Published:Updated:

`குழந்தைகளின் பாசத்துக்குரிய தோழன்’ - இனியன் | இவர்கள் | பகுதி 17

இனியன் | இவர்கள்
News
இனியன் | இவர்கள்

``அவர்களை விளையாட அனுமதியுங்கள். இயன்றால் இணைந்து விளையாடுங்கள். குழந்தைகளின் விளையாட்டை மறுக்கும் சமூகம் வன்முறையானதாக மாறிவிடும். வன்முறையற்ற சமூகம் வேண்டுமெனில் ஓடியாடி, தொட்டுப் பழகி, சிரித்து மகிழ்ந்து விளையாட வேண்டும்."

``எங்கோ, யாருக்கோ தீங்கிழைக்கவே அதிகாரம் தேவைப்படுகிறது. மற்றனைத்துக்கும் அன்பே போதுமானதாக இருக்கிறது."
- சார்லி சாப்ளின்

இனியனைப் பற்றி கேள்வியுறும்போதெல்லாம், அவரின் பணிகளைப் பற்றி எங்கேனும் படிக்க நேரும்போதெல்லாம் சாப்ளினின் இந்த வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருவதுண்டு.

காண்போர்க்கு இனியன், பழகுதற்கினியன், சொல், செயல் என அனைத்திலும் இனியன் என்ற அவரின் அடையாளத்துக்கு பின்னால் ஆறாத வலியும், அதன் மூலம் பெற்ற வலிமையுமே சாட்சியங்களாக நிற்கின்றன.

சில வருடங்களுக்கு முன்பு விஷப்பூச்சிக்கடியால் அவரின் இடது கை பெரும்பாதிப்புக்குள்ளானது. சுமார் பதினைந்து நாள்கள் நினைவற்ற நிலையில் மருத்துவமனையில் இருந்தார். உயிர்பிழைத்திருப்பதைவிட மடிந்துபோவது சிறந்த உபாயம் என தோன்றுமளவுக்கு வலியும் வேதனையும் அவரின் உடலை வாட்டின. அப்போது அவரின் மனதின் குரலே அவரைத் தேற்றியதாகக் கூறுகிறார். மரணத்தின் வாயில் வரை சென்று திரும்பியதால் வாழ்வதன் பொருள் மற்றவரைவிட இனியனுக்கு நன்கு புரிந்திருக்கிறது. தன் வாழ்வின் பயன் உணர்ந்தவன் அதை மற்றவருக்காக அர்ப்பணிக்கிறான். இனியன், தன் வாழ்க்கைப் பாதையை வருங்கால சந்ததியினருக்கு வாழ்வின் இனிமைகளை உணர்த்தும்விதமாக மாற்றியமைத்துக்கொண்டார்.

இனியன் | இவர்கள்
இனியன் | இவர்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'பல்லாங்குழி' எனும் அமைப்பை நிறுவி அதன் மூலம் தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டுகளைச் சிறுவர்களுக்கு மீள் அறிமுகம் செய்து வைத்துக்கொண்டிருக்கிறார். கல்வி, வாழ்வியல் சூழல், உணவுமுறை என அனைத்தும் கணினிமையமாகிவிட்ட இக்காலத்தில் சிறுவர்களுக்குக் குழுவில் இயங்கும் இயல்பே மறந்துபோய்விட்டது. தனிதன்மை, சுயம் எனும் சொற்களை அவர்கள் குழந்தைப் பருவத்திலேயே பிரயோகிப்பதைக் காண முடிகிறது. நாம் சமூகத்தில் ஒருவர், குடும்பத்தில் ஒருவர் என்ற எண்ணம் மறைந்து தானே அனைத்திலும் முதன்மை பெற வேண்டும் என்கிற சுயமோகம் அதிகரிப்பதால் அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் அதன் விளைவுகள் விபரீதமாகின்றன. சிறார் தற்கொலைகள், மனச்சிதைவு பிரச்னைகள் இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் தன்னை மட்டுமே முன்னிறுத்தி யோசிக்கும் குணம். விளையாட்டு, ஒற்றுமையை அதிகரிக்கிறது. தன்னைத் தவிர மற்றவரும் முக்கியத்துவம் வாய்ந்தவரே என்பதை விளையாட்டுகளே பிள்ளைகளுக்கு உணர்த்துகின்றன. வெற்றியைப்போலவே தோல்வியும் இயல்பானதுதான் என்கிற பக்குவத்தையும் விளையாட்டின் மூலமாகத்தான் குழந்தைகள் பெற முடியும்.

``அவர்களை விளையாட அனுமதியுங்கள். இயன்றால் இணைந்து விளையாடுங்கள். குழந்தைகளின் விளையாட்டை மறுக்கும் சமூகம் வன்முறையானதாக மாறிவிடும். வன்முறையற்ற சமூகம் வேண்டுமெனில் ஓடியாடி, தொட்டுப் பழகி, சிரித்து மகிழ்ந்து விளையாட வேண்டும்."
இனியன்

அவரின் தொடர் முயற்சியால் சமூகத்தில் இன்று வழக்கொழிந்துவிட்ட பாரம்பர்ய சிறார் விளையாட்டுகளான பல்லாங்குழி ஆட்டம், ஆடுபுலியாட்டம், கொம்பேறி, மரமேறி ஆட்டம், பாயும்புலி ஆட்டம் ஆகியவை மீண்டும் சிறுவர்களின் மத்தியில் பிரசித்தி பெறத் தொடங்கியுள்ளன. இது போன்ற சுமார் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய சிறார் விளையாட்டு முறைகளை ஆவணப்படுத்தியிருக்கிறார். 'பல்லாங்குழி' இயக்கம், அரசுப் பள்ளிகளில் பிரபலமடைந்துள்ள நிலையில் அவ்வியக்கத்தின் மூலம் நகர்ப்புற குழந்தைகளும் பயன்பெற வேண்டுமென்பதே தனது விருப்பம் என்றும் அவர் கூறுகிறார். உலகமயமாக்கலின் விளைவாக இன்று கிராமங்களில் வாழும் குழந்தைகளுக்கு நகரங்களின் வசதிகளும் வாழ்வியலும் கைக்கெட்டும் தூரத்தில் வந்துவிட்டன. ஆனால், கிராமங்களின் பாரம்பர்ய கேளிக்கை அம்சங்கள் நகரவாசிகளுக்கு எட்டாக்கனியாகிவருகின்றன. இந்த இடைவெளியைப் போக்கவேண்டியதன் அவசியத்தைத் தனது தொடர் செயல்பாடுகளின் மூலம் தொடர்ந்து பதிவு செய்துவருகிறார் இனியன்.

 'விடுபட்டவர்கள்- இவர்களும் குழந்தைகள்தான்'
'விடுபட்டவர்கள்- இவர்களும் குழந்தைகள்தான்'

சமீபத்தில் அவர் எழுதி வெளிவந்துள்ள 'விடுபட்டவர்கள்- இவர்களும் குழந்தைகள்தான்' புத்தகத்தில் சமூக ஏற்றத்தாழ்வின் காரணமாக குழந்தைகளுக்கு நிராகரிக்கப்படும் அடிப்படை நல்வாழ்வு அம்சங்களைத் திறம்பட விளக்கியிருக்கிறார். இது சிறுவர்களுக்கான புத்தகம் அல்ல; மாறாக, சிறுவர்களின் உளவியல் தேவைகள் குறித்த அறிவையும் கவனத்தையும் வலியுறுத்தும் பெரியவர்களுக்கான புத்தகம். சாதிய வேற்றுமைகள் குழந்தைப் பருவத்திலேயே விதைக்கப்படும் அவலத்தை இப்புத்தகத்தின் வாயிலாக அழுத்தமாக எடுத்துரைத்திருக்கிறார் எழுத்தாளர் இனியன். இப்புத்தகத்தில் ஓரிடத்தில், இருளர் இனத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றவர் முன் சந்திக்கும் நிற, இன, பாலியல்ரீதியான ஒடுக்குமுறைகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், அவற்றினூடாக மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தைகளுக்கான உலகை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாதவர்களாகவே தொண்ணூறு சதவிகித இந்திய பெற்றோர்கள் இருக்கிறார்கள். மேற்குலகில் குழந்தைகளோடு உரையாடுவதற்கென்றே பள்ளிகளில் தனியான அலுவலர்கள் உண்டு. அவர்கள் தங்களது வீட்டிலும் பள்ளியிலும் என்னவிதமான அனுபவங்களை எதிர்கொள்கிறார்கள், அவர்களுக்கு மனநெருக்கடி எதும் உள்ளதா எனத் தொடர்ந்து கண்காணித்து, அவர்களுக்குச் சிறப்பு கவனம் கொடுக்கப்படுகிறது. பெற்றவர்களேகூட பிள்ளைகளை அடிக்கவோ, துன்புறுத்தவோ முடியாது. இந்தியக் குழந்தைகளை யோசித்துப் பாருங்கள், நம்மில் பெரும்பான்மையானவர்களும் பத்து வயதுக்குள்ளாகவே எல்லாவிதமான குடும்ப வன்முறைகளையும் பார்த்துவிடுகிறோம். குழந்தைப் பருவத்தில் எதையெல்லாம் எதிர்கொள்ளக் கூடாதோ அதையெல்லாம் எதிர்கொண்டும், கண்டும் மனச்சிதைவுக்குள்ளாகிறார்கள். இங்கு குழந்தைகளை அரவணைக்கவோ, அவர்களை நல்வழிப்படுத்தவோ சரியானவர்கள் அமைவதில்லை என்பது பெரும் குறைபாடு.

இனியன் | இவர்கள்
இனியன் | இவர்கள்

சில மாதங்களுக்கு முன்பு ஒரு காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவந்ததை நம்மில் பலரும் பார்த்திருக்க முடியும். இருபது வயதுகூட தாண்டாத இளைஞன் ஒருவன் பட்டப்பகலில் கடும் போதையில் தன் தாயை வெட்டிக் கொன்றுவிட்டு நடு ரோட்டில் ஆத்திரமாகக் கத்திக்கொண்டிருக்கிறான், கையில் அவன் உயரத்துக்குப் பெரிய அரிவாள். அவனுக்குள் அந்த வன்முறையை விதைத்தது யார்... போதையை நோக்கி நகரும் ஒரு சிறுவனை நல்வழிப்படுத்தும் பொறுப்பு யாருடையது? நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஒரு தேசத்தில் குழந்தைகளுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பை நாம் உறுதிசெய்திருக்கிறோமா என்றால் இல்லை என்பதுதான் கசப்பான நிஜம்.

குழந்தைகளுக்கான இலக்கியம், குழந்தைகளுக்கான விளையாட்டு, இவையெல்லாம் மிகச் சமீபத்தில்தான் பேசுபொருளாகியிருக்கின்றன. குழந்தைகளுக்குக் கதை சொல்லும் மரபைக்கூட மறந்துபோனவர்களாயிருக்கும் இந்தக் காலகட்டத்தில்தான் இனியன் மாதிரியானவர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது. நமது வாய்மொழிக் கதைகள் வாழ்க்கைக்கான அறத்தைக் கற்பிப்பதோடு, எந்தப் பிரச்னை வந்தாலும் எதிர்கொள்ள வேண்டுமென்கிற உறுதியையும் கற்பிக்கின்றன. கதை கேட்டுப் பழகாத, எல்லோருடனும் இணைந்து விளையாடி ஒன்று கலக்காத குழந்தைகள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள். இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது, சென்னை அயனாவரத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் செவித்திறன் குறைபாடுடைய ஒரு குழந்தையை மூன்று நான்கு நபர்கள் பல மாதங்களாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். அந்தக் குழந்தைக்கு அதை யாரிடம் எப்படிச் சொல்வது என்பதுகூட தெரிந்திருக்கவில்லை. சரியான அரவணைப்பும் கவனிப்பும் இருந்திருந்தால் பிரச்னை தொடங்கிய முதல் நாளே அந்தக் குழந்தை மற்றவர்களிடம் வெளிப்படுத்தியிருப்பாள்.

இனியன் | இவர்கள்
இனியன் | இவர்கள்

குழந்தைகளின் மனம் தூய்மையான காகிதம் போன்றது. அதில் படியும் ஒவ்வொரு கீறலும் ஒரு தழும்பு. ஒவ்வொரு கீற்றும் ஒரு ஓவியம். காலப்போக்கில் அவர்களது ஆளுமையைத் தீர்மானிக்கும் ஒளிக்கீற்றுகளை அவர்கள் மனதில் விதைக்கவேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. இனியன் தனது செயல்பாடுகள் மூலமாக அவர்களது வாழ்வைத் தீர்மானிக்கும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளை அந்தக் குழந்தைகளின் மனதில் ஏற்றிக்கொண்டிருக்கிறார்.

குழந்தைகளுக்கென்று ஒரு மொழி இருக்கிறது. அவர்கள் பெரியவர்களின் சலிப்புத் தட்டின உலகிலிருந்து வரும் வார்த்தைகளையும் செயல்களையும் பொருட்படுத்துவதில்லை. அவர்களோடு உரையாடவும் விளையாடவும் அவர்கள் மொழியை நாம் கற்றுக்கொள்ள முடியும்.

இனியன் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் புகைப்படங்களைப் பார்த்தால் தெரியும், அதில் வெவ்வேறு முக பாவனைகளும் சேஷ்டைகளும் நிரம்பியிருக்கும். அந்த சேஷ்டைகளும் குறும்புத்தனங்களும்தான் குழந்தைகளின் மொழி. இன்று இனியனை உதாரணமாக எடுத்துக்கொண்டு, வெவ்வேறு நகரங்களில் சிலர் ஆர்வமாகக் குழந்தைகளுக்குக் கதைசொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். குழந்தைகளுக்கான இலக்கிய நூல்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் பத்து வருடங்களுக்கு முன்னால் திரும்பிப் பார்த்தால் இனியன் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தார். அந்த வகையில் இனியனின் பங்களிப்பு இந்தச் சமூகத்தில் மிக முக்கியமானதொன்று.

இனியன் | இவர்கள்
இனியன் | இவர்கள்

தனிப்பட்ட வாழ்வின் வலிமிகு அனுபவங்களின் பாடங்களை வருங்காலச் சந்ததியினரின் நலனுக்காகச் செலவிடும் இனியனை குழந்தைகள் தமது நண்பனாகக் கருதி கதைப்பதை காணும்போது அவரது இயல்பின் இனிமையைப் புரிந்துகொள்ள முடியும். குழந்தைகளின் அன்பைப் பெறுவது சுலபம். அவர்களது நம்பிக்கையைப் பெறுவது அத்தனை சுலபமானதல்ல. அவர்களது நம்பிக்கையை வென்ற இனியனின் இலக்குப் பயணமும் வாழ்வும் செழித்திருக்க வேண்டுகிறது மனம்.

(இவர்கள்... வருவார்கள்...)