன். பள்ளிக்கூடம் முடித்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது, இனியவனின் சலூனில் ராணுவ வாகனம் நின்றதைக் கண்டேன். உள்ளேயிருந்த மூன்று ராணுவத்தினர், ஒருவரைத் தொண்டையில் இறுக்கிப் பிடித்தபடி வெளியே கொண்டுவந்தனர். அவர் வேறு யாருமல்ல, என்னுடைய நாடக வாத்தியார் சங்கரப்பிள்ளை. அவரைத் துப்பாக்கி முனையில் வாகனத்தில் ஏற்றினார்கள். வாத்தியார் என்னைக் கண்டுவிட்டார். கண்கள் சிவந்து தழுதழுக்கும் குரலில் சொன்னார்.

“ஆதீரன்... நீயேன் உதில நிக்கிறாய், வெள்ளென வீட்டுக்கு போ!”

ஈரச் சிறகுகளை இன்னமும் விரிக்கத் தெரியாத பிஞ்சு வண்ணாத்தியாய் உடல் நடுங்க அப்படியே மூத்திரம் கழன்று என் காலிடையே கொதித்தது. சங்கரப்பிள்ளை வாத்தியார் துப்பாக்கிகளுக்கு நடுவில் கசங்கிய சரித்திரத்தைப்போல மறைந்துபோனார். ராணுவ வாகனம் எழுப்பிய புழுதி, தரையில் மேகமென நகர்ந்தது. தலை கிறுகிறுத்தது. திசையற்ற திசையில் பிசாசைப்போல வெருண்டோடினேன். அடுத்த கணத்தில் எழுந்தது வெடிகுண்டு ஓசை.

(நீளும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism