Published:Updated:

``டிமென்ஷியாவையே தாண்டியது அவரின் அம்புலி மாமா நினைவுகள்!" - ஓவியர் சிவசங்கரன் மகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஓவியர் சங்கர் என்கிற சிவசங்கரன்
ஓவியர் சங்கர் என்கிற சிவசங்கரன்

``என். டி.ராமாராவ் பக்திப் படங்கள்ல நடிக்கிறப்போ அப்பாவோட ஓவியங்கள்ல வர்ற மாதிரியே நகைகள் செய்யச் சொல்வாராம்.'' - ஓவியர் சிவசங்கரன் மகள்

இன்றைக்கு 40-களின் தொடக்கத்தில் இருப்பவர்களில் பலர் இளம்பிராயத்தில் `அம்புலிமாமா சிறுவர் இதழ்’ படித்து வளர்ந்தவர்களாகவே இருப்பார்கள். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என்று 14 மொழிகளில் சிறுவர் இதழாக வெளிவந்து கொண்டிருந்த அம்புலிமாமாவை யாரும் மறந்திருக்க முடியாது. கூடவே அதன் ஓவியங்களையும் நம்மால் மறக்க முடியாது. அந்த ஓவியத்தை நமக்குள் நிறுத்திய ஓவியர் சங்கர் என்கிற சிவசங்கரன் இன்று நம்முடன் இல்லை. சில தினங்களுக்கு முன்னால், தன்னுடைய 97 வயதில் இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார். அவரின் மகள் ராதா தன் அப்பாவின் நினைவுகளை இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

மகள் ராதா
மகள் ராதா

``என் அப்பாவின் அம்மா 100 வயசு வரைக்கும் வாழ்ந்தவர். அதனால என் அப்பாவும் அப்படி வாழ்வார்ங்கிற நம்பிக்கையில இருந்தோம். அப்பாவுடையது நிறைவான வாழ்க்கை. அவரோட தொண்ணூறுகள் வரைக்கும் வரைஞ்சிட்டிருந்தார். அப்பா 97 வயசு வரைக்கும் வாழ்ந்திருந்தாலும் ஒரு மகளா என்னால இன்னமும் அவரோட இழப்புல இருந்து மீண்டு வர முடியலை. எத்தனை வயதானாலும் அப்பா அப்பாதானே" என்பவரின் கண்களில் ஈரம்.

``அப்பா பயங்கர வேலைப்பிரியர். வயோதிகம் காரணமா அவருக்கு டிமென்ஷியா பிரச்னை இருந்துச்சு. அப்பாவோட வேலை ஆர்வமும் டிமென்ஷியாவும், அவரோட கடைசிக்காலத்துல அவரைத் தூங்கவே விடல. திடீர்னு நடு ராத்திரியில எழுந்து, தூரிகையையும் சார்ட் பேப்பரையும் தேடிக்கிட்டிருப்பார். என்ன சத்தம் கேட்குதுன்னு உள்ள போய்ப் பார்த்தா, `அம்புலி மாமாவுல இருந்து நாளைக்கு ஓவியம் கேக்க வருவாங்க. கலைமகள்ல கேட்பாங்க. ஆனந்த விகடனுக்கு வரைஞ்சு அனுப்பணும்னு ஆரம்பிச்சிடுவார். அப்பாவோட கடைசி நாள் வரைக்கும் அவர் ஓவியங்கள் வரைஞ்சுக்கிட்டே இருந்ததான் நம்பினார்.

அம்புலிமாமாவில் வெளிவந்த விக்கிரமாதித்தன் தொடரின் ஓவியம்
அம்புலிமாமாவில் வெளிவந்த விக்கிரமாதித்தன் தொடரின் ஓவியம்

அப்பாவுக்கு சொந்த ஊர் ஈரோடு பக்கத்துல காரத்தொழுவு. அந்த ஊர்ல நிறைய காராம் பசுக்கள் இருக்குமாம். அதனாலதான் அந்தப்பேரு. அங்க இருந்து சின்ன வயசிலேயே குடும்பத்தோடு சென்னைக்குப் பிழைக்க வந்துட்டாங்க. ஸ்கூல், காலேஜ் எல்லாம் இங்கேதான் படிச்சார் அப்பா. ஸ்கூல் டேஸ்ல அப்பா ரொம்ப நல்லா ஓவியம் வரைவாராம். அந்த ஆர்வத்துல சென்னை ஓவியக் கல்லூரியில் சேர, அப்பாவோட வாழ்க்கையே ஓவியமாயிடுச்சு. 56 வருஷம் தொடர்ந்து பத்திரிகைகளுக்கு வரைஞ்சுக்கிட்டிருந்தார். குறிப்பா, அம்புலி மாமாவுக்கு. என். டி.ராமாராவ் பக்திப் படங்கள்ல நடிக்கிறப்போ அப்பாவோட ஓவியங்கள்ல வர்ற மாதிரியே நகைகள் செய்யச் சொல்வாராம். அம்புலிமாமாவில் வரைஞ்சுக்கிட்டு இருந்தப்பவே `ராமகிருஷ்ண விஜயம்' இதழுக்கும் படம் வரையக் கேட்டாங்களாம். ஆனா, அப்பா அம்புலிமாமா நிறுவனர் நாகி ரெட்டி ஒத்துக்கிட்டாதான் வரைவேன்னு சொல்லிட்டார். அந்தளவுக்குத் தொழில் மேலேயும் அதைக் கொடுத்தவங்க மேலேயும் பக்தி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்பா மறையறதுக்கு ஆறு மாசம் முன்னாடிகூட, `திடீர்னு அம்புலிமாமாவை நிறுத்திட்டாளாமே’ன்னு பதறிப்போய் கேட்டார். அதை எப்பவோ நிறுத்திட்டாங்கன்னு எப்படிச் சொல்ல முடியும். அவரோட டிமென்ஷியாவையும் ஜெயிச்சது அம்புலிமாமா நினைவுகள்தான். அவர் வரைந்த ஓவியங்களை எல்லாம் அப்படியே பத்திரிகைகளுக்கு கொடுத்திருக்கிறார். எங்க கையில அவர் ஞாபகார்த்தமா ஒரு காப்பிகூட இல்ல. அப்படி எடுத்து வெச்சுக்கணும்னு அப்பாவுக்குத் தோணவும் இல்லை’’ என்கிற ராதா தொடர்ந்தார்.

அம்புலிமாமா ஓவியர் சங்கர் என்கிற சிவசங்கரன்
அம்புலிமாமா ஓவியர் சங்கர் என்கிற சிவசங்கரன்

``அப்பாவுக்கு நாங்க 5 பிள்ளைங்க. எனக்கு நாலு அண்ணனுங்க. நான் கடைசி. தன் பிள்ளைங்க அஞ்சு பேர்ல யாராவது ஒருத்தர் தூரிகையைக் கையிலெடுப்பாங்கன்னு அப்பா ரொம்ப நம்பினார். ஆனா, அவருக்கு கிடைச்ச பாக்கியம் எங்கள்ல யாருக்குமே கிடைக்கலை. கடைசி 10 வருஷம் அப்பா என்கூடதான் இருந்தார். இப்போ, துணைப் பறவையை இழந்த அன்றில் பறவையாய் அம்மா மட்டும் துவண்டுபோய் இருக்காங்க. அப்பா என் பக்கத்துல வர்றதுக்கு முன்னாடியே அவர் மேல இருக்கிற விபூதி வாசனை என்னை `ராதா’ன்னு கூப்பிடும். இப்போ, அந்த விபூதி வாசனை மட்டும்தான் இருக்கு. என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடுறதுக்கு அப்பா இல்ல’’ என்றவர் மெல்லிய குரலில் விசும்ப ஆரம்பித்தார்.

காலம் உங்கள் காயங்களை ஆற்றட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு