Published:Updated:

குறுங்கதை : 14 - அஞ்சிறைத்தும்பி

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சிறைத்தும்பி

கொண்டாடப்படாத மகளிர் தினம்

குறுங்கதை : 14 - அஞ்சிறைத்தும்பி

கொண்டாடப்படாத மகளிர் தினம்

Published:Updated:
அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சிறைத்தும்பி

“ஹேப்பி மென்’ஸ் டே!” என்றாள் அமுதா.

“என்னாது?” என்றான் ராஜன்.

“ஓ, உனக்குத் தமிழில் சொன்னாத்தானே பிடிக்கும்! ஆண்கள் தின வாழ்த்துகள்!”

குறுங்கதை : 14 - அஞ்சிறைத்தும்பி

“ஆண்கள் தினமா, அது எப்போ?”

“நவம்பர் 19. ஹே, எனக்கே தெரியாது. உமாதான் சொன்னா. போன வருஷத்துல இருந்துதான் அவளுக்கே தெரியுமாம்.”

“அப்போ ரெண்டு வருஷமாத்தான் உலகத்துல ஆம்பளைங்க பொறக்குறாய்ங்களா?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“எல்லாத்துக்கும் கிராஸ் கேள்வி கேளு. பெண்களுக்கு ஒரு தினம் இருக்கிற மாதிரி, ஆண்களுக்கு ஒரு தினம். இதில உனக்கு என்ன பிரச்னை?”

“மார்ச் 8-ங்கிறது நீங்க சாக்லேட் கொடுத்து, பிங்க் கலர் சேலை கட்டிக் கொண்டாடுற மாதிரியான மகளிர் தினமில்லை. அது உழைக்கும் பெண்கள் தினம். கிளாரா ஜெட்கின்னு ஒரு ஃபெமினிஸ்ட், பெண்கள் மாநாடு கூட்டி கோரிக்கை வெச்சுக் கொண்டாடின தினம்தான் மார்ச் 8. சிகாகோவில தொழிலாளர்கள் உரிமைக்காகப் போராடினதுக்காக மே தினம். ஒரு தினம் கொண்டாடணும்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கணும்.”

“ஆண்கள் தினம்னா, பெண்கள் ஆண்களுக்கு நன்றி தெரிவிக்கிற தினம்”“எதுக்கு நன்றி தெரிவிக்கணும், அடிமையா வெச்சிருக்கிறதுக்கா? வருஷத்துல 365 நாளும் ஆண்கள் தினம்தான். உரிமைக்காகப் போராடுறதை நினைக்கிறதுக்குத் தான் மகளிர் தினம், தொழிலாளர் தினம்னு வேணும். விட்டா ஆண்கள் தினம், ஆதிக்கச்சாதி தினம், எஜமானர்கள் தினம்னு எல்லாம் கொண்டாடுவீங்கபோல இருக்கே?”

“போடா லூசு” என்று போனை வைத்துவிட்டாள் அமுதா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெண்களுக்காகப் பேசும் ஆண்களைப் பெண்கள் ‘லூசு’ என்றுதான் அழைக்கிறார்கள். அழைக்க முடியாத சந்தர்ப்பத்தில் நினைத்துக்கொள்கிறார்கள்.

ராஜனுக்கு இன்னொரு அமுதா நினைவுக்கு வந்தாள். அப்போது அவன் கல்லூரி முடித்து வேலை கிடைக்காமல் சின்னச் சின்ன வேலைகள் பார்த்துக்கொண்டிருந்த காலம். அந்த வேலைகளில் ஒன்று எஸ்.டி.டி பூத்தில் வேலை பார்த்தது. அது ஒரு பைபாஸ் அருகில் உள்ள எஸ்.டி.டி பூத். வருபவர்களில் பாதிப் பேர், லாரி டிரைவர்கள், குடிகாரர்கள், லோடுமேன்கள். ஒருநாள் மதியம் ஒரு போன் வந்தது. இரண்டு பெண்கள் பேசினார்கள்.

“ஹலோ, ஹேமா டாக்கீஸா?” என்றது பெண் குரல்.

“இல்லையே, ராங் நம்பர்” என்றான் ராஜன்.

“அப்போ நீங்க யாரு?” என்றது மீண்டும் பெண் குரல்.

“இது எஸ்.டி.டி பூத்துங்க.”

“உங்க பேர் என்ன?” என்று மீண்டும் ஒரு கேள்வி கேட்க, உற்சாகமானான் ராஜன். முதன்முதலாக ஒரு பெண் குரல் உரையாட ஆரம்பித்ததில் இவனுக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொண்டது. இரண்டு பெண்கள், மகளிர் கல்லூரி விடுதியிலிருந்து பேசுவதாகச் சொல்லவும், இவனும் பேச ஆரம்பித்தான். இப்படியே நான்கைந்து நாள்கள் போகவும், ஐந்தாம் நாள்தான் உண்மை உடைந்து வெளியே வந்தது.

அது மகளிர் கல்லூரி விடுதியல்ல. அவன் ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சிறு கிராமம். ராஜனிடம் பேசியது அமுதா, ஒரு பெண்குழந்தையின் தாய்.

“சும்மா விளையாட்டுக்குத்தான் பேசினோம். ராணியக்காதான் என்னைவிட ஆர்வமா இருந்தாங்க.”

“அவங்க பேரு ராணியா, ஸ்வேதான்னு சொன்னீங்க?”

“என் பேருகூடதான் சியாமளான்னு சொன்னேன். ஆனா என் பேரு அமுதா” என்ற அமுதா, ராணியக்காவைப் பற்றிச் சொன்னாள். அவர் கணவர் திருமணமான இரண்டு மாதங்களில் ஊரை விட்டு ஓடிவிட்டார். குழந்தைகள் கிடையாது. அமுதா வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராணியக்காவுக்கு கேன்சர். அமுதா தன் கணவனைப் பற்றிச் சொல்லத்தொடங்கினாள்.

கணவர் பெயர் சௌந்தர். அந்த ஊரில் முக்கியமான புள்ளி. ஒரு கட்சியின் ஒன்றியச்செயலாளர். பக்கத்தில் இருக்கும் மலையில் சொந்தமாக ஒரு எஸ்டேட் உண்டு. ராஜன் ஆணாதிக்கம் என்று எவற்றையெல்லாம் வரையறுத்து வைத்திருந்தானோ, அத்தனையும் சௌந்தரிடம் உண்டு.

குறுங்கதை : 14 - அஞ்சிறைத்தும்பி
குறுங்கதை : 14 - அஞ்சிறைத்தும்பி

இத்தனை உண்மை விவரங்களையும் சொல்வதற்கு அமுதாவுக்கு இரண்டு வாரங்களாகியிருந்தன. ஆனால் ராஜனோ பேச ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே தன் கல்லூரிக்கால காதல், தன் குடும்பம், வேலைக்கு முயற்சி செய்வது என எல்லாவற்றையும் சொல்லியிருந்தான்.

“அதனாலதான் உங்கமேல நம்பிக்கை வந்துச்சு. எனக்கு என் பொண்ணும் ராணியக்காவும்தான் துணை. அக்காதான் சும்மா விளையாட்டா ஒரு நம்பருக்கு போன் போடுவோம்னு சொன்னாங்க. நல்லவேளை நீங்க நல்லவரா இருந்தீங்க. அதனாலதான் எல்லா உண்மையும் சொன்னேன்.”

“நான் சொல்றது எப்படி உண்மைன்னு கண்டுபிடிச்சீங்க?”

“எங்க வீட்டுக்காரர்கிட்ட பேசிப்பேசி எது பொய்ன்னு எனக்கு நல்லாத் தெரியும். அதனால நீங்க பேசினது பொய்யில்லைன்னும் தெரியும்.”

அன்றிலிருந்து மதியம் ஆனாலே ராஜன் அமுதாவின் போனுக்காகக் காத்திருந்தான். ஒருநாள் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தாள் அமுதா.

பஸ்ஸை விட்டு இறங்கிக் கொஞ்ச தூரம் நடந்தால் அமுதாவின் வீடு. வீட்டின் அடையாளத்தைச் சொல்லியிருந்த அமுதா, எதார்த்தமாக இருப்பதைப் போல வீட்டு வாசலில் அமர்ந்தி ருந்தாள். முன்னமே சொன்னதைப் போல வீட்டு அருகில் உள்ள சந்து வழியாக வந்தால் அமுதா வீட்டின் பின்புறம். அதன் அருகில்தான் ராணியக்காவின் வீடு.

ராணியக்கா கலகலப்பாகப் பேசினார். அவருக்கு கேன்சர் என்பதை நம்புவது ராஜனுக்கு சிரமமாகத்தான் இருந்தது. அமுதா, தன் மகள் தன்யாஸ்ரீயின் புகைப்படம், கல்யாண ஆல்பம், தன் அம்மா, அப்பா புகைப்படங்கள் என எல்லாவற்றையும் காட்டினாள்.

“அடுத்த வாரம் என் பொண்ணுக்குப் பிறந்தநாள். மார்ச் எட்டு” என்றாள் அமுதா.

“பெண்கள் தினத்திலா?” என்றான் ராஜன் ஆச்சர்யமாக.

“அன்னைக்குத்தான் பெண்கள் தினமா?” என்ற அமுதாவிடம் எந்த ஆச்சர்யமும் இல்லை.

இரண்டு மணிநேரம் பேசியதற்குப் பிறகு, வந்த வழியாகவே ஊருக்குத் திரும்பினான் ராஜன்.

சௌந்தரைப் பற்றிக் கேட்கும்போது வியப்பாகத்தானிருந்தது; கொடூரமாகவும். அவனுக்கு வீட்டில் எல்லாம் சுத்தமாக இருக்கவேண்டும். நாம் குழம்பு, ரசம், மோர் எல்லாவற்றையும் ஒரே தட்டில்தானே சாப்பிடுவோம்? ஆனால் சௌந்தர் சோற்றில் குழம்பு ஊற்றிச் சாப்பிட்டால் அமுதா தட்டைக் கழுவிக்கொண்டு வரவேண்டுமாம். பிறகு சோறு போட்டு ரசம். பிறகு தட்டைக் கழுவி, சோறு ஊற்றி மோர். கேட்கவே விநோதமாக இருந்தது ராஜனுக்கு.

ஒருநாள் பேசும்போது அழுகை நனைத்த குரல். சாப்பாட்டில் முடி இருக்கிறது என்று முகத்தில் தட்டை வீசியெறிந்திருக்கிறான் சௌந்தர். கண்ணுக்குக் கீழே தட்டு வெட்டி, ரத்தம் வழிந்திருக்கிறது. ராணியக்காதான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறாள்.

“எல்லாப் பாத்திரமும் விளக்கிக்கிட்டேயிருக்கணும் ராஜன். காலையில, மத்தியானம், சாயந்தரம், நைட்டு. ஒருதடவை டம்ளர்ல ஏதோ கறைன்னு, என் அப்பா ஊர்ல இருந்து வீட்டுக்கு வந்தப்பவே எனக்கு அடி. பாத்திரங்களைக் கழுவிக் கழுவி எனக்கே அது வியாதியாயிடுச்சு. எந்தப் பாத்திரத்தைப் பார்த்தாலும் அதுல ஏதோ கறை இருக்கிறமாதிரி தோணுது. ஹோட்டலுக்குப் போனா, அம்மா வீட்டுக்குப் போனா, கோயிலுக்குப் போனா எங்கேயாவது தூசியைப் பார்த்தா, கறையைப் பார்த்தா பயம் வந்துடுது” என்றாள் அமுதா.

குறுங்கதை : 14 - அஞ்சிறைத்தும்பி

சௌந்தரிடம் இது மட்டும் பிரச்னையில்லை. அவனுக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. எஸ்டேட்டில், ஊரில் என்று பல செய்திகள் அமுதாவின் காதுகளுக்கு வரத்தான் செய்தன.

“அதெல்லாம்கூட நான் பார்த்ததில்லை ராஜன். ஆனா எங்க வீட்டு வேலைக்காரம்மாவையே... எனக்குத் தெரியும்னு அந்தாளுக்குத் தெரியும். அந்தம்மாவைச் சொல்லியும் குத்தமில்லை” என்று அமுதா சொன்னபோது ராஜனுக்கே என்னவோ போலிருந்தது.

ராஜனுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதி வேலை கிடைத்திருந்தது. அவனாக அமுதாவுக்கு போன் செய்ய முடியாது. நம்பர் தெரியும்தான். ஆனால் எப்படித் தொடர்பு கொள்வது? ராணியக்கா வீட்டில் போன் இருந்தாலாவது தொடர்பு கொண்டிருக்கலாம். அப்படியும் ஒருநாள் அந்த நம்பருக்கு போன் செய்தான்.

“ஹலோ” என்றது ஆண்குரல். சௌந்தராக இருக்கலாம். ஆனால் அமுதா அவனைப் பற்றிச் சொன்னதை வைத்து ராஜனுக்கு ஒரு சித்திரம் இருந்தது. ஆனால் அந்தச் சித்திரத்துக்குப் பொருந்தாமல், அந்தக் குரல் மென்மையாக இருந்ததைப்போல் தோன்றியது ராஜனுக்கு.

“ஹலோ ஹேமா டாக்கீஸா?” என்றான் அவசரமாக.

“ராங் நம்பர்” என்று போன் வைக்கப்பட்டுவிட்டது. அதற்குப் பிறகும் இரண்டு தடவை அவன் முயற்சி செய்தபோதும் தொடர்பு கிடைக்கவில்லை. என்னவென்று வர்ணிக்க முடியாத சத்தமே தொடர்ந்து கேட்டது.

குறுங்கதை : 14 - அஞ்சிறைத்தும்பி

அதற்குப் பின் ஓராண்டில் பேஜர் வந்து, ஆறு மாதத்துக் குள்ளேயே மொபைல் போன் வந்திருந்தது. ஆரம்பத்தில் இன்கமிங் கால்களுக்கும் கட்டணம். சில ஆண்டுகளில் அந்தக் கட்டணம் இல்லாமல்போனபோது மொபைல் போன் பரவலாக ஆரம்பித்தது. எஸ்.டி.டி பூத்துகளின் பயன்பாடு குறைந்து, கிட்டத்தட்ட இழுத்து மூடவேண்டிய நிலை. ராஜனிடமும் இப்போது, ஒரு பெரிய கொம்புடன், கறுப்புச் செங்கல்லாக ஒரு நோக்கியா போன் இருந்தது. அவனுக்கு அவ்வப்போது அமுதாவின் ஞாபகம் வரத்தான் செய்தது. ஆனால் அவள் வீட்டு போன் நம்பர் மட்டும் நினைவு வரவேயில்லை. சில ஆண்டுகள் கழித்து தொலைக்காட்சிகளில்தான் அமுதாவைப் பார்த்தான்.

அமுதா வீட்டு வேலைக்காரம்மாவின் மகளைப் பாலியல் வன்முறை செய்ய முயன்றதால் அமுதாவும் வேலைக்காரம்மாவும் சௌந்தரைக் கொலை செய்ததாகச் செய்தி வாசிக்கப்பட்டது. ரத்தக்கறை படிந்த ஆடைகளுடன் அமுதாவும் வேலைக்காரம்மாவும். ‘கொலை செய்யப்பட்ட தந்தை. கைதான தாய்; கதறி அழும் மகள்’ என்ற குரலைத் தொடர்ந்து கேமரா திரும்பியபோது, அங்கே அமுதாவின் மகள் அழுதுகொண்டிருந்தாள். அன்று அவளின் பிறந்தநாள் என்பது ராஜனுக்கு ஞாபகம் வந்தது.

- தும்பி பறக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism