Published:Updated:

``அக்காவை கொல பண்ணமாட்டானுங்க ப்ரோ... ஏன்னா?!''- அநீதி ஆந்தாலஜி கதைகள் - 3

அநீதி ஆந்தாலஜி கதைகள் - 3
அநீதி ஆந்தாலஜி கதைகள் - 3

இந்தக் கதைகள் சிலருக்குப் பிடிக்கும்... சிலருக்குக் கசக்கும்... சிலருக்குக் கோபத்தை உண்டாக்கும். இவை அநீதி ஆந்தாலஜி கதைகள். அதனால் கொந்தளிப்புகள் வேண்டாம்... Just sit Back and Read... Be Cool!

தங்கராசு

அந்த ஆண் குழந்தை பிறந்தபோது, சூடாமணி பைப்படியில் அம்மணமக்கட்டையாக பைப் தண்ணியைப் பீய்ச்சி விளையாடிக்கொண்டிருந்தாள்.

அந்த ஆண் குழந்தைக்கு தங்கராஜ் என்று பெயர் வைத்தபோது, பாவாடை கட்டி விட்டிருந்தார்கள். சூடாமணி வயதுக்கு வந்தபோது தங்கராஜ் கோலி குண்டு ஆடிக்கொண்டிருந்தான்.

தங்கராஜ் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தபோது, சூடாமணிக்கு பெண் பார்க்க வந்தார்கள்.

“பொண்ணு டிகிரி படிச்சிருக்கு. வீடு அது நிர்வாகம்தான். எங்க வீட்டு லட்சுமி.”

காய்ந்து மொரமொரப்பான ஜாங்கிரி, காராசேவு இன்ன பிற ஐட்டங்களோடு 'குட் டே' பிஸ்கெட் பாக்கெட் கிழிந்து மூன்று பிஸ்கெட்டுகள் வெளியே சாய்ந்து நடப்பனவற்றை ஒற்றைக் காதுகளால் கேட்டுக்கொண்டிருந்தன.

“மாப்ள, ஃபைனான்ஸு. 40 ரூவா கிட்ட ரொட்டேஷன்ல போய்ட்டு இருக்கு. நெல பொலம், தோப்பு தொறவு எல்லாம் உங்களுக்கு தெரியாதது இல்ல.''

“பொண்ணுக்கு 50 பவுன் நகை போட்டுடறோம். 10 ரூவா குடுத்துடறோம்.”

“நீங்க போட்ற நகை உங்க பொண்ணுக்கு. குண்டு மணி அளவு கூட நாங்க தொட மாட்டோம். 10 ரூவாவ வச்சி இந்தக் காலத்துல என்ன பண்றது?''

“அப்புறமா சொத்து பிரிக்கையில, கொஞ்சம் வரும். அப்ப வாங்கிக்கிங்க. ஒரே தம்பிதான்.''

“தம்பி என்னா பண்றாரு, ஆளைக் காணோம்!''

“தம்பி டிகிரி படிச்சிட்டு இருக்காரு. இன்ஜினியரிங்கு. இன்னிக்கி என்னமோ இன்டர்வெல்லாம்... அதாம் வர முடியலை.''

தங்கராஜ் பீர் அடித்துக்கொண்டிருந்தான். காலேஜ் போகவில்லை. உடனிருந்த நண்பன் அழுதுகொண்டிருந்தான். காதல் நிராகரிப்பு. அவனைத் தேற்றிக் கொண்டிருந்தான் தங்கராஜ்.

“சரி ஒரு 20 ரூவா குடுத்துடுங்க. அப்பதான் கட்டிகிட்டு வந்ததுக்கு அப்புறம் பிசினஸ் உசரத்துக்குப் போச்சின்னு ஒரு பேரு இருக்கும் ஊர்ல.“

நிச்சயதார்த்தத்தின்போது சூடாமணியை கட்டிக்கப்போறவனைப் பார்த்தான் தங்கராஜ். பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. சூடாமணி, முதலிரவில் அழுதுகொண்டிருந்தபோது, தங்கராஜ் மரண போதையில் மல்லாக்கக் கிடந்தான்.

சூடாமணி புகுந்த வீட்டில் கணவனிடம் அடி வாங்கிக்கொண்டு கிடந்தபோது, ஒருத்தியிடம் 5,000 ரூபாய் பணத்தை இழந்து விட்டு வெறியுடன் புரண்டுகொண்டிருந்தான் தங்கராஜ்.

வாழ முடியாமல் அம்மா வீட்டுக்கு வந்த சூடாமணியை திரும்ப கொண்டுபோய் விட்டு வரும் வேலை வந்தபோது, எரிச்சலுடன் கிளம்பிய தங்கராஜ், ஊர்போய்ச் சேரும் வரை சூடாமணியுடன் பெரிதாக ஏதும் பேசவில்லை.

மச்சானுடன் சரக்கு அடித்துவிட்டு கடைசி பஸ் பிடித்தான் தங்கராஜ். அன்றிரவு சூடாமணி மிதி வாங்கிக்கொண்டு கிடக்கையில், ஒதுக்குப்புறமாக இருந்த குடிசையின் வேலியைப் பிரித்துக்கொண்டிருந்தான்.

அக்கா வீட்டை விட்டு ஓடிட்டா என்ற தகவல் கிடைத்ததும் உடனே காலேஜ் லீவ் போட்டு விட்டு ஊருக்கு ஓடி வந்தான். நாட்கள் பல கடந்தும் அக்காவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் கல்லூரி திரும்பவில்லை. வேறொரு ஊரில் இன்னொருவனுடன் சூடாமணி இருக்கிறாள் என்ற தகவல் கிடைத்ததும், உறவினர்களுடன் பேசினான் தங்கராஜ்.

சூடாமணி சேகரை மடியில் போட்டுக்கொண்டு, குனிந்து முத்தமிடுகையில், தங்கராஜ் கூலிப்படையினரைச் சந்தித்தான்.

சூடாமணி எங்கே இருக்கிறாள் என்று இப்போதும் தெரியாது. ஆனால், இப்போது ஜெயிலில் இருக்கிறான் தங்கராஜ்.

ஒயிட் காலர் குற்றத்தில் உள்ளே வந்த மிதுனுடன் ஏனோ சின்னதாக நட்புறவு. மிதுனுடன், தங்கராஜ் பகிர்ந்து கொண்டவற்றில் கொஞ்சம்.

அநீதி ஆந்தாலஜி கதைகள் - 3
அநீதி ஆந்தாலஜி கதைகள் - 3

“கொன்னுடலாம்னு முடிவாச்சி. ஏ1 நானு. இன்னும் ஏழெட்டு பேரு பெரியப்பா பையன், மாமன், மச்சான்னு சரண்டர் ஆக ரெடி பண்ணோம். முடிச்சி வுட்றதுக்கு ஆளுங்களைப் புடிச்சோம். வேலையை பக்காவா முடிச்சிட்டு போய்டுவாங்க. பணம் குடுத்துட்டா போதும். ஆனா நாங்க போய் சரண்டர் ஆகணும்.''

தங்கராஜ் தான் போய் அக்கா வீட்டுக் கதவைத் தட்டினான். “அக்கா, அக்கா, நான்தான்... தங்கராஜ்”. பின்னிரவு... அன்பைப் பரிமாறி ஆனந்தக் களைப்பில் அக்கா.

“அக்கா, நான்தான் கதவைத் தொற!''

''தங்கராசா... தங்கராசூ'' எனக் கேட்டுக்கொண்டே அக்கா கதவைத் திறக்க, அக்காவுக்கு நேரமே கொடுக்காமல் அக்காவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்ற தங்கராசு, “உள்ள வாங்க'' என குரல் கொடுக்க, திமுதிமுவென நான்கைந்து பேர் உள்ளே நுழைந்தனர். அனைவர் வாயிலும் புளித்த நெடி. அனைவரும் உள்ளே வந்ததும் கதவைச் சாத்தினான் தங்கராசு.

“என்னடா தம்பி இதெல்லாம்...'' மூலையில் தள்ளினான் அக்காவை.

அண்டர்வேருடன் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து திகிலடித்துப் போயிருந்த சேகரைப் பார்த்ததும் ரௌத்திரம் ஆனான் தங்கராசு.

“அவனை ஒடனே பொலி போடுங்கடா!'' எனக் கத்தினான்.

மெதுவாக பெரிய பெரிய அறுவாவை எடுத்த ஆட்கள் நிதானமாக முன்னேறினார்கள். பாய்ந்து சென்ற அக்கா, சேகர் முன்னால் விழுந்து ''அய்யய்யோ அய்யய்யோ'' என தலையில் அடித்துக்கொண்டு கத்த, ஒரு ஆள் அக்கா செவுளில் விட்டு முடியைப் பிடித்து வாயை அமுக்கி இழுத்துச் சென்றான்.

“மாப்ள பொருளை நல்லா தோள்ள எறக்கு. நெஞ்சு வரிக்கும் எறங்கணும் என்னா?'' என்று சொல்லிக்கொண்டே கண்களைக் காட்ட, திகிலுடனும் பலமற்றும் இருந்த சேகர், பரிதாபமாக எழுந்து ஓட எத்தனிக்க, இன்னொரு ஆள் சேகரைப் பிடித்து கீழே தள்ளி பின் மண்டையில் இரும்பு கம்பியால் அடிக்க, நிலை குலைந்த சேகரின் வலது தோள்பட்டையில் 45 டிகிரி கோணத்தில் இறங்கி மாட்டிக்கொண்டது அந்த அரிவாள்.

“எடுத்து இன்னொரு தடவை போடு. துடிச்சிட்டு இருக்கான் பாரு” தங்கராசு குரலுக்குக் கட்டுப்பட்டு அருவாவை இழுத்தான். மாட்டிக்கொண்டு வர மறுத்தது.

“இடது வலது ஆட்டி இழு மாப்ள!''

“அவனே போய்டுவாண்டா மாப்ள!''

“தம்பி ஆசைப்படறாப்ல!''

எந்த சிக்கலும் இல்லாமல் அவர்கள் வெளியேறினார்கள். சேகர் இறந்ததை உறுதிப் படுத்திக்கொண்டு ஸ்டேஷனில் சரண்டர் ஆனான் தங்கராசு.

“சரி ப்ரோ, அக்கா என்ன ஆச்சி... எங்க இருக்கு?''

“தெரியல ப்ரோ“

“இல்ல, அக்கா கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொன்னா, அவனுங்க மாட்டிப்பானுங்களே. அக்காவை எப்டி வுட்டானுங்க!''

“அவளையும் முடிச்சி வுடணும்றதுதான் என் பிளான். அவனுங்களும் அதான் சொன்னானுங்க. எத்தனை கொலைன்னாலும் ஒரே தண்டனைதான், ஒரே வாக்குதான்னு!”

“அப்புறம்?”

“அம்மாதான் அக்காவை வுட்டுடச் சொல்லிச்சி!''

“அவனுங்க ஒத்துகிட்டானுங்களா?”

“மொதல்ல ஒத்துக்கல. கொஞ்சம் அமெளன்ட் எக்ஸ்ட்ரா கொடுத்தோம். அதுக்கு அப்பறம் நாங்க பார்த்துக்கறோம்னு சொல்லிட்டானுங்க!''

“என்ன பண்ணானுங்க?”

“அவனுங்களே அவளை இழுத்துட்டுப் போயிட்டானுங்க. அப்பதான் கடைசியா பாத்தது!''

“அவனுங்க கூட்டிட்டுப் போய் போட்டுத் தள்ளி இருக்கப் போறானுங்க ப்ரோ!''

“இல்ல, போட மாட்டோம்னு சத்தியம் பண்ணிக் குடுத்திருக்கானுங்க!''

பிரபாகரன்

“எத்தனை தடவை சொல்றேன்... இப்ப எனக்கு கல்யாணம் வேணாம்னு?”

“எத்தனை தடவை கேட்டாலும் காரணம் சொல்றதில்லையேடா!”

“அம்மா ப்ளீஸ்... உனக்குக் காரணம் தெரியாதா... தங்கச்சி இப்படி வீட்ல…”

“யேய், நான் என்ன வாழாவெட்டியாவா இருக்கேன். நான் ஃப்ரீயா இருக்கேண்டா. உனக்கு டிஸ்டர்பன்ஸா இருந்தா சொல்லு, நான் தனியா போய்க்கிறேன்!''

“இந்த எழவுக்குதான் நான் வீட்டுக்கே வர்றதில்லை!”

வெளியே கிளம்பிச் சென்றான் பிரபாகரன். பைக்கை உதைத்து மெயின் ரோடுக்கு வந்தான். டீக்கடைகளில் எல்லாம் கிளாஸ்களை கழுவி கவிழ்த்து வைத்துக்கொண்டிருந்தார்கள். தெரிந்த டீக்கடையில் கேட்டதும், காபி போட்டுத் தருவதாகச் சொன்னான். வெதவெதவென வெளாவிய வெந்நீர் போல காபி வந்தது. ஒரு பக்கெட் காபி கொடுத்திருந்தால் சுகமாகக் குளித்துக்கொண்டே நாவால் நக்கிப் பார்த்திருப்பான் பிரபா. அந்தப் பதத்தில் இருந்தது காபி.

காபி வாயையும், மனசையும் இன்னும் கசப்பாக்கியது.

“இது என்ன பழக்கம்... பேசிட்டிருக்கும் போதே, வெளில போறது?” தங்கைதான் அதட்டினாள்.

தங்கை?

அழகுப் பதுமை. கணவன் வீட்டில் பிடிக்காமல் மனக் கசப்பால் திருமண உறவை முறித்துக்கொண்டு வந்துவிட்டாள். பெயர் முக்கியமல்ல, இருந்தாலும் தங்கை, தங்கச்சி என்று எழுதினால், படிப்பவர்கள் சைட் அடிக்க முடியாது என்பதால் ஸ்வரூபா. அப்பாதான் பெயர் வைத்தார். பிரபாகரன் எப்போதும் கிண்டல் அடிப்பான். எனக்கு மட்டும் பழைய பெயர், இவளுக்கு மட்டும் ஸ்டைலான பெயர் என்று.

அவள் பிறந்ததும், பார்த்த உடனே தோன்றிய பெயர் என்று அப்பா சொல்வார். அப்பா இறந்து விட்டார். தற்கொலை செய்து கொண்டதாகச் சிலர் சொல்வார்கள். ஆனால், அவர் விரும்பிச் செத்ததாகக் குடும்பமே நினைத்துக்கொண்டிருக்கிறது.

ஸ்வரூபாவுக்கு மண வாழ்க்கை முறிந்தாலும், அவள் ஜாலியாகவே இருந்தாள். அவளுக்கு எந்த மனத்தடையும் இல்லை. தற்போதைக்கு எல்லா தடிப்பயலும் மொக்கையாகத் தெரிந்ததால் இன்னும் எவனிடமும் காதலில் விழவில்லை.

லிஃப்டில் உரசியவனிடமும் ''சாரி ப்ரோ மூட் வரலை'' என்று வெளிப்படையாகச் சொல்லக் கூடியவள். ஸ்வரூபா எவ்வளவு சுவாரஸ்யமான ஆளாக இருந்தாலும் இந்தக் கதைக்கு இவள் தேவையில்லை என்பதால், பிரபாகரனின் முதலிரவுக்குள் சென்று விடலாம். ஆனால் கதையெழுதிக்கொண்டிருக்கும்போதே எனக்கே நான் உருவாக்கிய ஸ்வரூபா மேல் லேசாக ஜொள் வந்து விட்டதால் அடுத்த அந்தாலஜி கதைக்குள் இழுத்து வந்துவிடலாம். அவளைப் பற்றி இந்தக் கதையில் இவ்வளவு எழுதயதே விதி மீறல்தான். ரைட்டர்ஸ் இண்டிசிப்ளின் இண்டிபெண்டென்ஸி என இதை எடுத்துக்கொண்டு முதலிரவுக்குள் நுழைந்தால்...

சுமந்தா படுக்கையில் முதுகுக்குத் தலையணைக் கொடுத்து அமர்ந்திருந்தாள். முந்தாணை ஒரு பக்கம் மட்டும் விலகி இருந்தது. அது ஒரு அலட்சியம், அவ்வளவுதான். அந்த ஜாக்கெட்டில் டெய்லர் கைரேகையைத் தவிர வேறெந்த கைரேகையும் இந்தக் கதையில் பதிவாகி இருக்கவில்லை. டெய்லர் என்ற வார்த்தை வந்து விட்டதால் இதைச் சொல்ல வேண்டி இருக்கிறது. டெய்லர் இந்தக் கதையில் பெண்பால். இது குடும்பத்துடன் படிக்க வேண்டிய குதூகலக் கதை என்பதால் மட்டுமல்ல, உண்மையிலேயே டெய்லர் பெண்பால். அவர் கூலி 1,280 ரூபாய்.

ஜாக்கெட்டைப் பார்த்தது போதும் என்பது போல சுமந்தா பேச ஆரம்பித்தாள்.

“சாரிங்க, உங்க கிட்ட ஒண்ணு கேக்கலாமா?”

“கேளும்மா!“

“உங்களுக்கு ஒரு தங்கச்சின்னுதானே சொன்னீங்க?”

''ஆமா''

“உங்களுக்கு ஒரு அக்கா இருக்காங்களாமே!''

பிரபாகரன் முகம் இருண்டது. முகத்தின் தசை நார்கள் சுருங்காமல் இருக்கப் பிரயத்தனப்பட்டான்.

அநீதி ஆந்தாலஜி கதைகள் - 3
அநீதி ஆந்தாலஜி கதைகள் - 3

“இருந்தா… செத்துட்டா!”

“இல்ல, பெங்களூர்ல!”

“அதான், செத்துட்டான்னு சொல்றேன்ல!“

“பிரபா, கல்யாணத்துக்கு முன்னால நாம எல்லாத்தையும் ஃபிராங்க்கா பேசிகிட்டோம். இதை ஏன் சொல்லலை?”

“சுமி பிளீஸ்... அதான் செத்துட்டான்னு…”

“எனக்கு கல்யாணத்துக்கு முன்னமே தெரியும். உங்க ரிலேட்டிவ்ஸ் போன் பண்ணி எங்க வீட்ல சொல்லிட்டாங்க!''

“..............”

“நான்தான் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு அந்த டாபிக்கை ஸ்டாப் பண்ணிட்டேன்!”

“................”

“நீங்க என்கிட்ட சொல்லி இருக்கலாம் பிரபா... அவ்ளோதான் என் எதிர்பார்ப்பு!''

“என்னத்தை சொல்லி இருக்கறது, எங்க அப்பா செத்ததையா, என் தங்கச்சி வாழா வெட்டியா இருக்கறதையா, என்னை எல்லோரும் கிண்டல் பண்றதையா?''

“உங்க அக்காவுக்கு ஒருத்தர் கூட வாழப் பிடிக்கலை அதனால, அவங்க இன்னொருத்தர் கூட வாழ்றாங்க. அவங்களும் இன்னொருத்தரும் விரும்பி உறவு வச்சிக்கறதால உங்கப்பா சாகறாரு. உங்க தங்கச்சி வாழா வெட்டியா இருக்கான்னு சொல்றீங்க. விசித்திரமா இல்லையா?”

“அவளை எங்க குடும்பம் அப்படி வளக்கலை. அவ எங்க குடும்பமே இல்லை!''

“யாரு யாரு கூட உறவு வச்சிக்கிறாங்கன்னு காவல் காப்பதுதான் குடும்ப கலாசாரமா பிரபா?”

“சுமி, நீ எதோ புக்ஸ் எல்லாம் படிப்ப போலயிருக்கு. இல்ல, எதுனா டிவி ஷோ பாப்பியா? இதெல்லாம் உனக்குப் புரியாது. இந்த பெயின் எல்லாம் அனுபவிச்சிப் பார்த்தாதான் புரியும்!''

“சாரி பிரபா... நான் கொஞ்சம் சாஃப்டா சொல்றேன்... எனக்காகக் கேக்கறியா?''

“.........................”

“இப்ப நாம நம்ம அப்பாவுக்குத்தான் பொறந்தோமான்னே நமக்குத் தெரியாது. அம்மாவுக்குத்தான் தெரியும். அதிலயும் சில அம்மாவுக்கேத் தெரியாது. அதாவது லாஜிக்கலா சொல்றேன்.”

“..........................”

“இப்ப உன் தங்கச்சி உன் அப்பாவுக்குத்தான் பொறந்தான்னு நீ உறுதியா சொல்ல முடியுமா?”

பிரபா பார்க்கிறான்.

“நீ உறுதியா சொன்னா அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா?''

“....................................”

“இதுவே இப்டி இருக்கே... அக்கா லைஃப்ல எல்லாம் ஏண்டா காம்ப்ளெக்ஸ் பண்ணிக்கிட்டு?”

“...............................”

“சரி, நமக்கு இப்ப கல்யாணம் ஆயிடிச்சி. அடுத்த நாலு மாசத்துல, எனக்கு உன்ன புடிக்கலைன்னு சொல்றேன். வேறொருத்தனைப் புடிக்கிதுன்னு சொல்றேன். நீ என்ன சொல்லுவ?”

“போடின்னு சொல்லிடுவேன்!''

“ம்ம்… இதான் ரோஷம். சரி, நல்ல விஷயம்தான். உன் பொண்டாட்டியவே போடின்னு சொல்ற ஆளு, அடுத்தவன் பொண்டாட்டி எப்டி போனா என்னா? இன்னும் பச்சையா கேட்டா, உங்க அக்கா யார்கூட ரிலேஷன்ஷிப் வெச்சிக்கணும்னு முடிவுபண்ற அளவுக்கு, அவங்க லைஃப்ல உனக்கு என்ன ஹோல்ட் இருக்கு... நீ உங்க அக்காவுக்கு எதுல அத்தாரிட்டி?”

“..................................”

பிரபாகரன் மூளை வேலை செய்ய ஆரம்பிக்கிறது. வேலை செய்வதைக் கட்டுப்படுத்துகிறான். ஆனால் கட்டுப்படுத்தக் கட்டுப்படுத்தத்தானே அது வேலை செய்யத் தொடங்கும்.

பிரபாகரன் தன் வேட்டி நுனியை முதன் முறையாகப் பார்க்கிறான்.

“சரி, நாம முத விருந்துக்கு உங்க அக்கா வீட்டுக்குப் போறோம்... ஓகேவா?!“

“அத அப்புறம் பாத்துக்கலாம்!“

“ஏன் அப்டி சொல்ற?”

“இல்ல... இப்ப உன் ஜாக்கெட் நல்லாயிருக்கு. அதை ரசிக்கலாம்னு!''

குழந்தைவேல்

குழந்தைவேல் சாஃப்ட்வேர் கம்பெனியில் 6 வருடங்களாக வேலை பார்த்துவந்தான். ஆனால், கோவிட்-19 காரணத்தால் அல்ல, அவன் ஆட்டிட்யூடால் வேலை போயிற்று. ஆறு வருட வேலை அனுபவம், வியாபார அனுபவம் அவனுக்கு எதையும் கற்றுத்தரவில்லை என்பதால், அவன் மாட்டுக்கு மூக்கணாங்கயிறு விற்கும் ஆப் ஒன்றை நிறுவினான். அவன் காதலிதான் அதற்கு ஃப்ரீலான்ஸிங்காக UI டெவலப் செய்து கொடுத்தாள். அவள் டெவலப் செய்த மூக்கணாங்கயிறு UI பிரமாதமாக இருந்தது. மாடு அதைப் பார்த்தால் நிச்சயம் வாங்கிக்கொள்ளும் என்ற அளவில் செம ரகளை.

மாட்டுக்கு முக்காணாங்கயிறு விற்கும் ஆப் என்பது குறியீடுதான் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனால் குறியீட்டைத் தாண்டிய மொக்கை ஆப் அது.

குழந்தைவேலுக்கு அமெரிக்காவில் ஒரு அக்கா இருக்கிறாள். கிரீன் கார்டு. இந்த ட்ரம்ப் எல்லாம் வருவதற்கு முன்பே உள்ள பச்சையான கிரீன் கார்டு.

குழந்தைவேலின் அக்கா பெயர் வளர்மதி. அமெரிக்காவில் வளர் என்றால் பிரபலம்.

அநீதி ஆந்தாலஜி கதைகள் - 3
அநீதி ஆந்தாலஜி கதைகள் - 3

ஒரு டெலிபோன் கான்வர்சேஷன் மூலம் இந்தக் கதையை முடித்து விடலாம்.

குழந்தைவேலுக்கு போன் வருகிறது.

“சொல்லு?”

“டேய்... ஐ ஹேவ் என்டர்ட் இன்ட்டு அ நியூ ரிலேஷன்ஷிப்!“

“கிரேட் டூ நோ... கிரீட்டிங்ஸ் அக்கா!”

“ஹீ இஸ் எ மெரைன் என்தூஸியாஸ்ட்!”

“ஓ கிரேட்!”

“ஐ டோல்ட் அபவுட் யூ டூ”

“நைஸ், கான்ட் வெயிட் டூ மீட் ஹிம்!''

“நீ வாடா, உன்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும்!''

“அக்கா''

“என்னடா”

“லீகல் மேரேஜா?''

“ஏண்டா”

“சும்மா தெரிஞ்சிக்கத்தான்!''

“இல்ல, இப்பதான் பழகிருக்கோம். இனிமேதான் தெரியும்!''

“சரி வளர்... ஹேவ் ஏ கிரேட் டே!''

வளர்மதி இங்கே ஒரு திருமணமாகி விவாகரத்தாகி அமெரிக்கா செல்கிறார். அங்கே ஓரிரு ரிலேஷன்ஷிப்கள் தோல்வியுறுகின்றன.

குழந்தைவேல் இங்கே தன் காதலியிடம் சொல்கின்றான்.

“அக்கா அங்கே லீகலா எவன் கூடயும் கனக்ட் ஆகலைன்னா, சிப்ளிங்ஸை கூப்பிட்டுக்கலாம். அவங்களுக்கும் கிரீன் கார்ட். ஆனா அக்கா அங்கே யாரையாச்சும் லீகலா கட்டிக்கிட்டா எனக்கு செம ஆப்பு!''

அடுத்த கட்டுரைக்கு