Published:Updated:

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2019

ஆனந்த விகடன் விருதுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனந்த விகடன் விருதுகள்

திறமைக்கு மரியாதை

இலக்கிய விருதுகள்!

பெருந்தமிழர் விருது பொன்னீலன்

“எழுத்தென்பது பொழுதுபோக்கல்ல; வாசகனின் வாழ்க்கையைத் தரமுயர்த்தும் கருவி’’ என்ற கொள்கைதான் பொன்னீலனின் அரை நூற்றாண்டு இலக்கிய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. வரலாற்றுணர்வும் அரசியலும் பிணைந்த பொன்னீலனின் எழுத்து, தென்தமிழகத்தின் இரு நூற்றாண்டு வரலாற்றைச் சுமக்கும் ஆவணம். நாவல், சிறுகதை, கட்டுரை, வாழ்க்கைச் சரிதமென இலக்கியத்தின் எல்லாத் தளங்களிலும் தீவிரமாக இயங்கியுள்ள பொன்னீலனின் மொத்த எழுத்துகளிலும் முன்னிற்கிறது மக்களுக்கான அறம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பொன்னீலன்
பொன்னீலன்

தமிழகத்தை உலுக்கிய மண்டைக்காடு கலவரம், இந்தியாவைப் புரட்டிப்போட்ட எமர்ஜென்சி நெருக்கடி, இந்து - கிறிஸ்தவர் உறவு, தோள்சீலைப் போராட்டம் என வரலாற்றின் வேர் அகழ்ந்து, தன் படைப்புக்கான களம் அமைக்கும் பொன்னீலன் பொதுவுடைமைச் சிந்தனையாளர்; முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி; தீவிரமான களச்செயற்பாட்டாளர்.

கலை இலக்கியப் பெருமன்றத்தின் துணைகொண்டு கிராமம் நகரமென அலைந்து இலக்கியத்தையும் இடதுசாரிய சிந்தனைகளையும் விதைத்தவர். அவரது வீரியமிக்க மேடைப்பேச்சுகளில், வழிகாட்டுதலில் தெளிவுற்று உருவான பல முற்போக்கு முகங்கள், இன்றைய தமிழ் இலக்கியத்தின் அடையாளங்களாக உருவெடுத்திருக்கிறார்கள். மீனவர்களின் வாழ்க்கைத் துயரங்களைப் பேசும் ‘தேடல்’, எமர்ஜென்சி காலக் கொடுமைகளை விவரிக்கும் ‘புதிய தரிசனங்கள்’, மண்டைக்காடு கலவரத்தின் பின்புலங்களை அலசும் ‘மறுபக்கம்’ எனப் பொன்னீலன் எழுதியுள்ள நாவல்கள் அனைத்தும் காலத்தின் பதிவுகள். சாகித்ய அகாடமி முதல் தமிழக அரசு விருதுகள் வரை இவருடைய எழுத்துகளைக் கௌரவித்துள்ளன. தான் சேகரித்த அறிவை எழுத்தாக, பேச்சாக, செயல்பாடாகத் தமிழகத்துக்குப் பரிமாறிக்கொண்டிருக்கும் பெருந்தமிழர் இவர்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சிறந்த நாவல் - சுளுந்தீ இரா.முத்துநாகு ஆதி பதிப்பகம்

அறியப்பட்ட வரலாறுகளுக்கு அப்பால் உள்ள மாற்று வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு புனைவுகள் அதிகம் எழுதப்படும் காலம் இது. அப்படியான ஒரு வரலாற்றுக் குரலே இரா.முத்துநாகுவின் சுளுந்தீ. தமிழர்களின் தனித்துவமான மரபு மருத்துவத்தினைத் தன்வசம்கொண்டிருந்த ஒரு சமூகம், எப்படி சாதியப் படிநிலைகளில் கீழிறக்கப்பட்டுப் பின்னுக்குத் தள்ளப்பட்டது என்பதைக் கூர்மையான விவரிப்பில் எளிய மொழியில் பேசுகிறார் முத்துநாகு.

சுளுந்தீ இரா.முத்துநாகு ஆதி பதிப்பகம்
சுளுந்தீ இரா.முத்துநாகு ஆதி பதிப்பகம்

தன் சாதிய அடையாளங்களை உதற முடியாத ராம பண்டுவனும் அவனுள் திமிரும் போராட்ட எண்ணங்களின் வடிவமாக வளரும் அவரின் மகன் மாடனும் கதைவெளியில் ஒரு நூற்றாண்டின் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மனிதர்களைப் பிரதி செய்கிறார்கள். அவர்களின் போராட்ட வாழ்வை மிகவும் நுட்பமாகச் சித்திரிக்கிறது சுளுந்தீ. 300 ஆண்டுகளுக்கு முன்பான தமிழ்ச் சமூக வாழ்விலிருந்து, இதுவரை புனைவுலகில் பேசப்படாத ஒரு களத்தை முன்வைத்துப் பேசிய வகையில் தமிழ் இலக்கியத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது இந்த நாவல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2019

சிறந்த சிறுகதைத் தொகுப்பு - பஷீரிஸ்ட் கீரனூர் ஜாகிர்ராஜா உயிர்மை பதிப்பகம்

தமிழகத்தின் வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழும் மனிதர்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் மகிழ்ச்சிகள், சிக்கல்கள், தோல்விகள், போராட்டங்கள், நம்பிக்கைகளையும் சுவாரஸ்யமான மொழியில் கதைகளாக்கியிருக்கிறார் கீரனூர் ஜாகிர்ராஜா.

பஷீரிஸ்ட் கீரனூர் ஜாகிர்ராஜா உயிர்மை பதிப்பகம்
பஷீரிஸ்ட் கீரனூர் ஜாகிர்ராஜா உயிர்மை பதிப்பகம்

சொல்முறையில், கதாபாத்திர வார்ப்பில், அனுபவங்களை, கருத்துகளை முன்வைப்பதில், சரி - தவறு என இருமைகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் எழுதிச் சென்றிருக்கிறார். `` எனக்கான அரசியல் என் கதைகளில் மர்மமான முறையில் ஊடுருவியுள்ளது’’ என்கிறார் ஜாகிர்ராஜா. ‘சிதைந்த மனம்’ என ஒரு பாத்திரத்திற்குப் பெயர்வைப்பது தொடங்கி, கதை நெடுகிலும் மெல்லிய நகைச்சுவை இழையோடும் விவரிப்பு வாசிப்புச்சுவை கூட்டுகிறது. சக மனிதரின் சிரிப்பில் துளிர்க்கும் கண்ணீரில் நம்பிக்கையின் வண்ணம் குழைக்கிறார் பஷீரிஸ்ட்!

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2019

சிறந்த கவிதைத் தொகுப்பு - அஞர் சேரன் காலச்சுவடு பதிப்பகம்

‘காலற்றவளின் / ஒரு கையில் குழந்தை / மறுகையில் கணவனின் துண்டிக்கப்பட்ட தலை / தொடைகளுக்கு இடையில் / வன்புணரும் படையாளின் துர்க்கனவு’ என வரிகளில் வலி கடத்தும் சேரன், ‘அஞரி’ன் வழியே கோடிக்கணக்கான தமிழர்களின் வாதையைப் பதிவுசெய்திருக்கிறார்.

அஞர் சேரன் காலச்சுவடு பதிப்பகம்
அஞர் சேரன் காலச்சுவடு பதிப்பகம்

லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் வாதைகளை, கோபங்களை, ஆற்றாமைகளை, நினைவுகளைக் கவிதைமொழியாக்கினால் அதுதான் ‘அஞர்.’ 1980-களில் எழுதத் தொடங்கிய சேரனின் பத்தாவது கவிதைத் தொகுப்பு இது. போரின் துயரை முன்வைத்து வாழ்வின் மீதான வேட்கையை அதிகரிக்கச் செய்கின்றன இக்கவிதைகள். `நெஞ்சே நினை. நினைவிலிக்கு வாழ்வில்லை’ என ஈழப் போர் இழப்புகளின் சாட்சியமாய் உலகின்முன் வைக்கப்பட்டிருக்கும் அஞர் கவிதைகள் தனித்துவமானவை!

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2019

சிறந்த கட்டுரைத் தொகுப்பு - நீர் எழுத்து நக்கீரன் காடோடி பதிப்பகம்

சூழலியலை வரலாற்றோடு, நடைமுறை அரசியலோடு, பண்பாட்டுப் பின்னணிகளோடு இணைத்துப் பேசும் நுட்பமான எழுத்துமுறையை முன்னெடுத்துச் செல்பவர் நக்கீரன். ‘நீர் எழுத்து’ எனும் நூல் வழியாக அவர் முன்வைத்திருப்பது தமிழ்ச் சமூகத்தின் ஈராயிரமாண்டுக்கால நீர் வரலாறு; எதிர்காலம் குறித்த எச்சரிக்கை. நீர் என்பது மனித வரலாற்றில் எவ்வளவு பெரிய காரணியாக, அதிகாரமாக, வளமாக, பிரச்னையாக மாறியிருக்கிறது என்பதை ஆழமாக விவரிக்கிறது நூல்.

நீர் எழுத்து நக்கீரன் காடோடி பதிப்பகம்
நீர் எழுத்து நக்கீரன் காடோடி பதிப்பகம்

சங்க இலக்கியம் தொட்டு சர்வதேச ஆவணங்கள் வரை ஏராளமான தரவுகள் ஆச்சர்யப்படுத்துகின்றன. மாணவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை அனைவருக்குமான எளியமொழி, கதைசொல்லும் பாணி இந்நூலின் தனிச்சிறப்பு. களப்பணி தேடல் என நூலின் பின்னுள்ள உழைப்பு மதிக்கத்தக்கது. இந்த ‘நீர் எழுத்து’ பரவிப் பாய வேண்டியது காலத்தின் அவசியம்!

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2019

சிறந்த சிறுவர் இலக்கியம் ஒற்றைச் சிறகு ஓவியா - விஷ்ணுபுரம் சரவணன் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு

சிறுவர்களுக்கான ஒரு ஃபேன்டசி மர்மக் கதைக்குள், தமிழகத்தின் மிக முக்கியமான ஓர் அரசியல் பிரச்னையை மிக லாகவமாகப் பின்னியிருக்கிறார் சரவணன். கதையில் தொனிக்கும் பல்வேறு கேள்விகளும் அச்சமும் விழிப்புணர்வும் இக்கதையை வாசிக்கும் சிறார்கள் மனதில் மிக ஆழமாக இறங்கும்.

விஷ்ணுபுரம் சரவணன்
விஷ்ணுபுரம் சரவணன்

அதுவே ஒற்றைச் சிறகு ஓவியாவின் முக்கியமான வெற்றி. கனவுகளுக்குள் சென்று ரகசியங்களைத் தேடுவது, மண்புழுத் தடங்களைக் கொண்டு வரைபடம் உருவாவது, ஒலியிலிருந்து வாசனை எழுவது என, சிறார் உலகில் இவர் வண்ணம் தீட்டும் விதம் அலாதியானது. இயற்கைச் சுரண்டல், சூழல் மாசு எனப் பெரியவர்களே புரிந்துகொள்ளச் சிரமப்படும் அடிப்படை அரசியலைக் குழந்தைகளின் மொழியில், அவர்களின் எளிய புரிதலுக்கேற்ப எழுதிய விதத்துக்காகவே சரவணனையும் அவரது ஓவியாவையும் கொண்டாடலாம்!

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2019

சிறந்த நாவல் (மொழிபெயர்ப்பு)  - தீக்கொன்றை மலரும் பருவம் அபுபக்கர் ஆடம் இப்ராஹிம் தமிழாக்கம்: லதா அருணாச்சலம் எழுத்து பிரசுரம்

ரு நிலத்தின் வாழ்வியலை, பண்பாட்டை மற்றொரு பரப்புக்குக் கடத்துவதே மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் முக்கியப்பணி. அந்தப் பணியை நேர்த்தியாகச் செய்திருக்கிறது ‘தீக்கொன்றை மலரும் பருவம்.’

லதா அருணாச்சலம்
லதா அருணாச்சலம்

நைஜீரியாவின் உள்நாட்டுப் போர் பற்றிய விரிவான பின்புலத்தில், பெண்ணுக்கும் ஆணுக்குமான உறவில் பிரவாகமெடுக்கும் மென் உணர்வுகளை விவரித்துச் செல்கிறது நாவல். ஒரு நாகரிகச் சமூகத்துக்கு இழிவு தரும் பழைமைவாதங்களை, கட்டுப்பாடுகளைத் தர்க்க வேண்டிய அவசியத்தைப் பேசுகிறது. அபுபக்கர் ஆடம் இப்ராஹிமின் இந்நாவல், ஆப்பிரிக்க இலக்கியத்தின் உயரிய விருதைப் பெற்றது. அதன் செம்மை குறையாமல் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார் லதா அருணாச்சலம். மானுடப் பொதுவுணர்வின் மீதான விரிவான விசாரணையாக உயர்ந்து எழுகிறது நாவல்!

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2019

சிறந்த சிறுகதைத் தொகுப்பு (மொழிபெயர்ப்பு) சுழலும் சக்கரங்கள் ரியுனொசுகே அகுதாகவா தமிழாக்கம்: கே கணேஷ்ராம் நூல்வனம் பதிப்பகம்

வீன ஜப்பானியப் புனைவெழுத்தின் மிகச்சிறந்த ஆளுமை ரியுனொசுகே அகுதாகவா. அவரது பரிசோதனை முயற்சிகள் என்று சொல்லத்தக்க வெவ்வேறு பேசுபொருள்கள், வடிவங்களிலான கதைகளின் தொகுப்பு இது.

கே கணேஷ்ராம்
கே கணேஷ்ராம்

புனைவில் தொடங்கி மிகுபுனைவில் முடிவது, கதைகளுக்குள் சம்பவங்களைக் கலைத்துப்போட்டுச் சொல்வது என வாழ்வு முன்வைக்கும் சந்தர்ப்பங்களை சுவாரஸ்யமாய்ச் சொல்கிறார் அகுதாகவா. ஜப்பானின் உயரிய இலக்கிய விருது அகுதாகவாவின் பெயரில்தான் வழங்கப்படுகிறது. அத்தகைய மேன்மை பொருந்திய முன்னோடியின் சிறுகதைகளைத் தமிழுக்குக் கொண்டுவந்ததில் கவனம் ஈர்க்கிறார் கணேஷ்ராம்.

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2019

சிறந்த கவிதைத் தொகுப்பு (மொழிபெயர்ப்பு) கறுப்பு உடம்பு தமிழாக்கம்: அனுராதா ஆனந்த் சால்ட் பதிப்பகம்

மகால உலகக் கவிதைகளின் குரல் என்னவாக ஒலிக்கிறது என்பதை மிக அழுத்தமாகத் தமிழில் முன்வைக்கிறது ‘கறுப்பு உடம்பு.’ போர் குறித்த கவிதைகளில், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் எதிர்கொள்ளும் வன்முறையைக் காத்திரமாகவும் நுட்பமாகவும் பதிவுசெய்கின்றன கவிதைகள்.

அனுராதா ஆனந்த்
அனுராதா ஆனந்த்

கொரிய, கனடிய, அமெரிக்கக் கவிஞர்கள், புலம்பெயர் கவிஞர்கள் என மாறுபட்ட குரல்களின் தொகுப்பாக உருவாகியிருக்கிறது நூல். கவிதை குறித்து ‘ஒவ்வொரு மனிதனுக்கும் புரட்சிக்கு / துரோகம் இழைக்க ஒரு வழி தெரிந்திருக்கிறது / இது என் வழி...’ என்கிறார் இத்தொகுப்பிலுள்ள கவிஞரான லியோனார்ட் கோஹன். எளிய மொழியில் ஆங்கிலத்திலிருந்து அதன் அழகியலும் கவிநுட்பமும் குறையாமல் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது கறுப்பு உடம்பு!

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2019

சிறந்த கட்டுரைத் தொகுப்பு (மொழிபெயர்ப்பு) நாகரிகங்களின் மோதல் சாமுவேல் பி.ஹண்டிங்டன் தமிழாக்கம்: க.பூரணச்சந்திரன் அடையாளம் பதிப்பகம்

லக வரலாற்றை நாகரிகங்களினூடாகப் பார்க்க முயலும் ஒரு புத்தகம். குறிப்பாக சோவியத் யூனியன் உடைந்ததற்குப் பிறகு, அமெரிக்கா - ரஷ்யாவுக்கு இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்த சூழலில், 90களுக்குப் பிறகான உலக நிகழ்வுகள் குறித்து இந்தப் புத்தகம் விரிவாக ஆராய்கிறது.

க.பூரணச்சந்திரன்
க.பூரணச்சந்திரன்

மேற்கத்திய நாகரிகம், இஸ்லாமிய நாகரிகம், ஆசிய நாகரிகம், ஆப்பிரிக்க நாகரிகம் ஆகியவை உருவான வரலாறு, அவற்றுக்கிடையிலான உறவும் முரணும், அது எப்படிச் சமகால நிகழ்வுகளை பாதிக்கிறது என்பதை உதாரணங்களுடனும் புதிய பார்வைகளுடனும் விவரிக்கிறார் நூலாசிரியர் சாமுவேல் பி.ஹண்டிங்டன். செப்டம்பர் 11, இரட்டைக்கோபுரத் தகர்ப்பின்போது, இந்தப் புத்தகம் குறித்து உலகம் முழுவதும் பேசப்பட்டது. தமிழுக்கு இந்தப் புத்தகம் வந்திருப்பது முக்கியமான தருணம். மூலப்புத்தகத்தின் சாரம் குறையாமல் சுவாரஸ்யமான நடையில் மொழிபெயர்த்திருக்கிறார் க.பூரணச்சந்திரன்!

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2019

சிறந்த சிற்றிதழ் படச்சுருள்

சினிமா என்பது பொழுதுபோக்கு வடிவம் மட்டுமல்ல; அது சமூகத்தின்மீது உண்டாக்கும் தாக்கங்கள், சினிமாவுக்குப் பின்னுள்ள அரசியல், தத்துவம், அழகியல் நுட்பங்கள் என சினிமாவை வெவ்வேறு கோணங்களில் அணுகுகிற வித்தியாச முயற்சி படச்சுருள்.

சிறந்த சிற்றிதழ்
 படச்சுருள்
சிறந்த சிற்றிதழ் படச்சுருள்

தமிழில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த முழுமையான ஆழமான விமர்சனங்கள், விவாதங்கள் தொடங்கி உலக சினிமாப் போக்குகள், அவற்றின் அரசியல், பேராளுமைகளின் நேர்காணல்கள் என எளிமையும் தீவிரமுமான முகம்கொண்டது படச்சுருள். ஆளுமைகளை, கருத்தியலை, மிகச்சிறந்த படங்களை முன்வைத்துக் கொண்டுவரப்பட்ட சிறப்பிதழ்கள் தமிழ் சினிமா உலகின் முக்கிய ஆவணங்கள். சினிமா எனும் கலையை அக்கறையோடு உளமாரக் கொண்டாடும் ‘படச்சுருள்’ தமிழின் முக்கியமான சிற்றிதழ். தொடர்ந்து உற்சாகத்தோடும் போராட்டங்களோடும் படச்சுருளைக் கொண்டுவரும் அருண்.மோ பாராட்டுக்குரியவர்!

ஊடக விருதுகள்!

சிறந்த டிவி நிகழ்ச்சி தமிழா தமிழா (ஜீ தமிழ்)

டாக் ஷோ எனப்படும் பேச்சரங்க வெளியில் புது டிரெண்டைத் தொடங்கிவைத்தது தமிழா தமிழா. விவாதிக்க எடுத்துக்கொள்ளும் தலைப்புகள் கவனம் ஈர்த்தன. ‘தோலின் நிறம்தான் அழகைத் தீர்மானிக்கிறதா?’, ‘பிராந்திய மொழிகளைவிட மேலானதா இந்தி?’ எனப் பொதுச்சமூகத்தின் முன் தொடர்ந்து கேள்விகளை எழுப்புகிறது இந்த நிகழ்ச்சி.

சிறந்த டிவி நிகழ்ச்சி  தமிழா தமிழா
சிறந்த டிவி நிகழ்ச்சி தமிழா தமிழா

எதிரெதிர் துருவங்களாக விவாதிப்பவர்கள் இடையே ஒரு புரிந்துணர்வை உருவாக்க மெனக்கெடும் கரு.பழனியப்பனின் அக்கறை பாராட்டுக்குரியது. கருத்துச்சுதந்திரம் கேள்விக்குள்ளாகும் இன்றைய சூழலில் பல்வேறு கருத்துகளுக்குக் களம் அமைத்துக் கொடுப்பது காலப்பொருத்தம். ஓராண்டிற்குள் டிவி, சோஷியல் மீடியா என சகல தளங்களிலும் ஹிட் அடித்து முத்திரை பதித்து, தனக்கென ஒரு தனித்துவமான ஸ்டைலை உருவாக்கியிருக்கிறது ‘தமிழா தமிழா’.

சிறந்த நெடுந்தொடர் நாயகி (சன் டிவி)

ரவு 8 மணிக்கு அலாரம் அடித்ததுபோல் தமிழ்க் குடும்பங்கள் டிவியின் முன்னால் உட்கார்ந்திருக்கும். காரணம் ‘நாயகி.’ 500 எபிசோடுகளைக் கடந்து மெகா சீரியல்களின் மெகா ஸ்டாராகக் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. மாதர் அனைவரும் தத்தமது வரையறையின்படி நாயகிகளே என்பதை உணர்த்தும் டைட்டில் தொடங்கி வழக்கமான சீரியல் சாயல் உடைத்து கதாபாத்திரங்களை கனமாகப் படைத்தது வரை தனித்து நிற்கிறாள் ‘நாயகி.’

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2019

டிவி முன் இருந்த குடும்பங்களை யூடியூப் வரை இழுத்துவந்ததில் நாயகிக்கு மிகப்பெரிய பங்குண்டு. காலத்திற்கேற்ப புது முயற்சிகளையும் உள்ளே புகுத்துகிறார்கள். சினிமாவைப் போல, ‘ஐந்தாண்டுகளுக்குப் பிறகு’ எனக் கதையைச் சட்டென ஃபார்வேர்டில் நகர்த்தும் பரீட்சார்த்த முயற்சி இந்நெடுந்தொடர் குழுவின் தைரியம். பரபரப்பான கதையமைப்பும் வித்தியாச முயற்சிகளாலும் ‘நாயகி’ வீட்டுத்திரையின் நாயகியாகிறாள்.

சிறந்த நெடுந்தொடர் ரோஜா (சன் டி.வி)

திய நேர சீரியல், ப்ரைம் டைம் சீரியல் ஆனதில் இருக்கிறது ‘ரோஜா’வின் அசுர வளர்ச்சி. 50 எபிசோடுகள் வரை ஆஃப் ஸ்பீடில் போய்க்கொண்டிருந்த ‘ரோஜா’ மெகா தொடரில் அடுத்தடுத்து நிகழ்ந்த திருப்பங்கள் விறுவிறுப்பைக் கூட்ட, டிஆர்பி எகிறியது.

ரோஜா - சன் டி.வி
ரோஜா - சன் டி.வி

ஆள்மாறாட்டம், அக்ரிமென்ட் திருமணம் என, திருப்பங்களுக்காக இந்தக் குழு எடுத்துக்கொள்ளும் கருக்களும் கவனிக்க வைக்கின்றன. சீரியல் வரலாற்றின் சூப்பர் சீனியர்கள் தொடங்கி புதுமுகங்கள் வரை கலந்துகட்டி விருந்து வைப்பதால் அயர்ச்சியே உண்டாக்காமல் செம ஸ்பீடாகச் செல்கிறது சீரியல். குடும்பப்பாங்கும் ரொமான்டிக்கான காதல் உணர்வுகளும் கொண்டு மணம் வீசுகிறது இந்த ‘ரோஜா.’

சிறந்த சின்னத்திரை தொகுப்பாளர் பிரியங்கா (விஜய் டிவி)

சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் இப்போதைய சூப்பர்ஸ்டார் பிரியங்காதான். இசை தவழும் சூப்பர் சிங்கருக்குக் கலகலப்பூட்டிய காமெடி லேடி.

பிரியங்கா
பிரியங்கா

எந்த ஈகோவுக்கும் இடம்தராமல் சக தொகுப்பாளர் தொடங்கி பங்கேற்கும் போட்டியாளர்கள் வரை எல்லாரும் தன்னைக் கலாய்க்க இடம்தரும் முதிர்ச்சி முத்திரை. சமயங்களில் ‘இதெல்லாம் சும்மா, நானே என்னை இதைவிட சூப்பரா கலாய்ச்சுப்பேன்’ என சுயபகடி செய்துகொள்ளும் கோல்டன் குணம் பிரியங்கா ஸ்பெஷல். கலாய்ப்பது மட்டுமல்ல, பங்கேற்பாளர்களின் கண்ணீரில் பங்கெடுப்பதிலும் முதல் ஆள் பிரியங்காதான். ‘தி வால்’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்காக நெகிழ்ந்து உடைந்து அழும் நேர்மையும் குழந்தைத்தனமும் பிரியங்காவை எல்லாரோடும் நெருக்கமாக்குகின்றன.

சிறந்த பண்பலை சூரியன் எஃப்.எம்

இளமையான ஆர்ஜேக்கள், புதுமையான நிகழ்ச்சிகள் என ரேடியோ தாண்டிக் களத்திலும் கலக்கும் சூரியன் எஃப்.எம்மைத்தான் தமிழர்கள் கேட்கிறார்கள்... கேட்கிறார்கள்... கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் சேனல்கள் என்பது சூரியனின் ப்ளஸ்.

சூரியன் எஃப்.எம்
சூரியன் எஃப்.எம்

அதே சமயம் அந்தந்த ஊருக்கேற்ற நிகழ்ச்சிகளைத் தயாரிப்பது கூடுதல் ப்ளஸ். ஒலிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் வெரைட்டி கூட்டுகின்றன. ஒருநாள் ஆர்ஜே போன்ற முயற்சிகள் திறமை வாய்ந்த இளைஞர்களை ரேடியோ பக்கம் இழுக்கின்றன. பாடல்கள் மட்டுமன்றி, குட்டிக் குட்டியாக லந்தடிக்கும் மினி பைட்ஸ் சூரியனின் சிக்னேச்சர் சிக்ஸர். இந்திய அளவில் எடுக்கப்பட்டும் அனைத்து சர்வேக்களிலும் 93.5 எடுப்பது நூற்றுக்கு நூறுதான். இந்த வயசு, அந்த வயசு என இல்லாமல் எல்லா ஏரியாவிலும் சொல்லியடிக்கும் கில்லி சூரியன் எஃப்.எம்தான் இந்த ஆண்டின் தமிழர்கள் சாய்ஸ்.

சிறந்த பண்பலைத் தொகுப்பாளர் பரத் (ரேடியோ சிட்டி)

90ஸ் கிட்களின் ஃபேவரைட் ஆர்ஜே பரத். காலை நேர எனர்ஜியை ‘டபுள் ஸ்ட்ராங்’ ஆக்கும் இந்த மதுரைப்பையன், ரேடியோ சிட்டி சென்னையின் ஸ்டார். இசை வெளியீட்டுக்காக வரும் சினிமா டீமோ, எக்ஸாம் எழுதப் போகும் மாணவர்கள் கேங்கோ...

பரத்
பரத்

பரத் ஸ்டூடியோவுக்கு யார் வந்தாலும் பரத்தின் கலாய்களில் இருந்து தப்ப முடியாது. லந்து மட்டுமே பரத்தின் அடையாளம் இல்லை. இந்த ஆண்டு முழுவதும் சென்னையைச் சுத்தமாக்கிய முக்கியக் கரங்களும் பரத்துடையவை. எந்த ஏரியாவில் என்ன பிரச்னையென இவரிடம் சொல்லிவிட்டால் போதும். அதை உரிய துறையின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதுடன் அது முழுமையாக நடப்பதை உறுதிசெய்து அப்டேட் செய்யும் பரத், 2019-ல் சென்னை எஃப்.எம் நேயர்களின் டாப் சாய்ஸ்.

சிறந்த பண்பலைத் தொகுப்பாளினி டொஷிலா (ஹலோ எப்.எம்)

அழகுத் தமிழ் இவரின் அடையாளம். ‘சொல்ல மறந்த கதை’களுடன் சுகமாக நேயர்களைக் கட்டிப்போடும் ஹலோ எப்.எம்மின் கவிதைக்கார தொகுப்பாளினி. பண்பலையில் தன் பயணத்தைத் தொடங்கி தொலைக்காட்சி, திரைப்பட இசை வெளியீட்டு விழாக்கள் என 360 டிகிரி ரவுண்ட் அடித்த டொஷிலா, இப்போது ‘ரேடியோ சரணம் கச்சாமி’ என முடிவெடித்திருக்கிறார்.

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2019

பெண்களுக்கு எதிரான பொதுப் பிரச்னைகளை அலசுவதும் அதற்கான தீர்வுகள் நோக்கி நகர்வதும் டொஷிலாவின் ஸ்பெஷல். இந்த ஆண்டு பொள்ளாச்சி முதல் தெலங்கானா பாலியல் படுகொலைவரை பெண்களுக்கு எதிரான அனைத்துப் பிரச்னைகளின் அடிப்படை காரணங்கள் குறித்தும் நேயர்களிடம் அழுத்தமாய் உரையாடியிருக்கிறார். டொஷிலாவின் குறும்புச் சிரிப்பும், அசராத பொறுமையும், அர்த்தமான புத்திசாலித்தனமும் அவரது பலங்கள்.