Published:Updated:

குறுங்கதை : 13 - அஞ்சிறைத்தும்பி

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சிறைத்தும்பி

பூச்சிகளின் நகரம்

குறுங்கதை : 13 - அஞ்சிறைத்தும்பி

பூச்சிகளின் நகரம்

Published:Updated:
அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சிறைத்தும்பி

கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு இன்றுதான் வாக்கிங் செல்ல முடிந்தது. நவம்பரில் மெல்லத் தொடங்கி சென்னையை மூழ்கடித்த பெருமழையின் வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்திருக்கிறது. ஆனால் இன்னமும் கணுக்கால்வரை நனைக்கும் மழைநீர். தினமும் அதிகாலை வாக்கிங், அதற்குமுன்பு சூடான டீ... இவை இல்லாத நாள்கள் செல்வாவுக்குக் கஷ்டமாகத்தானிருந்தன.

குறுங்கதை : 13 - அஞ்சிறைத்தும்பி
குறுங்கதை : 13 - அஞ்சிறைத்தும்பி

டீயைக் குடித்துக்கொண்டிருந்தபோதுதான் பார்த்தான். சுவரில் மெல்ல ஊர்ந்துகொண்டிருந்த அந்தப் பூச்சி, ஆரஞ்சு நிறத்தில் இருந்தது. கைத்தடியின் முனையைப்போல் வளைந்த தோற்றம் கொண்ட அந்தப் பூச்சியின் முதுகில் வெள்ளைக்கோடுகள். இதுவரை காணாத விசித்திரமாய் இருந்த பூச்சியை செல்போனில் படம் எடுத்துக்கொண்டான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இந்தப் பூச்சி என்னன்னு தெரியுமா?” என்று டீக்கடைக்காரரைக் கேட்டான். அவர் மூன்று விநாடிகள் அவனை உற்றுப்பார்த்துவிட்டு, தலையை மட்டும் லேசாக அசைத்தார்.

வாட்ஸ்-அப்பில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தன் நண்பன் மகேஷுக்கு அனுப்பினான். அவன் ஓர் உயிரியல் விஞ்ஞானி. அவனே வாட்ஸ்-அப் காலில் வந்தான்.

“இந்தப் பூச்சி எப்படி அங்கே?” என்றான் மகேஷ்.

“ஏன், அந்தப் பூச்சியைப் பத்திச் சொல்லு.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“இதோட பேர் ‘ஈகிள் ஆரஞ்சு.’ ஒண்ணு கடுமையான பனி, இல்லைன்னா அதிகமான வெப்பநிலையிலதான் இது இருக்கும். இந்தியாவில எப்படி?”

“இப்பத்தான் இந்தியாவோட கிளைமேட்டே மாறிடுதே. தண்ணியில்லாக் காடுதான் சென்னை. மழை வந்தா அதிசயம். ஆனா இப்ப வந்த மழை அடிச்சு ஊத்தி துவம்சம் பண்ணிடுச்சே.”

“இருந்தாலும் எனக்கு ஆச்சர்யமாத்தான் இருக்கு. ஒண்ணுதானே பார்த்தே?” என்றான் மகேஷ்.

அலுவலகம் சென்றதும் முதல்வேலையாக ‘ஈகிள் ஆரஞ்சு’ குறித்து இணையத்தில் தேடினான். அவன் கைத்தடியின் முனை என்று நினைத்தது, கழுகு மூக்கின் வடிவம்தான். அதனால்தான் அதற்கு இந்தப் பெயர். உலகின் கொடூரமான பூச்சிகளில் ஒன்று. மகேஷ் சொன்னது சரிதான். அதிக வெப்பநிலை கொண்ட, லிபியாவில் உள்ள எல் அசிசியா மற்றும் குறைந்த வெப்பநிலை கொண்ட சைபீரியாவிலும் இது அதிகம். பனி முதலைகளின் கண்களை அரித்துத் தின்பது இதற்குப் பிடித்த உணவுப்பழக்கம். உக்ரைனில் பனிமுதலைகள் இந்தப் பூச்சியால் கொத்துக்கொத்தாகச் செத்ததால் உக்ரைன் அரசு, ஈகிள் ஆரஞ்சை அழிப்பதற்கான கடும் முயற்சிகளை எடுத்ததாம்.

பூச்சிகளின் நகரம்
பூச்சிகளின் நகரம்

தென்னாப்பிரிக்க நாடான நமீபியாவில் கொட்டப்படும் மேலைநாட்டு மருத்துவக்கழிவுகள் வழியாக அந்த நாட்டுக்குள் வந்த ஈகிள் ஆரஞ்சு பூச்சிகளால் பாதிக்கப்பட்ட கறுப்பினக் குழந்தைகள் அதிகம். விலங்குகள், மனிதர்களின் தோலில் கடித்தால் தன் எடையைவிட 15 மடங்கு ரத்தம் குடிக்கக்கூடியவை இவை. இவை தோலில் ஏறும்போது தெரியவே தெரியாது. கடிக்கும்போது வலி ஆரம்பிக்கும். ஆனால் உடனே அதை அகற்றிவிட முடியாது. அதன் உமிழ்நீர் அழுத்தமான பசையாக மாறிக் கவ்விக்கொள்ளும். சமயங்களில் தோலைப் பிய்த்துக்கொண்டுதான் எடுக்க முடியுமாம். தன் வாழ்நாளில் 3000 முட்டைகள் இடுமாம் ஈகிள் ஆரஞ்சு. அமெரிக்கப் பசுக்களின் சாணத்திலிருந்து, பார்மேனியன் குரங்குகள் வாலிலிருந்து என்று, இவை உற்பத்தியாகும் இடங்கள் குறித்துப் பல கருத்துவேறுபாடுகள் விஞ்ஞானிகளிடம் உண்டு. எல்லாம் சரி, எப்படி இது சென்னைக்கு வந்தது?

சிலநாள்கள் அந்த டீக்கடைச் சுவரில் ‘ஈகிள் ஆரஞ்சு’ இருக்கிறதா என்று பார்த்தான். இல்லை. பிறகு வழக்கமான அலுவல்கள், கவலைகளில் மறந்துபோனான். இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒருநாள் வாட்டர் கேனைக் கவிழ்க்கும்போது மூன்று பூச்சிகள் கேனிலிருந்து ஓடியதைப் பார்த்தான். மொத்தத் தண்ணீரையும் பாத்ரூமுக்குள் கொட்டினான். அந்தப் பூச்சிகள் எங்கேபோயின என்று வீடு முழுக்கத் தேடிப்பார்த்தான். கட்டில்கள், மேஜை, பீரோக்களுக்குக் கீழே குனிந்து பார்த்தபோது கிட்டத்தட்ட அதே நிறமுடைய ரசீது, சாக்லேட் உறை, துண்டுப்பிரசுரத்தின் கிழிந்த பகுதி ஆகியவை கிடைத்தன. ஆனால் அந்தப் பூச்சிகளைக் காணவில்லை.

இரவு, ஊரிலிருந்து அம்மா போன் செய்தபோது அந்தப் பூச்சிகளைப் பற்றிச் சொன்னான்.

“சீக்கிரம் கல்யாணம் பண்ணு. 28 வயசாச்சு” என்றார் அம்மா.

அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

அவனும் நண்பனும் சினிமாவுக்குச் சென்றபோது, அவன் தொடையில் ஏதோ ஊர்ந்ததுபோலிருந்தது. செல்போன் வெளிச்சத்தில் பார்த்தபோது, சில ‘ஈகிள் ஆரஞ்சு’ பூச்சிகளைப் பார்த்ததும் அதிர்ந்தான்.

“முதல்ல வெளியே வா” என்று நண்பனை இழுத்துப்போனான். அவனுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. கதவைத் திறக்கும்வரை அவன் கண்கள் திரையில்தான் இருந்தன.

“சார், இந்தக் காலத்துல ஏது சார் மூட்டைப்பூச்சி? அதுவும் டூரிங் டாக்கீஸா என்ன இது? மல்ட்டிபிளெக்ஸ் காம்பளக்ஸ்ல இருக்கிற தியேட்டர் சார்” என்றார் மானேஜர்.

“அது மூட்டைப்பூச்சி இல்லை. அதோட பேர் ஈகிள் ஆரஞ்சு. கொடூரமான பூச்சி” என்றவன், சில விநாடிகள் மொபைலில் தேடி, அதன் படத்தைக் காட்டினான்.

“ஏதாவது வயக்காட்டில இருக்கும் சார். நான் பார்த்ததே இல்லையே” என்றார் மானேஜர்.

“வந்து என் சீட்டை செக் பண்ணுங்க” என்றான்.

“இப்ப சான்ஸ் இல்லை சார். எல்லாரும் படம் பார்த்துக்கிட்டி ருக்காங்க. இன்டர்வெல் விடட்டும்” என்றார்.

இடைவேளையில் பணியாளர்கள் தியேட்டரை அலசினார்கள். ஒன்றும் அகப்படவில்லை.

“சரி வா, கிளம்பலாம்” என்றான் செல்வா.

“டேய், இந்தப் படத்துக்கு எவ்ளோ கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கினேன் தெரியுமா?”

“ஒருமாசத்தில நெட்ஃபிளிக்ஸ்ல வரும்டா” என்று அழைத்துப்போனான். இப்போதும் காலித்திரையைப் பார்த்தபடியே வந்தான் நண்பன்.

“அந்தப் பூச்சியைப் பத்திச் சொல்லுங்க” என்றார் உளவியலாளர்.

செல்வா பொறுமையாகச் சொல்லி முடித்ததும், அவரும் லேப்டாப்பில் தேடி, தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்டார்.

“உண்மைதான். ஆனா மத்த யாரும் இந்தப் பூச்சியைப் பார்த்ததாச் சொல்லலையே?”

“ஆனா நான் பார்த்தது பொய்யில்லையே. நான் எடுத்த போட்டோ பார்த்தீங்களே?”

“அந்த ஒரு போட்டோதானே, அதுக்கப்புறம் நீங்க எடுக்கலையா?”

“இல்லை டாக்டர். அதுக்கான சந்தர்ப்பம் அமையலை.”

“செல்வா, நீங்க சுற்றுச்சூழல் பத்தி நிறைய புத்தகங்கள், கட்டுரைகள், செய்திகள் படிப்பீங்களோ?”

“அதனால் இதெல்லாம் என் மனப்பிரமையா இருக்கும்னு சொல்றீங்களா?”

“உறுதியாத் தெரியலை, நிறைய விஷயங்கள் வருது. உதாரணத்துக்கு, குளோபல் வார்மிங் பத்தியே ரெண்டு தரப்பு இருக்கு. ‘இன்னும் இந்த பூமி 30 வருஷம்தான், 40 வருஷம்தான்’னு சொல்றவங்களும் இருக்காங்க. ‘அதெல்லாம் பைத்தியக்காரத்தனம்'னு சொல்றவங்களும் இருக்காங்க. அணு உலை, நியூட்ரினோ, ஆர்கானிக், தடுப்பூசின்னு ஏராளமான விஷயங்களில் இப்படிக் கருத்துமாறுபாடு இருக்கு. சமயத்துல ரொம்பவே பயமுறுத்துறாங்கன்னும் தோணுது.”

“அப்ப எதுக்கும் பயப்படவே வேண்டியதில்லைங்கிறீங்களா?”

“பயப்பட வேண்டியதுக்கு பயப்படத்தான் வேணும். ஆனா அது பயப்பட வேண்டியது தானான்னு தெரியணும்ல? நானே ஏதோ ‘விசு’ பட டயலாக் மாதிரி பேசிக்கிட்டிருக்கேன்ல” என்று சிரித்தவர், “மெடிசன்ஸ் எழுதித் தர்றேன். சாப்பிட்டுப் பாருங்க. ஒரு மாசம் பார்ப்போம். நீங்க தூங்க நைட் ரெண்டு மணி ஆகுதுன்னு சொல்றீங்க. காலையில சீக்கிரம் எந்திருச்சிடறீங்க. தூக்கமின்மை பல நோய்களுக்குக் காரணம்” என்றவர், கொஞ்சம் ஆங்கிலத்தில் அதுகுறித்த விவரங்களைச் சொன்னார்.

“இப்போ நீங்களும் பயமுறுத்தத்தான் செய்றீங்க டாக்டர்.”

பத்து நாள்களாக நல்ல உறக்கம் வருகிறது. உண்மையிலேயே இது புத்துணர்ச்சியாகத் தானிருக்கிறது. ஆனால் ஏன் மற்ற நாள்களில் தூக்கம் வருவதில்லை என்று செல்வாவுக்குத் தெரியவில்லை.

மீண்டும் பெருமழை. வீட்டில் மழைநீர் புகுந்திருந்தது. இப்போது ஆங்காங்கே ஈகிள் ஆரஞ்சைப் பார்த்தான் செல்வா. பயந்து ஹாலுக்குப் போனான். அது தடயமின்றி உலர்ந்திருந்தது. டி.வி-யை ஆன் செய்தான்.

குறுங்கதை : 13 - அஞ்சிறைத்தும்பி

“இப்போது நமக்கு முன் இருக்கும் மூன்று கேள்விகள்: புயல்களுக்கு என்ன பெயர் வைப்பது, புதிதாகத் தோன்றும் நோய்களுக்கு என்ன பெயர் சூட்டுவது, நமது ‘புதிய இந்தியா’ திட்டங்களுக்கு என்ன பெயர் வைப்பது என்பதுதான். ஆனால் இதை எதிர்கொள்ளாமல் தேசத்துரோக, பிரிவினைவாத...” - பிரதமர் பேசிக்கொண்டிருக்கும்போது சேனல் மாற்றினான்.

“சம்ஸ்கிருதம் பேசினால் சிறுநீரகத்துக்கு நல்லது. நம் தேசம் பண்பாட்டுப் பொக்கிஷங்கள் பலவற்றை இழந்துவிட்டது. நம் முனிவர்கள் தவமிருக்கும்போது அவர்கள்மீது புற்று வளர்வது தெரியாமல் தியானத்திலிருப்பார்கள். நம்மால் அது சாத்தியமில்லை என்பதால்தான் புற்றில் உள்ள பாம்புக்குப் பால் வார்த்துவந்தோம். அந்தப் பழக்கம் இப்போது குறைந்துவிட்டது. புற்று வழிபாடு இருந்தவரை இந்தியாவில் புற்றுநோய் இருந்ததில்லை” என்று மத்திய அமைச்சர் ஒருவர் மருத்துவப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிக்கொண்டிருந்தார். செல்வா ரிமோட்டை டி.வி-யை நோக்கி எறிந்தான். டி.வி-யின் கண்ணாடி உடைந்து உள்ளிருந்து நிறைய பூச்சிகள் பறந்து ஹாலை வளைக்கத் தொடங்கின. அதில் ஒன்று அவன் கண்ணிமை மேல் ஏறிப்படர்ந்தது.

கனவுதான். விழித்துக் கொண்டான். மீண்டும் தூக்கம் வருமா? வருவதற்கு மீண்டும் மருந்து சாப்பிட வேண்டுமா? குழப்பத்துடன் எழுந்து அமர்ந்து மண்பானையிலிருந்து நீரெடுத்து அருந்தினான். மேலே இயங்கிக்கொண்டிருந்த ஏ.சி இயந்திரத்தில் இரண்டு ‘ஈகிள் ஆரஞ்சு’ பூச்சிகள் இருப்பதை அப்போதுதான் பார்த்தான்.

- தும்பி பறக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism