Published:Updated:

"விநாயகத்தின் விடுதலை" - கல்கி

கல்கி

29.12.1940-ம் ஆண்டு ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை. ஆனந்த விகடன் பொக்கிஷம் சிறுகதை

"விநாயகத்தின் விடுதலை" - கல்கி

29.12.1940-ம் ஆண்டு ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை. ஆனந்த விகடன் பொக்கிஷம் சிறுகதை

Published:Updated:
கல்கி

விநாயகத்தின் விடுதலைப் பற்றி சொல்வதற்கு முன்னால் அவருடைய சிறைவாசத்தைப் பற்றி சொல்வது அவசியமாய் இருக்கிறது. வீட்டுக்கு அஸ்திவாரம் எப்படி அவசியமோ, சங்கீதத்துக்கு சாரீரம் எப்படி முக்கியமோ, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நிலைத்திருப்பதற்கு இந்தியாவில் ஹிந்து முஸ்லிம் சண்டை எப்படி இன்றியமையாததோ, அப்படியே, விநாயகத்தின் விடுதலைக்கும் அவருடைய சிறைவாசமே முக்கிய ஆஸ்பதமாயிருந்தது.

விநாயகம் எதற்காக சிறைவாசம் செய்ய முன்வந்தார்? இந்த கேள்வியை அவரே பல தடவை கேட்டுக் கொண்டு பதில் தெரியாமல் திகைத்ததுண்டு. விநாயகம் ஒரு பாரிஸ்டர். நல்ல சம்பாத்தியம் உள்ளவர். பூனமல்லி ரோட்டில் உள்ள தமது சொந்த பங்களாவில் குழந்தை குட்டிகளுடன் சௌக்கியமாக வாழ்ந்துவந்தார். தீவிர அரசியல் கிளர்ச்சியில் ஈடுபட்டது கிடையாது. ஆகையினால் சர்க்காரிலே செல்வாக்கு அதிகம் உண்டு. சென்னை மேல்-சபையில் அவர் ஒரு நியமன அங்கத்தினர். சினிமா ஸென்ஸார் போர்டில் அவர் ஒரு மெம்பர். சிறைச்சாலைகளுக்கு உத்தியோகப் பற்றற்ற பார்வையாளர். சீக்கிரத்தில் அவருக்கு பப்ளிக் பிராஸிக்யூடர் வேலையாகுமென்று சிலரும் திவான் பகதூர் பட்டம் வரப்போகிறது என்று சிலரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

அப்படிப்பட்டவர் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதியாகி ஒன்பது மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்குப் போவதென்றால் அது எப்பேர்பட்ட அபூர்வ சம்பவம். இதைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம், ''அந்த சமயம் எனக்கு பைத்தியம்தான் பிடித்து இருக்க வேண்டும்'' என்று அவர் முடிவு கட்டியது இயல்பே அல்லவா?

அது எப்படி நேர்ந்தது என்பதை அவரால் இப்போது திட்டமாக ஞாபகப் படுத்திக் கொள்ள முடியவில்லை. பண்டித ஜவஹர்லால் நேருவின் நாலு வருஷ தண்டனையினால், அவருடைய உள்ளம் ஒருவாறு இளகிப் போயிருந்தது. அதைத்தொடர்ந்து மேல் சட்டசபையில் தம்முடன் ஸ்தானம் வகித்த சினேகிதர்கள் ஒவ்வொருவராக சிறை சென்று வந்தது அவருடைய இருதயத்தை பெரிதும் உருக்கிற்று.

கடைசியாக உத்தியோகப்பற்றற்ற 'ஜெயில் விஸிட்டர்' என்ற கோதாவில் அவர் சிறைச்சாலையைப் பார்வையிட போனபோது அங்கே அவருடைய அத்யந்த சிநேகிதரான டாக்டர் சுந்தரத்தைக் கண்டார். ''விநாயகம் ஏ கிளாஸ் சிறைச்சாலை சுகமாய் இருக்கிறது, நீயும் வந்துவிடு ஆனந்தமாய் இருக்கலாம் ''என்றார் சுந்தரம்.

இம்மாதிரி அவர் சொன்னது வேடிக்கையாகத்தான். ஏனெனில் டாக்டர் சுந்தரம் - எத்தனையோ பேருக்கு எவ்வளவு நோய்களை குணப்படுத்தி பிரசித்திபெற்ற டாக்டர் சுந்தரம்--- முன்னே இருந்ததற்கு இப்போது பாதி ஆளாய் இருந்தார். சிறைக்கு வந்த பிறகு அவர் கடுமையான சுரத்தினால் கஷ்டப்பட்டதுதான் காரணம். இராத்திரி பன்னிரெண்டு மணி நேரமும் தனியறையில் பூட்டப்பட்டிருந்த போது அவருக்கு தாகத்தினால் தொண்டை வற்றிப் போனதையும் ஒரு வாய் வெந்நீர் கொடுப்பார் இல்லையே என்று தவித்ததையும் பற்றி அவர் சொன்னபோது விநாயகருக்கு கண்ணில் ஜலம் வந்துவிட்டது. ஏற்கனவே, விநாயகம் டாக்டர் சுந்தரத்தைப் பார்த்து ''சிறையிலே ஏ கிளாசில் போய் சுகமாக இருக்கப் போகிறாய் பெரிய தியாகமாக்கும் என்று அடிக்கடி கேலி செய்ததுண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதை எண்ணிக் கொண்டுதான் ஏ கிளாஸ் வெகு சுகமாயிருக்கிறது. நீயும் வந்துவிடு என்றார் டாக்டர் சுந்தரம்.

இப்படி அவர் குத்திச் சொன்னது. தீயில் நெய்யை விட்டது போல் விநாயகத்தின் மனதில் ஏற்கெனவே இருந்த கொதிப்பை ஜுவாலை விட்டு எழச் செய்தது. அவ்வளவுதான், அடுத்த ஒரு வாரத்துக்குள் பாரிஸ்டர் விநாயகத்துக்காக மீண்டும் சிறைக்கூடத்தின் வாசல் திறக்கப்பட்டது. இம்முறை அவர் விஸிட்டர் ஆக வரவில்லை. ஏ கிளாஸ் கைதியாக வந்தார்.

++++

விநாயகம் சிறைக்கு வந்து இப்போது கிட்ட தட்ட மாதம் ஒன்பது ஆகிவிட்டது. ஒன்பது மாதங்களா? ஒன்பது வருஷங்கள்... ஒன்பது சகாப்தங்கள்? ஒன்பது யுகங்கள்! ஆகா! சிறைக்குள்ளே காலச்சக்கரம் தான் எவ்வளவு சாவகாசமாக சுழல்கிறது?

சூரிய சந்திரர்களை யாராவது பிடித்து நிறுத்தி விட்டார்களா, என்ன? ஒருவேளை பூமிதான் சுழல்வதற்கு மறந்து போய் நின்று விட்டதோ?

பாரிஸ்டர் விநாயகம் ஆகாச விமானத்தில் பிரயாணம் செய்தது கிடையாது. ஆனால், ரயில் பிரயாணமும் கப்பல் பிரயாணமும் செய்திருக்கிறார். நெடுந்தூரம் ரயிலிலோ கப்பலில் பிரயாணம் செய்யும் போது உண்டாகும் அலுப்பை அவர் அனுபவித்து அறிந்திருக்கிறார். சென்னையிலிருந்து டில்லிக்கு கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் இரண்டே நாளில் அதிவிரைவாக போய்ச் சேர்கிறது. ஆனாலும் இந்த இரண்டு நாளைக்குள் பிரயாணிகளுக்கு எவ்வளவு கஷ்டமாய் போய்விடுகிறது? ''சனியன் பிடித்த ரயில் எப்போது தான் போய் தொலையுமோ என்று தோன்றுகிறதல்லவா? இத்தனைக்கும் ரயில் போகும் போது எத்தனையோ விதமான காட்சிகளைப் பார்க்கிறோம். புதிய புதிய ஊர்களைப் பார்க்கிறோம். புதிய புதிய மனிதர்களை பார்க்கிறோம். ஸ்டேஷன்களில் வண்டி நிற்கும்போது இறங்குகிறோம், ஏறுகிறோம். இப்படி எல்லாம் இருந்தும் இரண்டு நாள் ரயில் பயணத்துக்குள், அப்பாடா என்று ஆகிவிடுகிறது.

நல்லது, இரண்டு நாளைக்கு பதில் ஒன்பது மாதம் விடாமல் ரயில் பயணம் செய்ய நேர்ந்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட தொலையா ரயில் பிரயாணமாக பாரிஸ்டர் விநாயகருக்கு சிறைவாசம் தோன்றியது. ரயில் பிரயாணத்தில் உள்ள புதுமைகளோ காட்சி மாறுதல்களோ இங்கே ஒன்றும் கிடையாது. ஆனால் அங்கு இல்லாத அசௌகரியங்களும் தொந்தரவுகளும் அவ மதிப்புகளும் இங்கே நிரம்ப உண்டு.

முதல் ஆறு மாதம் வரையில் ஏதோ ஒரு மாதிரியாய்ப் போயிற்று ''வந்துவிட்டோம் இருந்துதானே ஆகவேண்டும்?'' என்று பல்லைக் கடித்துக் கொண்டு விநாயகம் பிள்ளை நாளை போக்கினார்.

புத்தகம் படிப்பதிலும் அக்கம் பக்கத்திலிருந்த மற்ற அரசியல் கைதிகளுடன் பேசுவதிலும் ஒருவாறு பொழுது போயிற்று.

ஆனால் ஆறு மாதம் ஆன பிற்பாடு அடிக்கடி விடுதலையைப் பற்றிய ஞாபகம் உண்டாயிற்று. இவ்வளவு மாதம், இவ்வளவு நாள் ஆகிவிட்டது. இன்னும் எவ்வளவு மாதம், இவ்வளவு நாள் பாக்கி என்று அடிக்கடி மனம் தனக்குத்தானே கணக்கு போட்டுக் கொண்டது. தினம் பொழுது விடிந்ததும் லாக் அப் திறக்கும்போது விநாயகமும் தூக்கம் விழித்து கண்ணை திறப்பார்.

உடனே அவருக்கு ஏற்படும் முதல் ஞாபகம், ''அப்பா ஒரு நாள் போச்சு என்பதுதான். ''இன்னும் 67 நாள் பாக்கி'' என்று அடுத்தாற்போல் எண்ணமிடுவார்.

அவருடன் சிறைவாசம் செய்தவர்கள் தங்கள் தங்கள் தண்டனை காலம் முடிந்து ஒவ்வொருவராக விடுதலையாகி போக ஆரம்பித்த போது விநாயகத்தின் பரபரப்பு மேலும் மேலும் அதிகமாகி வந்தது. அவர்களைப்போல் தாமும் முன்னதாகவே சிறைக்கு வந்திருக்கக் கூடாதா என்று தாபப் படுவார். எப்போது வந்து இருந்தாலும் ஒன்பது மாதம் இருந்து தானே தீர வேண்டும்?" என்று எண்ணி சமாதானமடைய முயல்வார், ஆனால் சமாதானம் உண்டாகாது. முன்னதாக வந்து இருந்தால் முன்னதாக போகலாமல்லவா?

ஆரம்பத்தில் எல்லாம் புத்தகம் படிப்பதில் கவனம் செலுத்திப் பொழுதுபோக்குவது சாத்தியமாக இருந்தது. புத்தகம் படிக்கவே முடியவில்லை. புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொண்டால், ''இன்னும் எத்தனை நாள் பாக்கி விடுதலைக்கு?'' என்ற எண்ணந்தான் முன்னால் வந்து நிற்கும். புத்தகத்தில் கவனமே செல்லாது.'' எடுத்தால் முடித்த பிறகுதான் கீழே வைப்பீர்கள் ''என்று விளம்பரம் செய்யப்படும் தலைபோகிற துப்பறியும் நாவலில் கூட மனத்தை செலுத்த முடியவில்லை.

கல்கி
கல்கி

இன்னும் நாளாக ஆக வீட்டு ஞாபகம் அதிகமாக வரத் தொடங்கியது பெயர் விநாயகனே தவிர அவருக்கு பெண்டாட்டி பிள்ளைகள் உண்டு. அவருடைய ஆறு வயது பிள்ளைக்கு செல்வராஜன் என்று பெயர். அவனுக்கு நினைவு தெரிந்ததிலிருந்து இராத்திரியில் அப்பாவின் பக்கத்தில் தான் படுத்துக் கொள்வான். வேறு இடத்தில் அவனை போட்டுவிட்டால், நடுநிசியில் விழித்துக் கொண்டு அப்பாவின் பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டு விடுவான். சில சமயம் தன்னுடைய சின்னஞ்சிறு கையை அப்பாவின் கையுடன் கோர்த்து கொண்டு அப்படியே தூங்குவான்.

குழந்தை இப்போதெல்லாம் என்ன செய்கிறானோ இராத்திரியில் ஒருவேளை விழித்துக்கொண்டு தன்னைத் தேடிக் காணாமல் அழுகிறானோ என்று எண்ணும் போதெல்லாம் விநாயகம் வெடித்துவிடும் போல் இருக்கும். அவனுடைய மிருதுவான இளம் கரங்களினால் தன் கழுத்தை மீண்டும் எப்போது கட்டிக் கொள்வானோ என்று நினைக்கும் போது அவருக்கு சொல்ல முடியாத ஏக்கம் உண்டாகும்.

செடி வளர்க்கும் கலையில் விநாயகம் ரொம்பவும் பற்றுடையவர் அவருடைய பங்களாவின் வாசலில் விதவிதமான பூச் செடிகளும் கொடிகளும் வைத்திருந்தார். தினம் காலையில் ஒரு முறை மாலையில் ஒரு முறை தோட்டத்தைச் சுற்றி ஒவ்வொரு செடியாகப் பார்த்துவிட்டு வருவார்.

ஒரு செடியில் புதிதாக தலைப்பிட்டு இருப்பதைப் பார்த்தால் அவர் மனம் களிப்படையும். புதிதாக தலைப்பிட்டு இருப்பதை பார்த்தால் அவர் மனம் களிப்படையும்.

ஒரு செடியில் ஒரு புதிய பூவைக் கண்டால், அவருக்கு எல்லையற்ற ஆனந்தம் உண்டாகும். --- ஆகா! இப்போது ரோஜா செடிகள் பூக்கும் காலம்! இதை நினைத்தபோது விநாயகத்துக்கு அளவில்லாத வேதனை உண்டாயிற்று.

டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் விநாயகருக்குச் சிறைவாசம் சகிக்க முடியாமல் போனதற்கு இன்னொரு காரணமும் இருந்தது சேர்ந்தது. அவருக்கு சங்கீதத்தில் ரொம்ப ஆசை அந்த நாட்களில் சென்னையில் சங்கீத உற்சவங்கள் பிரமாதமாக நடந்து கொண்டிருக்கும். ''சாயங்காலம் 5 மணிக்கு பாகவதர் பாடிக்கொண்டிருப்பார்'' என்று ஞாபகம் அவருக்கு வரும். உடனே அவ்விடத்துக்குப் பறந்து போய் விடலாமா என்று தோன்றும்.

+++++

எப்பேர்பட்ட கஷ்டத்திற்கும் ஒரு முடிவு உண்டல்லவா? விநாயகத்தின் சிறைவாசத்துக்கு முடிவு காலம் வந்தது. விடுதலையாக வேண்டிய நாளை முதல் நாள் இரவு விநாயத்துக்கு சுரம். சுரமென்றால் சாதாரண சுரமல்ல விடுதலை ஜுரம்!

மறுநாள் விடுதலையாக போகிறோம் என்ற எண்ணமானது தூக்கத்தை அடியோடு விரட்டி விட்டது. தலை கொதித்தது. உடம்பெல்லாம் கனல் போல் காய்ந்தது. கண்ணை எரிந்தது. அதுவரையில் விநாயகருக்கு ஒரு நாள் ஒரு யுகமாய் தோன்றியது போக, இன்று இரவோ ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாக தோன்றியது.

கடைசியாக எப்படியோ அந்த விடியாத இரவும் விடிந்தது. லாக்-அப்பைத் திறந்தார்கள். ''நிஜமாக நமக்கு இன்று விடுதலையா? இன்னும் சில மணி நேரத்துக்கெல்லாம் சிறைக்கு வெளியே போய் விடப் போகிறோமா? ஒருவேளை எல்லாம் பொய்யோ?'' என்று நினைத்த போது அவருடைய உடம்பெல்லாம் நடுங்கிற்று. சற்று நேரத்துக்கெல்லாம் பக்கத்து அறையில் உள்ளவர்கள் வந்து, ''என்ன விநாயகம், இன்றைக்கு விடுதலை போல் இருக்கிறது'' என்று சொன்ன போது அவருக்கு நம்பிக்கை உண்டாயிற்று. தாம் போன பிறகும் அங்கு இருக்கப்போகிறவர்களை எண்ணி அவர் இரக்கப்பட்டார்.

ஏ வகுப்பு கைதிகளுக்கே இப்படி இருக்கிறதே ஸி வகுப்பு கைதிகளின் நிலைமை என்னவென்று எண்ணிய போது அவருடைய கண்களில் ஜலம் வந்துவிட்டது. அதைப்பார்த்த மற்றவர்கள் தங்களைப் பிரிந்து போவது பற்றி அவர் வருந்துவதாக எண்ணினார்கள். ஒருவர் 'சேச்சே! என்னத்துக்கு ஸார் வருத்தப்படுகிறார்கள். நாங்களும் சீக்கிரத்தில் வந்து விடுகிறோம் என்றார் . இன்னொருவர் ''ஒருவேளை நாங்கள் வெளியே வருவதற்கு முன் நீங்கள் திரும்பி இங்கே வந்து விடுவீர்களோ, என்னமோ? யார் கண்டது? என்று சொன்னார். விநாயகரின் வயிற்றில் சொரேல் என்றது.

அன்று விநாயகம் காலையில் செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் சாவகாசமாக செய்தார். மெதுவாக பல் தேய்த்தார். மெதுவாக குளித்தார். சாமான்களை வெகு சாவகாசமாக கட்டி வைத்தார். சீக்கிரம் எல்லாம் செய்து விட்டால், விடுதலை நேரம் வரும் வரையில் மிகவும் கஷ்டமாக இருக்கும் என்றுதான் இப்படி எல்லாம் செய்தார்.

எட்டு மணியாச்சு, எட்டரையாச்சு ஒன்பது மணி ஆச்சு. சரி இப்போது ஜெயில் ஆபீஸிலிருந்து அழைப்பு வந்துவிடும். இன்னும் சில நிமிஷத்தில் வந்து விடும். அதோ வருகிறானே சீப் வார்ர்டர், அவர் நம்மை அழைக்கத்தான் வருகிறான்....!

கடைசியில் ஒன்பதரை மணிக்குத்தான் ஜெயிலரும் டிபடி ஜெயிலரும் வந்தார்கள். ''ஏது நம்முடைய விடுதலைக்கு இவ்வளவு தடபுடல்?'' என்று வியப்புற்றார் விநாயகம். அவர்கள் கிட்ட நெருங்கி வந்தார்கள்.

ஜெயிலர் அதிகாரமும் மரியாதையும் கலந்த குரலில் ''மிஸ்டர் விநாயகம் சொல்வதற்கு ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் என்ன செய்யலாம்? இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி உங்களைப் பாதுகாப்பில் வைப்பதற்கு உத்தரவு வந்திருக்கிறது. இந்த பிளாக்கில் இருந்து பாதுகாப்பு கைதிகள் இருக்கும் பிளாக்கிற்கு நீங்கள் போக வேண்டியது .விடுதலை இன்று இல்லை'' என்றார்.

'' என்ன? விடுதலை இல்லையா?'' என்று ஒரு சத்தம் போட்டார் விநாயகம். அவ்வளவுதான் ஒரே பாய்ச்சலாக பாய்ந்து ஓடத் தொடங்கினார். ஜெயிலரையும் டிபடி ஜெயிலரையும் எதிரில் வந்தவர்களையும் ஒரே தள்ளாகத் தள்ளிக் கொண்டு ஓடினார். கதவுகளை ஒரே குத்தாகக் குத்தித் திறந்து ஓடினார். சுவர்கள் மேல் அனாயசமாக ஏறி குதித்தார். அவருக்கு அவ்வளவு வேகம், அவருடைய உடம்பில் அவ்வளவு சக்தி எப்படித்தான் வந்ததோ தெரியாது, வெகு சீக்கிரத்தில் சிறைக்கு வெளியில் வந்துவிட்டார்.

வெளிவந்த பிறகு ஒருகணம் கூட நிற்கவில்லை. ஒரே ஓட்டம்தான் ஓடினாரா அல்லது பறந்தாரா? திடீரென்று எப்படியோ பறக்கும் சக்தி அல்லவா வந்துவிட்டது போல் இருக்கிறது? - ஆனால், இந்த அதிசயத்தைப் பற்றி சிந்திக்க அவருக்கு அவகாசம் இல்லை. ஒரே மூச்சாய் சென்று சென்னை பூனமல்லி ரோட்டில் தமது பங்களாவை அடைந்தார்.

வெகு உற்சாகத்துடன் பங்களாவுக்குள் நுழைந்தார். ''செல்வம் செல்வம்'' என்று கூப்பிட்டு கொண்டு போனார். ஆனால் இதென்ன அதிசயம் வீட்டில் ஒருவரையுமே காணோமே? எல்லோரும் எங்கே போனார்கள்?

கொல்லைப்புறத்தில் பேச்சுக்குரல் கேட்டது. அங்கே போனார். வேலைக்காரர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சிலிருந்து தமது மனைவியும் குழந்தைகளும் நம்மை வரவேற்று அழைத்து வருவதற்காக சிறைச்சாலைக்கு போய் இருப்பதாக தெரிந்தது. ஒரு வேடிக்கை என்னவென்றால் எஜமான் வந்து நிற்பதை வேலைக்காரர்கள் தெரிந்து கொள்ளவே இல்லை. அவர்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தார்கள்.

இந்த வேடிக்கைகளை பற்றி நினைக்கவும் அவருக்கு அவகாசம் இல்லை. தன் மனைவியும் குழந்தைகளும் சிறைச்சாலை வாசலில் நின்று தம்மை காணாமல் ஏமாற்றம் அடைவார்களே என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. உடனே அங்கிருந்து கிளம்பினார். திரும்பவும் வந்த வழியே அதிவிரைவாகச் சென்றார். வெகு சீக்கிரத்தில் சிறைச்சாலை வாசலுக்கு வந்து விட்டார்.

ஆம் அங்கே அவருடைய மனைவியும் குழந்தைகளும் நின்று கொண்டிருந்தார்கள். வெகு ஆவலுடன் ''செல்வராஜ் என்று கூப்பிட்டுக் கொண்டு அவர்கள் அருகில் சென்றார். ஆனால் இதென்ன ஆச்சரியம்! இது என்ன மர்மம்! அவர்கள் இவரை திரும்பிப் பார்க்கவே இல்லையே? இவர் வருவதை தெரிந்து கொள்ளவே இல்லையே? ஐயையோ... இது என்ன?

விநாயகருக்கு சட்டென்று உண்மை புலப்பட்டது. ஓஹோ நாம் இறந்தல்லவா போய்விட்டோம். சிறைக்குள்ளேயே நமக்கு மரணம் நேரிட்டு விட்டது. ஆவி ரூபத்தில்தான் நாம் பங்களாவுக்குப் போய் வந்தோம். அதனால்தான் அவ்வளவு சீக்கிரம் போய் வரமுடிந்தது.ஆகா! நமது மனைவி மக்கள் இனி நம்மை அறிந்து கொள்ளவே மாட்டார்களோ?

அடுத்த நிமிஷம் சிறையின் கதவு திறந்து உள்ளே இருந்து ஆஸ்பத்திரி ஸ்ட்ரெச்சர் ஒன்றை இரண்டு வார்டர்கள் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அதை விநாயகத்தின் மனைவி மக்கள் நின்ற இடத்துக்கு கொண்டு வந்தார்கள். அந்த ஸ்ட்ரெச்சரில் தமது உடல் கிடப்பதைப் பார்த்து விநாயகம் திடுக்கிட்டார். அதே சமயத்தில் அவருடைய மனைவி, மக்கள் ஓவென்று கதறி அழத் தொடங்கினார்கள். நாம் இவ்வளவு பக்கத்தில் நிற்கிறோமே, ஆனாலும் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லையே என்று எண்ணியபோது உலகத்துக்கு தம்மையறியாமல் அழுகை வந்தது. ஆனால் முன்னெல்லாம் போல் வாய்விட்டு உரத்து அழ முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டு வாய்விட்டு அழக்கூடாமல் செய்தது. எனினும் அவரிடம் எப்படியாவது தான் அருகில் நிற்பதைத் தெரிவித்துவிட வேண்டும் என்று அவருக்கு ஆசை பொங்கிற்று. தம்முடைய உடம்புக்குள் மறுபடி புகுந்தால் என்ன என்று எண்ணினார். உடனே அந்த உடம்பில் தான் புகுவது போல் தோற்றம் உண்டாயிற்று. அடுத்தகணம் ''ஓ''என்று அலறிய வண்ணம் எழுந்து உட்கார்ந்தார்

+++++

''ஐயோ! உங்களுக்கு என்ன உடம்பு? ஏன் இப்படி பதறுகிறார்கள்?'' என்று பக்கத்திலிருந்த அவருடைய பத்தினி பயந்த குரலில் கேட்டாள். குழந்தைகள் தேம்பித் தேம்பி அழுதார்கள்.

பாரிஸ்டர் விநாயகம் அவர்களை வெகுநேரம் வெறிக்க வெறிக்கப் பார்த்தார். அவர்களைத் தொட்டுப் பார்த்தார், தம்மையே தொட்டுப் பார்த்துக்கொண்டார். இவ்வளவும் கனவு என்று அவர் நிச்சயம் அடைவதற்கு வெகு நேரம் ஆயிற்று.

ஆனால், வாசகர்கள் மட்டும் இதெல்லாம் பாரிஸ்டர் விநாயகம் கனவில் கண்ட அனுபவமாய் தான் இருக்கவேண்டும் என்று முன்னமே ஊகித்தறிந்திருப்பார்கள். சிறையில் அவருடைய சினேகிதர் டாக்டர் சுந்தரத்தைக் கண்டு பேசிவிட்டு வந்தது வரையில் உண்மையாக நடந்தது. மற்றதெல்லாம் அவர் அன்று இரவு தூக்கத்தில் கண்ட கனவு தான். ஒன்பது மாத சிறைவாசம் கஷ்டங்களையும் பாவம் ஒரு நாழிகைப் போதில் அவர் அனுபவித்து விட்டார்.

அன்றைய தினம் பாரிஸ்டர் விநாயகத்துக்கு வந்த கடும் ஜுரம் நன்றாய் குணமாவதற்கு இருபது நாள் ஆயிற்று. கொஞ்சம் உடம்பு சரியானதும் அவருடைய மனைவி ''ஜெயிலுக்குப் போக வேண்டுமென்று தலையெழுத்து உள்ளவர்கள் தான் போகிறார்கள். நீங்கள் எதற்காக போக வேண்டும்? இப்படி எல்லாம் எங்களை ஏன் காயப்படுத்த வேண்டும்? விட்டுத் தொலையுங்கள்'' என்று வற்புறுத்திச் சொன்னார். ''அது தான் சரி'' என்று பாரிஸ்டர் விநாயகமும் தீர்மானித்து, தாம் வகித்து வந்த சிறைச்சாலை விஸிட்டர் வேலையை ராஜினாமா செய்தார்.

இவ்வாறு கடைசியில் விநாயகத்துக்கும் விடுதலை கிடைத்தது .