Published:Updated:

"கற்பனை வாழ்க்கையிலிருந்து தொடங்குகிறது!”

ஆ.சிவசுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
ஆ.சிவசுப்பிரமணியன்

படங்கள்: அருள் பிரகாஷ்

"கற்பனை வாழ்க்கையிலிருந்து தொடங்குகிறது!”

படங்கள்: அருள் பிரகாஷ்

Published:Updated:
ஆ.சிவசுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
ஆ.சிவசுப்பிரமணியன்

‘நாட்டார் வழக்காற்றியல்’ என்றதும் சட்டென்று நினைவுக்கு வருபவர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்.சிறிய தகவல் ஒன்றுக்காகக்கூட நீண்ட பயணம் மேற்கொள்பவர். வாய்மொழிக் கதைகளில் ஒளிந்திருக்கும் வரலாற்றைத் தேடி, பதிவு செய்யும் ஆய்வாளர். அவருக்குச் சமீபத்தில் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது. வாழ்த்துகளோடு அவரைத் தொடர்புகொண்டேன்.

“நான் பிறப்பதற்கு முன்பாகவே நாட்டார் வழக்காறுகளைச் சேகரித்து, அச்சேற்றிப் பாதுகாத்த பலர் பெரிய அளவில் அங்கீகாரம் பெறாமலே மறைந்துபோனார்கள். அவர்களுக்குப் பின்னால் வரும் நான், அவர்களுடைய உழைப்பின் பயனைப் பெற்றுள்ளேன். இம்மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிய தமிழ்ப்பல்கலைக்கழகம், ‘நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளுக்காக’ என்றே குறிப்பிட்டு இப்பட்டத்தை வழங்கியுள்ளது மகிழ்ச்சிக்கு உரியது. இது, பொதுப்பார்வையில் இத்துறைமீதான ஒரு அலட்சியப்போக்கை, உதற உதவும் என்று நம்புகிறேன்” என்றார் உற்சாகத்துடன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“நாட்டார் வழக்காற்றியல் தொடர்பான ஆய்வுகளில் நீங்கள் ஈடுபடத் தொடங்கியது எப்போது?”

“திருமண உறவுகளைக் குறித்த நாட்டார் பாடல்களை மையமாகக்கொண்டு 1969இல் எழுதினேன். அது வெளியானதில் ஏற்பட்ட உற்சாகம் நெய்தல் நில மக்களான பரதவர்களின் திருமணங்கள் சிலவற்றில் நிகழும், ‘வாசற்படி மறியல்’ என்ற சடங்கு குறித்து ஆய்வுசெய்யத் தூண்டியது. இச்சடங்கை மையமாகக்கொண்டு எழுதிய கட்டுரை அதே ஆண்டில் வெளியானது. இன்றுவரை எனக்கு நிறைவளிக்கும் கட்டுரை இது. அதை வைத்துப்பார்த்தால் இத்துறையில் என் பயணம் தொடங்கி 50 ஆண்டுகளாகின்றன.”

“உங்களின் ஆய்வுப் பயணத்தில் எதிர்பாராமல் கிடைத்த, வியக்க வைத்த தகவல் எது?”

“நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள நாட்டார் தெய்வக்கோயில்களில் குறிப்பாக அம்மன்கோயில்களில் ‘மதுக்கொடை’ ‘மதுவூட்டு’ என்ற பெயர்களில் கோயிலில் மது தயாரித்து அதைப் படையலாகப் படைத்து வழிபடும் வழக்கம் உண்டு. இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டபோது இதன் தயாரிப்பு முறை குறித்து அறிய முடியவில்லை. ஏனெனில், இதன் தயாரிப்புமுறை கமுக்கமானதாக இருந்தது. ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளாக முயன்றும் பயனில்லை. என் மாணவர் ச.அரிராமன் மதுக்கொடைக்கு மது தயாரிக்கும் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அவர் முதலிலேயே மது தயாரிப்பு முறை குறித்து எதுவும் கூறமாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்
பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்

பின்னர்ப் பொதுவான சில செய்திகளாக அவர் சொன்னவற்றை ஒலிப்பதிவுக் கருவியில் பதிவு செய்தேன். அதை மீண்டும் ஒலிக்கச் செய்தபோது அவர் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தார். அந்தக் கருவி குறித்து அவர் அறிந்திருக்கவில்லை. தன் குரலைப் பதிவு செய்து அதை மீண்டும் கேட்க விரும்பும் அவரது விருப்பத்தைப் பயன்படுத்தி மதுக்கொடை மது தயாரிப்பு குறித்த கமுக்கமான செய்திகளைக் கேட்டறிந்தேன். அற்புதமான தரவுகள் அவை. ‘தோப்பிக்கள்’, ‘இல்லடுகள்’ என்ற பெயர்களில் சங்க இலக்கியத்தில் குறிப்பிடும் கள், அரிசியிலிருந்து தயாரிக்கப்படுவது என்ற உரையாசிரியர்களின் கருத்தை உறுதிசெய்தது. பீர் தயாரிப்பில் நிலவும் முளைவிடல், மாவாக்கல், வேகவைத்தல், நொதிக்கவைத்தல் என்ற நான்கு நிலைகளும் இடம்பெற்றிருப்பது வெளிப்பட்டது. பதிவு செய்த தன் குரலைக் கேட்கும் அவரின் ஆர்வம் என் பதினைந்து ஆண்டுக்காலத் தேடலுக்கு விடை தந்தது.

“கீழடியில் கிடைத்திருக்கும் ஆய்வு முடிவுகள் தொடர்பாக நாட்டார் பாடல்களில் குறிப்புகள் உள்ளதா?”

“தொல்லியலில் ஆர்வம் உடையவன் என்றாலும், அதில் புலமை பெற்றவன் அல்லன் நான். கீழடி ஆய்வறிக்கை இன்னும் முழுமையான வடிவில் வெளிவரவில்லை. இருப்பினும், இதுவரை தமிழ்நாட்டில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளுக்கும் கீழடித் தொல்லியல் ஆய்வுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. பொதுவாக, முதுமக்கள் தாழிகள், புதைகுழிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டே ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், மொகஞ்சதாரோ, ஹரப்பா அகழ்வாய்வுகளுக்கு இணையாக, குடியிருப்பை மையமாகக் கொண்டு ஆய்வுக்களமாகக் கீழடி அமைந்துள்ளது. நாட்டார் வழக்காற்று வகைகளுள் தொல் தொழில்நுட்பமும் தொல் அறிவியலும் இடம்பெறுகின்றன. கீழடி அகழாய்வு இவற்றை வெளிக்கொணரும்போது நாட்டார் வழக்காற்றியல் அறிவுத்துறைக்குப் பெரிதும் துணைபுரியும்.”

 "கற்பனை வாழ்க்கையிலிருந்து தொடங்குகிறது!”

“சங்க இலக்கியப் பாடல்களை வரலாற்று ஆதாரமாக ஏற்பதைப் போல, நாட்டார் பாடல்களை ஏற்பதில் தயக்கம் காட்டப்படுகிறதா?”

“பாடல், கதை என்பன கற்பனை சார்ந்தவை என்பது பொதுவான கருத்து. ஆனால், இக்கற்பனை, வாழ்க்கையிலிருந்து தான் தொடங்கியுள்ளது. வரலாறு என்பதை நாம் தனி மனிதர்களை மையமாகக் கொண்டே படித்தும் எழுதியும் உள்ளோம். வரலாற்றின் மையமாகச் சராசரி மனிதன் இடம்பெறும்போது, அதற்கான தரவுகள் நாட்டார் வழக்காற்றியலில் குவிந்து கிடக்கின்றன. இந்த உண்மையை இந்தியாவின் தலைசிறந்த வரலாற்று ஆய்வாளர்களான கோசாம்பியும் ரொமிலா தாப்பரும் உணர்ந்துள்ளதை அவர்களின் நூல்கள் வழியாக அறிய முடிகிறது. உண்மையான மக்கள் வரலாறு எழுதப்படும்போது சமூகம் சார் கொள்ளையர்கள், பஞ்சம், வெள்ளம், மக்களின் இடப்பெயர்ச்சி, சாதிய மோதல்கள், தீண்டாமை, பாலியல் வன்முறை, நிலவுடைமைக் கொடுமைகள், அவற்றிற்கு எதிராக ஒலித்த எதிர்க்குரல்கள், நிகழ்ந்த போராட்டங்கள், நவீனத்துவத்தின் அறிமுகம், அதன் விளைவுகள் போன்றவை குறித்த பல்வேறு செய்திகள் நாட்டார் வழக்காற்றியலில் பொதிந்துள்ளன. மக்கள் வரலாற்றை எழுத நாட்டார் வழக்காறுகள் ஆதாரமாக அமையும். நாம் மக்கள் வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் நாட்டார் வழக்காறுகளைத் தரவுகளாக ஏற்றுக்கொள்ளாததில் வியப்பில்லை.”

“நாட்டார் வழக்காற்றியல் பற்றிப் படிக்க இளைஞர்கள் ஆர்வமாக முன்வருகிறார்களா?”

“நாட்டார் வழக்காற்றியலில் முதுகலைப் பட்ட வகுப்புகளில் பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கையைவிட, ஆய்வு செய்ய வருபவர்களின் எண்ணிக்கையே அதிகம். ஆனால், ஆய்வுப்பட்டம் பெறுபவர்களில் பெரும்பாலும் பட்டம் பெற்றவுடன் இந்தத் துறையிலிருந்து தங்களை அந்நியப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.”