Published:Updated:

பிக்பாஸில் கமல் அறிமுகம் செய்த ஜி.நாகராஜனின் `நாளை மற்றுமொரு நாளே'... ஏன் படிக்க வேண்டும்?!

பிக்பாஸ் கமல்
பிக்பாஸ் கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரமொரு நூலை அறிமுகம் செய்யும் கமலஹாசன், கடந்த ஞாயிறன்று அறிமுகப்படுத்தியது, ஜி.நாகராஜன் எழுதிய 'நாளை மற்றுமொரு நாளே' நாவலை.

புறக்கணிக்கப்பட்ட, கண்டுகொள்ளப்படாத மனிதர்களின் உலகத்தை வாசகர்களுக்கு வெளிச்சமிட்டுக்காட்டிய எழுத்துக் கலைஞன் ஜி.நாகராஜன். இலக்கியக் கர்த்தாக்கள் கட்டமைக்கும் புனிதத்துவத்தை உடைத்து பேராசைக்காரர்கள், மோசடிப் பேர்வழிகள், துரோகிகள், கோழையொழுகும் பாலியல் புரோக்கர்கள் நாகராஜனின் படைப்புகளில் உலவினார்கள். சுருங்கச் சொன்னால் வாழ்வின் இருட்டுப்பக்க அழகியலே அவரது புனைவு வெளி. உபதேசிக்காமல், சரி தவறென தீர்ப்புகள் சொல்லாமல், எந்த பாசாங்குமில்லாமல் உள்ளது உள்ளபடி கதைசொல்வது ஜி.நாகராஜனின் தனித்தன்மையான பாங்கு.
ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’
ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’

வாழ்க்கை வேறு, எழுத்து வேறன்றி தானடைந்த வெற்றி தோல்வியையும் தான் கடந்த மனிதர்களையும் தான் உணர்ந்தவைகளையுமே நாவல்களாக, சிறுகதைகளாக படைத்தவர். இடதுசாரியான நாகராஜன், கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முழுநேரமாகப் பணியாற்றியவர். சிந்தாந்தங்களை முற்று முழுதாக கற்றுணர்ந்தவர். அதேநேரம் வாழ்வின் போக்கில் போதைக்குள் மூழ்கிப்போனார். தன் பாதையில் உடன் பயணிக்கும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள் அவர் படைப்புகளில் பாத்திரங்களாக உயிர் பெற்றார்கள். 'நாளை மற்றுமொறு நாளே' நாவலில் பாலியல் தொழிலாளிகளின் பொழுதுகளைப் பதிவு செய்திருக்கிறார்.

கந்தன் என்றொரு பிரதான கதாபாத்திரம்... பாலியல் தொழிலுக்குப் பெண்களை கைமாற்றிவிடும் தொழில் செய்பவன். குடியும் இன்னபிற நோய்களும் உடலுக்குள் புகுந்து வதைக்க, மனிதர்களின் பலவீனங்களை முதலீடாக்கி வாழ்பவன். கந்தனின் மனைவியும், கணவன் இசைவோடு பாலியல் தொழில் செய்பவள்.

"இந்தக் கதை ஒரு மனிதனின் ஒரு நாள் வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்பந்திருக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல்... இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாம். ஏனெனில், அவனுக்கும் நம்மில் பலருக்கும்போலவே `நாளை மற்றுமொரு நாளே'" என்ற முன்னுரையோடுதான் இந்த நாவல் தொடங்குகிறது.
பாலியல் தொழிலாளி
பாலியல் தொழிலாளி
படம்: க.பாலாஜி
ஒப்பனை கலைத்து வீட்டில் மனைவியாக, அம்மாவாக, பக்கத்து வீட்டுப் பெண்ணாக பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. பெரும்பாலும் இவர்களை கதைமாந்தர்களாகக் கொண்ட கதைகள் தமிழில் வெகு குறைவு. ஜி.நாகராஜன் இந்த உலகத்துக்குள் நுழைந்து, அவர்களின் அன்றாடப் பாடுகளை சித்திரங்களாக்கியிருக்கிறார்.

ஆபாசம் தொனிக்காது, தவறான கற்பனைக் கிளர்ச்சிகளை தூண்டாது ரத்தமும் சதையுமாக அவர்களது வாழ்க்கையைப் பதிவு செய்வதென்பது சவால். நாகராஜன் அவ்வளவு உயிர்ப்போடு தன் நாவல்கள், சிறுகதைகளில் அதைச் செய்திருக்கிறார்.

ஜி.நாகராஜன்
ஜி.நாகராஜன்

கந்தன் பாலியல் தொழிலுக்குப் பெண்களை இழுத்துவிடும் தொழில் செய்பவன். காசநோயா, ஆஸ்துமாவா என்று இனம்காண முடியாத கோழையொழுகும் நோய் பீடித்தவன். ஜிஞ்சர்(மது) இல்லாவிட்டால் கை, கால்கள் இயங்காது. அந்த அளவுக்கு, மீள முடியா குடிநோயாளி. குடிக்கு அடிமையான ஒருவனுடைய காலைப்பொழுது எப்படி விடியும் என்பது கந்தனின் விடியல் வாயிலாக அறியலாம். இயல்பாக மாற, விடிந்ததும் குறைந்தது மூன்று அவுன்ஸ் ஜிஞ்சராவது உள்ளே தள்ளியாக வேண்டும். கையில் சல்லிப்பைசா இல்லை. மனைவி மீனாவும் வீட்டில் இல்லை. அவள் சில்லறைகள் வைக்குமிடத்தில் கைவைத்தால் எலிப்புழுக்கைதான் வருகிறது. தவியாக தவித்து நின்ற பொழுதில்தான் வந்து சேர்கிறாள் ராக்காயி. பல தருணங்களில் கந்தனால் நிராகரிக்கப்பட்டவள். ''கொரங்கு மாதிரியிருக்கிற உன்கிட்டயெல்லாம் எவன் வருவான்'' என்று வெறிச்சியில் ஏசியுமிருக்கிறான்.

எப்படியும் தனக்கொரு பிழைப்புத் தேடித்தா என்று வந்து நிற்கிறாள். சிறு குற்ற உணர்வு கந்தனை சூழ்கிறது. ராக்காயியின் கணவன் மூக்கன் பத்தாண்டு கால நண்பன். அவன் மனைவியை எப்படி இந்தக்குழியில் தள்ளுவது... ஆனாலும் அவள், ''நீ மட்டும் தாலி கட்டிப்புட்டு மீனாவை அனுப்பலாமா'' என்று நியாயம் கேட்கிறாள். இப்போது ஜிஞ்சர் வேறு தேவையாக இருக்கிறது. நேற்று ஒரு கஸ்டமர், ''கொஞ்சம் வயசானாலும் பரவாயில்லை... உம்னு இல்லாம சிரிச்சுப் பிடிச்சி விளையாடற பிள்ளையா இருந்தா வேணும்'' என்று கேட்டது நினைவுக்கு வர, ராக்காயிக்கு வாய்ப்பு மலர்கிறது. அந்த கணமே ராக்காயி 'மோகனா' என்று பெயர்சூட்டப்பட்டு தொழிலுக்குத் தயாராகிறாள். கந்தனுக்கு மூன்று அவுன்ஸ் ஜிஞ்சர் கிடைக்கிறது.

ஜி.நாகராஜன்-விளிம்புகளை வரைந்த வாத்தியார்
ஜி.நாகராஜன்-விளிம்புகளை வரைந்த வாத்தியார்

அடர்ந்து கசகசக்கும் குப்பத்தில் 'கபே' 'கபே' என்று பேசிக்கொண்டேயிருக்கும் ஜீவா, அக்ரஹாரத்தின் வழியே மீன்கூடை சுமந்துசென்றதால் அடித்து விரட்டப்பட்டு அடுத்த பத்தே வருடத்தில் மிகப்பெரிய இறைச்சிக்கடையை அதே அக்ரஹாரத்தில் திறந்த பசுபதி, பசுபதியின் இரண்டாம் தாரத்துப் பெண்ணை ரோம நாசினி வாங்கிக்கொடுத்தே காதலில் வீழ்த்தி இழுத்துக்கொண்டு ஓட முயன்ற நாவிதர் பையன் பரமேஸ்வரன், மனைவியாகவும், பாலியல் தொழிலாளியாகவும் மீனாவை கந்தனுக்கு கைமாற்றி விட்ட வெற்றிலைக்கடை சோலைப்பிள்ளை, கந்தனுக்கு ஆலோசகனாக இருக்கிற தரகர் அந்தோணி என மனிதர்களை அரிதாரம் இல்லாமல் அசலாக நாவலில் உலவ விடுகிறார் ஜி.நாகராஜன்.

புனிதத்தன்மையை கட்டுடைத்து, நம்மோடு இணைந்து வாழும் நாம் பார்க்க விரும்பாத மனிதர்களின் உலகத்தை உள்ளது உள்ளபடி இந்த நாவலில் ஆவணப்படுத்துகிறார் ஜி.நாகராஜன். எந்த விதத்திலும் புறக்கணிக்க முடியாத, தமிழின் ஆகச்சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று. மொழி, கதை சொல்லல் பாங்கு, புனைவு வெளி என எல்லாவற்றிலும் மரபுடைத்த வகையிலும் இது முக்கியமான நாவல். நிச்சயம் எல்லோரும் படிக்கவேண்டிய நாவல்!
அடுத்த கட்டுரைக்கு