சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

குறுங்கதை : 10 - அஞ்சிறைத்தும்பி

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சிறைத்தும்பி

முட்டைக்கோஸ் துப்பாக்கி

“போங்குண்டன்... கப்பிச்சினோ” என்றார் ரிசப்ஷனில் இருந்த அந்தப் பெண்.

‘`போங்குண்டனா, உங்களைத்தான் சார் அந்தப் பொண்ணு அசிங்கப்படுத்துது” என்றான் தாஸ்.

“அது என் பேரைச் சொல்லத் தெரியாமச் சொல்லுது. நீதான் உண்மையிலேயே என்னை அசிங்கப்படுத்துறே” என்றார் பூங்குன்றன்.

பாண்டியன் சிரிக்க, “ரொம்பப் பசிக்குது. இந்த ஊர்ல எங்கேதான் வெஜிடேரியன் ஃபுட் கிடைக்குமோ?” என்றார் பூங்குன்றன்.

“வத்தக்குழம்பும், வடாமுமா? சான்ஸே இல்லை” என்றார் பாண்டியன்.

குறுங்கதை : 10 - அஞ்சிறைத்தும்பி

“நீங்களும் ஏன் சார் கலாய்க்கிறீங்க?” என்று அலுத்துக்கொண்டார் பூங்குன்றன். அது ஜெர்மனியின் தலைநகரம் பெர்லினில் உள்ள ஹோட்டல், ‘மோட்டல் ஒன்.’ சர்வதேசத் தொழில் கருத்தரங்கத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார்கள். கருத்தரங்கத்துக்கு நேரமாகிவிட்டது என்பதால் கப்பிச்சினோவைக் குடித்துவிட்டுக் கிளம்பினார்கள். மூவரில் இளையவன் தாஸ். பூங்குன்றன் சைவம்

என்பதால் நேற்று இரவு வந்து சேர்ந்ததிலிருந்து சைவ உணவைத் தேடி அலுத்துவிட்டார். காபி என்றாலும் கப்பிச்சினோதான் கிடைக்கிறது.

கருத்தரங்கம் நடக்கும் டெலிகாம் சென்டர், ஹோட்டலிலிருந்து நடந்துபோகும் தூரம்தான். கூகுள் மேப்பில் பார்த்தால் மூன்று வலது, இரண்டு இடது சொன்னது. ஏற்கெனவே குளிர். போதாக்குறைக்கு மழைவேறு தூறிக்கொண்டிருந்தது. இன்னர், டிரஸ், அதன்மேல் கோட், கழுத்தில் ஸ்கார்ப், கையில் ‘மோட்டல் ஒன்’ என்று எழுதப்பட்ட குடையுடன், டெலிகாம் சென்டருக்குச் சென்றார்கள்.

விதவிதமான பவர் பாயின்ட் பிரசென்டேஷன்களுடன் அன்றைய முற்பகல் முடிந்து மதிய உணவு. நான்கு மேஜைகளில் விதவிதமான ஜெர்மன் உணவுகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. Sauerbraten, Schweinshaxe, Rinderrouladen , Bratwurst என்று பெயர்களே வாயில் நுழையவில்லை. அத்தனையும் பன்றி இறைச்சியாலும் மாட்டிறைச்சியாலும் செய்யப்பட்டவை என்பதால் பூங்குன்றனின் வாயிலும் நுழையப்போவதில்லை. அங்கேயிருந்த ஒரே ஒரு சைவ உணவு Kartoffelkloesse, உருளைக்கிழங்கால் செய்யப்பட்ட பான் கேக். அதைமட்டுமே சாப்பிட்டுப் பூங்குன்றன் வயிறு நிரம்பவில்லை. தாஸ் எல்லாவகையான இறைச்சியையும் உண்பவன்தான். பீஃப் என்றால் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, வெங்காயம், மசாலா சேர்த்து காரமாகச் சாப்பிடப்பிடிக்கும். அவன் ஊரில் வெண்பன்றி கிடையாது. கறுப்புதான். பன்றி பிடிப்பவர்கள் சைக்கிளின் முன்னாலும் பின் கேரியரிலும் அதன் கால்களைக் கட்டி எடுத்துச்செல்வதைப் பார்த்திருக்கிறான். அப்போது பன்றி கதறும் அலறல் ஊரையே எரிச்சலூட்டும். வார் எனப்படும் பன்றி இறைச்சியின் தோல், தேங்காய்ச்சில்லைப் போலிருக்கும். அதைச் சமைக்க எண்ணெய் தேவையில்லை. பன்றியே கொழுப்புமிருகம்தான். மஞ்சள், மசாலா தடவி அதைச் சாப்பிட்டுத்தான் அவனுக்குப் பழக்கம். ஆனால் மேஜையில் இருந்த அத்தனை ஜெர்மானிய உணவும் பாதி வெந்த பன்றியிறைச்சி, மாட்டிறைச்சியால் ஆனவை. மசாலா இல்லாததால் கவுச்சி அப்படியே அடித்தது. சிரமப்பட்டுத்தான் தாஸும் சாப்பிட்டான்.

கருத்தரங்கம் முடிந்து ஹோட்டலுக்குப் போகும்போது, “எனக்குப் பசிக்குது” என்றார் பூங்குன்றன். ஒரு சிறிய உணவகம். நம்மூர் பேக்கரிபோல் இருந்தது. நல்லவேளையாக சாலட் கிடைத்தது. வெள்ளரி உட்பட காய்கறிகள் நிறைந்த சாலட்டில் முட்டைக்கோஸும் இருந்தது. நம்மூர்போல இல்லாமல் வயலெட் நிறத்திலிருந்தது அந்த முட்டைக்கோஸ்.

ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் பாண்டியன் தன் வீட்டுக்கு வீடியோ காலிங் செய்தார். ஜெர்மன் வீதிகள், கடைகள், கோட் அணிந்த வெள்ளைக்காரர்கள், பிரமாண்ட கட்டடங்கள் எல்லாவற்றையும் இந்தியாவிலிருந்த தன் குடும்பத்துக்குச் சுற்றிச் சுற்றிக் காட்டினார். வீடு முழுக்கப் புன்னகையும் சுற்றி வந்தது. ஆளாளுக்கு என்ன வாங்கிவர வேண்டும் என்று ஒரு பட்டியலைத் தந்தார்கள். “அப்பா, எனக்குத் துப்பாக்கி பொம்மை வேணும்” என்றான் பாண்டியனின் இளைய மகன்.

முட்டைக்கோஸ் தூப்பாக்கி
முட்டைக்கோஸ் தூப்பாக்கி

மறுநாள் மாலை. கூகுளில் தேடி ஹோட்டல் அருகிலிருந்த ஒரு பாலஸ்தீன ஹோட்டலுக்குச் சென்றார்கள். “வெஜிடேரியன் இருக்குமா?” என்றார் பூங்குன்றன். யாருக்குத் தெரியும்? அட்டகாசமான பாலஸ்தீன மட்டன் பிரியாணி சாப்பிட்டார்கள் தாஸும் பாண்டியனும். “சாலட் இருக்கா?” என்று கேட்ட பூங்குன்றனுக்கு Falafel என்னும் இஸ்ரேலிய சைவ உணவு கிடைத்தது. நம்மூர் மசால் வடையைப்போலிருக்கும். திருப்தியுடன் இரண்டு பிளேட் சாப்பிட்டார். இரண்டு நாள்களாகப் போகுமிடங்களில் எல்லாம் பூங்குன்றன் ஃபலாஃபெல் கேட்க, பாவம் அவருக்கு வயலெட்நிற முட்டைக்கோஸ் நிறைந்த சாலட்டே கிடைத்தது. அவரே இரண்டு நாள்களில் வயலெட் நிறத்துக்கு மாறிக்கொண்டிருப்பதைப்போல் தோன்றியது மோகனுக்கு.

பெர்லினில் திரும்பிய திசையெல்லாம் அருங்காட்சி யகங்கள். “முந்நூறுக்கு மேல இருக்கும். பாரம்பர்யத்தைப் பாதுகாக்கிறதில் ஜெர்மானியர் களுக்கு ஆர்வம் அதிகம்” என்றார் கருத்தரங்கில் பழக்கமான, ஈழத்தமிழரான முரளி. கருத்தரங்கம் முடிந்து இரண்டுநாள்கள் ஊர்சுற்றல்தான். முரளி வருவதாகச் சொல்லியிருந்தார். மோட்டல் ஒன் எதிரிலேயே ஸ்ட்ரீட் ஃபுட் கிடைத்தது. திபெத் அகதிக்குடும்பத்தின் வண்டிக்கடை. நல்லவேளையாக பூங்குன்றனுக்கு வெஜிடபிள் பிரைடு ரைஸ் கிடைத்தது. அந்த திபெத்தியர்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியவில்லை. ‘சிக்கன் பிரைடு ரைஸ்’ கேட்ட தாஸ், கக்கத்தில் றெக்கையடித்து விளக்க வேண்டியிருந்தது.

மூன்று மியூசியங்களைச் சுற்றிப்பார்ப்பதற்குள்ளேயே களைத்துப்போனார்கள். ஆங்காங்கே கிரேக்கப் புராணக் கதாபாத்திரங்களின் சிலைகள் திறந்தமேனியாய் நின்றுகொண்டிருந்தன.

“நம்மூர்ல சிலைக்கெல்லாம் கூண்டு போடுவாங்க. இங்கே அட்லீஸ்ட் ஜட்டியாவது போட்டுவிட்டிருக்கலாம்” என்றான் தாஸ்.

“இங்கே கன் மியூசியம் இருக்கா?” என்றார் திடீரென்று பாண்டியன்.

“இல்லை. இங்கே அதுமட்டும் கிடையாது. ஆனா எனக்குத் தெரிஞ்ச ஒரு ஜெர்மன் பத்திரிகையாளருக்கு பாரம்பர்யத் துப்பாக்கிகளைச் சேகரிக்கிறதில் ஆர்வம் அதிகம். எல்லாம் இல்லீகல்தான். அவரை வேணும்னா பார்க்கலாமா?” என்றார் முரளி.

‘வேண்டாம்’ என்று பூங்குன்றன் சொல்லி முடிப்பதற்குள் தலையாட்டியிருந்தார்கள் மற்ற இருவரும்.

இரண்டு மெட்ரோ ரயில்கள், ஒரு பஸ் பயணம் முடிந்து 20 நிமிடம் நடக்க வேண்டுமாம். Reich Chancellery என்ற இடத்தைக் கடக்கும்போது முரளி சொன்னார். “இங்கேயுள்ள ஒரு பாதாள அறையில்தான் ஹிட்லரும் அவரின் காதலி ஈவா பிரவுனும் தற்கொலை செய்துகொண்டார்கள்” என்று. ஆனால் அந்தச் சுவடே தெரியாமல் அது வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டிருந்தது.

ஜெர்மன் பத்திரிகையாளர் ஜோகன்ஸ் ஹெல்முத் 63 வகையான பாரம்பர்ய துப்பாக்கிகளைக் காட்டினார். Walther PPK என்னும் துப்பாக்கியைக் காட்டிய ஹெல்மூத், “இந்தத் துப்பாக்கியில்தான் ஹிட்லர் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்” என்றார். “அதே துப்பாக்கியா?” என்றார் பாண்டியன். “அதே துப்பாக்கி எனக்கு எப்படிக் கிடைக்கும்? அதே மாடல்” என்றார் அவர். ஐவரும் சாப்பிட ரெஸ்டாரன்ட் போனபோது, “ஹிட்லர் செத்திருக்கலாம். அவர் சித்தாந்தம் சாகவில்லை. நியோ நாஜிக்கள் என்று ஒரு குழு இப்போதும் வெளிநாட்டினர்மீது தாக்குதல் நடத்துகிறது” என்றார். பூங்குன்றன் சாலட் சாப்பிடுவதைப் பார்த்தவர், “நீங்கள் வெஜிடேரியனா? ஹிட்லரும்கூட வெஜிடேரியன்தான்” என்றார். ஒயின் கிளாஸ் ததும்ப சிரித்துவிட்டான் தாஸ்.

அன்று மாலை. ஷாப்பிங்குக்காக ‘Mall of Berlin’ நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள்.

“எவ்ளோ குடிச்சாலும் பத்து நிமிஷத்துல எல்லாம் இறங்கிடுது. அவ்ளோ குளிர்” என்றான் தாஸ்.

“ஆனா பாரு, எல்லாரும் குடிக்கிறாங்க. ஆனா நம்மூர் மாதிரி யாரும் தள்ளாடிப் பார்த்ததில்லை. ஒரே ஒரு தரம் VoltastraBe மெட்ரோ ஸ்டேஷன்ல மட்டும் ஒரு பொண்ணு தள்ளாடி வந்ததைப் பார்த்தேன்” என்றார் பாண்டியன்.

குறுங்கதை : 10 - அஞ்சிறைத்தும்பி

“இதோ இன்னொருத்தன் வர்றான்ல” என்று பூங்குன்றன் கைகாட்டிய திசையில் ஒருவன் தள்ளாடித் தள்ளாடி வந்தான். பெர்லின் சுவரே எழுந்துவருவதைப்போல உயரமும் அகலமுமாக வந்தவன் முதுகில் ஒரு பை. தள்ளாடி வந்தவன் மூவரின் முன்பும், கால்பந்து மைதானத்தில் பந்தை மறிப்பவன்போல நின்றுகொண்டு, பைக்குள் கைவிட்டு ஏதோ எடுக்க முயன்றான்.

தாஸுக்கு இதயத்தில் பன்றிகளின் கதறல் சத்தம் கேட்டது. மற்ற இருவரும் பயத்தில் வெடவெடப்பது தொடாமலே தெரிந்தது. ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுத்தவன், மூவரின் வாயிலும் சிகரெட்டுகளைத் திணித்தான். புகைபிடிக்கக் கட்டாயப்படுத்தியவன் தானே லைட்டரில் பற்றவைக்கவும் செய்தான். மூன்று சிகரெட்டுகளும் காலியானபிறகுதான் தள்ளாடியபடியே நகர்ந்துபோனான்.

ஆழமான பெருமூச்சை விட்டார்கள் மூவரும். அவன் நின்றுகொண்டிருந்த இடத்தில் குனிந்து, அவன் தவறவிட்ட லைட்டரை எடுத்தார் பாண்டியன். சங்கிலி கோக்கப்பட்ட அந்த லைட்டரில் துப்பாக்கியின் படம் வரையப்பட்டிருந்தது.

மால் ஆஃப் பெர்லினில் துப்பாக்கி பொம்மை கிடைக்கவில்லை. மெட்ரோ ரயிலேறி Alexanderplatz-க்குச் சென்றார்கள். ‘ஒன் யூரோ ஷாப்’ இருந்தது. நம்மூரில் ‘எதை எடுத்தாலும் 10 ரூபாய்’ போல, அங்கே ‘எதை எடுத்தாலும் ஒரு யூரோ.’ ஒருவழியாகத் துப்பாக்கி பொம்மை கிடைத்தது.

அதிகாலை பிராங்க்பர்ட் விமானநிலையம். உலகத்தின் பெரிய, பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று. சம்பிரதாயங்களை முடித்து, விமானத்தை நெருங்கவே இரண்டுமணி நேரத்துக்கும் மேலானது. சோதனையில் ‘லைட்டருக்கு விமானத்தில் அனுமதியில்லை’ என்று பறித்துக்கொண்டார்கள்.

விமான இருக்கையில் அமர்ந்ததும் ‘`சாலட் இருக்கிறதா?” என்ற பூங்குன்றனின் கேள்விக்கு, பணிப்பெண் வேகவேகமாய்த் தலையசைத்தது, பூகம்பத்தின்போதான பறவையின் சிறகசைப்பைப்போலிருந்தது. ஒருவழியாக பூங்குன்றனுக்கு வெஜ்-பர்கர் கிடைத்தது.

சாப்பிட்டுக்கொண்டே, “இதைத் தின்னுறது என் வாயில யாரோ துப்பாக்கியைத் திணிக்கிறமாதிரியே இருக்கு” என்றார் பூங்குன்றன்.

“எனக்கும் சமயத்துல சாம்பார் சாதம் சாப்பிடறப்போ அப்படித்தான் இருக்கும்” என்றான் தாஸ்.

- தும்பி பறக்கும்...